2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
காகித வாசனை.. புதிய காகித வாசனை பழைய காகித வாசனை அட்டை வாசனை சாய வாசனை எல்லாம் கலந்த வாசனை காற்றில் மிதந்து வந்து மெய்மறக்கச் செய்தது.
கவிதாவும் அவள் கணவர் கவினும் புத்தகத் திருவிழாவிற்குள் நுழைந்தார்கள்.
எதற்குள் முதலில் சென்று பார்ப்பது எதை எடுப்பது என்றே தெரியவில்லை அவர்களுக்கு அத்தனை புத்தகச் சாவடிகள்.
கவிதா ஒரு புத்தகம் விரும்பி அவளுக்கு புத்தங்கள் வாங்கித்தரலாம் என்கிற ஆசையில் அவள் கணவர் கவின் இங்கு அழைத்து வந்தார்.
ஒட்டுமொத்தமாய் இத்தனை புத்தகங்களை நேரில் பார்த்தவள் பிரம்மித்து எதை பார்ப்பது எதை வாங்குவது என்ற தேடலோடு நுழைந்தாள்.
முதல் புத்தகச் சாவடிக்குள் வரலாற்று புதினங்கள் இருந்தன.
“இங்க பாரு கவிதா பொன்னியின் செல்வன்”
“நான் படிச்சிட்டேன்ங்க ஏற்கனவே. உடையாரும் படிச்சிருக்கேன் ராஜராஜா சோழன் எப்படி அந்த கோவில் கட்டினாருன்னு அழகா சொல்லிருப்பாங்க மொத்தம் ஆறு பாகம் மூணு மாசமா படிச்சேன்”
“மூணு மாசமாவா…”
“ஆமாங்க. அந்த புக்லாம் படிக்கிறப்ப அதுலயே மூழ்கிடுவோம். அந்த காலத்து வாழ்க்கைய வாழற மாதிரி இருக்கும். அந்த காலத்து உணவு, நாகரீகம், பழக்கவழக்கங்கள் எல்லாம் தெரிஞ்சிக்கலாம். இன்னும் ஒன்றிப் போய் படிச்சா நம்லயே மறந்து அந்த காலத்துக்கு போய்டுவோங்க”
“அதனால தான் அந்த புத்தகங்களுக்கு இப்போவும் அவ்ளோ வரவேற்பு”
இருவரும் பேசிக்கொண்டே அடுத்த புத்தக கடைக்குள் நுழைந்தனர். விகடன் பிரசுரம் செய்த புத்தகங்கள் இருந்தன.
“வேல்பாரி ஒரு பாகம் ஸ்டார்ட் பண்ணேன் அப்புறம் படிக்க முடில.. நல்ல புக். ரசிச்சு ரசிச்சு எழுதிருப்பாரு.. பாரி ஓட குணம் அவ்ளோ நல்லா காட்டிருப்பாரு.. மனைவி ஆதினி, மகள்கள் அங்கவை, சங்கவை.. இன்னும் வர எல்லா பெயரும் கதையும் அவ்ளோ நல்லா இருக்கும். ராதா அண்ணிகிட்ட இருக்கு. வாங்கி படிக்கணும்”
“இங்கயே வாங்கிக்கோ அதனாலென்ன”
“அதான் நம்பகிட்டயே இருக்கே. வேற புக் எடுத்துக்கிறேன்” என்று கூறிய கவிதா அங்கேயே வேறொரு புத்தகம் தேடினாள்
“ஏழாம் சுவை எடுத்துக்கிறேன்”
“ஏழாம் சுவையா”
“மருத்துவர் கு.சிவராமன் எழுதுனது. அவர் பேசுறதெல்லாம் கேட்ருக்கேன் உணவுமுறை பத்தி நிறைய நல்ல விஷயம் சொல்லுவார்” என்று கவிதா கூற கவின் அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு அடுத்த கடைக்குள் புகுந்தான் தன் மனைவியுடன்.
வாழ்க்கை வரலாறு புத்தங்கள் இருந்தன.
“யாரோட வாழ்க்கை வரலாறாவது தெரிஞ்சிக்கணுமா?”
“விவேகானந்தர் காந்தி நேரு அப்துல்கலாம் இப்படி பல பேரோட வாழ்க்கை வரலாறு நமக்கு ஸ்கூல்லயே பாடத்துல வந்துடுது. அவங்களோடதே முழுசா இன்னொரு டைம் கூட படிக்கலாம்”
“நானும் படிச்சிருக்கேன். ஆனா நிஜவாழ்க்கையில நம்ம அவங்கள பாத்து எதும் மாத்திக்க மாட்டிக்கிறோமே கவிதா”
“அதும் கரெக்ட் தான். ஆனா ஏதோ ஒரு மாற்றம் தானா எழும். நடிகர் சோ இருக்காருல்ல அவரோட வாழ்க்கை வரலாறு படிச்சிட்டு நான் வியந்துட்டேன். சினிமாவில் காமெடி நடிகர் நிஜத்தில் அவர் ஒரு வழக்கறிஞர், துக்ளக் ஆசிரியர் அரசியல் ஜாம்பவான் அவரு”
“அப்படியா.. எனக்கும் அவர பழைய படங்கள்ல காமெடியென் அவ்ளோதான் தெரியும்”
“ஆனா நிஜத்தில அவரு நல்ல சிந்தனையாளர் தொலைநோக்கு பார்வையாளர்” என கவிதா கூறுவதை ஆவலாக கேட்டுக் கொண்டிருந்தார் கவின்
“இன்னும் விளையாட்டு வீரர்கள் வரலாறு.. யோகிங்க வரலாறு அப்படி நிறைய இருக்கு.. அத பத்தி எனக்கும் முழுசா தெரில.. தேடி பாக்கணும்”
“பாப்போம்.. இங்க பாரு கவிதா சாகித்ய அகாதமி விருது பெற்ற புத்தகங்கள்”
“சில நேரங்களில் சில மனிதர்கள், கள்ளிக்காட்டு இதிகாசம், சஞ்சாரம்.. இந்த மூணு அவார்ட் வின்னிங் புக்கும் நான் படிச்சிருக்கேன். எல்லாமே கதை விவரிச்ச விதம் ரொம்ப சூப்பரா இருக்கும். ஆனா சோகமான எண்டிங்”
“அப்போதான ரியாலிட்டி சொல்ல முடியும். அதனாலயா இருக்கலாம்”
“இருக்கலாம். ஜெயகாந்தன் ஓட ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ ரொம்ப பாசிட்டிவ் வைப். அவரோட பாயிண்ட் ஆப் வியூ ரொம்ப நல்லாருக்கும். அவர் சிந்தனை வித்தியாசமா இருக்கும்”
“பரவலயே நீ அவார்ட் வின்னிங் புக்லாம் படிச்சிற்க. இந்த மாதிரி ஒரு எழுத்தாளர் பத்தி பேசுற.. நான் கூட கண்மணி பெண்மணி குங்குமம் குமுதம் படிப்பேன்னு நினைச்சேன்”
“ஹாஹா. அப்படியும் சொல்லலாம். கண்மணில எவ்ளோ நல்ல நாவல் வரும் தெரியுமா. அதெல்லாம் வாங்கிட்டா பிரியாணி வீட்ல வாங்கி வெச்சிட்டு சாப்பிட வெயிட் பண்ற மாதிரி ஆர்வமா படிப்பேன். குங்குமம் தோழில எவ்ளோ இன்ஸ்பைரிங் விஷயம்லாம் இருக்கு தெரியுமா”
“இருக்கட்டும் இருக்கட்டும் கவிதா. நல்ல விஷயம் எங்க இருந்து வேணாலும் வரும். சின்னது பெருசுனு ஒன்னும் இல்லை. ஒத்துக்கிறேன். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணு பிடிக்கும்”
“ஆமா.. ஒவ்வொருத்தருக்கு ஒன்னொன்னு பிடிக்கும். படம் பாக்கிற மாதிரி தான். சிலருக்கு காதல் படம், சிலருக்கு சண்டை படம், சிலருக்கு கதை உள்ள படம்”
“ஆமா கவிதா”
“ரமணிச்சந்திரன் நாவல்லாம் அவ்ளோ சாப்ட் ரொமான்ஸ். ஒரு காதலன், ஒரு கணவன் எப்படி மனைவிய ரசிக்கணும், எப்படி மதிக்கணும், எப்படி காதலிக்கணும், எப்படி பாதுகாக்கணும் உருகி உருகி எழுதிற்பாங்க”
“அப்படியே கணவன் டாபிக்குள்ள போறியே.. லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு இங்க புட் கோர்ட்ல எதாவது சாப்பிட்டு வந்து பாக்கலாமா?” என்று நக்கலாக கேட்டான் கவின்
“உங்கள எதாவது சொல்லுவன்னு பயமோ..” என்று சிரித்துக் கொண்டே கூறினாள் கவிதா
கவிதாவும் கவினும் பழரசங்களையும் சற்று நொறுக்கு தீனிகளையும் உண்டுவிட்டு மீண்டும் புத்தகக் கடைக்குள் நுழைந்தனர்
இப்பொழுது அவர்கள் வரும்பொழுது சில பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். பள்ளி சார்பில் அவர்களே அழைத்து வந்திருந்தனர்.
“பரவால்ல கவிதா. இப்போ ஸ்கூல்ஸ் இந்த மாதிரி கூட்டிட்டு வரனால அவங்களுக்கும் பள்ளி படிப்பு தவிர வெளி உலகமும் தெரிய வரும்”
“பள்ளி தோழிகளோட இப்படி வெளிய வந்து புக் ஷோ பாக்கிறதெல்லாம் எவ்ளோ பெரிய சந்தோசம்”
சற்று நேரம் அவர்களோடே கவினும் கவிதாவும் சென்றனர். சிறுவர்களுக்கான புத்தங்கள் கூட அங்கு நிறைய இருந்தன.
“பசங்க படிக்கிற மாதிரி கூட நிறைய புக் இருக்கும் போல”
“மரியாதை ராமன், அக்பர், பீர்பால், தெனாலிராமன் கதைகள் இப்படிலாம் கூட அவங்க வாங்கி படிக்கலாம். கதை நீதி அப்படிலாம் இருக்கும்ல கவிதா”
“ஆமாங்க… கலரிங் புக், ஆக்டிவிட்டி புக், சுடோகோ புக் அப்படிலாம் கூட இருக்கு”
“இவங்க மோட்டிவேஷன் புக்ஸ் கூட படிக்கலாம்”
இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும் பொழுது அந்த மாணவர்களின் ஆசிரியர் உரக்க பேசிக் கொண்டிருந்தார்.
“ஒரே லைன்ல போங்க.. ரெண்டு பேரு மூணு பேரு சேர்ந்து கூட ஷேர் பண்ணி ரெண்டு மூணு புக் வாங்கிகோங்க. படிச்சிட்டு மாத்தி படிங்க”
“ஓகே சார்” மாணவர்கள் கூட்டம் ஒரே குரலில் கூறினர்
“என்னென்ன புக்ஸ் இருக்குன்னு பாத்துக்கோங்க.. அப்பா அம்மா கூட்டிட்டு இன்னொரு முறை கூட வாங்க வீட்டுக்கு போய்ட்டு சொல்லுங்க”
கடமைக்கு மாணவர்களை கூட்டிக் கொண்டு வந்தோம் என்று மட்டும் இல்லாமல் அவர்களுக்கு அறிவுரைகள் கூறி ஊக்கமளித்து கொண்டிருந்தார் ஆசிரியர்.
“சுதா மூர்த்தி எவ்ளோ புக்ஸ் எழுதிருக்காங்க கவிதா.. நானே இப்போதான் பாக்கறேன்”
“நானும் அவங்க ஸ்பீச் கேட்ருக்கேன். அவங்க புக்ஸ் இப்போதான் பாக்கறேன்”
“இந்த கடையில நிறைய பேரோட மோட்டிவேஷன் புக் இருக்கு.. ‘ஆட்டாமிக் ஹாபிட்ஸ்’, ‘பவர் ஆப் சப்கான்சியஸ் மைண்ட்’ ‘யூ கேன் வின்’ “
“இதெல்லாம் நல்லாதான் இருக்கும். ஆனா நம்ம படிக்கும் போது பவரா இருக்கும். அப்புறம் புக் மூடி வெச்சதும் மறந்துடுவோம்”
“ஆமா கவிதா.. நிறைய மறந்தட்றோம்.. ஒன்னு இரண்டு மாற்றம் வந்தா கூட போதும்”
“இன்னொரு விஷயம் என்னென்னா படிக்கும் போது மனசு சந்தோசமா இருக்கும். கதையே இல்லாத புக் படிக்கும் போது கூட அது கொண்டு போன விதம் நல்லாருக்கும். சிலிர்க்க வைக்கும்.. பூரிக்க வைக்கும்.. அழ வைக்கும்.. அதெல்லாம் ஆனந்தம்”
“கேக்கும்போதே எனக்கும் அந்த உணர்வு வருது.. சரி இன்னும் இருக்கா அவ்ளோதானா உன் புத்தக புராணம்”
“இன்னும் இங்கிலிஷ் நாவல் பத்தி பேசல.. சுஜாதா சிறுகதைகள் பத்தி பேசல… இன்னும் எத்தனையோ நல்ல நல்ல எழுத்தாளர்கள் ஒரு புத்தகம் எழுதனவங்களாம் இருக்காங்க.. ஆன்மீக அதிசயங்கள் பத்தின புக்லாம் இருக்கு.. அதெல்லாம் பேசல.. புத்தங்கள பத்தி பேச எவ்வளவோ இருக்கு”
“போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது” என்று கவின் கூறியதும் இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.
“எவ்வளோ பேசினாலும் கற்றது கையளவு கல்லாதது உலகளவு”
“ஆமா கவி.. கத்துக்கிறது நிறுத்தவே கூடாது.. படிச்சிட்டே இருக்கணும் “
இருவரும் இப்படி பேசிகொண்டிருக்கும் பொழுது அவர்கள் முன்னே இருந்த இரு சிறுமிகள் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
“என்னாச்சி ஏன் சண்டை போட்டுக்கிறீங்க” கவிதா அவர்களிடம் கேட்டாள்
“பாருங்க அக்கா.. நான் அந்த கடைல ஒரு புக் வாங்கினேன். இவ என்கூட ஷேர் பண்ணிக்கிறேன் சொன்னதால.. இப்போ இந்த புக் எனக்கு பிடிச்சிருக்கு. வாங்க சொன்னா வாங்க மாட்டிக்கிறா.. என்கிட்ட அமௌன்ட்டும் இல்லை”
“ஏன் மா நீயும் ஒரு புக் வாங்கி ரெண்டு பேரும் ஷேர் பண்ணி படிக்கலாம்ல”
“இல்லை கா.. இந்த புக்கு ஏன் நூறு ரூபாய் போட்டு வாங்கணும்.. நெட்ல போட்டு போன்லயே பாத்துக்கலாமே”
“போன்ல வரலாம். இப்போ உன் கைல காசு இருந்தா புத்தகம் வாங்கு.. தொட்டு படிக்கும் போது வர முழுமையே வேற.. புத்தகம் வாங்க கணக்கு பாக்கக் கூடாது. காசு இருந்தா நிறைய வாங்கி வைங்க.. பாரதியார் தன் வறுமைலையும் புத்தகம் வாங்க செலவு பண்ணி நிறைய படிச்சார்.. அதனால தான் அவரால ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா’ ன்னு சொல்ல முடிஞ்சது. புத்தகம்லாம் வாங்கி வீட்ல வை.. எப்போனாலும் கை கொடுக்கும். நண்பர்களோட நல்ல புத்தகம் பகிர்ந்துகோங்க” என்று கவிதா கூறவும், அந்த மாணவி அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டாள்
“பரவால்ல கவிதா.. நீ மனசுல பட்டத அந்த பொண்ணுங்ககிட்ட சொல்லிட்ட”
“நான் சொன்னதால அந்த பொண்ணோ அவங்க கூட இருக்க யாராவது ஒருத்தரோ பயன் பெற்றாலும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி” என்று கூறிய கவிதாவை பெருமையோடு பார்த்தான் கவின்
இருவரும் கை நிறைய புத்தகங்களோடும் மனம் நிறைய திருப்தியோடும் வெளியேறினர்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings