2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மாலை ஆறு மணியிருக்கும்,
பிரபல நடிகை “உதயதாரா”வின் தாயார் தன் பிரத்யேக மேக்கப் அறையில் படு பிஸியாயிருந்தாள். ஐம்பத்தி நான்கு வயதை இருபத்தி நான்காக மாற்ற பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள். அவளது ஆக்ரோஷ முயற்சியில் அவ்வப்போது சிற்சில வெற்றிகளும்… அடிக்கடி மாபெரும் தோல்விகளும் மாறி மாறி வந்து போய்க் கொண்டிருந்தன. நேற்று வரை வெள்ளையாயிருந்த தலை முடி இன்று கருப்பாக மாறியிருந்தது. உதட்டில் லிப்ஸ்டிக் சிவப்பு. முகத்தில் பல வகை கிரீம்களின் ஆக்கிரமிப்பு.
“அம்மா… அம்மா…” வேலைக்காரி விஜயாவின் குரல் கேட்க,
தன் போராட்டத்தைச் சற்று நிறுத்தி விட்டு திரும்பிப் பார்த்தாள்.
கதவருகே தயக்கமாய் நின்று கொண்டிருந்த வேலைக்காரி “அம்மா… காலையில் கேட்டிருந்தேனே… கொஞ்சம் பணம்… அவசரமாய்த் தேவைப்படுதுன்னு…” என்று திக்கித் திணறிச் சொல்ல,
ஏற்கனவே எரிச்சலிலிருந்த அந்தப் பணக்காரச் சீமாட்டி “ச்சை… உன்னோட பெரிய தொந்தரவா இருக்கே….” என்று கடும் முகபாவத்துடன் சொல்ல,
“இல்லைம்மா… ரொம்ப முக்கியமான சமாச்சாரம்… என் மூத்த பொண்ணை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போவணும்… அதான்…”என்று இழுத்தாள் வேலைக்காரி விஜயா.
“என்ன கேடு உன் மூத்த பொண்ணுக்கு?… மென்சஸ் ஆக மாட்டேங்குதா… இல்ல கண்டபடி மேய்ஞ்சு வயத்துல வாங்கிக்கிட்டு வந்துட்டாளா?” அவளின் உள் மன விகாரத்தை நரம்பில்லா நாக்கு வக்கிர வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்திக் காட்டியது.
“அவளுக்கு மூக்குல உள் பக்கமா… சதை வளர்ந்திருக்கு… மூச்சு விடவே சிரமமாயிருக்கு… ஆபரேஷன் பண்ணி அதை நீக்கினால்தான் சரியாகுமாம்” கரகரத்த குரலில் சொன்னாள் விஜயா.
“அட.. மூக்குலதானே சதை வளர்ந்திருக்கு… அது பாட்டுக்கு இருந்திட்டுப் போவுதுன்னு விடுவியா… சும்மா ஆபரேஷன்… அது… இதுன்னு தேவையில்லாம அலப்பறை பண்றியே” பணம் தர இஷ்டமில்லாமல் பேசினாள் அந்தப் பணக்காரச் சீமாட்டி.
“இல்லம்மா… ராத்திரி பூராவும் மூச்சு விட முடியாமத் திணறி… ‘புஸ்ஸூ… புஸ்ஸூ”ன்னு பெரிசு பெரிசா மூச்சு விட்டுக்கிட்டுத் தூங்காம முழிச்சே கெடக்கறா… அதைப் பார்க்கச் சகிச்காமத்தான் இப்ப ஆபரேஷன் பண்ணிடலாம்ன்னு முடிவு பண்ணினோம்” தன் நிலைமையை பரிதாபமாகச் சொன்னாள் விஜயா.
“சரி… இப்ப பண்ணனும்கறே?” கோபமாய்க் கேட்டாள் உதயதாராவின் தாய்.
“ஒரு ஐயாயிரம் ரூபா அட்வான்ஸாக் குடுத்தீங்கன்னா… மகராசி… எம்புள்ள பொழச்சுக்குவா…” இரு கைகளையும் பிச்சையெடுப்பது போல் நீட்டிக் கேட்டாள் வேலைக்காரி.
“என்னது… ஐயாயிரமா?… அஞ்சு ரூபாய் கூடக் குடுக்க மாட்டேன்… மொதல்ல எடத்தைக் காலி பண்ணு!… மூக்குல சதையாம் மூச்சு விட முடியலையாம்… யாருகிட்டக் கதை விடறே?”
“அய்யய்யோ… அப்படிச் சொல்லிடாதீங்கம்மா… உங்களை நம்பித்தான் இந்த ஆபரேஷனுக்கு ஏற்பாடே பண்ணியிருக்கோம்” அழுது விடுபவள் போல் பேசினாள் விஜயா.
“ப்ச்… உனக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா? எனக்கு நெறைய வேலை இருக்கு என்னைத் தொந்தரவு பண்ணாம வெளிய போறியா… இல்ல நானே வந்து கழுத்தைப் புடிச்சு வெளிய தள்ளிக் கதவைச் சாத்தறதா?” அரைகுறை மேக்கப்போடு அவள் கர்ண கடூரமாய்க் கத்தி ராமாயணத் தாடகையின் மறு அவதாரமாகிய போது,
தாங்க முடியாத சோகத்தோடு… தள்ளாடும் நடையோடு… தொங்கிப் போன முகத்தோடு… அங்கிருந்து அகன்றாள் வேலைக்காரி விஜயா.
மறுநாள் மாலை,
அமெரிக்கா செல்லும் விமானத்தைப் பிடிக்க ஏர்போர்ட்டில் வந்து காத்திருந்தனர் நடிகை உதயதாராவும் அவளது தாயாரும், முந்தின தினம் மிகுந்த சிரத்தையுடன் செய்த மேக்கப் உதயதாராவின் தாயாரை சற்று இளமைப்படுத்தியிருந்தது.
படு ரகசியமாய் டிக்கெட் புக் செய்து, யாருக்கும் தெரியாமல்… தெரிவிக்காமல் கிளம்பி வந்திருந்தும் அவர்களால் பிரஸ்காரர்களிடமிருந்து தப்பிக்க முடியாமல் போனது.
“ச்சை… இந்த மீடியாக்காரன்கள் எப்படித்தான் மோப்பம் பிடிக்கறானுகளோ?” சலித்துக் கொண்டாள் உதயதாராவின் தாயார்.
அவசர பேட்டிக்காக சினிமா பத்திரிக்கை நிருபர்கள் அவர்களை சுற்றிச்சுற்றி வந்து நச்சரிக்க, ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களிடமிருந்த தப்பிக்க முடியாமல் போக,
தன் மகளின் அமெரிக்கப் பயணத்திற்கான காரணத்தை விவரிக்கத் துவங்கினாள் நடிகை உதயதாராவின் தாயார்.
“என் டாட்டரோட அழகான முகத்துல இருக்கற… அந்த அழகான மூக்குல ஒரு சின்ன மைனஸ் பாயிண்ட் இருக்குதுன்னு அப்பப்போ கிசு..கிசு வருது…”
“அது என்ன மேடம் சின்ன மைனஸ் பாயிண்ட்?” தாடி வைத்த ரிப்போர்ட்டர் கேட்க,
“அது… ஒண்ணுமில்லை… அவ மூக்கு நுனி லேசா… லைட்டா வளைஞ்சிருக்காம்!… அது ஒரு மைனஸ் பாயிண்டாம்!…” சொல்லி விட்டுச் சிரித்த தாயார், “ஆக்சுவலா சொல்லப் போனா… அது மைனஸ் பாயிண்டே இல்லை… ஹாலிவுட் நடிகை… அவ பேரு கூட….” யோசித்து விட்டு தெரியாமல் போக,
“பேரா முக்கியம்?… அவளுக்கும் கூட இதே மாதிரித்தான் மூக்காம்… அது வேறொண்ணுமில்லை!… என் டாட்டரோட வளர்ச்சில பொறாமை கொண்ட சில நடிகைகள் வேணுமின்னெ இது மாதிரிச் செய்திகளைப் பரப்பி விடறாளுக…”
“ஓ.கே. மேடம்… அதுக்கும் இப்ப நீங்க அமெரிக்கா போறதுக்கும் என்ன சம்மந்தம்,” ஒரு பெண் ரிப்போர்ட்டர் குறுக்கிட்டுக் கேட்க,
“ஒரு சின்ன மைனர் ஆபரேஷன் பண்ணி… அந்த சின்னக் கோணலை சரி பண்ணிட்டு வரத்தான் அமெரிக்கா போறோம்… அவ்வளவுதான்”
“யூ மீன்… மூக்கு ஆபரேஷனுக்காக போறீங்க… அப்படித்தானே?” தாடிக்கார ரிப்போர்ட்டர் அழுத்தமாய்க் கேட்டதில் குழப்பமான உதயதாரவின் தாயார்,
“யெஸ்… யெஸ்… மூக்கு ஆபரேஷனுக்காகத்தான் போறோம்!… தயவு செய்து உங்க இஷ்டத்துக்கு கண்டதையும் போட்டு என் மகளோட இமேஜை ஸ்பாயில் பண்ணிடாதீங்க!” சிரித்துக் கொண்டே சீரியஸாய்ச் சொன்னாள் தாயார்.
அடுத்த இருபதாவது நிமிடத்தின் இறுதியில் புறப்பட்டு விண்ணில் சீறிய அந்த விமானத்தின் ஓசை விஜயாவின் குடிசையில் “புஸ்ஸூ… புஸ்ஸூ” என்று மூச்சு விட்டுக் கொண்டிருந்த அவளது பெரிய மகளுக்கும் கேட்டது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings