2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“இப்படி ஆளாளுக்கு மோட்டுவளையையே பார்த்திட்டு உட்கார்ந்திட்டிருந்தா எப்படி?…. ஏதாச்சுமொரு மார்க்கம் சொன்னாத்தானே ஆவும்…?” மலைக் கோயில் பூசாரி மாரியப்பன் தன் ‘கணீர்‘ குரலில் சொல்ல,
‘ந்தா… பூசாரியய்யா… ரொம்ப அவசரப்படுத்தாதீர்… இது ‘வெடுக்‘ன்னு முடிவெடுக்கற விஷயமல்ல… நல்லா யோசிச்சுத்தான் மார்க்கத்தைப் புடிக்கணும்” ஊர்த்லைவர் நாகு பூசாரியை அமைதிப்படுத்தினார்.
இதற்குள் பெண்கள் பகுதியிலிருந்து ‘சலசலப்பு’ எழ, ‘அட… என்ன பொம்பளைகம்மா நீங்க?… இப்படித் தொணதொணத்தா எப்படி?… அதான் பேசிட்டிருக்கோம்ல?” ஊர்த்தலைவர் தன் எரிச்சலை அந்தப் பக்கம் கொட்ட,
தாளமாட்டாமல் எழுந்தாள் தங்கக்கிளி. ‘அது செரி… ஒரு பைத்தியக்காரப் பயல்… மலை மேல இருக்கற நம்ம குல தெய்வம் கோயிலுக்குள்ளார பூந்துக்கிட்டு பத்து நாளா… போற வர்றவங்களை எல்லாம் பயமுறுத்திக்கிட்டிருக்கான்… அவனை அடிச்சுத் தொரத்த முடியலை… இங்க வந்து எகிறுறாரு தலைவர்..”
‘த பாரு தங்கக்கிளி… அந்தப் பைத்தியக்காரப் பயல் நம்ம சாமியோட கைல இருந்த ஈட்டியப் புடுங்கி தன் கைல வெச்சுக்கிட்டு… வர்றவங்களையெல்லாம் குத்திக் கொடலை உருவிடுவேன்னு ஆவேசமா உட்கார்ந்திட்டிருக்கான்… அவன் கூடப் போய் மோதி நம்ம சாதி ஆம்பளைங்களையெல்லாம் குத்துப் பட்டுச் சாகச் சொல்றியா?’ ஊர்த்தலைவர் கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டார்.
அமைதியே உருவான ஆசிரியர் சுந்தரம், ‘அய்யா… அந்த நபர் யாரு?… எந்த ஊரு?ங்கறதை அவன்கிட்டேயே விசாரிப்போம்… அதுக்கு அவன்கிட்ட இருந்து சரியான பதில் வரலைன்னா… பேசாம போலீஸ்ல ஒப்படைச்சிடுவோம்”
‘வாத்தியாரய்யா… நாளை மறுநாள்…. புரட்டாசி சனிக்கிழமை…. நம்ம ஜனங்க குலதெய்வத்துக்கு பொங்கல் படைக்கற நாள்… அதுக்குள்ளார அவனை அங்கிருந்து விரட்டிட்டா பரவாயில்லை… ஏன்னா….பொழப்புக்காக வெளியூர்; போய் அங்கியே நிரந்தரமா தங்கிட்டவங்கெல்லாம்… இந்தப் புரட்டாசி சனிக்கிழமைல தத்தம் ஊரிலிருந்து பொறப்பட்டு வந்து பொங்கல் படைச்சிட்டுப் போவாங்க… அதனால… அவங்களுக்கோ… அவங்க பொங்கல் படைக்கறதுக்கோ… எந்த வித இடையூறும் இருந்துடக் கூடாது… அப்படி ஏதாச்சும் இருந்திடுச்சுன்னா… இந்த ஊரிலேயே கெடக்குற நமக்குத்தான் கெட்ட பேரு… “கொல தெய்வம் கோயிலைக் கூட பாதுகாப்பா வெச்சுக்கத் துப்பில்லே”ன்னு சொல்லி நம்மைத்தான் காறித் துப்புவாங்க” ஊர்த்தலைவர; தன் கவலையை மெல்ல வெளியிட்டார்.
வலது புறமிருந்த இளைஞஎ பட்டாளத்திலிருந்து ‘குபுக்‘கென்று எழுந்தான் சபாபதி, ‘அப்ப பத்துப் பதினஞ்சு பேர் கைல ஆயுதத்தோட போயி அவனைப் போட்டுத் தள்ளுறதைத் தவிர வேற வழியில்லை”
‘ச்சூ… அப்படியெல்லாம் ஆவேசப்பட்டுச் செய்ய முடியாதப்பா.. அது நம்ம குல தெய்வத்தோட சன்னதி… அங்க போயி வெட்டுக்குத்துன்னு இறங்க முடியுமா?…”
வானத்தில் கரு மேகங்கள் கூடி, மழை வருவதற்கான முன்னறிவிப்பை மின்னல் மூலம் அனுப்பி வைத்தன.
‘பாருங்க… புரட்டாசிப் பொங்கலுக்கான வழக்கமான மழையும் ஆரம்பிச்சிடுச்சு” தங்கக்கிளி தன் கண்டுபிடிப்பைச் சொல்லி பெண்கள் பகுதியில் தன்னை முன்னிருத்திக் கொண்டாள்.
ஆசிரியர் சுந்தரம் அந்தப் பேச்சுக்களுக்கெல்லாம் முடிவு கூறும் வகையில், ‘அய்யா… வெறுமனே இப்படி ஆளாளுக்கு விவாதித்துக் கொண்டிருப்பதுல எந்தத் தீர்வும் வரப் போறதில்லை… அதனால நாளைக்கு சாயந்திரம் வரைக்கும் பார்ப்போம் அவனா போறானான்னு… போகலையா… மறுநாள்…அதாவது சனிக்கிழமை காத்தால போலீஸ் பாதுகாப்போட நம்மாளுக எல்லாரும் மலை மேல போறோம்… பொங்கல் வைக்கறோம்…. என்ன நான் சொல்றது சரிதானே?”
அவர் சொன்ன விஷயம்.. மற்றும் அதை அவர் சொன்ன விதம் அனைவரையும் மறு பேச்சின்றி ஒப்புக் கொள்ள வைத்தது.
எல்லோரும் கலைந்து செல்லும் போது மழை வலுக்க ஆரம்பித்தது.
அன்று இரவு முழுதும் பெய்த கன மழை மறுநாளைய இயல்பு வாழ்க்கையை பாதித்து விட, வெளியிலிருந்து வழக்கமாய் வரும் ஜனங்களின் அளவு கணிசமாய்க் குறைந்திருந்தது.
‘அடாது மழை பெய்தாலும் நாங்கள் விடாது பொங்கல் வைப்போம்” என்கிற வகையைச் சேர்ந்தவர;கள் மட்டும் மழையையும் பொருட்படுத்தாது வந்து கூடியிருந்தனர். அவர்கள் அனைவரும் எதிர்பார்த்ததைப் போல் வௌ;ளிக்கிழமை மாலை வரை அந்தப் பைத்தியக்காரன் மலைக் கோயிலை விட்டு நகராமல் அதே ஆவேசத்துடன் ஈட்டியும் கையுமாகவே அமர்ந்திருக்க, ஊர்ப் பெரியவர்கள் காவல் துறையை நாடினர்.
‘சரி… சரி… நாளைக்குக் காலைல ஆறு மணிக்கு எல்லோரும் தயாரா மலைக்குக் கீழ வெய்ட் பண்ணுங்க… நான் போலீஸ் படையோட வந்துடறேன்…”இண்ஸ்பெக்டர் உறுதியளித்தார்.
மழையின் தீவிரம் அதிகமாகிக் கொண்டே போனது. வெள்ளிக் கிழமை இரவு இடியும் மழையும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தன.
‘என்ன ஒரு கஷ்ட காலமோ… இப்படி இடியும் மழையும் ஊரையே உலுக்குது”
‘எனக்கு வெவரந் தெரிஞ்சு இந்த மாதிரி ஒரு இடி மழைய நான் பார்த்ததேயில்லை சாமி” எண்ணைக் கடைக்காரரின் தொண்ணூற்றியாறு வயசுப் பாட்டி பயத்தில் தன்னைக் கட்டிக் கொண்டிருந்த பேரப் பிள்ளைகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
மறுநாள் காலை ஆறு மணி. மழை விட்டபாடில்லை.
மலையடிவாரத்தில் கூடியிருந்த மக்கள் போலீஸ் பாதுகாப்புடன் மழை ஏறத் துவங்குகையில்,
‘ப…டா…ர்;”
விண்ணில் கேட்ட பேரிடி “சட… சட” வென இறங்கி மழைக் கோயில் கோபுரத்தில் மோத, நாலாப்புறமும் வெடித்துச் சிதறியது கோயில்
பீதியடைந்த மக்கள் தாறுமாறாய் ஓட்டமெடுக்க காவல் துறை அவர்களைக் கட்டுப்படுத்தியது.
‘அய்யய்யோ… நம்ம குல தெய்வம் கோயில் மேல இடி விழுந்திட்டுது” ஊர்த்தலைவர் கத்த.
நாலைந்து காவலர்கள் அவசர அவசரமாய் மலை மேல் ஓடினர். அவருடன் ஊர்த்தலைவர் நாகுவும்… ஆசிரியர் சுந்தரமும்… இன்னும் நாலைந்து பேரும் ஓடினர்
மேலே, சிதிலமாகிப் போயிருந்த கோயிலின் இடிபாடுகளுக்கு நடுவில் கருகிப் போய்க் கிடந்தான் அந்தப் பைத்தியக்காரன்.
‘கடவுளே… இதென்ன சோதனை?” ஊர்த்தலைவர் கண்ணீர் விட,
ஆசிரியர் சுந்தரம் அமைதியாகச் சொன்னார், ‘அய்யா… “கடவுள் இருக்கிறாரா?… இல்லையா?”ங்கற சந்தேகம் மனிதனுக்குத் தோன்றும் போதெல்லாம் தன்னுடைய ஏதாவதொரு திருவிளையாடல் மூலமா தன் இருப்பை உறுதிப்படுத்திக் காட்டும் கடவுள் …இப்ப… இங்க… இந்தத் திருவிளையாடலை நிகழ்த்தியிருக்கார்… அந்தப் பைத்தியக்காரன் யாரு?.. எவரு?..ங்கறது இந்த நிமிடம் வரைக்கும் நமக்குத் தெரியலை… ஆனா… அவன் மட்டும் இங்க இல்லாமப் போயிருந்தான்னா… இன்னேரம் இந்த இடத்துல நம்ம ஜனங்க… ஒரு அம்பது பேராவது பொணமாக் கெடப்பாங்க… இதை யாராலும் மறுக்க முடியுமா?”
எல்லோரும் அமைதியாக நிற்க, ஊர்த்தலைவர் வானத்தை நோக்கிக் கும்பிட்டார்.
சவமாய்க் கிடந்த பைத்தியக்காரனின் கையிலிருந்த ஈட்டி லேசாய்ச் சரிந்து, வேறொரு கல்லில் பட்டு சடாரென்று நிமிர்ந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings