2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பஸ்ஸை விட்டு இறங்கி குமாரின் வீட்டை நோக்கி நடக்கும் போது உள்ளுக்குள் அந்த உறுத்தல் இருந்து கொண்டேயிருந்தது சங்கருக்கு.
“குமார் பணம் குடுப்பானா?… இல்லை… அவனும் மத்தவங்க மாதிரி இல்லேன்னு கையை விரிச்சிடுவானா?”
குமார் அவனுடைய சக ஊழியன்தான். இருவரும் கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக ஒரே அலுவலகத்தில் ஒன்றாய் பணி புரிவதோடு நல்ல புரிந்துணர்வுடைய நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர்.
அதன் காரணமாகத்தானோ என்னவோ சங்கரால் அலுவலகத்திலுள்ள மற்றவர்களிடம் எளிதாகக் கேட்பது போல் குமாரிடம் கடன் கேட்க வாய் வருவதில்லை. கேட்டால் நிச்சயம் தருவான் என்பதை உணர்ந்திருந்த போதும் இதுவரையில் கேட்டதில்லை.
அந்த விரதத்திற்கு இன்று பங்கம் ஏற்பட்டு விட்டது. மிக..மிக அவசரமாக ஐயாயிரம் ரூபாய் தேவைப்பட குமாரைத் தவிர அனைவரிடத்திலும் கேட்டு விட்டான். மாதக் கடைசி என்ற காரணத்தினால் எதிர்மறை பதிலே எக்காளமாய் வந்து விழுந்தது.
“என்ன செய்யலாம்?… குமாரிடம் கேட்டு விடலாமா?….” நீண்ட நெடிய தயக்கத்திற்குப் பின் கேட்டே விட்டான்.
“அ…ய்…யா….யி….ர…மா?” என்று இழுத்த குமார் சில நிமிட மௌனத்திற்குப் பிறகு “ம்…சாயந்திரமா வீட்டுப் பக்கம் வா… பார்க்கலாம்!”
“பார்க்கலாம்” என்று சொன்ன வார்த்தையே மிகப் பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தி விட கவலையிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு வந்தான் சங்கர்.
ஆனால் மாலை நெருங்க…நெருங்க..ஒரு பதட்டம் அவனையுமறியாமல் அவன் மீது படர்ந்தது. “பார்க்கலாம்… என்றுதானே சொன்னான்… அதை எப்படி உறுதியாய் எடுத்துக் கொள்ள முடியும்?”
யோசனையுடன் நடந்து குமாரின் வீட்டை அடைந்த சங்கர் நாசூக்காய் கதவைத் தட்டினான். வந்து திறந்தவள் குமாரின் மனைவி நீலா.
“வாங்க சங்கர் அண்ணா…சௌக்கியமா?… என்ன வீட்டுப் பக்கமே வர மாட்டேங்கறீங்க?… வீட்டுல சம்சாரம்… குழந்தைக எல்லாரும் நல்லா இருக்காங்களா?” முக மலர்ச்சியுடன் வரவேற்றவளிடம்
“எல்லாரும்…நல்லாயிருக்காங்கம்மா…நீங்க எப்படியிருக்கீங்க?”
“ம்… நல்லாயிருக்கோம்ண்ணா!” என்றவள் உள்அறையை நோக்கித் திரும்பி “என்னங்க… சங்கர் அண்ணா வந்திருக்காரு!” என்றாள் கத்தலாய்.
லுங்கியை அவிழ்த்துக் கட்டியபடி வந்த குமார் முகத்தில் ஒரு அவஸ்தை தெரிந்தது. சங்கருக்கு அது வேறு விதமான கவலையைக் கொடுத்தது.
“என்ன குமார்… முகமெல்லாம் வாடியிருக்கு!….என்னாச்சு?…உடம்பு கிடம்பு சரியில்லையா?”
“ப்ச்… அதெல்லாம் ஒண்ணுமில்லை… லேசாய்த் தலைவலி…அதான் வந்ததுமே படுத்திட்டேன்!”
“அப்பாடா!” என்றிருந்தது சங்கருக்கு.
தொடர்ந்து அவர;களிருவரும் எதையெதையோ பேசினர். கல்லுhரி அட்மிஷன்… மின் வெட்டு… கிரானைட்… ஈமு கோழி… என்று எல்லாவற்றைப் பற்றியும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிந்து மேய்ந்த குமார், எந்த இடத்திலும் சங்கர் கேட்டிருந்த ஐயாயிரத்தைப் பற்றிக் குறிப்பிடவேயில்லை.
“ஒருவேளை…மறந்திருப்பானோ?”
இடையில் புகுந்த குமாரின் மனைவி, “சிநேகிதங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சீங்கன்னா… உலகத்தையே உள்ளங்கைல வெச்சு உருட்டிப் பார்ப்பீங்களே!… சரி… சரி… எந்திரிச்சு வாங்க… டிபன் ரெடியாயிருக்கு!” என்றாள்.
“நோ..நோ.. வேண்டாம்மா…. வீட்டுல சம்சாரம் எனக்காக சாப்பிடாம காத்திட்டிருப்பா…” இல்லாதவொன்றைச் சொல்லி நழுவப் பார்த்தான் சங்கர்.
“ம்ஹூம்… அதெல்லாம் முடியாது… ஒவ்வொரு தடவையும் இப்படிச் சொல்லியே தப்பிச்சுப் போயிடறீங்க!… இந்தத் தடவை விட மாட்டேன்” என்றவள் சற்று தாழ்ந்த குரலில், “சங்கர் அண்ணா… பயப்படாதீங்க… நான் செஞ்ச டிபன் நல்லாவே இருக்கும்!” சொல்லி விட்டுச் சிரித்தாள்.
மேற்கொண்டு தவிர்க்க முடியாத சங்கர் சாப்பிட அமர்ந்தான். “பயலே!… கடன் வாங்க வந்தி;ட்டு… அந்த வேலையைப் பார்க்காம இப்படி சாப்பிட உட்கார்ந்திருக்கியே!… இது உனக்கே நல்லாயிருக்கா?” உள் மனது சபித்தது.
சாப்பிடும் போதாவது குமார் அந்த ஐயாயிரத்தைப் பற்றிப் பேசுவான் என்று எதிர்பார்த்த சங்கர் ஏமாந்து போனான். டிபன் முடித்து மீண்டும் ஹாலுக்கு வந்தமர்ந்து காபி சாப்பிடும் போதும் குமார் அதைப் பற்றி வாயே திறக்கவில்லை.
“ஒருவேளை நானே கேட்கணும்னு எதிர்பார்க்கறானோ?… இல்லை… பணம் ஆகவில்லை” என்று சொல்ல முடியாமல் இப்படி எதேதோ பண்ணி பாவ்லா காட்டறானோ?”
நீண்ட யோசனைக்குப் பிறகு, “சரி… வேற எங்காவது ஏற்பாடு பண்ணிக்கலாம்” என்கிற முடிவோடு, “ஓ.கே.குமார்… நான் கிளம்பறேன்..வந்து ரொம்ப நேரமாச்சு!” எழுந்தான்.
“சரி சங்கர்” என்ற குமார் சமையலறைப் பக்கம் பார்த்து, “நீலா…சங்கர் கிளம்பறாப்ல” என்றான் உரத்த குரலில்.
கைகளை சேலைத் தலைப்பில் துடைத்தவாறே வந்து அவளும் தலையாட்ட, மேட்சில் தோற்றுப் போன கிரிக்கெட் அணித்தலைவனைப் போல் இறுகிய முகத்துடன் தலையைக் குனிந்தபடி வெளியேறினான்.
பேருந்து நிலையத்தை அடைந்து காத்திருந்தவன் மனதில் அடைஅடையாய் சுய பச்சாதாபம் வந்து ஒட்டிக் கொள்ள, “ச்சே!…என்னுடைய இயலாமைக்கு எவனெவனோ வீட்டு வாசலெல்லாம் ஏற வேண்டியிருக்கு” தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தவன் கண்களில் சற்று தொலைவில் அரக்கப் பறக்க ஓடி வரும் குமார் பட,
“இவனெதுக்கு ஓடி வர்றான்?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசிக்க, அருகில் வந்த குமார், அவசரமாய் பாக்கெட்டில் கையை விட்டு பணக்கட்டை எடுத்து சங்கரிடம் நீட்டினான்.
“டேய்… சங்கர்… நீ பணம் வாங்கத்தான் வந்திருக்கேன்னு எனக்கு நல்லாவே ஞாபகமிருந்தது… ஆனாலும் என் மனைவி முன்னாலே அதை வெளிக்காட்டி உன்னோட கௌரவத்தையும்… மரியாதையையும்… குறைக்க நான் விரும்பலே!… இவன் நம்மகிட்டே கடன் வாங்க வந்தவன்தானே இவனுக்கென்ன உபசரணை வேண்டிக் கிடக்குனு என் மனைவி நினைச்சிடக் கூடாது பாரு?… அதான் அவ முன்னாடி அதைப் பத்தி பேசாம… அவளுக்குத் தெரியற மாதிரி உனக்கு பணத்தை குடுக்கலை!… டேய்… பணம் இன்னிக்கு வரும்… நாளைக்கு போகும்… கௌரவமும்… மரியாதையும்…போனா வராது… என்னால் நண்பனோட கௌரவத்தை நான் என்னிக்குமே விட்டுத் தரமாட்டேண்டா!”
அவன் பேசப் பேச சங்கரின் விழிகளில் நீர்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings