2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
கண் விழித்ததும் கடிகாரத்தைப் பார்த்தான் முரளி. மணி ஏழரை.
தினமும் இந்த நேரத்தில் குளித்து முடித்து, சாப்பிட்டு விட்டுக் கம்பெனிக்குக் கிளம்பியிருப்பான். ஆனால் இன்று?.. படுக்கையிலேயே கிடக்கிறான். காரணம்?… நேற்று நடந்த அந்த சம்பவம்.
மேலே சுழலும் மின் விசிறியையே இமைக்காமல் பார்த்துக் கிடந்தவனின் மனம் நேற்றைய நிகழ்வை மீண்டுமொரு முறை அசை போட்டது.
‘ச்சே… எப்படித் திட்டிட்டாரு எம்.டி. அதுவும் அத்தனை பேரு முன்னாடி! ஹூம்… எத்தனை கஷ்டப்பட்டு உழைச்சு என்ன பிரயோஜனம்? ஒரு நிமிஷத்துல தூக்கியெறிஞ்சு பேசிட்டாரே…” அவன் நெஞ்சுக்கூடு ஆத்திரத்தில் ஏறி ஏறி இறங்கியது.
‘அட… அப்படித்தான் நடந்தது என்னோட தப்பா?… ஆபீஸை சுத்தம் பண்ணுற லேடி நேற்றைக்கு லீவு… கரெக்டா நேற்றைக்குன்னு பார்த்து எம்.டி. யாரோ விஸிட்டர்ஸைக் கூட்டிட்டு வந்துட்டார்… வந்தவர் ஆபீஸ் ‘கச…கச‘ன்னு இருப்பதைப் பார்த்து டென்ஷன் ஆயிட்டார்…! சரி… அதுக்கு நான்தான் கெடைச்சேனா?… எதேச்சையா ஒரு பழைய ஃபைலை எடுக்க ரெக்கார்ட் ரூம் பக்கம் போன என்னைய அந்த விஸிட்டர்ஸ் எதிரிலேயே வெச்சுக் கண்டபடி திட்டிட்டாரே… இது என்ன நியாயம்?… ஆபீஸைப் பெருக்கற லேடி வராததற்கு நான் என்ன பண்ணுவேன்?”
மெல்ல படுக்கையை விட்டெழுந்து கண்ணாடி முன் வந்து நின்று சோம்பல் முறித்தான். ‘அடப்போ… இவன் கம்பெனி இல்லேன்னா வேற கம்பெனியா கெடைக்காது எனக்கு?… அதான் “போடா… நீயுமாச்சு உன் வேலையுமாச்சு”ன்னு துhக்கிக் கடாசிட்டு வந்துட்டேன்.”
கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தைப் பார்த்துச் சிரித்தான். அதனிடம் பேசினான். ‘டேய்… முரளி… அத்தனை பேரு முன்னாடி உன்னையத் திட்டுன எம்.டி.யை நீயும் அத்தனை பேர் முன்னாடி திருப்பித் திட்டினே பாரு?… அங்கதாண்டா நீ நிக்கறே!… பயலே… நீ ரோஷக்காரன்டா…!.. நீ திட்டினப்ப அந்த எம்.டி.யோட மூஞ்சியைப் பார்க்கணுமே…” தன்னைத்தானே பாராட்டிக் கொண்டான்.
பேஸ்டையும், பிரஷ்ஷையும் எடுத்துக் கொண்டு ஜன்னலருகே வந்து நின்றவன் கண்களில் வெளியே தெரிந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பட, சோகமானான்.
‘ஹூம்… எல்லோரும் வேலைக்குப் போய்க்கிட்டிருக்காங்க… நான் இருந்த வேலையைத் தொலைச்சுட்டு நின்னுட்டிருக்கேன்!… எல்லாம் அந்தப் படுபாவி எம்.டி.யாலே…!… ராஸ்கல் இவன்கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கறோம் என்கிற காரணத்துக்காக… என்ன வேணாலும் பேசிடுவானா?… அட அப்படித்தான் நான் என்ன புதுசா வேலைக்குச் சேர;ந்த ரெக்ரூட்மெண்டா?… பதினாலு வருஷம் உழைச்சிருக்கேன்… அந்தக் கம்பெனிக்காக!…”
பற்களை ‘நற…நற‘ வென்று கடித்தவன், ‘விடப் போறதில்லை அவனை… என்னைத் திட்டினதுக்காக அவன் அனுபவிக்கணும்… “ஏண்டா அவனைத் திட்டினோம்‘ன்னு நெனைச்சு நெனைச்சு நொந்து சாவணும்!… அதுக்காக ஏதாச்சும் பண்ணியே ஆகணும்”
தன் தாயும், தந்தையும் ஒரு திருமணத்திற்காக வேண்டி வெளியூர் சென்றிருந்ததும், அவர்கள் எப்படியும் நாளையோ நாளை மறுநாளோதான் திரும்பி வருவார்கள் என்பதும் அவனுக்கு ஒரு விதத்தில் நன்மையாகவே போனது. இல்லையென்றால், இவன் வேலையைத் தூக்கி எறிந்து விட்டு வந்ததற்காய் வீட்டில் ஒரு யுத்த காண்டமே நிகழ்ந்திருக்கும்.
மணி பத்து ஆன போது அவன் வயிறு தன் பசிக் கோரிக்கையை எழுப்ப, அடுத்த தெரு மெஸ்ஸிற்குச் செல்வதற்காக சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினான். அம்மா ஊரில் இல்லாத போதெல்லாம் அந்த மெஸ்தான் அவனுக்கு அன்னமிட்ட கை.
கதவைப் பூட்டி விட்டு, அதே வேகத்தில் திரும்பி ஒரு எட்டு வைத்திருப்பான். காலில் எதுவோ “சட…சட”வென எக்கச்சக்கமாய் மிதி பட, துள்ளிக் குதித்து தள்ளி நின்று பார்த்தான்.
அவன் வீட்டு நாய். ‘கைங்…கைங்…”எனக் கத்திக் கொண்டு ஓடியது. புத்தடி சென்றதும் நின்று திரும்பி இவனைப் பார்த்தது.
‘அடடே… அவசரத்துல இதைக் கவனிக்காம மிதிச்சிட்டோமே… த்சொ… த்சொ… பாவம்” தன்னைத் தானே நொந்தபடி அந்த நாயைக் கூர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்.
இவனது கட்டைச் செருப்பு மிதியால் அந்த நாயின் முன்னங்காலில் தோல் உரிந்து, ரத்தச் சிகப்பாய் சதை பிய்ந்து தொங்கியது.
ஆனாலும் அது இவனைப் பார்த்து வாலாட்டியவாறே, தன் காயத்து ரத்தத்தை மெல்ல மெல்ல நக்க ஆரம்பித்தது.
கனத்துப் போன மனதுடன் தெருவில் இறங்கி நடந்தான் முரளி. அதுவும் அவனைப் பின் தொடர்ந்து நொண்டி நொண்டிச் சென்று அவன் மெஸ்ஸிற்குள் நுழைந்ததும் வாசலிலேயே படுத்துக் கொண்டு அவன் வருவதற்காக காத்திருந்தது.
இருபது நிமிடங்களுக்குப் பிறகு, மெஸ்ஸிலிருந்து வெளியேறிய முரளி வாசலில் படுத்துக் கிடந்த அந்த நாயைப் பார்க்க, அது எஜமான விசுவாசத்துடன் ‘விருட்‘டென எழுந்து வாலாட்டியபடி அவனுடன் நடக்கத் தயாரானது.
வீட்டையடைந்த முரளி கதவைக் கூடத் திறக்காமல் நின்று அந்த நாயையே கூர்ந்து கவனிக்கலானான். அது அவனை ஊடுருவிப் பார்த்து வாலாட்டியது.
அந்தப் பார்வையும், வாலாட்டலும், ‘என்ன எஜமான் பார்க்கறீங்க?… “என்னடா நாம காலை மிதிச்சு ரத்தக் காயம் பண்ணியும் கூட இது நம்மைப் பார்த்துச் சினேகமா வாலாட்டுதே!‘ன்னுதானே பார்க்கறீங்க?… நீங்க யாரு?… என் எஜமான்… ஏதோ அவசரத்துல… ஏதோவொரு குழப்பமான மனநிலைலே… தெரியாத்தனமா… தவறுதலா என்னை மிதிச்சுட்டீங்க… அவ்வளவுதான்!… அது உங்க தப்பேயில்லை…!… அதுவுமில்லாம நீங்க மிதிச்சதால ஏற்பட்ட காயத்துல வடியுற ரத்தமெல்லாம் என்ன?… எல்லாம் நீங்க போட்ட சோறு…!… ஒரு வருஷமா எனக்கு மூணு வேளை சோறு போடடிருக்கீங்க!… நியாயமாப் பார்த்தா உங்களுக்கு என்னைய அடிக்கவே உரிமையிருக்கு!… ஆனாலும் நீங்க தெரியாமத்தான் என்னைய மிதிச்சிருக்கீங்க… அதனால பரவாயில்லை… இதுக்காக நீங்க வருத்தப்படவே தேவையில்லை எஜமான்.” என்று சொல்லாமல் சொல்ல, முரளியின் மனதில் ஏதோவொரு தெளிவு பிறந்தாற் போலிருந்தது.
‘பதினாலு வருஷமா அந்த எம்.டி.கிட்ட வேலை செஞ்சு… அவர் கொடுத்த சம்பளத்தை வாங்கித்தான் நான்… எங்கம்மா… எங்கப்பா… மூணு பேரும்.. மூணு வேளை வயிறார உண்டோம்!… நேற்றைக்கு ‘விசிட்டர்ஸ் வந்திருக்கற சமயத்துல கம்பெனி இப்படிக் குப்பைக் கூளமாயிருக்கே!” என்கிற அங்கலாய்ப்பில்தான் எம்.டி.என்னைத் திட்டினாரு…!… ஆனா நான் அதைப் புரிஞ்சுக்காம.. அந்த விசிட்டர்க முன்னாடி எனக்கும் என்னைப் பெத்தவங்களுக்கும் பதினாலு வருஷமா சோறு போட்ட அந்த எம்.டி.யை அற்பத்தனமாய்ப் பேசி… அசிங்கம் பண்ணிட்டேன்…!… ச்சை… இந்த நாய் ஜென்மத்துக்கு இருக்கற அறிவும்… சிந்தனையும் கூட எனக்கு இல்லாமப் போயிடுச்சே…!… ம்ஹூம்…உடனே போய் எம்.டி.கிட்ட மன்னிப்புக் கேட்கணும்… அவர் கால்ல விழுந்தாக் கூடத் தப்பில்லே!”
தன்னையேயறியாமல் முரளி அந்த நாயைப் பார்த்துக் கை கூப்ப, அது வாலாட்டியவாறே அவனை நெருங்கி வந்து உரசிக் கொண்டு நின்றது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings