2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“என்ன சத்தம் இந்த நேரத்துல?”
தூக்கத்தில் முணுமுணுத்தான் வளவன். மீண்டும் ஏதோ சத்தம் தூக்கத்தைக் கலைக்கவே, அரைகுறைத் தூக்கத்தில் கண் விழித்து, அறையின் மங்கலான வெளிச்சத்தில் மணி பார்த்தான். மணி நள்ளிரவு 12:30.
சத்தம் தொடர்ந்தது. எரிச்சலுடன் எழுந்து உட்கார்ந்தான்.
“என்ன சத்தம் இது, மனுஷனை நிம்மதியா தூங்கக்கூட விடாம.”
தனியாகப் புலம்பிக்கொண்டே, அறையின் லைட்டைப் போட்டான். காதைத் தீட்டி சத்தம் எங்கிருந்து வருகிறது எனத் தேடினான். ஏதோ உலோகம் உராயும் சத்தம். சுற்றுமுற்றும் பார்த்தான். அறையில் எதுவும் வித்தியாசமாக இல்லை.
கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தான். இருட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை. பெருமூச்சுவிட்டபடி அறைக்குத் திரும்பினான். அறையின் கதவைச் சாத்திவிட்டுத் திரும்பியவன் முன்னால், மசமசப்பாய் ஒரு உருவம்.
திடுக்கிட்டு வளவன் சுதாரிக்கும்முன், அவன் மேல் அந்த உருவம் பாய்ந்து, கையில் இருந்த குறுவாளால் கழுத்தில் ஆழமாகக் கோடு போட, கத்தக்கூட இயலாமல் உயிரை விட்டான் வளவன்.
மறுநாள் காலை வளவன் வீட்டில் போலீஸ் குவிந்தார்கள். வளவனின் கொலைக்கான காரணமும், தடயமும், குற்றவாளி யார் என்றும் பலவித ஆராய்ச்சிகள் நடந்தன. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
வளவனுடன் வேலை செய்பவர்களிடம் விசாரணை நடந்தது. அவர்களுக்கும் காரணம் தெரியவில்லை. வளவனுக்கு எதிரிகள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. குடும்பமும் இல்லை. முதல் கட்ட விசாரணைக்கே திணறிப் போனார்கள் காவல் துறையினர்.
வளவனின் நண்பர்கள் மாறன், கோபால், வேணு மூன்று பேருக்கும் மிகவும் கவலையாக இருந்தது. பழக்கமே இல்லாத இந்த ஊரில் வளவனுக்கு எதிரிகள் என்று யார் இருக்க முடியும்?
கவலையிலும், குழப்பத்திலுமிருந்த அவர்களுக்கு இடி விழுந்தது போல, இரண்டே நாளில் இன்னொரு நிகழ்வு நடந்தது.
கடைக்குப் போன கோபால் திரும்பி வராததால், அவன் மனைவி, மாறன் மற்றும் வேணுவுக்கு ஃபோன் செய்யவே, இரண்டு பேரும் பதறிக்கொண்டு ஓடினார்கள்.
இரவு முழுவதும் தேடியும் கோபாலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. விடியலில், ஊர் எல்லையில், கோபாலின் உயிரற்ற உடல்தான் கிடைத்தது. போலீஸ் திணறிப் போனார்கள். கைரேகை நிபுணர்கள் கொடுத்த அறிக்கை இன்னும் குழப்பத்தைத் தந்தது.
மனிதர்களின் கைரேகை அல்லது மிருகங்கள் தாக்கிய அடையாளம் என எதுவும் உடலில் இல்லை. ஆனால் ஏதோ ஒரு ஆயுதத்தால் கொலை செய்திருக்கிறார்கள். ஆனால் யார், ஏன் செய்தார்கள் என்பதற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
மாறன் மற்றும் வேணுவிடம் போலீஸ் துருவித்துருவி கேட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை. கொலைக்கான காரணம் அவர்களுக்கும் தெரியவில்லை.
விசாரணை ஒருபக்கம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, மாறனும், வேணுவும் தங்களுடன் வேலை செய்த இரண்டு பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதால், மிகவும் கலங்கிப் போனார்கள்.
மறுநாள் இரவு மாறனுக்கு, தூக்கத்தில் ஏதேதோ கனவுகள் வந்து பயமுறுத்தின. கூடவே அரசர்கால உடையில், யாரோ தன்னைத் துரத்திக்கொண்டு வருவது போல் கனவு வரவே, வியர்த்துப்போய் தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்தான் மாறன்.
உடலில் நடுக்கம் மட்டும் குறையவே இல்லை. சட்டென்று ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்கவே, காதைக் கூர்மையாக்கி கவனித்தான். குதிரைக் குளம்படிச் சத்தம் ஒரே சீராகக் கேட்டது. தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியைத் தொந்தரவு செய்யாமல், எழுந்து கதவைத் திறந்து, வெளியே வந்தான்.
இப்போது குதிரை ஓடி வரும் சத்தம் நின்றிருந்தது. குழப்பத்துடன் மீண்டும் அறைக்குத் திரும்பினான். கதவருகே யாரோ நிற்பது போல் தோன்றவே, சற்று நிதானித்தான். ஆனால் அதற்குள் இருட்டில் தெளிவில்லாமல் தெரிந்த அந்த உருவம், மாறனை நோக்கி வேகமாக வந்தது.
பயத்தில் நிலைகுத்திய பார்வையோடு, வயிற்றில் அமிலம் சுரக்க, அது பந்து போல் சுருண்டு, மேலே எழும்பி, பயணப்பட்டு இதயத்தை அடைத்து, தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.
“என்னங்க, தூங்காம இந்த நேரத்துல என்ன பண்றீங்க? ஏன் இப்படிப் பேயறைஞ்ச மாதிரி நிக்கறீங்க? உங்களைப் பார்த்தா எனக்கே பயமா இருக்கு.”
மாறனின் மனைவி தூக்கக் கலக்கத்தில் இப்படிக் கேட்டதும், அந்த உருவம் சட்டென்று காணாமல் போனது. போன உயிர் திரும்பி வந்தது என்று சொல்வார்களே, அதுபோல் உணர்ந்தான் மாறன். மீண்டும் வந்து படுத்தவனுக்கு, தூக்கமே வரவில்லை. பயத்துடனேயே அந்த இரவைக் கழித்தான்.
மறுநாள் முதல் வேலையாக வேணுவைப் பார்க்கப் போனான்.
“என்ன மாறா, இவ்ளோ சீக்கிரமா வந்திருக்கே? என்ன விஷயம்?”
“வேணு, கொஞ்சம் தனியா பேசணும்,” என்று இருவரும் தனியாகப் போய், பேச ஆரம்பித்தார்கள்.
“என்னடா, என்ன விஷயம்? ஏன் ஒரு மாதிரி இருக்கே மாறா?”
“வேணு, நேத்து ஒரு கனவுடா. கனவுல யாரோ அரசர் என்னைத் துரத்திட்டு வரார். குதிரை வர சத்தம் வேற கேட்டுச்சு. எழுந்து வெளில போய்ப் பார்த்துட்டு, திரும்பி வரும்போது, ஏதோ உருவம் கைல சின்னக் கத்தியோட என் மேல பாய்ஞ்சுது. நல்லவேளை, பிந்து சரியான நேரத்துல, தூக்கத்துல இருந்து எழுந்து, என்கிட்ட பேசினா. அவ குரல் கேட்டதும், அந்த உருவம் அங்கிருந்து மாயமா மறைஞ்சு போச்சு. எனக்கு என்னவோ இதுக்கும், வளவன், கோபால் கொலைக்கும் சம்பந்தம் இருக்கறதா தோணுது வேணு. அதனால எனக்கு அதுக்கப்புறமும் நைட் தூக்கமே வரல டா.”
“நீ அவங்க ரெண்டு பேரோட கொலையை நினைச்சுட்டே இருக்கறதுனால, உனக்கு இப்படியெல்லாம் கனவு வந்திருக்கலாம். அதுல இருந்து வெளியே வாடா.”
“இல்லடா, நான் பார்த்தது நிஜம். அது கனவு கிடையாது. நாம அன்னிக்குத் தோண்டும் போது, ஒரு எலும்புக்கூடு கிடைச்சுதில்ல. அதுகூட ஒரு குறுவாள் இருந்துதே, அதை எடுத்துட்டு வந்திருக்கக் கூடாது. அதனாலத்தான் இப்படி எல்லாம் நடக்குது.”
“டேய் மாறா, ஏண்டா இப்படி எல்லாம் கற்பனை பண்றே? ரொம்ப பயந்து போயிருக்கேன்னு நினைக்கறேன். அப்படியே இருந்தாலும், அந்தக் குறுவாளை வளவன் தானே எடுத்துட்டு வந்தான். அது அவன் வீட்லதான் இருக்கணும். அது எப்படி உன் வீட்டில, உன் மேல குத்தறதுக்கு வந்த உருவம் கைல இருக்கும்? தேவையில்லாம பயப்படாதடா. இன்னைக்கு ஒரு நாள், பேசாம நிம்மதியா வீட்ல இரு.”
மாறன் வீட்டுக்கு வந்தான். ஆனாலும் அவன் மனதில் ஒட்டிக் கொண்டிருந்த பயம் மட்டும் விலகவே இல்லை.
வேணு, மாறனுக்கு தைரியம் சொன்னானே ஒழிய, இப்போது அவனுக்கும் பயம் பிடித்துக் கொண்டது. அன்று நடந்த நிகழ்வை நினைத்துப் பார்த்தான் வேணு.
இவர்கள் நால்வரும் தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்கள். பல்லவர்கால அரசின் மிச்சங்கள் இருப்பதாக நம்பப்படும் ஒரு இடத்தில், அகழ்வாராய்ச்சியை ஆரம்பித்து, அதில் வெற்றிகரமாக பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சென்ற வாரம் ஒரு இடத்தில் தோண்டும் போது ஏதோ தட்டுப்படவே, சட்டென்று மண்ணை நகர்த்திப் பார்த்தால், அங்கே ஒரு எலும்புக்கூடு இருந்தது. அதன் கையில் ஒரு குறுவாள், அழகிய தங்கக் கைப்பிடியோடு மின்னிக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும் அவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இவ்வளவு நாட்கள் அகழ்வாராய்ச்சி செய்ததில் கிடைத்தவை எல்லாம், வெறும் மண் பாண்டங்களும், எலும்புக் கூடுகளும் மட்டும் தான். இப்படி தங்கப்பிடி போட்ட குறுவாள் எல்லாம் கிடைக்கவேயில்லை.
இதைப் பார்த்ததும் நாலு பேருக்கும் மனதில் பேராசை எட்டிப் பார்த்தது. சுற்றுமுற்றும் யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, அந்த வாளை மட்டும் எடுத்து பத்திரப்படுத்தினர்.
அங்கே கிடைத்த, தங்கக் கைப்பிடி போட்ட வாளை, வளவன் தன் வீட்டில் கொண்டு வந்து பத்திரப்படுத்தினான். தொடர்ந்து வரும் நாட்களில் இது போல் வேறு ஏதாவது விலையுயர்ந்த பொருட்கள் கிடைத்தால், அதையும் வைத்துக் கொண்டு, பின்னர் அதை எப்படி, எங்கே விற்பது என்பதைப்பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்பது இவர்கள் நால்வரின் திட்டம்.
அந்த எலும்புக் கூடும், வாளும்தான் வளவன், மற்றும் கோபாலின் மரணத்திற்குக் காரணம் என்றால், கண்டிப்பாக அடுத்த மரணம் மாறன், அல்லது தனக்குத்தான் என்பது புரிந்தது வேணுவுக்கு.
ஆனால் வளவன் வீட்டிற்குப் போய், அந்த வாளை எப்படித் தேட முடியும்? வளவன் வீட்டிலேயே கொலை நடந்திருப்பதால், அந்த வீடு காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் உள்ளே போய்த் தேட முடியாது.
இப்படி மாறனும், வேணுவும் அவரவர் வீட்டில், பயத்துடன் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தனர்.
மறுநாள் மாலை மாறனின் மனைவி, ஏதோ யோசனையில் இருந்த தன் கணவன் அருகே வந்து உட்கார்ந்தாள்.
“ஏங்க, ஒரு சந்தேகம். மதியமே கேக்கணும்னு நினைச்சேன். நீங்க ஏதோ கவலையா இருந்ததால கேக்கல. இது என்னங்க?” என்று கையில் வைத்திருந்த குறுவாளை நீட்டினாள்.
அதிர்ந்து போனான் மாறன்.
“இது எப்படி உன் கைக்கு வந்துது?” கேட்டுக் கொண்டே, அந்த வாளை அவள் கையிலிருந்து பிடுங்கினான்.
“உங்க தலையணைக்குக் கீழே இருந்தது. படுக்கையைத் தட்டிப் போடும்போது பார்த்தேன்.”
எதுவும் பேசாமல் விடுவிடுவென்று அங்கிருந்து. வெளியேறினான் மாறன். அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்திற்குப் போனான். நன்றாக இருட்டியிருந்தது.
மொபைல் வெளிச்சத்தில், அந்த எலும்புக் கூடு இருந்த இடத்தைத் தேடிப்பிடித்து, அங்கே கொஞ்சமாகத் தோண்டி, இந்த வாளை அங்கேயே புதைத்துவிட்டு, அந்தக் குழியிலிருந்து வெளியே வர முயன்றான்.
ஆனால் அந்தக் குழியிலிருந்து இரண்டு கைகள் வந்து, அவன் காலைப் பிடித்து இழுக்க, கீழே விழுந்தான் மாறன். இருட்டில், என்னவென்று சரியாகத் தெரியாத ஒரு உருவம். நெடுநெடுவென்று அவன் முன்னால் நின்றது.
கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தான் மாறன். குதிரை மீது இருந்த அந்த உருவத்தில், அரசனின் கம்பீரமும், வீரமும் தெரிந்தது. முதுகுத் தண்டு சில்லிட்டுப் போக, பயத்தின் உச்சிக்குப் போனான் மாறன்.
கத்துவதற்குக்கூட வாய் வரவில்லை. நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டது போல் ஒரு உணர்வு.
“அன்று என்னைக் கொல்லாதே என்று எவ்வளவு கெஞ்சினேன். இரக்கம் காட்டாமல் என்னைக் கொன்றால், பொறுத்துக் கொள்வேனா? என் மீது படையெடுத்து வந்த எதிரி நாட்டு மன்னர்களில் ஒருவரைக்கூட உயிரோடு விட்டதில்லை நான். ஆனால் நீங்கள் என்னை இப்படிச் சிதைத்து விட்டீர்கள். அன்று என்னைக் கொல்ல வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தேன். நீங்கள் கேட்கவில்லை. நீங்கள் எனக்குத் தூசுக்குச் சமம். அன்றே தீர்த்துக் கட்டியிருப்பேன். ஆனால் என் வாளைத் திருடி, என்னை வீழ்த்த நினைத்த உங்கள் முடிவு சாதாரணமாக இருக்கக் கூடாது அல்லவா. அதனால்தான் இந்தத் தண்டனை. நீ என் கையால் மடியும் நூறாவது எதிரி. யாரை வீழ்த்த சதி செய்கிறீர்கள்? ஒழிந்து போ.”
கர்ஜனைக் குரல். ஆனால் அது மாறனுக்கு மட்டுமே கேட்டது.
என்ன, ஏது என்று அவன் புரிந்து கொள்ளும் முன்பே, அந்த உருவம் அந்தக் குறுவாளால் மாறனின் கழுத்தில் ஆழமாகக் கோடு இழுத்து விட்டது. சத்தமில்லாமல் அடங்கிப் போனான் மாறன்.
எந்த இடத்தில் எலும்புக்கூடு இருந்ததோ, இப்போது அதே இடத்தில், இன்னும் ஆழத்துக்கு மாறனின் உடலை அழுத்தி விட்டது அந்த உருவம். பெருமூச்சுவிட்டபடி உருவம் காணாமல் போனது.
மாறனின் மனைவி வெகு நேரம் காத்திருந்துவிட்டு, பயத்துடன் வேணுவுக்கு ஃபோன் செய்தாள். நடந்த விவரங்கள் அனைத்தையும் சொன்னாள். குறுவாள் பற்றிய தகவலையும், அதை எடுத்துக் கொண்டு மாறன் போனான் என்றும் சொன்னாள்.
வேணுவுக்கு அடி வயிற்றில் பயம் அலையடிக்க ஆரம்பித்தது. மாறனின் மனைவியை சமாதானப்படுத்திவிட்டு, என்ன செய்வதென்று யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்கு மாறன் எங்கு போயிருப்பான் என்று தெரியும். அங்கே போய்த் தேடும் அளவுக்கு வேணுவுக்குத் தைரியம் வரவில்லை. தன் உயிரை எப்படி காப்பாற்றிக் கொள்ளலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.
ஆனால் அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அந்தக் குறுவாள், வேணுவின் தலையணைக்குக் கீழே வந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது.
மாறனுக்கு என்ன ஆகியிருக்கும் என்ற கவலையும், அவனை எப்படிப் போய்த் தேடுவது என்ற குழப்பமும், மறுநாள் விடியலில் என்ன கெட்ட செய்தி வரப் போகிறதோ என்ற பதைபதைப்பும் சேர்ந்து, வேணுவைத் தூங்க விடாமல் இம்சை செய்து கொண்டிருந்தன.
வீட்டில் குறுக்கும், நெடுக்கும் நடமாடிக் கொண்டே இருந்தான் வேணு. ஒரு கட்டத்தில் மனமும், உடலும் ஓய்ந்துபோன நிலையில், தன் அறைக்கு வந்தவன், எதிரில் நெடுநெடுவென்று புரிந்து கொள்ள முடியாத ஒரு உருவத்தைப் பார்த்ததும், சப்த நாடியும் ஒடுங்கிப் போனான்.
இதயத் துடிப்பு நின்று விட்டது போல ஒரு இம்சையான உணர்வு. என்ன செய்யலாம் என்று வேணுவை யோசிக்கக்கூட விடாமல், அந்த உருவம் அவன் மேல் பாய்ந்து, தன் வழக்கமான வேலையை முடித்து விட்டு, நிம்மதியாக மீண்டும் எந்த குழியிலிருந்து வெளியே வந்ததோ, அங்கேயே தன் குறுவாளுடன் போய், அமைதியாக அடங்கிக் கொண்டது.
“என்னைக் கொல்லாதே. கொல்லவும் முடியாது,” என்று கர்ஜிக்க, மண் சற்று மேலெழும்பி, பின் அடங்கிக் கொண்டது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings