2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
(உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதை)
சென்னையின் அந்தப் பிரபல அரசு மருத்துவமனை பரபரப்பாக இருந்தது. கொடுமையாய் வந்த அந்த பெரும் தொற்றால் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. மேற்கொண்டு வந்த நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் ஆம்புலன்ஸ் வரிசையாக வெளியே காத்திருந்தன.
வெளியே ஆங்காங்கே நின்றிருந்த உறவினர்களை ஒன்று சேர்த்து எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். இன்ஸ்பெக்டர் நிரஞ்சன் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருந்தார். அவர் மனைவியை ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்த நிலையில், கூட இருந்து அவளை கவனிக்க முடியாமல் கடமை அவரைக் கட்டிப் போட்டது.
பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் இருக்க அவளை கவனித்துக் கொள்ள கூட ஆள் கிடையாது. அதனால் பிரைவேட்டாக ஒரு நர்ஸை ஏற்பாடு பண்ணி இருந்தார்.
“சார்! ஆஸ்பத்திரியிலிருந்து போன்…இந்த நர்ஸ்ஸம்மா பேசுறாங்க” கான்ஸ்டபிள் செல்வராஜ் இன்ஸ்பெக்டர் நிரஞ்சனிடம் தெரிவிக்க.
“செல்வராஜ் !இப்ப போன் பேச நேரமில்லை… நிலைமை கட்டுக்கடங்காமல் போயிட்டிருக்கு… நாம சரியான ஆக்க்ஷன் எடுக்கலைன்னா நிலைமை கைமீறிப் போயிடும்”
அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோய்த்தொற்றை ஆராய வந்த அமைச்சரை, கருப்புக்கொடி காண்பித்து எதிர்க்கட்சியினர் சிலர் ஆர்ப்பாட்டம் செய்ய, நிலைமை சற்று பதட்டமாக இருந்தது.
எரிச்சலான அமைச்சர், “இப்ப எதுக்குயா இவங்க போராட்டம் பண்ணிகிட்டிருக்காங்க? போராட்டம் பண்ற நேரமா” என்று கடுகடுத்தார்.
“சார்! வெளியில ஆம்புலன்ஸில் நிறைய பேஷண்ட் சீரியஸான நிலைமைல காத்துகிட்டிருக்காங்க. ஆக்சிஜன் தட்டுப்பாடு வேற.. எல்லா படுக்கைகளும் நிரம்பிவிட்டன.. அதையே பிரச்சனையாகி போராட்டம் பண்றாங்க”
“ஊரடங்குல இருக்குற நேரத்துல எப்படி போராட்டம் பண்ணுவாங்க? யார் அனுமதி கொடுத்தா? உடனே எல்லாத்தையும் கலைந்து போகச் சொல்லுங்க.. கைது பண்ணுவோம்னு சொல்லுங்க ..”
“சார்! புத்திசாலித்தனமா எதிர்க்கட்சிகாரங்க கூட்டமா நிக்காம தள்ளி தள்ளி அங்கங்கே நின்னுகிட்டு போராட்டம் பண்றாங்க..ஜனங்களும் கொதிப்பா இருக்கிற இந்த நேரத்துல நாம ஏதாவது நடவடிக்கை எடுத்தா பொதுமக்களும் சேர்ந்துக்குவாங்க”
“ஊரடங்கு போட்டா உள்ளே இருக்கனும். ஒருநாள் தளர்த்தினா…உடனே நகை கடைக்கும், துணிக்கடைக்கும் ஓடிப் போய் நிற்கிறாங்க ….அப்புறம் அம்மா ஆத்தான்னு அழ வேண்டியது… நாம மட்டும் இப்படி ஒரு நோய்தொற்றை எதிர்பார்த்தோமோ… நம்மால் என்ன முடியுமோ அதை தான் செய்ய முடியும்.. அதுதான் செஞ்சுகிட்டு இருக்கோம்… எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்காம போராடிகிட்டு, மக்களை தூண்டி விட்டுகிட்டு இருக்காங்க. நீங்க என்னத்த வேடிக்கை பார்த்துகிட்ருக்கீங்க இன்ஸ்பெக்டர்…. போய் அவங்ககிட்ட பேசுங்க! ஒன்னு கலைஞ்சு போக சொல்லுங்க… இல்லைன்னா இலேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைங்க….” என்றபடி எரிச்சலோடு காரில் ஏறிச் சென்றார் அமைச்சர்.
“சார்! அம்மா ஆஸ்பத்திரிலிருந்து கூப்பிடுறாங்க…” செல்வராஜ் மாதிரி பழையபடி நினைவுபடுத்த
“என்ன என்ன செய்ய சொல்றீங்க செல்வராஜ்? அமைச்சர் ஒரு பக்கம் கத்திட்டு போறாரு.. ஆம்புலன்ஸில நோயாளிங்க உயிருக்கு போராடிகிட்டிருக்காங்க… எதிர்க்கட்சிகள் பிரச்சினையை ஊதிப் பெரிசாக்கிகிட்டிருக்காங்க. இந்த நேரத்துல நாம் இங்கே இல்லைன்னா பிரச்சனையாயிடும். மத்தத விடுங்க! ஆம்புலன்ஸில் இருக்கிற பேஷண்ட்டை நாம கவனிக்கனுமில்லையா.. எந்த ஆஸ்பத்திரில இடமிருக்குன்னு கேளுங்க… எங்கேயாவது படுக்கை காலியா இருக்கான்னு கேட்டு இவங்கள சேக்குறதுக்கு ஏற்பாடு பண்ணனும்…” என்றார் பதட்டத்தோடு.
எதிர்க்கட்சிகாரங்களை கூப்பிட்டவர்… “எந்தெந்த ஹாஸ்பிடல்ல இடமிருக்குன்னு விசாரிச்சு சொல்றேன், நீங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஆம்புலன்ஸில் இருக்கிறவங்க பொறுப்பெடுத்து அங்க கூட்டிட்டு போய் அட்மிட் பண்ணுங்க”
“ஏன் நீங்க போலீஸ் என்னத்துக்கு இருக்கிறீங்க?”
“இங்க பாருங்க நாங்க செய்ய வேண்டியதை அவசியம் செய்வோம். நீங்க கத்திக்கிட்டு இருக்குறதை விட அவங்களுக்கு உதவி செஞ்சா பெரிய புண்ணியம்” என்றார் இன்ஸ்பெக்டர் நிரஞ்சன் தன்மையாக.
அடுத்த பத்து நிமிஷத்துல கூட்டம் காலியாக… “பாத்திங்களா என்ன ஆச்சுன்னு… பேஷண்ட்க்கு உதவி செய்யனும்னு சொன்னதும் தானே ஓடிட்டாங்க. உயிர் மேல அவ்வளவு பயம்” என்று சிரித்தார்.
பிறகு ஆஸ்பத்திரி டீன்னிடம் பேசி, ஆம்புலன்ஸில் இருப்பவர்களை உள்ளே அனுமதித்து முடிக்க இரண்டு மணி நேரம் ஆனது. மருத்துவமனை நிரம்பி வழியும் போது, அவர்களும் தான் என்ன செய்வார்கள் என்று நினைத்துக்கொண்டார்.
எல்லாம் முடித்து, “செல்வராஜ், அம்மா கூப்பிட்டுகிட்டே இருந்தா… அம்மாக்கு போன் போடுங்க” என்றார்.
“சார்! இனிமே அவசரப் பட வேண்டிய தேவையில்லை நாம நேரா அம்மா அட்மிட் ஆகியிருக்கிற ஆஸ்பத்திரிக்கு போவோம்” என்றார் செல்வராஜ் கண்ணீரோடு.
“என்னாச்சு செல்வராஜ்?”
“எல்லாம் முடிஞ்சிடுச்சு சார் …நீங்க உடனே போயிருந்தா.. கடைசியில அவங்க என்ன பேசனும் நினைச்சாங்களோ… அதை கேட்டிருக்கலாம்.. அவங்க கூட இருந்திருக்கலாம்… அவங்களோட கடைசி நிமிஷத்துல உங்களால அவங்க கூட இருக்க முடியாம போயிடுச்சு”
“போலீஸ்காரனுக்கு குடும்பம்ன்னு இருக்கக் கூடாது செல்வராஜ்! பாவம் அவ… கடைசி நேரத்தில் என்னை பார்க்கனும்னு, பேசனும்னு, நினைச்சிருப்பா… அவ என்னை புரிஞ்சிகிட்டவ… கடமை தான் முக்கியம்னு அடிக்கடி சொல்லுவா… ஏன்னா.. அவ ஒரு போலீஸ் அதிகாரியோட பொண்ணு .. நிச்சயம் என்னை மன்னிச்சிடுவா… இல்லையா செல்வராஜ்…” என்று கூறியவர், மனைவியை நினைத்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.
என்னதான் காக்கிச்சட்டை விரைப்பாக இருந்தாலும், உள்ளிருக்கும் மனது கல்லில்லையே.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings