2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த நான் சடாரென விழித்தேன்.. மாலை 4:10 மணி. நாளின் அந்த நேரம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அகல நாளாகும் என்று தோன்றியது. அப்பா என்னை விட்டு பிரிந்த அந்த நாளின் ஞாபகங்கள் அலைமோதியது
“கவிதா” அப்பா தீனமாய் அழைக்க… நான் படுக்கையில் அமர்ந்து அவர் கையை பிடித்துக் கொண்டேன். உடம்பு ஒரு வாரமாகவே மோசமாகி வருவது புரிந்தது.
“கண்ணா” ஈனஸ்வரத்தில் கூற, அவர் என் சின்ன மகன் கண்ணனை தேடுகிறார் என்பது புரிந்தது. கண்ணன் அவர் அணைப்பில் வளர்ந்தவன். வேலை விஷயமாக அமெரிக்கா சென்றிருக்கும் அவனை பார்க்க ஏங்குகிறார் என்பது புரிந்தது.
“வந்துடுவான்ப்பா” என்றேன் ஆதரவாக. மனம் கல்லாய் கனக்க அவர் உறங்கிய பின்னும் அவர் கையைப் பிடித்துக் கொண்டே அமர்ந்திருந்தேன்.
அவர் எனக்கு அப்பா மட்டுமல்ல, நல்ல நண்பன், ஆசான், வழிகாட்டி…மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் நுணுக்கமாக எனக்கு கற்றுக் கொடுத்தவர். சிறுவயதில் காலை வேளையில் ரம்மியமான பொழுதில் அப்பாவுடன் நடக்கையில் ஒவ்வொரு நாளும் ஒரு இதிகாச கதாபாத்திரத்தைப் பற்றி விரிவாக சொல்லிக்கொண்டே வருவார். தமிழ் ஆர்வத்தை என்னுள் வளர்த்தவர்.நான் திருமணமாகி சென்ற பிறகு கூட மிகவும் ஏங்கியது அந்த நாட்களை எண்ணியே.
எந்த பிரச்சினையையும், எளிதாக தீர்த்து வைக்க மிகச்சரியாக ஆலோசனை சொல்வார். அவருடைய நேர்மையான வழி காட்டுதல், என் வாழ்க்கை பாதையை எளிதாக்கியது.
‘டேக் தி புல் பை இட்ஸ் ஹார்ன்’ என்பார். எந்த காளையையும் கொம்பை பிடித்து அடக்க கற்றுக் கொடுத்தவர். சிங்கமாய்.. கம்பீரமாய்.. உலவிய மனிதர், நைந்து, நாராய் கிடப்பதைப் பார்த்து மனம் கலங்கியது. அவர் ஊட்டி வளர்த்த தைரியம் என்னை உடைந்து போகாமல் காப்பாற்றியது.
விளக்கை அணைத்து விட்டு வெளியே வந்தேன். அம்மாவும் பாவம் அப்பாவி தான். அன்பை மட்டுமே வெளிக்காட்ட தெரிந்தவள்.
“கவி! மத்தியானமே சரியா சாப்பிடலை! வந்து சாப்பிட்டுட்டு ரூம்ல படுத்துக்கோ! அப்பாவை நான் பார்த்துகிறேன் நீ கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கு” என்றாள் அம்மா வாஞ்சையாக.
அப்பாவைப் போலவே அம்மாவும் தைரியசாலிதான். அவர்கள் தைரியம் எனக்கும் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். மனதில் ஏதோதோ எண்ணங்கள் அலைமோத, விடியும் போது தான் அயர்ந்து தூங்கினேன்.
காலையில் அம்மா எழுப்ப, அவள் முகத்தில் கலவரத்தைப் பார்த்தேன். “கவிதா! ரெண்டு தடவை அப்பாவுக்கு நீர் பிரியும் போது ரத்தம் கலந்து போனது. இனி வீட்டில இருக்க வேண்டாம். ஆஸ்பத்திரியில சேர்த்திடுவோம்” என்றாள் கலக்கமாக.
எனக்கு டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது “இன்டர்னல் பிளீடிங்”(உடலின் உள் பகுதியில் ரத்தக் கசிவு) என்று புரிந்தது. காலை மணி ஒன்பது மணிக்கு அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தாகிவிட்டது.
டாக்டர் எங்கள் குடும்ப நண்பர்.
“கவிதா இனிமே நாம செய்யக்கூடியது ஒன்னுமில்லை. உன் பிள்ளைங்கள வந்து பார்த்துட்டு போகச் சொல்லு “என்றார்.
“இனிமே அவரை சிரமப்படுத்த வேண்டாம் டாக்டர். அவர் கடைசி நேரம் வலியில்லாமல் அவஸ்தை இல்லாமல் இருக்கட்டும்” என்றேன் அழுகையை அடக்கிக்கொண்டு.என் கணவருக்கும், மகனுக்கும் தகவல் சொல்லிவிட்டு அப்பாவின் அருகில் அமர்ந்தேன்.
அப்பாவின் கைகளை தடவி விட்டேன். ஆஸ்பத்திரி தலகாணி சற்று உயரமாக இருக்க, அப்பாவுக்கு அது அசௌரியமாக இருப்பது போலத் தோன்றியது.அப்பாவிற்கு தலகாணி மாறக் கூடாது.எங்கள் கார் டிரைவர் கதிரிடம் வீட்டுச் சாவியை கொடுத்து வீட்டிலிருந்து அப்பாவுடைய தலகாணியை எடுத்து வரச் சொன்னேன். நானும் கதிரும் ஆஸ்பத்திரி தலகாணியை எடுத்துவிட்டு வீட்டுத் தலகாணியைவைத்தோம்.
அவர் முகத்தில் கொஞ்சம் நிம்மதி.பேச்சு நின்று சைகையில் தண்ணீர் பாட்டிலை காண்பிக்க, நான் மெதுவாக ஆக்ஸிஜன் மாஸ்க்கை தூக்கிவிட்டு, தண்ணீர் கொடுக்க, அங்கு வந்த நர்ஸ்” தண்ணி கொடுக்காதீர்கள்” என்று எச்சரித்து விட்டுப் போனாள்.
ஒரு மணி நேரம் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த அப்பாவுக்கு லேசாக மூச்சு வாங்க தொடங்கியது மூச்சு விட சிரமப்படும் அப்பாவை பார்க்க முடியாமல் கண்களை மூடியவாறு அவர் அருகில் அமர்ந்து இருந்தேன்.என் மனம் அலைபாய்ந்தது அப்பாவுடன் என் வாழ்க்கையின் கடைசி பக்கத்துக்கு வந்து விட்டதாகத் தோன்றியது
இனி என் வாழ்க்கையில் அப்பா இருக்க மாட்டார். “கவி “என்று அழுத்தி பாசமாக அழைக்கும் அந்த குரலை இனி கேட்க முடியாது சட்டென்று தலையை உதறிக்கொண்டு ரூமை விட்டு வெளியே வந்தேன். அந்த மருத்துவமனையின் மாடியின் தளம் முழுவதும் இரண்டு முறை வேகமாக சுற்றி வந்தேன்.
திரும்ப ரூமுக்கு வந்தபோது அம்மா வாசலில் நின்றிருந்தாள். அப்பாவுக்கு அடிவயிற்றிலிருந்து தொண்டைவரை மேல் மூச்சு வாங்கியது.
அம்மா” கவி…மணி ரெண்டாகுது சீக்கிரம் வேணும் வேணாங்கறத சாப்பிடு” என்றாள்.அவளிடம் வேண்டாம் என்று சொன்னாலும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுவாள். பேருக்கு சாப்பிட்டுவிட்டு அப்பாவின் அருகில் அமர்ந்தேன்.” அப்பா “என்று கூப்பிட்டேன். கடைசி நேரத்தில் ஏதாவது பேச மாட்டாரா? என்ற ஏக்கத்தில்…
“கண்ணா” என்று முணுமுணுத்தார். என் சின்ன மகன் கண்ணன் வெளிநாட்டில் இருப்பவனை நினைக்கிறார் என்பது புரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு அடங்கி கொண்டே வந்தது. என் கணவரும் ,பெரிய மகனும், மற்ற அனைத்து உறவுகளும் வந்து சேர்ந்தனர். கதிர்வேல் எங்கேயோ போய் பால் வாங்கி வந்தான்.
” கவிதாம்மா அப்பாவுக்கு வாயில் கொஞ்சம் பால் விடுங்கள்” என்றான். அழுகையை அடக்கிக் கொண்டு பாலை அப்பாவின் வாயில் ஊற்றினேன். பாதி உள்ளேயும் பாதி வெளியேயும் பால் வடிந்தது. இதயம் அழுதது
அழக்கூடாது என்று திடமாக நினைத்தேன் என் அப்பாவுக்கு அழுவது பிடிக்காது. மேலும் தைரியமாக இருக்கும் என் அம்மாவையும் அது அதைரியப்படுத்தி விடும், மூச்சு வாங்குவது குறைந்து தொண்டையில் மட்டும் நரம்பில் துடிப்பில் தெரிந்தது. உறவினர்கள் அம்மாவை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.
மாலை மணி 4 .10 அப்பாவின் இறுதி மூச்சு அடங்கியது. ஒரு உண்மையான நேர்மையாக வாழ்ந்த உன்னத மனிதனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. டாக்டர் வந்து அவர் மரணத்தை உறுதிப்படுத்தி விட்டுப் போய்விட்டார்
கதிர்வேல் “கவிம்மா ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போங்க ” நாங்க ஆம்புலன்சில் அப்பா பாடிய கொண்டு வர்றோம்” என்று சொல்ல அப்பாவை வரவேற்க நான் முன்னதாக வீட்டிற்கு கிளம்பினேன். ஆட்டோவில் போகும் போது இனி அம்மா எப்படி இருப்பாள்? சமாளித்து தைரியமாக வாழ்வாளா? விடைகாண கேள்விகள் என்னை சுற்றி வந்தன
முதல் முறையாக அம்மாவை பற்றிய கவலைகள் மனதில் பூதாகரமாக எழுந்தது.
வீட்டிற்கு வந்ததும் மளமளவென காரியத்தில் இறங்கினேன் கேட்டைத் திறந்து வைத்து இரட்டை பெஞ்சுகளை வெளியில் போடச்சொன்னேன். அண்டாவில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றச் சொன்னேன். அதற்குள் ஆம்புலன்ஸ் வர, என் கணவரும் கதிர்வேலு மற்ற ஊழியர்களும், அப்பாவை கீழே இறக்கி பெஞ்சில் கிடத்தினர்.
அப்பாவை குளிப்பாட்ட தொடங்கினர். என் கணவர் குரல் கேட்டது “கவிதா அப்பாவுக்கு ஒரு பட்டு வேட்டியும் சட்டையும் எடுத்துவா. அப்படியே ஒரு துண்டும் வேண்டும் “என்றார் .பீரோவைத் திறந்து பட்டு வேட்டியும், அப்பாவிற்குப் பிடித்த நீல கலர் சட்டையும் எடுத்தேன். வெறித்துப் பார்த்தபடி அம்மா உட்கார்ந்திருப்பது தெரிந்தது .எப்போதும் பேசிக் கொண்டே இருப்பவள் அமைதியில் உறைந்து போய் பார்ப்பது கொடுமையாக தெரிந்தது. அப்பாவுக்கான அழுகையை விட அம்மாவைப் பற்றிய கவலையே மனம் முழுக்க வியாபித்தது.
கூடத்தில் வைக்க விளக்கு ,இலை, அரிசி என்று ஒவ்வொன்றாக ஒவ்வொருவரும் கேட்க ,பம்பரமாக சுழன்று கொண்டிருந்தேன். இதோ அப்பாவை கூடத்தில் கிடத்தியாகிவிட்டது .யாரோ வாசனை பத்தி கேட்டார்கள். “அப்பாவுக்கு வாசனை பிடிக்காது” என்றேன் எனக்கே கேட்காத குரலில்.
முக்கிய உறவினர்கள் தொலைபேசி நம்பர்கள்..மறு நாள் ஏற்பாடுகள், என என் கணவர் ஓயாமல் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார் .அப்பாவின் அருகில் கொஞ்ச நேரம் அமர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் இரவு தான் நேரம் கிடைத்தது. அப்பாவுக்காக இன்னும் ரெண்டு சொட்டு கண்ணீர் விடவில்லை. விரக்தியில் சிரிப்பு வந்தது. நான் அப்பாவின் தலை மாட்டில் அமர்ந்ததும் அம்மா எழுந்து வந்து என் அருகில் அமர்ந்து கொண்டாள். ஏதேதோ பழைய கதைகளை அம்மா பேசிக் கொண்டே இருக்க இரவு நீண்டு கொண்டே போனது. அம்மாவை மாத்திரை கொடுத்து தூங்க வைத்து.. அதற்குள் விடிந்தே போனது.
காலையில் எல்லா உறவினர்களும், நண்பர்களும் ,அப்பாவுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்துவிட்டார்கள். இதோ மறுபடியும் எல்லா அபிஷேகங்களையும் பெற்றுக்கொண்டு ,அகலக் கரை போட்ட பட்டு வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து அப்பா புறப்பட்டுவிட்டார். என்னையும் அறியாமல் கண்களில் நீர் திரள ..என் கணவர் “யாரும் அழக்கூடாது. தேவாரம் படியுங்கள்” என்று கேட்டுக்கொள்ள தேவாரம் பாட ஆரம்பித்தோம்.
அப்பாவை வண்டியிலேற்ற… இதோ என்னை விட்டு என் தந்தை கிளம்பி விட்டார். ” கீழே மண்ணில் விழுந்து அப்பாவை கும்பிடுமா” என்று முதிய பெண்மணி ஒருவர் கூற… கீழே விழுந்து கும்பிட்டு நிமிர கண்ணில் உதித்த கண்ணீர் தரையைத் தொடும் முன், ஒரு முதிய சுமங்கலி “அம்மாவை சீக்கிரம் குளிக்கச் சொல்லுமா.. அப்பத்தான் வந்திருக்கும் பெண்கள் வீடு திரும்ப முடியும்” என்றார்.
வேறொருவர் “வீட்டை கழுவி விட ஆட்களைச் சொல்லுமா” என்று கூற மீண்டும் பம்பரமாய் சுழன்றேன் .
எல்லாம் முடிந்து குளித்துவிட்டு ஹாலில் உட்கார்ந்தேன். வீட்டில் வேலைப்பார்க்கும் சரசு காப்பி கொண்டுவந்து “கவிதாம்மா காபி குடிங்க “என்று பரிவுடன் கூற அதுவே என் தூக்கத்தை அதிகப்படுத்தியது.
அந்த நேரம் தொலைபேசி அழைக்க யாரோ எடுத்து விட்டு என்னை கூப்பிட்டார்கள் “அமெரிக்காவிலிருந்து கண்ணன் கூப்பிடுகிறான்” என்ற உடனே போனை வாங்கி கொண்டேன்.
” அம்மா தைரியமா இரும்மா தாத்தா மேல நீ எவ்வளவு உயிராய் இருப்பேன்னு எனக்குத் தெரியும். நீ உடைஞ்சு போயிடாதே.. ஆச்சியை கவனிக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு. நான் இந்த நேரம் உன் கூட இருக்க முடியலையேன்னு என்று ரொம்ப வருத்தமா இருக்கு..” என்று கண்ணன் பேசிக்கொண்டே போக …
இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து கிளம்பியது பேசமுடியாமல் போனை வைத்துவிட்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings