2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
வீட்டிற்குள் நுழையும் போதே படு டென்ஷனாக வந்தான் வாசன். “ஹும்… இதுகளையெல்லாம் கேட்க ஆளில்லை… அதான் தலைகால் புரியாம ஆடுதுக” கையிலிருந்த பேக்கை கோபமாய் சோபாவின் மீது எறிந்தவாறே கத்தலாய்ச் சொன்னான்.
சமையலறையிலிருந்து வேக வேகமாய் வந்தாள் மல்லிகா. “என்னங்க… என்னாச்சு?… எதுக்கு இப்படிக் கத்தறீங்க?… இன்னிக்கும் ஆபீஸ்ல ஏதாச்சும் பிரச்சினையா?”
‘மல்லி… ஆனாலும் அந்தக் கலைவாணி டீச்சருக்கு இத்தனை பணத்தாசை கூடாதுடி!… அவ வகுப்பு ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் கண்டிப்பா அவ கிட்டத்தான் டியூஷன் வரணும்னு மிரட்டறாளாம்!… தலைக்கு ஐநூறுன்னு போட்டாலும் மாசம் பத்துப் பதினஞ்சாயிரம் தேறுமே?… ஸ்கூல்ல வாங்கற சம்பளம் இல்லாம… இது வேற எக்ஸ்ட்ரா வருமானம்!… இவ கலைவாணியா?… இல்லை கலெக்ஷன் ராணியா?…ஹூம்… அநியாயம்… அக்கிரமம்!…” வாசன் தன் மனைவியிடம் வயிற்றெரிச்சலைக் கொட்டினான்.
சில நிமிடங்கள் யோசித்த மல்லிகா, “த பாருங்க… அந்தக் கலைவாணி டீச்சர்தான் நம்ம மகனுக்கும் கிளாஸ் டீச்சர்… அவங்களைப் பகைச்சிட்டா… நம்ம மகனை வேணுமின்னே ஃபெயில் ஆக்கினாலும் ஆக்கிடுவாங்க!… அதனால பணத்தைப் பார்க்காமல் அவ கிட்டே டியூஷனுக்கு அனுப்பித் தொலைவோம் வேற என்ன பண்றது?” என்றாள்.
“அப்ப… அவளை யாருமே கேள்வி கேட்க முடியாதா?” வலது கை முஷ்டியால் இடது உள்ளங்கையைக் குத்திக் கொண்டே கேட்டான்.
“கேட்கலாம்… நீங்களும் கேட்கலாம்… நானும் கேட்கலாம்!… ஆனா பாதிப்பு யாருக்கு?… நம்ம மகனுக்கு!… அவனோட எதிர்காலத்துக்கு!… ஐநூறு ரூபாயைக் கணக்குப் பார்க்காம பையன் படிப்புக்கு செய்யற செலவா நெனச்சு செய்வோம்!… எல்லோருமே அப்படித்தான் பண்ணிட்டிருக்காங்க” கோபத்தோடு பணிந்து போனாள் மல்லிகா.
அவர்களைப் போலவே பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு வழியில்லாமல் கலைவாணி டீச்சரிடம் டியூஷனுக்கு அனுப்பி வைத்தனர். எல்லோருக்குமே உள்ளுக்குள் அதீத கோபமும், ஆத்திரமும் இருந்த போதிலும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையில் தங்களது கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டனர்.
பரிட்சையெல்லாம் முடிந்து ரிசல்ட் வந்த பிறகு, அந்த டீச்சரின் அக்கிரமத்தையும் அராஜகத்தையும் பற்றி தலைமை ஆசிரியருக்கோ… அல்லது கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கோ… புகார் அனுப்பலாம் என்கிற முடிவில் எல்லோரும் அமைதி காத்தனர்.
“இருடி… இருடி… எக்ஸாம் ரிசல்ட் வரட்டும்… அப்புறம் இருக்கு உனக்கு?”
தேர்வுகள் முடிந்து, எல்லா ஸ்டூடண்ட்ஸும் பாஸ் என்கிற ரிசல்ட் வந்ததும், எல்லா பெற்றோர்களையும் நேரில் அழைத்தாள் கலைவாணி.
“அடக் கருமமே… அதான் ரிசல்ட் வந்தாச்சு… எல்லாக் குழந்தைகளும் பாஸ் ஆயாச்சு… அப்புறம் எதுக்கு கலைவாணி டீச்சர் பேரண்ட்ஸையெல்லாம் வரச் சொல்லுறா!… அதுவும் அவ வீட்டுக்கு?… ஒரு வேளை அடுத்த வருஷத்துக்கான டியூஷன் ஃபீஸை அட்வான்ஸா கேட்பாளோ?” வாசன் மனைவியிடம் கேட்க,
“யாருக்குத் தெரியும்… உங்க குழந்தையைப் பாஸ் பண்ண வெச்சதுக்கு எனக்கு ஏதாச்சும் கிப்ட் குடுங்க”ன்னு கேட்டாலும் கேட்பாளோ… என்னவோ?” தனக்கு தோன்றிய கருத்தைக் கூறினாள் மல்லிகா.
“போகாம விட்டுடலாம்ன்னா… அடுத்த வருஷமும் நம்ம குழந்தை அதே ஸ்கூல்லதான் படிக்கப் போகுது!… அதை நெனச்சுப் போக வேண்டியதிருக்கு!… சரி… சரி… போய்த் தொலையறேன்… என்ன பண்றது?” புலம்பிக் கொண்டே சென்றான் வாசன்.
தன் வீட்டிற்கு வந்திருந்த பெற்றோர்களையெல்லாம் முன் ஹாலில் அமர வைத்து அவர்களனைவருக்கும் காஃபி வினியோகித்தாள் கலைவாணி டீச்சர்.
வாசனுக்கு அடிமனதில் அச்சம் அதிகமானது. “இவ காஃபியெல்லாம் குடுத்து ஓவரா உபசரிக்கறதைப் பார்த்தா… பெருசா எதையோ கேட்பா போலிருக்கே?… ஏற்கனவே ஸ்கூல் ஃபீஸ் கட்ட படாதபாடு படறேன்!… இதுல இவ வேற ரொம்ப எதிர்பார்ப்பா போலிருக்கு… என்ன பண்றது?”
‘என்னோட அழைப்பை ஏற்று என்னோட வீட்டுக்கு வந்த உங்க எல்லோருக்கும் நன்றி!… “என்னடா ரிசல்ட் வந்து… நம்ம குழந்தைகளெல்லாம் பாஸ் ஆயாச்சு… அப்புறமும் எதுக்கு இந்த டீச்சர் நம்மையெல்லாம் வரச் சொல்லியிருக்காங்க?”ன்னு உங்கள்ல பல பேர் மனசுல ஒரு எண்ணம் ஓடிக்கிட்டிருக்குன்னு எனக்குத் தெரியும்!… உங்க குழப்பத்தைத் தீர்க்கறேன்” சொல்லி விட்டு எல்லோரையும் புன்னகையோடு கலைவாணி டீச்சர் பார்க்க,
“சீக்கிரம் சொல்லித் தொலைடி… மனசு “பக்…பக்”ன்னு இருக்கு” உள்ளுக்குள் குமுறினான் வாசன்.
“சமீப காலமா… வெளியில் பல ஏமாற்றுக்காரர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பண்ணிட்டு… ஆயிரக்கணக்குல டியூஷன் ஃபீஸ் வாங்கிக்கிட்டு, முறையாய்ப் படிச்ச டீச்சர்களை வெச்சு டியூஷன் சொல்லிக் குடுக்காம, டிகிரி கூடப் படிக்காத டீச்சர்களை… குறைந்த சம்பளத்துக்குப் பிடிச்சிட்டு வந்து, அவங்களை வெச்சுக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் குடுத்திட்டிருக்காங்க!…” கலைவாணி டீச்சர் சொல்ல,
“ஆஹா… இவ என்னமோ பெரிய யோக்கியம் மாதிரி அவங்களைப் பேச வந்திட்டா?… அவங்க கிட்டப் போயிட்டா இவளுக்கு வருமானம் குறைஞ்சு போயிடும்… அதான் உள்ளிருக்கற விஷயம்” தனக்குள் சொல்லிக் கொண்டான் வாசன்.
“அந்த மாதிரி ஆளுங்க கிட்டே டியூஷன் படிச்சா… உங்க குழந்தைகளுக்கு இருக்கற அறிவும் போயிடும்!… அதான்…. அவங்க கிட்டப் போய் நீங்கெல்லாம் மாட்டி விடக் கூடாதுன்னுதான், “எல்லோரும் உங்க குழந்தைகளை என் கிட்டேதான் டியூஷனுக்கு அனுப்பணும்”ன்னு அப்படியொரு கண்டிப்பு செய்தேன்!…”
“அப்ப ஃப்ரீ டியூஷன் எடுத்திருக்கலாமல்ல?.. சுளையா ஒரு குழந்தைக்கு ஐநூறுன்னு வாங்கினியே?” உள்ளுக்குள் பொரிந்தான் வாசன்.
“ஆரம்பத்திலிருந்து நீங்க குடுத்த டியூஷன் ஃபீஸை அப்படியே பேங்க்ல போட்டு வெச்சிருக்கேன்… எதுக்கு தெரியுமா வருஷக் கடைசில அதை அப்படியே உங்களுக்கே திருப்பித் தந்திடத்தான்!…” விழிகளை விரித்தபடி கலைவாணி டீச்சர் சொல்ல,
“என்னது ஃபீஸைத் திருப்பித் தரப் போறாளா?… ஆஹா நான் காண்பது கனவா… இல்லை நனவா?” தன் காதுகளையே நம்ப முடியவில்லை வாசனுக்கு.
“தயவு செய்து நான் திருப்பித் தர்ற அந்தத் தொகையை உங்க குழந்தைகளோட மேல் படிப்புச் செலவுக்கு வெச்சுக்கங்க!’ என்று சொல்லி விட்டு “விடு…விடு”வென்று உள் அறைக்குள் சென்று ஒரு லெதர் பேக்கை எடுத்து வந்தாள்.
எல்லோரும் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அந்த பேக்கினுள்ளிருந்து பல கவர்களை எடுத்து வெளியில் வைத்தாள். ஒவ்வொரு கவரிலும் பெற்றோர் பெயரும் குழந்தையின் பெயரும் எழுதப்பட்டிருக்க, அந்த பெயரை வாசித்து அவர்களை அருகில் அழைத்து அவர்கள் கையிலேயே அந்தக் கவரைக் கொடுத்தாள் கலைவாணி டீச்சர்.
அந்த விநாடியில் அவளைப் பார்த்த பெற்றோர்களுக்கு அவள் கலைவாணி வடிவாகவே தெரிந்தாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings