2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஆரம்பிச்சுடலாமா?
இருங்க சாமி. சியாமளா மாமி வந்துடட்டும். சாதாரணமா சரியான நேரத்துக்கு வந்துடுவாங்க. இன்னிக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை.
இது வந்துட்டாங்களே! வாங்க! வாங்க! வாங்க மாமி!
லட்சுமி! இன்னும் பூஜையை ஆரம்பிக்கலயா? மன்னிச்சுக்கோங்க மாமா! கொஞ்சம் நேரம் ஆயிடுத்து. நீங்க ஆரம்பிங்கோ.
லட்சுமி! இன்னிக்கு காலைல ஆத்துல திடீர்னு தூரத்துலேர்ந்து தெரிஞ்சவா வந்துட்டா. வந்தவா முகத்துல பசி தெரிஞ்சது. அப்படியே விட்டுட்டு வர மனசில்லை. இங்க கோர்ட்டுல ஏதோ வேலையாம். சரின்னு மடமடன்னு அவாளுக்கு சமைச்சுப்போட்டு அவா பசியாத்திட்டு வரதுக்குள்ள நாழியாயிடுத்து. அப்படியே மாமாக்கும் சேர்த்து சமைச்சுட்டேன். அதனால அவருக்கு எதுவும் வேண்டாம் வடையும் பாயசமும் மட்டும் குடு போதும்.
அதானே! நான் நினைச்சேன். மாமி டான்னு டயத்துக்கு வந்துடுவாங்களேன்னு. அன்னபூரணிமாதிரி புண்ணியம் செஞ்சுட்டு வந்துருக்கீங்க. இந்தாங்க முதல்ல நீங்க வெத்தலை பாக்கு வாங்கிக்கோங்க. எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமி.
நல்லா ஷேமமா இருக்கணும். நான் வர்றேன் லட்சுமி.
ஏங்க! இந்த சியாமளா மாமியைப் பார்த்தீங்களா? எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க இல்ல? மடிசாரைக் கட்டிண்டு லட்சுமிகரமா அவங்களைப் பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடணும்போல இருக்கு. நான் கூட அப்படி இல்லேங்க. அன்னிக்கு ஒரு சேரியைத் தாண்டி வந்துக்கிட்டிருக்கோம் அங்கிருந்த ஒரு குழந்தை வேகமா ஓடிவந்து மாமி மேல மோதிடுச்சு. இவங்களும் அதைப்பார்த்து வாஞ்சையோடு அது தலையை தடவிவிட்டு பக்கத்து கடைல பிஸ்கட், சாக்லேட் னு வாங்கி அங்கிருந்த குழந்தைகளுக்கு எல்லாம் குடுத்தாங்க. அந்த மக்களோட எவ்வளவு சகஜமா பேசினாங்க தெரியுமா? நான்கூட கொஞ்சம் ஒதுங்கித்தான் இருந்தேன். அப்போ எனக்கே என்னையைப்பிடிக்கல.
அன்னிக்கு அப்படித்தான் அவங்க வீட்டுல ராதாகல்யாணம் பண்ணினாங்க. அக்கம்பக்கத்துல இருக்கறவங்க, வேலை செய்யறவங்க வந்து சாப்பிட கூச்சப்படறாங்க. இவங்க எப்படி பேசினாங்கங்கறீங்க? இப்போ நினைச்சாலும் எனக்குப் புல்லரிக்குது. இவ்வளவு சகஜமா மனிதாபிமானத்தோடு ஒரு மனுஷியை நான் பார்த்ததே இல்லேங்க. அவங்க ரொம்ப நாள் நல்லா இருக்கணும்.
சரி! சரி! இன்னிக்குப்பூராம் நீ சியாமளா மாமி பெருமையைய்ப் பேசச் சொன்னாலும் பேசிக்கிட்டிருப்ப. இங்க எனக்கு வயிறு வாடுது. கல்லு காயிது பாரு! தோசையை வாத்துப்போடு.
மாமி!
வா! வா! லட்சுமி! உன் பேருக்கேத்தமாதிரி அந்த அம்பாள் மாதிரியே ஜொலிக்கறயே! என்ன விஷயம்?
மாமி! இன்னிக்கு எனக்குப் பிறந்தநாள். ஆசிர்வாதம் பண்ணுங்க.
நன்னா இரு. தொங்கத்தொங்க தாலியைக்கட்டிண்டு ஆத்துக்காரரோட ஷேமமா இருக்கணும்.
மாமி! நான்லாம் இன்னிக்கு மட்டும்தான் அம்மன் மாதிரி இருக்கேனோ என்னவோ ஆனால் நீங்க எப்பவும் மஹாலஷ்மி மாதிரித்தான் இருக்கீங்க.
அப்படியா சொல்ற? உன் கண்ணுக்கு நான் அப்படிதெரிவேனா இருக்கும்.
ஏன் மாமி! உங்களுக்கு இப்போ இந்த நிமிஷம் என்ன ஆசைன்னு சொல்லுங்க?
ஒண்ணுமே இல்லை. பகவான் குடுத்த இந்த வாழ்க்கையை சந்தோஷமா வாழணும். பெரிசா ஆசைப்படாம, நம்மால முடிஞ்சதை அடுத்தவாளுக்கு செஞ்சுண்டு லோக க்ஷேமம் பராக்ரமம்னு சாமியை வேண்டிண்டு சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான்.
ஏன் மாமி? உங்கள மாதிரி பெரியவங்க எப்பப்பாரு உலகத்தை வெறுத்துப் பேசித்தான் நான் பார்த்திருக்கேன். உங்களுக்கு உலகத்தைப்பார்த்து வெறுப்பே வந்ததில்லையா?
நீ கேக்க வர்றது எனக்குப் புரியறது. உங்களுக்கு சாவு மேல ஆசையில்லயான்னுதானே கேக்கற? ம்ஹூம் எனக்கு சாகணும்னு தோணவே இல்லை. இந்த சொர்க்கமும் நரகமும் ரொம்ப போரடிக்கும்னு தோணும். இப்போ உடனடியா செத்துப்போய் என்ன சாதிக்கப் போறோம் சொல்லு? இங்க உலகத்துல மனுஷாளோடு பழகறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு.
அப்போ உங்களுக்கு பிடிக்காதவங்க யாருமே இல்லையா?
அதாவது பிடிச்சவா நிறைய பேர் இருக்கா. மத்தபடி கோபம், வெறுப்பு, பொறாமை, வெடுக்குப்பேச்சு இதையெல்லாம் நான் கடந்து வந்தாலும் அதையெல்லாம் அவா அவாளோட இயல்பா அப்படியே ஏத்துண்டிடுவேன். இன்னும் கூட சொல்லணும்னா அதையும் நான் ரசிப்பேன். அது என்னவோ அப்படித்தான்.
அதுதான் உங்க மாட்டுப்பொண்ணுங்களுக்கும் உங்களை ரொம்ப பிடிக்குது போல. நீங்க அப்புறம் ஏன் தனியா இருக்கணும்?
ஏன்னா அவாளுக்கு என்னை எப்பவும் பிடிக்கணும் இல்லையா? அதுக்குத்தான். சிரித்தாள்.
மாமி! மாமாவுக்கு அரசாங்க வேலைதானே! ஊர் ஊரா போனதுல உங்களுக்கு குவார்ட்டர்ஸ் கிடைச்சுருக்குமே! நீங்க அங்கல்லாம் இருந்திருக்கீங்களா?
லட்சுமி! நீ நினைக்கற மாதிரி மாமாக்கு பெரிய வேலையெல்லாம் கிடையாது. நாங்க சின்ன வயசுல நிறைய கஷ்டப்பட்டுருக்கோம். இப்போ பென்ஷன் கைநிறைய வர்ற மாதிரி அப்போ சம்பளம் வந்ததில்லை. அவர் உத்யோகத்துக்கு தகுந்த மாதிரி குவார்ட்டர்ஸ் கிடைச்சது ஆனால் நான் அதுல கொஞ்ச நாள் கூட இருந்ததில்லை.
ஏன் மாமி?
அதுவா! அவர் கடைநிலை ஊழியர்ங்கறதுனால அவா இவான்னு பேதமில்லாம எல்லாருக்கும் பொதுவுல வீடுகள். தினமும் நான் வாசக்கதவைத் திறந்தா எதுத்தாப்புல ஏதோ ஜாதிக்காரி தலையை விரிச்சுண்டு பேன் பார்த்துண்டிருப்பா. தினம்தினம் அந்தக் கண்றாவியையெல்லாம் பாக்கச் சகிக்குமா? அதுதான் குவார்ட்டர்ஸும் வேண்டாம் ஒண்ணும் வேணாம்னு அக்ரகாரத்துக்கு வந்துட்டேன்.
சகஜமாக அவள் சொல்லச்சொல்ல, லட்சுமிக்கு இத்தனை நாள் தான் ஆதர்சமாக நினைத்த ஒரு பிம்பம் கழுவிக்கரைந்து போனதில் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings