in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 4) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3  

இதுவரை:

பணக்கார கல்லூரி மாணவி காவ்யா ஜெய்யை காதலிக்கிறாள் ..ஈஸ்வரன் எக்ஸ்போர்ட்ஸ் எம்டி ஆதர்ஷ்ஷை பி.ஏ நீரஜா கவர்கிறாள்…

இனி:

செழுமையான, பசுமை பொருத்திய அந்த பெரிய பங்களா ஈஸ்வரபவனத்தை அறிமுகப்படுத்த வேண்டும்…வாசலில் நின்றிருந்த வெளிநாட்டு கார்களே அந்த பங்களாவின் செழுமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன …பங்களா என்னமோ பெரிதாக அரண்மனை போல இருந்தாலும் அதில் வசித்து வந்தது பரமேஸ்வரன்- ருக்மணிதேவி தம்பதியும் அவர்களது ஒரே செல்வப் புதல்வன் ஈஸ்வர் எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனியின் எம்.டி .ஆதர்ஷ் மட்டுமே…அதனால் ஒரு கனத்த மவுனமே அந்த பங்களாவை போர்த்திக் கொண்டிருந்தது.

அந்த மௌனத்தை கலைத்துப் போட்டது ஒரு குரல் ..

அத்தான் என்னத்தான்..

அவர் என்னைத்தான்..

எப்படி சொல்வேனடி…பாரு

எப்படி சொல்வேனடி …

பாடிக் கொண்டே குதித்தபடி துள்ளலும், நடையுமாக வந்த மாயா.. பாருவின் கழுத்தை கட்டி ஒரு சுற்று சுற்றினாள்.

“அம்மா விடுங்கம்மா.. யாராவது பாக்கப் போறாங்க.. சின்ன புள்ள மாதிரி “

“அடியே பாரு! என் இளவரசர் வந்துவிட்டாரா? அப்படியே போய் இந்த இளவரசிக்கு தாகமாக இருக்கிறது.. கொஞ்சம் மோர் கரைத்துக் கொண்டு வா…”

“ஏம்மா.. எந்த தேசத்துக்கு இளவரசி நீங்க ? எனக்கு தெரியலையே….”

“அடியே பாரு! எதிர்த்தா பேசுகிறாய்? யாரங்கே இவளைக் கொண்டு போய் யானை காலில் இடறி கொல்லச் சொல்லுங்கள்… இந்த ‘ஈஸ்வர பவன’த்தின் இளவரசியை யார் என்று கேட்கிறாள் ..?”

“ஐயோ அம்மா ஆள விடுங்க..வேலை எக்கச்சக்கம் கிடக்குது.. நான் இப்பவே போயி சூடா.. இல்லை இல்லை.. கூலா மோர் கொண்டு வரேன். அதுவரைக்கும் இந்த சமஸ்தானத்தை ஆண்டுகிட்டிருங்க”

மோரை எதிர்பார்க்காமல், நேராக அத்தை ருக்மணியின் ரூமுக்குள் நுழைந்தாள் மாயா ..

“அத்தை.. என் செல்ல அத்தை.. என்ன செய்றீங்க ..?”

“வாடி… என் மருமகளே…என்ன செய்றீங்கன்னு கேக்கிற… பார்த்ததேயில்ல கட்டில்ல உக்காந்து மகாபாரதம் படிச்சுக்கிட்டிருக்கேன்.ஊசிப் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது. நினைச்சேன் அப்பவே நீ தான் வந்திருக்கேன்னு புரிஞ்சுகிட்டேன்.பாருகிட்ட என்னடி வம்பு பண்ணிகிட்டிருத்த..”

“இந்த சமஸ்தானத்தின் இளவரசியை வரவேற்கும் முறை சரியில்லை அத்தை.. அதைத்தான் நான் பாருவுக்கு உணர்த்திக் கொண்டிருந்தேன் …அந்த சேடிப் பெண் என்னைப் பார்த்து யார்? என்று கேட்கிறாள்..நாளை இந்த சாம்ராஜ்யத்தை ஆளப்போகும் மகாராணி நான்.. அத்தை கோச்சிக்காத உனக்கு பிறகு மகாராணி நான் தானே.. அதுல ஒன்னும் சந்தேகம் இல்லையே …”என்றவள் அத்தை டென்ஷனாவதைப் பார்த்து கலகலவென சிரித்தாள்.

“என்னத்த டென்ஷன் ஆயிட்டியா ..? எனக்கு உன் சமஸ்தானமும் வேண்டாம் உன் சமஸ்தானத்தின் இளவரசி பட்டமும் வேண்டாம். என் பிரியமான இந்த அத்தையும், என் A2 அத்தானும் போதும்..”

மாயா ஆதர்ஷின் அத்தை சாரதாவின் மகள் . பரமேஸ்வரனின் சொந்த தங்கை தான் சாரதா. அந்த உரிமையும் பாசமும் எப்போதுமே மாயா குரலில் ஒலிக்கும் ..ரொம்ப யோசித்து அலட்டிக் கொள்ளும் டைப் எல்லாம் இல்லை. அவள் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. அவள் அந்த வீட்டில் வளைய வரும் நேரம் ருக்மணிக்கு வீடே கலகலப்பாக.. களையாக இருப்பது போல தோன்றும் …

மச்சினன் இறந்து விட, தங்கை சாரதாவையும், மாயாவையும் அந்த பங்களாவில் தங்களுடன் தங்க பரமேஸ்வரன் அனுமதிக்கவில்லை.அந்த வீடு அவருடைய சுய சம்பாத்தியம் …தன்னுடைய அப்பாவின் சொத்தில் மட்டும் ஒரு பகுதியை பிரித்து கொடுத்து விட்டு அவர்களை பக்கத்தில் இருக்கும் அப்பாவின் இன்னொரு வீட்டில் குடி வைத்தார்.

மாயா, பரமேஸ்வரனின் தங்கை மகள் என்றாலும் அவளுடைய பாசமெல்லாம் அத்தை ருக்மணி தேவியின் மேல் தான் இருந்தது..ருக்மணி தேவிக்கும் மாயாவை ரொம்ப பிடிக்கும். சாரதாவின் கணவன் இறந்த பிறகு சாரதாவையும், மாயாவையும், தன் சொந்தப் பொறுப்பில் வைத்து நல்லபடியாக கவனித்து வந்தாள்.

தன்னுடைய சொந்த தங்கை அபிராமியும், அவள் மகள் வசுந்தராவும் காட்டாத பாசத்தையும், பிரியத்தையும் மாயாவும், அவளுடைய அம்மா சாரதாவும் காட்ட, ருக்மணியின் மனதுக்குப் நெருக்கமானவர்களாக இருவரும் மாறிப் போனார்கள். தன் அண்ணனுக்கு பிடிக்கவில்லை என்பதால் சாரதா அடிக்கடி வரமாட்டாள். எப்போதாவது அண்ணன் இல்லாத நேரம் வந்து அண்ணியை பார்த்து விட்டுச் செல்வாள். ஆனால் மாயா நாள் தவறாமல் அத்தையை பார்க்க ஆஜராகி விடுவாள்.

“அத்தை எங்கே உன் அருமை பிள்ளை.A2..இன்னும் வீட்டுக்கு வரலையா …?”

“அது என்னடி A2 …ஒழுங்கா அத்தான்னு சொல்ல மாட்டியா?”

அத்தை “ஆதர்ஷ் அத்தான்” சுருக்கம்தான் A-2..அத்தை இப்படி கூப்டா ரொம்ப நல்லா இருக்கு…யாராவது கேட்டாலும் சந்தேகம் வராது” என்றாள் கிசுகிசுப்பாக. .

“எப்ப பாரு விளையாட்டுத்தனமா? கல்யாணம் ஆகுற வயசாச்சு ..கல்யாணமாகி இன்னொருத்தர் வீட்டுக்கு போற பொண்ணு ..இந்த விளையாட்டுதனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டு பொறுப்பா பதவிசா..”

“நான் ஏன் அத்தை இன்னொரு வீட்டுக்கு எல்லாம் போகப்போறேன்…நான்தான் A2 வை கல்யாணம் பண்ணிக்கிட்டு உனக்கு மருமகளா இந்த வீட்டுக்கே வந்துட போறேனே…”

பெருமூச்சு விட்ட ருக்மணிதேவி” நடக்கிறத பேசணும்டி.. அது நடக்காதுன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்… ஏன் வேண்டாத பேச்சு பேசுற ..உன் மாமா காதுல விழுந்தா ரணகளமாயிடும் அப்புறம் இப்ப வந்துட்டு போயிட்டு இருக்கிறது கூட நிறுத்திட்டுத் தான் மறுவேலை பாப்பாரு அந்த மனுஷன பத்தி உனக்கு தெரியாதா மாயா …”

இதையெல்லாம் பெரிதாக காதில் வாங்காத மாயா …

“அப்ப ஒன்னு செய்யவா.. பேசாம நான் பிரித்திவிராஜ் மாதிரி குதிரையில் வந்து A2 வை குதிரை மேல வச்சு கடத்திக்கிட்டு எங்கேயாவது போய் கல்யாணம் பண்ணிக்கிடவா….ஆனா இந்த அத்தான் வரணுமே…குதிரை எல்லாம் வாடகைக்கு எடுத்து கெட்டப் எல்லாம் போட்டு.. கடைசியில் பிளான் சொதப்பிடுச்சுனா வீணாப் போயிடும் ..”என்றாள் கவலையாக.

வேடிக்கையாக பேசும் மாயாவை வேதனையுடன் பார்த்தாள் ருக்மணி. இவள் மட்டும் அதர்ஷ்கு மனைவியாக இந்த வீட்டு மருமகளாக வந்தால், எவ்வளவு நல்லா இருக்கும் என்று அவள் உள் மனம் ஏங்கியது. ஆதர்ஷை நன்றாக கவனித்துக் கொள்வாள். இந்த வீட்டுப் பொறுப்பையும் பேசாமல் இவளிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருக்கலாம். ஆனால் நான் நினைத்து என்ன நடக்கப்போகிறது.

ஆதர்ஷ் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே முடியவில்லை. அப்பாவும் மகனும் பேசிக் கொள்வதே அரிதா இருக்கு …முரட்டு குணமும் மூர்க்கத்தனமும் உள்ள கணவனை நினைக்க மனம் ஒரு கணம் அஞ்சியது ..வீணாக மாயாவை இதில் சிக்க வைக்க கூடாது ..அவள் மனதில் வேண்டாத ஆசைகளை வளர்த்துக்கொள்வதை ஆதரிக்கக் கூடாது. அவளுக்கு அது கெடுதலாக முடியும்.

உடனே அவள் பாணியிலேயே பேச ஆரம்பித்தாள் ருக்மணி தேவி ,” அத்தான் என்னடி அத்தான்.. ஊர்ல ஆயிரம் பொத்தான் இருக்கான்.. எவனையாவது ஒருத்தனை பார்த்து கையை காட்டு.. நான் உனக்கு அவனை கல்யாணம் பண்ணி வைக்கிறேன் ஜாம் ஜாம்னு..”

“போ அத்தை… எத்தனை பொத்தான் இருந்தாலும் எங்க அத்தானை மாதிரி வருமா? ..சின்ன வயசுல நாங்க ரெண்டு பேரும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடும் போதும் அவர்… எனக்காக எவ்வளவோ விட்டுக் கொடுப்பார் தெரியுமா ..மாமா மாதிரி இல்ல அத்தான்…ரொம்ப அன்பானவர்.. பாசமானவர்…இப்ப கூட அடிக்கடி சொல்லுவாரு.’ மாயா நீ வந்தா தான் அந்த வீடு ஒரே கலகலப்பா இருக்கு…இல்லைனா அப்பா, அம்மா, நான்னு ஆளுக்கு ஒரு பக்கத்துல …ஒரு தனி உலகத்தில் இருக்கிற மாதிரி இருக்கு”ன்னு

ஆசையோடு பேசும் மாயாவை கவலையாக பார்த்தாள் ருக்மணி ..இதை அதிக நாள் வளர விடக்கூடாது. சாரதாவை வரச்சொல்லி பேச வேண்டும். சீக்கிரம் இவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை நடத்தி விட வேண்டும். சாரதாவை நினைக்கும்போது மனது கசிந்தது.. அவள் ஏற்கனவே நிறைய பட்டுவிட்டாள். இனியும் இவளால் அவளுக்கு ஒரு தொல்லை என்றால் அவளால் தாங்க முடியாது.. பாவம் சாரதா ..

இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் மாயா பாடிக் கொண்டே நடந்தாள் ..

“யாருக்கு மாப்பிள்ளை யாரோ..

அவர் எங்கே பிறந்து இருக்கின்றாரோ…

அவர் இங்கே பிறந்திருக்கிறாரே …..”

எதிரே பாரு மோருடன் வர, அதை வாங்கி அப்படியே கடகடவென்று குடித்துவிட்டு… பாருவை பிடித்து தட்டாமாலை சுத்தினாள்..

“ஐயோ அம்மா விடுங்கம்மா விடுங்கம்மா..” பாரு அலறினாள்.

“மோர் அருமையாக இருந்தது சேடிப் பெண்ணே! நான் இளவரசியாகும் போது உன்னை என் அந்தரங்க பணிப்பெண்ணாக நியமித்துக் கொள்வேன்..வரட்டுமா பெண்ணே ..” என்றவள் கலகலவென்று சிரித்துக்கொண்டே வெளியே நடந்தாள்.

கவலை இல்லாமல் பட்டாம்பூச்சியாய் திரியும் இந்தப் பெண்ணுக்குத்தான் எத்தனை கவலைகள் வரிசையாய்  காத்திருக்கின்றன! !!!

(அலை வீசும் 🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 23) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்

    பாடறியேன்… படிப்பறியேன் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை