2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மார்கழி மாதம் முதல் நாள் அதிகாலை, நான்காம் ஜாம பூஜை தொடங்கி விட்டதை முரளிதர சுவாமி கோவிலின் ஆலயமணி பெரும் ஓசையுடன் அறிவித்தது.
முன்பனிக்கால காற்று உடலை மூடி இருந்த ஆடைக்குள்ளும் புகுந்து குளிரூட்டியதைப் பொருட்படுத்தாமல் ஆண்களும் பெண்களும் கையில் புஷ்பக் கூடையுடனும் ஆண்டாள் போல் அலங்கரிக்கப்பட்ட தன் பெண் குழந்தைகளுடனும், கிருஷ்ணன் போல் அலங்கரிக்கப்பட்ட ஆண் குழந்தைகளுடனும் வேகமாக கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.
“லலிதா… லலிதா எழுந்திரு… வதனா வந்து உனக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்”.
மூன்றாவது முறையாக தன் மகளை எழுப்பினாள் லலித்தாங்கியின் தாய் மங்களாம்பிகை.
“அம்மா நான் முன்னமே முழித்து விட்டேன் நீ வந்து என்னை எழுப்புகிறாயா இல்லையா என்ற சோதனை செய்ய தான் கண்முடி படுத்திருந்தேன்” என்றபடியே துள்ளிக் குதித்து எழுந்தாள் லலிதாங்கி.
“இந்த பேச்சுக்கொன்றும் குறைவில்லை ,சரி சரி விரைவாக கிளம்பு , பூஜை முடிந்து விடப்போகிறது. கோவிலில் இன்று நம் ராணியார் வேறு வருகிறார். இன்று முதல் நாள், ஆதலால் ஆண்டாளின் கதை நாட்டிய நாடகம், பஜனை எல்லாம் இருக்கிறது . ஆகட்டும்… ஆகட்டும்….ம்…” பேசிய படியே பூக்களை தொடுக்க ஆரம்பித்தாள், லலிதாங்கியின் தாய்.
மாமி,” என்னிடம் கொடுங்கள் நான் தொடுக்கிறேன்” என்று பூக்களை எடுத்து தொடுக்க ஆரம்பித்தாள் வதனச்சந்திரா.
எவ்வளவு அழகு.,இந்த குழந்தை வதனா..அவள் தாயார் சௌந்தரவல்லி போல் அப்படியே உருவம் கொண்டிருக்கிருக்கிறாள். தன் மகளின் அழகையும் வளர்ச்சியையும் காண சௌந்தரவல்லிக்கு கொடுத்து வைக்கவில்லை. குழந்தையை பெற்றெடுத்து விட்டு பெருமாளிடம் தஞ்சம் புகுந்து விட்டாள். மனதிற்குள் நினைத்துக் கொண்டே கண்களில் துளிர்த்த கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள் லலிதாங்கியின் தாய் மங்களா.
“அம்மா,..அம்மா…. இந்த அலங்காரம் போதுமா? சரியா இருக்கா? என்றாள் லலிதா.
“ஏம்மா ….லலிதா…… பெருமாளை சேவிக்க இத்தனை அலங்காரம் தேவையா?” என்றாள் மங்களாம்பிகை கையை தாடையில் வைத்து ஆச்சரியத்துடன்.
“இன்று நம்ம கோயிலுக்கு ராணியார் வருகிறார் மத்த நாட்களில் மிக எளிமையாக போனால் போதும் இன்றைக்கும் அதே போல் போக முடியுமா? பிறகு ராணியார் நம் பிரஜைகள் எல்லோரும் ஏழ்மையில் இருக்கிறார்கள் என்று நினைத்து விட மாட்டார்களா?”என்றாள் லலிதா புருவங்கள் மேலெழும்ப .வதனாவும் லலிதாவின் தாயாரும் சிரித்து விட்டனர்.
“வதனா…..நீயும் இந்த காசு மாலையை போட்டுக்கொள்ளேன்” என்று தன் கையில் இருந்த மாலையை நீட்டினாள் லலிதாங்கி.
“வேண்டாம்….எனக்கு எளிமையாக இருப்பது தான் பிடிக்கும். சரி சரி வா கோவிலுக்கு நாழிஆகிறது.”..என்றாள் வதனா.
“உன் பிடிவாத குணத்தை யாரால் மாற்ற முடியும் சரி.. அம்மா நாங்கள் போய் வருகிறோம். இன்னும் நூபுராவையும் விக்கிரந்தியையும் விஜயமாலாவையும் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும்”
லலிதாங்கி தன் கால் தண்டைகள் ஜல் ஜல் என்ற ஒலி எழுப்ப,. வதனாவின் கையைப் பிடித்துக் கொண்டு வேகமாக வாசலை நோக்கி விரைந்தாள்.
“மாமி நீங்கள் வரவில்லையா என்று கேட்ட வதனாவிற்கு இல்லடி அம்மா… நீங்கள் போய் வாருங்கள். ராணியார் வருவதால் கூட்டம் அலை மோதும்… நிதானமாக முரளிதரன் சுவாமியை சேவிக்க முடியாது. நான் சந்தியா காலத்தில் போய்க்கொள்கிறேன்.”
வண்ண வண்ண பட்டுப்பாவாடை, மஞ்சள் பூசிய தங்க முகங்கள் ஜொலிக்க, பனிரெண்டு வயதுடைய அந்த ஐந்து சிறுமியரும் கோவிலை நோக்கிய நடையுடன் பேசி சிரித்துக் கொண்டே சென்றனர்.
“லலிதா,… நாம் ராணியை அருகில் சென்று பார்க்க இயலுமா என்று கேட்டாள் நூபுரா,
“அதற்கென்ன நம் வதனாவின் தந்தையார் தானே கோவில் பட்டர், நாம் கருவறையின் அருகிலே நின்று கொண்டால் ராணியாரை அருகிலேயே பார்க்கலாம். சரி, சரி விரைவாக வாருங்கள்” என்றபடியே லலிதாங்கி ஓட்டமும் நடையுமாக வேகமாக நடந்தாள்.
கிழக்கு கோபுர வாயில் உள்ள தெருவில் அவர்கள் நுழைவதற்கும் ராணியார் கோவிலிலிருந்து பல்லக்கில் கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. தெருவின் இருபுறமும் மனிதர்கள் வரிசையாக நின்றிருக்க, பல்லக்கின் உள்ளிருந்து ராணி யார் எல்லோரையும் வணங்குவது இங்கு இருந்தே தெரிந்தது. “
“அடடா…ராணி கிளம்பி விட்டார்களே” என்ற பதட்டத்துடன் லலிதாங்கி முன்னோக்கி செல்ல யத்தனிக்க…
பல்லக்கு தாங்கிய வீரர்கள் வேகமாக வடக்கு கோபுரம் உள்ள வாயிலின் தெருவில் திரும்பி விட்டார்கள்.
வெளியே நின்று இருந்த மக்கள் எல்லோரும் கோவிலை நோக்கி செல்ல, கூட்டம் லலிதாவின் வேகத்தை தடை படுத்தியது.
“ஐயோ இதற்கு தான் சொன்னேன்… விரைவாக வாருங்கள் என்று எல்லோரும் மிகத் தாமதம் அதுவும் இந்த நூபுரா கிளம்புவதற்கு மிக மிக தாமதம் ஆகிவிட்டது.”என்று கோபமாக கூறினாள் வலிதாங்கி.
“ஏன் எனக்காக… காத்திருந்தாய்….நீ முன்னே விரைவாக செல்ல வேண்டியது தானே…” என்று நூபுரா கோபப்பட்டாள்.
“சரி சரி சண்டையிடாதீர்கள், இன்னொரு நாள் ராணியாரை பார்த்துக் கொள்ளலாம் “என்று வதனா சமாதானம் செய்தாள் இருவரையும்.
“ஆமாம் இனிமேல் அவர்கள் எப்பொழுது கோவிலுக்கு வர போகிறார்களோ”?என்று சோகத்துடன் கூறினாள் லலிதா.
கோவிலில் உள்ளே சென்றதும் அவர்களின் கவனமெல்லாம் திசை திரும்பியது.
“ஆண்டாளின் கதை ஆரம்பித்து விட்டார்கள் நான் அங்கு செல்கிறேன்” என்று சொல்லிவிட்டு லலிதாங்கி அந்த பக்கம் ஓட்டமாக ஓடினாள்.
வதனா,” நான் பெருமாளை சேவித்து விட்டு வருகிறேன் நீங்கள் போங்கள்” என்றபடியே சன்னதியை நோக்கி நடந்தாள்.
நூபுரா லலிதாவுடனும், விச்ராந்தி வதனாவுடனும் சென்றனர்.
கருவறையில் எட்டடி உயரத்துடன் உள்ள மூலவர் முரளிதரன் சிரசில் வைர கற்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தில் மத்தியில் நீல கற்களும், பச்சை வண்ண மரகத கற்களும் மயிற்பீலியின் வடிவில் பதிக்கப்பட்டு தீப ஒளியில் ஜொலித்தது.
கழுத்திலும் கையிலும் இடுப்பிலும் காலிலும் அணிவிக்கப்பட்டு இருந்த நவரத்தினங்கள் பதித்த முத்து ஆபரணங்களும், பொன்னிற பட்டாடையும் வெண்ணிற அங்க வஸ்திரமும், கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
செந்தாமரையிலும் துளசியிலும் கட்டப்பட்ட மாலையும், புன்னகை ததும்பும் வதனத்துடன் கூடிய முரளிதரனின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது.
கல்லில் சந்தன கட்டையால் அரைக்கப்பட்ட சந்தனத்தின் திவ்ய மணமும், பச்சைக் கற்பூரமும் ஏலக்காயும் இடப்பட்ட தீர்த்தத்தின் மணமும், தீபங்கள் சுடர்விடும் விளக்குகளில் இடப்பட்ட பசும் நெய் வாசமும், அர்ச்சனை செய்யப்பட்ட சம்பங்கியின் மணமும் அந்த சன்னிதானத்தையே நிறைத்து ஒரு தெய்வ லோகத்தையே சிருஷ்டித்து இருந்தது.
கையில் நளினத்துடன் பிடித்திருந்த புல்லாங்குழலும் இதழ்களில் புன்னகையும் செந்தாமரை கண்களின்
அழகையும் கண்ட வதனாவின் மனம் முரளிதரன் சுவாமியுடன் நெருங்கி, நிறைந்து கண்கள் குளமாகியது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings