2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
சென்னையில் இருந்து பல லட்சம் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட படை எடுத்தனர் .இப்படித் தன்னுடைய கிராமத்தில் பண்டிகை கொண்டாட வந்தவன் தான் ‘கார்த்திக்’.
எப்பொழுதும் செல்போன் அலாரம் அடித்துக் கண் விழிப்பவன்… கிராமத்தில் முருங்கை மரத்தில் இரவு அடைந்த சேவலின் கூவலுக்குக் கண்விழித்தான் ….இங்கே ஒரு சேவல் கூவ …அதற்கு எசப்பாட்டு போலப் பக்கத்துக்குத் தோட்டத்துக்காரர்களின் சேவல்கள் கூவின…மெல்ல பொழுதும் விடிந்தது.
வீட்டிலிருந்து வெளியே வந்தவனுக்குப் பனியும் குளிரும் உடலை நடுங்கச் செய்தது ….கார்த்திக்கின் அப்பாவோ தலையைச் சுற்றி ஒரு துண்டை சுற்றிக்கொண்டு …மாட்டுச் சாணத்தை அள்ளிக் கொண்டிருந்தார் …அவனின் அம்மாவோ வாசலுக்குச் சாணம் தெளித்துக் கொண்டிருந்தார்…
“நம்ம ஆபீஸ் ஏசியை விடக் குளிரா இருக்கு …இவங்களுக்குக் குளிரலையா…?! அவுங்க பாட்டுக்கு வேலை செஞ்சிட்டு இருக்காங்க…?’’ என்று எண்ணிவாறு…. நின்றவனிடன்… அவன் அம்மா … “கார்த்தி மூஞ்சி கழுவிட்டு பல்லு வெளக்கிட்டு வா ….டீ வைக்கிறேன்…”
“அம்மா பிரஸ் எடுத்துட்டு வர மறந்துட்டேன் …ஊருக்குள் இருக்கிற கடையில பிரஸ் இருக்குமா?”
“இருக்கும் ….கடக்காரன் இப்ப எங்க தொறக்க போறான் …10 மணியாகும் …அந்த வேப்பங்குச்சி உடைச்சி வெளக்கிட்டு வாடா”
பல்லு வௌக்கி…குளித்து முடித்து வந்த கார்த்திக்…சுடச் சுட இட்டிலி சட்டினி அம்மா தட்டில் போட்டு … “கார்த்தி …சுந்தரேசன் மாமா ஆடு வெட்டறதா சொன்னார்….பங்கு கறி வரும் ….அது வந்து சமைக்கிறதுக்கு நேரமாகும் …இப்போ இத சாப்பிடு..”
“சரிமா …அப்பா எங்க? சாப்பிட்டாரா …?”
“அவரு எங்க இப்ப சாப்பிடுவாரு ….மாடெல்லாம் மேய கொண்டு போய்க் காட்டிட்டு ….கறந்த பால் சொசைட்டியில ஊத்திட்டு தான் வருவாரு?”
“வயசாகுது… அமைதியா இருங்கன்னா கேட்க மாட்டீங்க …”
“எங்களால சும்மா இருக்க முடியாது …நீ சாப்பிட்டு …இந்த பாத்திரத்துல அதிரசம் முறுக்கு வச்சி இருக்கேன் …கொஞ்சம் போய்…“காந்தா” பாட்டிகிட்ட கொடுத்துட்டு வந்திடு.”
“அம்மா …அவங்க நம்ம தாத்தாவோட தம்பியோட மனைவிதானே …?”
“அடேய் …உனக்குச் சின்னப்பாட்டி டா”
“ஆ…மா… இரண்டு குடும்பத்துக்கும் பங்காளி சண்டை தானே ?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது மகனே …எங்க மாமியாரை விட அவுங்க என்ன நல்ல பாத்துக்கிட்டவங்க… உங்க தாத்தா காலத்துச் சமாச்சாரம் நமக்கு எதுக்கு … இந்தா போய்க் குடுத்துட்டு வா ….பாவம் அந்தப் பாட்டி தனியாத்தான் இருக்கு”
“அவுங்க பசங்க எல்லாம் …?”
“இதுக்குதான் அடிக்கடி ஊருக்கு வரணும் ..உறவுக்காரங்க யாரு யாருன்னாவது தெரிஞ்சி வச்சுக்கணும்…போய்க் கொடுத்துத்துட்டு வா…அப்புறம் சொல்றேன்.”
காந்தா பாட்டியின் குடிசை முன்னிருந்த…நெல்லி மரத்தடியில் அம்மியில் ஏதோ அரைத்துக் கொண்டிருந்தார்….
கார்த்திக்கின் வண்டி சத்தம் கேட்டு… அரைத்துக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு கையை அருகிலிருக்கும் பாத்திரத்துத் தண்ணியில் கழுவிவிட்டு புடவையில் துடைத்துக் கொண்டு எழுந்து வந்தவர்…. “எப்பா ….நீ கார்த்தித் தானே …சின்ன புள்ளையில பார்த்தது …வா ராசா…எப்ப வந்த…? நல்லா இருக்கியா ..?”
“நல்ல இருக்கேன் பாட்டி ..நீங்க எப்படி இருக்கீங்க?”
“எனக்கென்ன குத்துக்கல்லாட்டம் இருக்கேனே …அந்த எமதர்ம ராஜன் இன்னும் என்ன பார்க்க வரல…”
“என்ன பாட்டி ..இஞ்சி பூண்டு அரைக்கிறீங்களா…?…கறி கொழம்பா ?”
“ஆமாய்யா….நீ சாப்பிட்டு தான் போகணும்?”
“யாரு கறி எடுத்துட்டு வருவாங்க?”
“அது… ‘தீபாவளி சீட்டு’ப் போட்டிருக்கேன் …கறி வரும்”
“அதென்ன பாட்டி தீபாவளி சீட்டு ?!”
“அது கண்ணு …மாசாமாசம் 100 ரூபாய் ஒரு வருசத்துக்குக் காட்டினா…தீபாவளி சமயத்துல 1 கிலோ இனிப்பு ,1 கிலோகாரம் ,1 கிலோ ஆட்டுக்கறி அப்புறம் ஏதாவது எவர்சில்வர் பாத்திரம் கொடுப்பாங்க ….”
“ஓ…அப்படியா ?”
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே ஓட்டமாக வந்தாள் “பட்டம்மா”
“ஏய் பாட்டி …விசயம் தெரியாம கறிக்கு மாசாலா அரைக்கிறயா …?”
“என்னடி பட்டம்மா சொல்ற …?!”
“நாம தீபாவளி சீட்டு போட்ட துரசாமி மகன் ஊரவிட்டே ஓடிட்டானாம்… எல்லோரும் போலீஸ் ஸ்டேஷன் போயிருக்காங்க…நீ மாசால் அரைக்கிற”
“எனக்கென்னடி தெரியும் நீ ஏதாவது வந்து சொன்னாதான் ஆச்சு …ம்….பாவி நாலு வருசமா ஒழுங்கா… எல்லாம்…எல்லோருக்கும் கொடுத்துட்டு தானே இருந்தான்…என்ன கேடு வந்துச்சு அவனுக்கு?!”
கார்த்திப் பேச ஆரம்பிச்சான் … “பாட்டி …இந்த மாதிரி நிறைய ஏமாத்து வேலை நடக்குது ….ஆரம்பத்துல நிறையப் பொருள் கொடுத்து மக்களைக் கவர்ந்து விடுவாங்க …கொஞ்ச காலம் போனதும் மொத்தமா சுருட்டிட்டுப் போயிடுவாங்க.”
கார்திக்கின் அலைபேசியை எடுத்து அவனுடைய அம்மாவை அழைத்தான் ..
“அம்மா …சாப்பாடு ஆச்சா?”
“இப்பத்தானடா இட்லி சாப்பிட்டு போன அதுக்குள்ள பசியெடுத்துடுச்சா? இதேதான்…மாமா கறி கொண்டுவந்து கொடுத்துட்டு போறாரு…இன்னும் இஞ்சி பூண்டு கூட உரிக்கல”
“சரி சரி நீ உரிக்காத …இங்க பாட்டி அரைச்ச இஞ்சி பூண்டே இருக்குது …இந்த தீபாவளி பாட்டியோடு சேர்ந்து கொண்டாடுவோம்”
“…….”
“பாட்டி அந்த மாசாலாவை எடுத்துட்டு வா …நாம நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று சொன்னான்.
ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு, இன்னொரு பாத்திரத்தில் கறிக்கு அரைத்த மசாலாவை வாழையிலை போட்டு மூடி எடுத்துக்கொண்டு பேரனுடன் கிளம்பினார் பாட்டி.
இந்தாண்டு பழைய பாட்டியுடன் புதிய தீபாவளி கொண்டாட புறப்பட்டான் கார்த்திக்.
(நிறைவு)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings