2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
” எங்கம்மா உங்க ஆத்துக்காரர் இன்னும் வரலையா ? ” ராஜேஷ் கேலியாக கேட்டான்.
” ஏண்டா உங்காத்துக்காரர்னு சொல்ற தோப்பனாரை இப்படி எல்லாம் சொல்லலாமா? அவர் மேல நோக்கு அப்படி என்னடா கோபம்?”என்றாள் தங்கம்.
” கோபமா…செம கடுப்புல இருக்கேன்.. மூணு தலைமுறையா அம்பாளுக்கு சேவை பண்ணுற குடும்பம்னு சொல்லியே என்னை வேதம் படிக்க வைச்சாரு..”
” இப்ப என்னடா குறைஞ்சு போயிட்ட ..அருமையா வேதம் கத்துண்டு அழகா மந்திரம் சொல்ற.. இயற்கையாகவே நம்ம குடும்பத்து ஆச்சாரம், பயபக்தி, உன்கிட்ட ரொம்ப இருக்கு ஏன் மனசு அல்லாடுற “
” அம்மா நேக்கு உங்கள மாதிரி குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டிண்டு காலம் கழிக்க முடியாது . என் வயசு பையன்களை பாருங்க ,அழகா படிச்சு முடிச்சு வெளியில வேலை பாக்குறா..”
” நோக்கு என்னடா.. கற்பூர புத்தி… பி. காம் படிச்சு முடிச்சுட்டே.. நம்ம ஆத்துல முதல் பட்டதாரி.. அம்பாள் கருணையால நோக்கு நல்ல வேலை கிடைக்கும்..”
” அம்பாள விடு.. முயற்சி என்னோடது.. உங்க பேச்சைக் கேட்டா உண்டக்கட்டியும், புளியோதரையும், தின்னுட்டு உள்ளூர் கோயில்ல மணியடிச்சுண்டு காலம் கழிக்க வேண்டியது தான். நான் வெளியூர் போகப் போறேன். நீங்களே இந்த பொன்னாக்குடி கிராமத்த கட்டிண்டு அழுங்க” என்றான் எரிச்சலோடு .
மனம் வலித்தது..” தாயே கற்பகாம்பா.. நீதான் இவனத் திருத்தனும். நோக்கு சேவ பண்ற பாக்கியத்த பாரமா நினைக்கிறான் ” கண்களில் கண்ணீர் வடிந்தது. அவன் விரும்பும் வாழ்க்கை, இந்த கிராமத்தில் இல்லை என்பது மட்டும் அவளுக்கு நன்றாக புரிந்தது.
திறந்திருந்த ஏகாம்பரேஸ்வரர் உடனுறை கற்பகாம்பாள் திருக்கோவிலின் நடையில் கணேச ஐயர் உட்கார்ந்திருந்தார். அங்கு வந்த அவருடைய நண்பர் குருமூர்த்தி …
“கணேசா! என்னப்பா நேரமாச்சு இன்னும் கோயில் நடை சாத்தலையா?”
” குரு நோக்குத் தெரியாதா? இன்னைக்கு வெள்ளிக்கிழம வேல முடிச்சு போறவா, ‘ போறச்ச கோயில் நட தொறந்திருந்தா அம்பாள சேவிச்சிண்டு போயிடலாமே’ன்னு நினைப்பா..அதான் செத்த நேரம் கூட கோயில தொறந்து வச்சிருக்கேன் “
“உன்ன மாத்த முடியாது கணேசா! நாட்டுல மழை பெய்யுதுன்னா உன்னப் போல ஆளால தான்..” சிரித்தார் குருமூர்த்தி.
பொன்னாக்குடி சிறிய கிராமமாக இருந்தாலும், கற்பகாம்பிகை கோயில் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்றது. இங்கு வரும் பெண்களுக்கு திருமணம் நடந்து விடும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருவதால், வெள்ளி, செவ்வாயில் கூட்டம் அதிகமாக வரும். கணேச ஐயரின் குடும்பம் தான் மூன்று தலைமுறையாக சேவை செய்து வருகிறார்கள்.
” என்ன கணேசா! ராஜேஷை பாத்தேன்.. ஏன் சோர்வா தெரியறான்.”
“அவனுக்கு இங்க இருக்கப் பிடிக்கல குரு.. சின்ன வயசுல என் பேச்சக் கேட்டான். வேதம் படிச்சான். புத்திசாலிப் பையன். காலேஜ்ல மெடல் வாங்கினான். சரஸ்வதி கடாட்சம் நிறைய இருக்கு. ஆனால் அவன் லட்சுமி கடாட்சத்தை எதிர்பார்க்கிறான். ஆத்தா கைங்கரியத்தை விட்டுட்டு வெளியூர் போக நினைக்கிறான். நேக்கு பிறகு என் புத்திரன் அம்பாள் சேவைக்கு வரணும்னு ஆச ..”
” கணேசா நீ சொல்றது சரி! உன் மகன் விருப்பம் இல்லாம நீ நினைக்கிறத அவன் செய்யனும்னு நினைக்கிறது எப்படிப்பா சரியாகும்? அவன் ஒன்னும் தப்பான வழியில போகலையே! உழைச்சு சம்பாதிச்சு வசதியா வாழனும்னு நினைக்கிறான். அதுல தப்பில்லையே..”
” சரி விடு குரு! ஆத்தா என்ன நினைக்கிறாளோ அதுபடி நடக்கட்டும்..” என்றவர் கோயிலை பூட்டி சாவியை இடுப்பில் சொருகியபடி நண்பனுடன் வீடு நோக்கி நடந்தார்.
மறுநாள் காலை அருகில் வந்து நின்ற மகனை ஏறிட்டவர், ” என்னப்பா ராசு..ஏதாச்சும் வேணுமா? “
” அப்பா நேக்கு சென்னையில ஒரு நல்ல கம்பெனில வேலைக்கு கால் பார் பண்ணியிருக்கா. இன்டர்வியூ கார்டு வந்திருக்கு.. நாளைக்கு சென்னை போகனும் ..போக வர்ற செலவ கிளைம் பண்ணிக்கலாம்..”
” சரி போயிட்டு வாப்பா! ” என்றவர் பரிஸிலிருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்தார்.
இரவு கிளம்பும்போது ராஜேஷ் விபூதி பூசி ஆசிர்வாதம் பண்ணிய அம்மாவிடம் , “என்னம்மா உங்க ஆத்துக்காரர் சைலன்ட் ஆயிட்டார். வழக்கமான அர்ச்சனையக் காணும்?” என்றான் கிண்டலாக. அவன் கிளம்பும் நேரம் என்பதால் தங்கம் பதில் பேசாமல் புன்னகைத்தாள்.
சென்னையை அடைந்தவன், குளித்து முடித்து, இன்டர்வியூக்கு ரெடியானான். பர்ஸில் இருந்த கற்பகாம்பாவின் படத்தை எடுத்து கும்பிட்டு ” தாயே நல்ல வழி காட்டு..இந்த வேலை கிடைக்கட்டும் ” என்று வேண்டிக் கொண்டான்.
10 மணிக்கெல்லாம் அலுவலகத்தை அடைந்தபோது அங்கு கூடி இருந்த கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியானான். ஒரு வேலைக்கு 2000 பேரா?.. நம்பிக்கை தளர்ந்தது ..
இன்டர்வியூ ரெண்டு நிலைகளை கடந்த பின்…
” சார் உங்க பேர் தானே ராஜேஷ்? உங்களை எம்.டி .பார்க்க விரும்புகிறார்” என்று கூப்பிட்டார் ஒருவர்.
அவனை வரவேற்ற எம்.டி.” மிஸ்டர் ராஜேஷ் உக்காருங்க.. ரெண்டு லெவலை தாண்டியதுக்கு வாழ்த்துக்கள்.. உங்கள் ரெஸ்யூமை பார்த்தேன். ஊர் பொன்னாக்குடி.. அப்பா கணேச ஐயர் என்று போட்டிருந்தது.. ‘கற்பகாம்பாள் கோயில்’ பேமஸ் ஊரு தானே?”
” ஆமாம் சார் கணேச ஐயர் தான் என் தோப்பனார். நான் அவர் ஒரே பையன் ..”
“உங்கப்பா மாதிரி கோயில் பூஜையில விருப்பம் இல்லையா”
துணிவை வரவழைத்துக் கொண்ட ராஜேஷ் எம்.டி.ஐ பார்த்து, “சார் நானும் வேதம் படிச்சிக்கிறேன்..கோயில் கைங்கரியம் அப்பா கூட பண்ணுவேன் ..ஆனா என்னுடைய விருப்பம் வேற…வெளியில வேலை பார்க்கணும்னு இருக்கு “
இடைமறித்த எம் .டி . ” உங்களுடைய ரெஸ்யூமை பார்த்தேன்..நீங்க ரெண்டு லெவல் தாண்டுற வரை காத்திருந்தேன் .உங்களுக்கு இந்த ஆபீஸ்ல வேலை இல்லைன்னு சொன்னா வருத்தப்படுவீங்களா மிஸ்டர் . ராஜேஷ்?”
உண்மையிலேயே அதிர்ச்சியில் மனம் உடைத்து போனான் ராஜேஷ்.
“மிஸ்டர் ராஜேஷ்! உங்களுக்கு ஒரு சம்பவத்தை சொல்லி ஆகனும் . ஐந்து வருடங்களுக்கு முன்பு, என் மகள் திருமணம் தள்ளிப் போகிறது என்று கவலைபட்டுக் கொண்டிருந்தோம். என் மனைவி உங்கள் ஊர் கோவிலைப் பற்றி கேள்விப்பட்டு பொன்னாக்குடி கிராமத்துக்கு வரணும்னு அடம் பிடிச்சா.
அர்ச்சனை கூடை…பூ மாலை சாமான்களுடன் கோயிலுக்கு வந்தோம். பிரார்த்தனை முடிச்சு அர்ச்சனை செய்தோம். அர்ச்சனை செய்யும்போது, உங்கள் தந்தை அர்ச்சனை தட்டில் இருந்த எதையோ மாற்றி வைப்பதைப் பார்த்தேன். என் மனைவி பிரகாரம் சுற்றப் போயிருந்த போது, உங்கள் தந்தையிடம் கேட்டு கோபப்பட்டேன். அதற்கு உங்கள் தந்தை கூறிய பதில் என்னை திகைக்க வைத்தது..
‘ ஐயா! நீங்கள் கொண்டு வந்த தட்டில் இருந்த தேங்காய் அழுகியிருந்தது . தெரிஞ்சா அம்மா வருத்தப் படுவாங்களேன்னு அதை எடுத்துட்டு நல்ல தேங்காயை வைத்தேன். உங்களுக்குன்னு இல்லை யாருக்கு தேங்காய் அழுகியிருந்தாலும் அதை மாத்திடுவேன். இது தவறாத் தெரியல. நம்பிக்கையோடு கோயிலுக்கு வர்றவங்களுக்கு சகுன தடையா ஒரு காரியம் நடந்தா வருத்தம் வரும். மன சஞ்சலத்தோடு போவாங்க .அதைவிட நல்ல தேங்காயை வைச்சிட்டு அவங்களுக்காக நான் தாய்கிட்ட தனியாக வேண்டிக்குவேன்” என்றார்,
பிறருடைய உணர்வுகளுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கும் ஒரு உத்தமரை தான் பார்த்ததில்லை. வரும் வழியெல்லாம் கார் டிரைவரும் அவரைப் பற்றி உயர்வாக பேசிக் கொண்டே வந்தான். அப்பேற்பட்ட நல்லவரின் மகன் நீங்க.. அதான் உங்களுக்கு இங்க வேலையில்லைன்னு சொன்னேன். வேலை இங்கே இல்லைன்னு தான் சொன்னேனே தவிர, வேலையே இல்லைன்னு சொல்லலை..
லண்டனில் நானும், என் தமிழ் நண்பர்களும், சேர்ந்து ஒரு லட்சுமி நரசிம்மர் கோயிலை கட்டியிருக்கோம். அங்கு அம்மனுக்கு பூஜை செய்ய, நல்ல ஆளை தேடிக் கொண்டிருந்தோம்.. நீங்க வேதம் படிச்சிருக்கீங்க.. கிராஜுவேஷன் பண்ணியிருக்கீங்க….. நான் ரொம்ப மரியாதை வைத்திருக்கும் கணேச ஐயரின் மகன் நீங்க, அந்த ஒரு தகுதி போதும். இந்திய ரூபாயில் இரண்டு லட்சம் சம்பளம். இது அம்பாளுக்கு பூஜை செய்ய..
மேலும் நீங்க விருப்பப்பட்டால் எங்க லண்டன் ஆபீஸில் அக்கவுண்ட் செக்ஷனில் பார்ட் டைம் வேலை பார்க்க ஏற்பாடு பண்றேன். தங்குமிடம், சாப்பாடு, நாங்கள் ஏற்பாடு பண்ணிடுவோம். மூன்று வருட காண்ட்ராக்ட்… போறீங்களா? ” என்றார். நடந்ததை நம்ப முடியாத அதிர்ச்சியில் தலையசைத்தான் ராஜேஷ் .
ஊர் திரும்பியவன், அப்பாவின் காலில் விழுந்து கதறினான்.
“அப்பா என்னை மன்னிச்சிடுங்க! உங்க உயர்வான குணத்தை மதிக்காம.. கோயில் கைங்கரியத்த…நம்ம குலத் தொழில… மரியாத குறைவா பேசியிருக்கேன். அந்த அம்பாளின் ஆசீர்வாதமும், உங்களின் உன்னத குணமும், நான் நம்பவே முடியாத அதிர்ஷ்டத்தை …நான் விரும்பிய வாழ்க்கைய எனக்குப் பெற்றுத் தந்திருக்குது..” என்று நடந்ததைக் கூறினான்.
கணேச ஐயர் கோயிலை நோக்கி கை கூப்பினார்… ” தாயே உன் கருணையே கருணை. அவன் விருப்பப்பட்ட வாழ்க்கையையும் கொடுத்து, அவன் தெய்வ கைங்கரியம் செய்யும் என் விருப்பத்தையும் நிறைவேத்தியிருக்க…இதுக்கு தான் என்ன கைமாறு செய்வேன்?” என்றவர் கண்களில் கண்ணீர் வடித்தது .
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings