2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“மாமா… மாமா… நான் ராணியாரை பார்க்க வேண்டும் என்று கோவிலுக்கு ஆசையாக ஓடி வந்தேன். அதற்குள் அவர்கள் கிளம்பி விட்டார்கள் ஏன் மாமா….. அவர்கள் எப்பொழுது வந்தார்கள்..? ஏன் அவ்வளவு சீக்கிரமாக கிளம்பி விட்டார்கள்…? சொல்லுங்கள் மாமா அப்புறம் நீங்கள் சாப்பிடலாம்” என்று லலிதாங்கி படபடப்புடன் கேள்விகளை அடக்கிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த கோவிந்த பட்டரின் கையை அமுக்கினாள்.
“சொல்கிறேன், குழந்தாய்…. அவசரப்படாதே., இரு… சாப்பிடும் பொழுது பேசக்கூடாது,… இதோ நொடிப்பொழுதில் சாப்பிட்டு விட்டு உன்னிடம் பேச வருகிறேன்…. சற்று தள்ளி அமர்ந்து கொள்.” என்றார் அன்பாக.
சற்று தள்ளி அமர்ந்து கொண்டு, வதனா உணவு பறிமாறுவதையும் கோவிந்த பட்டர் சாப்பிடுவதையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு காத்துக்கொண்டிருந்தாள் லலிதாங்கி.
கோவிந்த பட்டர் சொல்லச் சொல்ல வதன சந்திரிகாவும் லலிதாங்கியும் கண்கள் விரித்து அவர் சொல்வதை கேட்க,… அவர்கள் மனக்கண்ணில் காட்சி விரிந்தது…
கோவிந்த பட்டரும் ஸ்ரீனிவாச பட்டரும் முரளிதர சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து விட்டு மாலைகள் சாற்ற போகும் பொழுது கோவிலின் வாசலில் வீரர்கள் தாங்கிய பல்லக்கு ஒன்று வந்து நின்றது.
எளிமையான ஆடை அலங்காரத்துடன் ராணி சௌபர்ணிகா தேவியார் பல்லக்கிலிருந்து இறங்கினார்.
கோவிந்த பட்டர் பதட்டத்துடன் ஓடி வந்தார் ராணியை வரவேற்க….
“வரவேண்டும் வரவேண்டும் மகாராணி…. மன்னிக்க வேண்டும் ,தங்களை வரவேற்க ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை…. “
“எதுவும் செய்துவிட கூடாது என்பதற்காகத்தான் நான் தங்களுக்கு செய்தி அனுப்பவில்லை” என்று புன்னகைத்தார் சௌபர்ணிகா தேவி.
“தங்களின் சிறந்த குணம் யாருக்கு வரும்? நாங்கள் உங்களை ராணியாக பெற்றதற்கு பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்றார் கோவிந்த பட்டர்.
“இறைவனின் முன்னிலையில் என்னை புகழாதீர்கள் பட்டரே… பெருமாளின் சன்னதியில் நானும் உங்களை போல சாதாரண ஒரு மானிட பிறவி தான். மக்களின் பக்திக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றுதான் முன்னமே வந்து விட்டேன். இந்தாருங்கள்…. இந்த வைர முடியை முரளிதர ஸ்வாமிக்கு அணிவியுங்கள்” என்று இருளை, மின்னும் தன் ஒளியினால் நிரப்பிய வைர கிரீடம் ஒன்றை தங்க தாம்பாளத்தில் வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்க தன் கரங்களால் சமர்பித்தார்.
ராணியார் அளித்த வைர கிரீடத்தையும், செந்தாமரை மலர்கள் கொண்ட மாலையையும் அணிவித்து தீபாரதனை காட்டினார் பட்டர். முரளிதர சுவாமியின் அழகை கண்ணாரக் கண்டு கைகூப்பி மனம் மகிழ்ந்து தரையில் நமஸ்கரித்தார் ராணியார்.
பிரதக்ஷணம் செய்யும் பொழுது சுவற்றில் அழகாக வரையப்பட்டிருந்த கண்ணனின் லீலைகள் ஓவியத்தையும் தரையில் வரையப்பட்டிருந்த வண்ண மாவு கோலங்களையும் கண்டு ரசித்தப்படியே நடந்தார்.
வண்ணமயமான தோகையை விரித்தாடும் மயூரக் கோலமதில் மனம் மயங்கியராணி, “நம் பல்லவ பேரரசர் ஆட்சியில் கலைவாணியின் அருள் நிறைந்து காணப்படுகிறது நம் நாட்டு பெண்களுக்கு தான் எத்தனை திறமை..!! இந்த மயூரக் கோலம் எவ்வளவு அழகாக உள்ளது! இதைப் போட்ட பெண்மணியை நான் அழைத்து பாராட்டியே தீர வேண்டும்” என்றாள் ராணியார்.
“மகாராணி இது என் மகள் வதனச் சந்திரிகாவும் அவள் தோழிகளும் வரைந்தார்கள்” என்று பணிவுடன் கூறினார் பட்டர்.
“அப்படியா எத்தனை பிராயம் ஆகிறது அவளுக்கு?”
“இந்த மார்கழியோடு பனிரெண்டு பிராயங்கள் முடியப்போகிறது. இதோ இந்த சுவற்றில் வரைந்த நவநீத கண்ணனின் ஓவியமும் என்னுடைய மகள் வரைந்தது தான்” என்று பெருமிதத்துடன் கூறினார்.
“சகலகலாவல்லியே தங்களின் மகளாக பிறந்து இருக்கிறாள் என்று சொல்லுங்கள்”. என்று ராணி புகழ்ந்தாள்.
“தங்களின் வாக்கு பலிக்கட்டும்அம்மா”… என்றார் மகிழ்ச்சியாக பட்டர்.
இதைக் கேட்டவுடன் வதனாவிற்கும் லலிதாவிற்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை எழுந்து குதித்து கைதட்டி ஆர்ப்பரித்து ஆனந்தம் கொண்டனர்.
“மாமா நீங்கள் ஒரு தவறு செய்து விட்டீர்கள்…. வதனா வரைந்த கோலத்திற்கு நான் மட்டுமே தான் உதவினேன் நீங்கள் தோழிகள் என்று தவறாக சொல்லி விட்டீர்கள் ராணியாரிடம்” என்றாள் சற்று வருத்தமான குரலில் லலிதாங்கி.
“அப்படியா மன்னித்துவிடு குழந்தாய்…. மறுமுறை அவர்களை சந்தித்தால்….நான் உன் பெயரையே சொல்லி விடுகிறேன்.”
“சரியாக போய்விட்டது… இனிமேல் அடுத்த வருடம் தான் ராணியார் வருவார் என்று என் அம்மா சொன்னார். வருடம் ஒரு நாள் மட்டும் தான் இந்த ஆலயத்திற்கு வருவாராமே?” என்றாள் லலிதாங்கி.
“ஆமாம் ஆமாம் …..வருடம் தோறும் மார்கழி மாதத்தில் ஒரு நாள் முரளிதர சுவாமியை தரிசிக்க வருவார் இன்று இந்த முதல் நாளே வந்துவிட்டார்.”என்றார் கோவிந்தர்.
“சரி போகட்டும்…..உங்களை மன்னித்து விடுகிறேன்”… என்று ஒரு கையை இடுப்பிலும் ஒரு கையை ஆசீர்வாதம் செய்வது போல் பாவனை செய்தாள் லலிதாங்கி.
“அனேகமாக தங்களுக்கு ராணியாரிடம் இருந்து பரிசு வந்தாலும் வரும்,.. அவர்கள் கலையை ஊக்குவிப்பவர்கள் சர்வகலா சாலையை நடத்துபவர்கள்…” என்றார் கோவிந்த பட்டர் பெருமிதமாக
“அப்படியா”…. என்று ஆச்சரியத்துடன் கேட்ட வதனா “தந்தையே நாங்கள் இந்த செய்தியை எங்கள் தோழிகளிடம் சொல்லிவிட்டு வருகிறோம், என்று இருவரும் கைகோர்த்தபடி குதித்தோடினர்.
இரண்டு தினங்கள் கழித்து நண்பகலில் கோவிந்த பட்டர் கோவிலிலிருந்து வரும் பொழுது மிகவும் உற்சாகமாக வந்தார்.
“குழந்தைகளே ஒரு மகிழ்வான செய்தி….”என்று சந்தோஷ குக்கூரலிட்ட பட்டரை,… வண்ணப் பொடிகளை கலந்து கொண்டிருந்த வதனாவும் லலிதாவும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
“நான் கூறினேன் அல்லவா ராணியார் உங்களுக்கு பரிசுகள் தருவார் என்று…. அரண்மனைக்கு தங்களை அழைத்து வருமாறு எனக்கு செய்தி அனுப்பியுள்ளார்.”
“அப்படியா… மாமா… இதோ கிளம்பி விடுகிறேன் என்று குதித்தெழுந்த லலிதாவை பார்த்து கோவிந்த பட்டர்,
“அவசரப்படாதே, குழந்தை…. நாளை மறுதினம் தான் நாம் செல்ல வேண்டும் உன் பெற்றோரிடமும்,..உன் தோழிகள் பெற்றோரிடமும் நான் சென்று அனுமதி கேட்க வேண்டும் முதலில். பின்பு பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்,.. இங்கிருந்து எட்டு காத தூரம் இருக்கிறது, அரண்மனை…நாம் அங்கு செல்வதற்கு அரை தினம் ஆகும்” என்றார் பட்டர்.
“அப்படியா தந்தையே…! நான் என்னவோ ஒரு தினம் ஆகும். என்றல்லவா நினைத்தேன்” என்றாள் வதனா.
“அதிகாலை நான்காம் சாமத்தில் கிளம்பினால் சந்தியா காலத்தில் அடைந்து விடலாம்” என்றார் கோவிந்த பட்டர்
“சரி வதனா…. நான் கிளம்புகிறேன் இப்பொழுது ஆரம்பித்தால் தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய முடியும் எந்த பட்டாடையை அணிவது எந்த நகைகளை போட்டுக் கொள்வது என்று முடிவு செய்யவே எனக்கு ஒரு நாழிகை ஆகும்” என்றாள் படபடப்புடன் லலிதாங்கி.
“ஆமாம்… ஆமாம்… இதற்காகவே உன் தாயாரிடம் சொல்லி ஒரு பட்டாடை புதிதாகவே வாங்கி விடுவாயே” என்றாள் வதனா சிரித்தபடி…
“அட,… நான் மனதில் நினைத்ததை எப்படி கண்டுபிடித்தாய்?… பிறர் மனதைப் படிக்கும் கலை கூட உனக்கு தெரியுமா என்ன? என்று வதனாவின் கன்னத்தை கிள்ளினாள் லலிதாங்கி.
“அப்படி இல்லை நீதானே என் ஆருயிர் தோழி அதனால் உன்னை பற்றி எனக்கு நன்றாக தெரியும்….” என்று சொல்லி சிரித்தாள் வதனா.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings