2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“த பாருங்க மாப்ள… எங்க பரம்பரைல தலைச்சன் குழந்தைகள் எல்லாமே பெண் குழந்தைகதான்… அதனால… என் தங்கச்சி கலாவுக்கும் நிச்சயம் பெண் குழந்தைதான்” கலாவின் அண்ணன் பரந்தாமன் சொல்ல,
“அதான் இல்லை… எங்க வம்சத்துல எல்லாருக்குமே முதல் குழந்தை ஆண்தான்… அதனால கண்டிப்பா என் மனைவிக்கும் ஆண் குழந்தைதான்” என்றான் குணசேகரன்.
தன் அண்ணனுக்கும், கணவனுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த உரையாடலை புன்சிரிப்புடன் ரசித்தபடி ஆஸ்பத்திரி கட்டிலில் அமர்ந்திருந்தாள் கலா.
“நீங்க வேணாப் பாருங்க பெண் குழந்தைதான்.” பரந்தாமன்.
“ஏமாறப் போறீங்க… ஆண் குழந்தைதான்” குணசேகரன்.
“பந்தயம் வெச்சுக்குவோமா?” பரந்தாமன்.
“தாராளமா”
“எவ்வளவு சொல்லுங்க?”
“ஜெயிக்கப் போறவன் நான்தான்… அதனால தோற்கப் போற நீங்களே சொல்லுங்க” சொன்னான் குணசேகரன்.
அவனுடைய அந்தப் பேச்சு பரந்தாமனைக் கோபமூட்ட, “எனக்கு எத்தனை ஆனாலும் குடுக்கறதுக்கு வக்கிருக்கு… அதனால நீங்களே உங்க வசதிப்படி சொல்லுங்க” என்றான்.
“அப்ப…. நான் வக்கில்லாதவனா?” குணசேகரன் முகத்தில் எரிச்சல்.
“அப்பத் தொகையைச் சொல்லுங்க!… ஆயிரமா?… லட்சமா?ன்னு”
பரந்தாமன் கேட்ட தொணி குணசேகரனுக்கு ரோஷத்தை உண்டாக்கி விட, “ஒரு லட்சம் பந்தயம்… ரெடியா?” என்றான் கத்தலாய்.
ஆடிப் போனாள் கலா.
“சம்மதம்” என்று அவசரமாய்ச் சொல்லி விட்ட பரந்தாமன், யோசித்து விட்டு, “மாப்ள… ஏற்கனவே ஸ்கேன் பார்த்து… இன்ன குழந்தை!ன்னு தெரிஞ்சுக்கிட்டுப் பந்தயம் கட்டலையே?” தன் சந்தேகத்தைக் கேட்டான்.
“அப்படியெல்லாம் ஃப்ராடு பண்ற வம்சமில்லை எங்களோடது” என்றான் குணசேகரன்.
“படக்”க்குன்னு ஒரு லட்சம் வரை போயிட்டீங்களே?” பரந்தாமன் நம்பிக்கை இல்லாமல் தங்கையைப் பார்க்க, அவளும் “இல்லைண்ணா… ஸ்கேனெல்லாம் எதுவும் பார்க்கலை!” என்று கூற,
தங்கை பொய் சொல்ல மாட்டாள், என்பதில் உறுதி கொண்டவன், “ஓ.கே!.. இது வரை பார்க்கலை… அதே மாதிரி இனிமேலும் பார்க்கக் கூடாது… அதுதான் பந்தயத்தோட நிபந்தனை…!”
“சரி… பார்க்க மாட்டோம்…”
குறித்த நாளைக்கு மூன்று தினங்கள் முன்னதாக வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிப் படுத்திருந்தவளுக்கு அந்த இருவரின் விவாதமும், பந்தயமும் ஒரு அச்சத்தையே உருவாக்கியது. “இதுல யார் ஜெயிச்சாலும் இன்னொருத்தருக்கு மனக்கசப்பு வந்துடுமே!.. அப்படித்தான் பந்தயத் தொகையாவது சின்னத் தொகையா?… ஆவேசத்துல ரெண்டு பேரும் லட்சத்துக்கல்ல போயிட்டாங்க!… தோத்துப் போறவங்களுக்கு அது ஒரு பெரிய நஷ்டமாத்தானே இருக்கும்!… என்ன பண்றது?… எப்படி இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கறது?”
அண்ணனும், கணவனும் சென்ற பிறகு நிதானமாய் யோசித்துப் பார்த்தாள். பிறப்பு வாசலிலேயே தன் குழந்தை ஒரு பெரிய மனப் பிளவுக்கும்… உறவுப் பிரளயத்திற்கும்… காரணமாகிப் போய் விடுமோ?… என்கிற கவலை அவளை ஏகமாய் ஆக்கிரமிக்க அடி வயிற்றில் “சுளீர்‘ என்று அந்த வலி ஆரம்பித்தது. மூன்று நாட்கள் கழித்து வர வேண்டிய பிரசவ வலி அந்த நிமிடத்திலேயே எட்டிப் பார்த்தது.
கீழுதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டு, “அ…ம்…மா…!” சிரமப்பட்டு தாயை அழைத்தாள். கதவுக்கு வெளியே இருந்த அவள் தாய், “என்னம்மா…?” கேட்டபடியே அவசர அவசரமாய் உள்ளே வந்தாள்.
கலா நிலைமையைச் சொல்ல, நர்ஸை அழைத்து வர ஓடினாள் அவள்.
அங்கே பரபரப்பு பற்றிக் கொள்ள, சில நிமிடங்களில் கலா பிரசவ அறைக்குள் கொண்டு செல்லப்பட்டாள். அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, பிரசவ அறைக்குள்ளிருந்து வந்த லேடி டாக்டர் “இங்க யாரும்மா… கலாவோட ரிலேஷன்ஸ்?”
“சொல்லுங்க டாக்டர் நான்தான் கலாவோட அம்மா”
“நார்மல் டெலிவரிக்குத்தான் முயற்சி பண்ணினோம்… பட்… அதுக்கு சான்ஸ் இல்லை போலிருக்கு… சிசேரியன்தான் பண்ணி ஆகணும்… அவங்க ஹஸ்பண்ட் இருக்காரா?” கேட்டாள் நர்ஸ்.
“கொஞ்சம் வெளிய போயிருக்கார்… இப்ப வந்துடுவார் டாக்டர்” கையை உதறிக் கொண்டு சொன்னாள் கலாவின் தாயார்.
“ஓ.கே… வந்ததும் சொல்லுங்க… அவரு கையெழுத்துப் போட பின்னாடிதான் ஆபரேஷன் ஆரம்பிக்கணும்!” எந்திரத்தனமாய்ச் சொல்லி விட்டு நர்ஸ் திரும்பிச் சென்று விட, டென்ஷனாகி அங்குமிங்கும் நடந்தாள் கலாவின் தாயார்.
சில நிமிடங்களிலேயே குணசேகரன் வந்து சேர்ந்ததும், ஒப்புதல் கையொப்பங்களுக்குப் பிறகு ஆபரேஷன் துவங்கியது.
எங்கிருந்தோ வந்து சேர்ந்தான் அண்ணன் பரந்தாமன்.
“ஆபரேஷன் பண்ணித்தான் குழந்தையை வெளிய எடுக்கணுமாம்!… ஆபரேஷன் நடந்திட்டிருக்கு” என்றான் குணசேகரன் மச்சினன் பரந்தாமனிடம்.
ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே படபடக்கும் இதயத்துடன் இருவரும் காத்திருந்தனர்.
ஒரு புறம் கலாவின் தாய், “எப்படியாவது மகளுக்கு நல்ல முறையில் பிரசவம் ஆகி… தாயும் சேயும் எந்தவித சேதாரமும் இல்லாமல் பிழைச்;சு வரணும்‘ என்று எல்லாக் கடவுளர்களையும் வேண்டிக் கொண்டிருக்க,
“பெண் குழந்தை பிறக்கணும்… முருகா..” என்று பரந்தாமனும்,
“ஆண் குழந்தையைத் தா அய்யப்பா” என்று குணசேகரனும், தனித் தனியே தங்களுக்குப் பிடித்த கடவுள்களிடம் மனுப் போட்டுக் கொண்டிருந்தனர்.
ஒரு லட்ச ரூபாய் பரந்தாமனுக்கும் குணசேகரனுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தது.
எல்லோருடைய பார்வையும் ஆபரேஷன் தியேட்டர் கதவின் மீதே அமர்ந்திருக்க,
நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது.
“க்ளக்” கதவு திறக்கப் பட, வெளியே வந்த நர்ஸ் எல்லோருடைய முகத்தையும் ஒரு முறை கூர்ந்து பார்த்து விட்டு, “கலா புருஷன்..?”
“சொல்லுங்க சிஸ்டர்… நான்தான்” குணசேகரன் “திக்..திக்” நெஞ்சுடன் முன் வந்தான்.
“உங்க… வொய்புக்கு… பெண் குழந்தை பிறந்திருக்கு”
தொங்கிப் போனது குணசேகரனின் முகம். “ச்சே… ஒரு லட்சம் போச்சா?” வாய் அவனையுமறியாமல் சொன்னது.
“ஹா…ஹா…” பரந்தாமன் சூழ்நிலை மறந்து கத்திச் சிரித்தான். “ஜெயிச்சிட்டோம்ல?”
அந்த நர்ஸூக்குப் பின்னாடியே வந்த இன்னொரு நர்ஸ், “கலா வீடடுக்காரரு யாருங்க?” சத்தமாய்க் கேட்டாள். சலிப்புடன் தலையைத் தூக்கிப் பார்த்தான் குணசேகரன். “நாந்தான்”
“ஆண் குழந்தை பொறந்திருக்குங்க உங்களுக்கு”
பாய்ந்து வந்தான் பரந்தாமன், “ஹேய்… என்ன வெளையாடுறீங்களா?… அந்த நர்ஸ் “பெண் குழந்தை”ங்குது… நீ வந்து “ஆண் குழந்தை”ங்கறே… என்ன எங்களையெல்லாம் பைத்தியம் பண்ணுறீங்களா?”
“ஹலோ… மொதல்ல நீங்க யாரு? அதைச் சொல்லுங்க” நர்ஸ் சிரித்தவாறே கேட்க,
“அண்ணன்மா… கூடப் பொறந்த அண்ணன்”
“அப்படின்னா டபுள் ஸ்வீட் குடுங்க மாமா… உங்க தங்கச்சி ஆண் குழந்தை ஒண்ணு… பெண் குழந்தை ஒண்ணு!ன்னு ரெட்டைக் குழந்தையைப் பெத்திருக்கா” என்றாள் நர்ஸ்.
எல்லோருடைய முகத்திலும் பிரகாசம் பரவ, அங்கே சிரிப்பொலி சேதாரமின்றி வந்தது.
பரந்தாமனும், குணசேகரனும் ஒருவரையொருவர் வியப்பாய்ப் பார்த்துக் கொண்டு ஆரத் தழுவிக் கொண்டனர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விழா விமரிசையாக ஏற்பாடாகியிருந்தது. “மாப்ள… எங்க வம்சத்துல முதன் முதலாப் பொறக்கற பெண் குழந்தைக்கு எப்போதுமே… எங்க குலதெய்வமான ‘விசாலாட்சி‘ அம்மனோட பெயரைத்தான் வெப்போம்…” பரந்தாமன் தன் தங்கையின் பெண் குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு சொல்ல,
“ம்ஹூம்… அதெல்லாம் முடியாது… நாங்க எங்க கொள்ளுப் பாட்டியோட பேரைத்தான் வெப்போம்” குணசேகரன் வீறு கொண்டு எழுந்தான்.
கலாவின் நினைவில் பிரசவத்தின் போது அந்த ரெண்டு பேருக்குமிடையில் நிகழ்ந்த அந்தக் கசப்பான போட்டி ஞாபகத்தில் வந்து போனது. “ச்சூ…ரெண்டு பேரும் கொஞ்சம்… சும்மா இருக்கீங்களா?… என்னோட குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கறதுன்னு நான் ஏற்கனவே முடிவு பண்ணி வெச்சிருக்கேன்… அதைத்தான் வைக்கப் போறேன்..” கலா ஆணித்தரமாகச் சொன்னாள்.
“அட… அப்படியா?… சொல்லு…சொல்லு என்ன பேரு?” பரந்தாமன் பறந்தான்.
“ம்ம்ம்… பொண்ணு பேரு… பவபாரிணி!… பையன் பேரு… நித்தின்”
குணசேகரன் எதுவோ சொல்ல வாயெடுக்க, “இங்க பாருங்க… யாரும் எதுவும் பேசக் கூடாது!… இந்த விஷயத்துல என்னோட முடிவுதான் இறுதி முடிவு” என்று சொல்லி கணவனை அடக்கினாள் கலா.
அதை ஏற்றுக் கொள்ளும் விதமாய்த் தலையாட்டியபடியே குணசேகரன் தன் மச்சினன் பரந்தாமனைப் பார்க்க,
அவனோ தன் மடியில் கிடந்த தங்கையின் மகளிடம், “பவதாரிணிக்குட்டி… எங்கே உன் தம்பி நித்தின்” என்று கொஞ்சிக் கொண்டிருந்தான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings