2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மாலை அலவலகத்திலிருந்து திரும்பி அறைக்குள் வந்த நிமிடத்திலிருந்தே கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன் என் அறை நண்பர்களிடம் புதிதாய் ஏற்பட்டிருந்த அந்த மாற்றத்தை. வழக்கமாய் நான் உள்ளே நுழைந்ததுமே ‘என்ன டிப்ஸ் திவாகர்… இன்னிக்கு வசூல் எக்கச்சக்கம் போலிருக்கு” என்று கிண்டலடிப்பவர்கள் இன்று நான் உள்ளே வந்ததுமே முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.
‘சரி… அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை போலிருக்கு… அதான்..‘உர்‘ரென்று இருக்கிறார்கள்” என நினைத்தபடி நான் என் வேலைகளில் மூழ்கினேன். ஆனால் தொடர்ந்து அவர்கள் அதே போக்கினை நீண்ட நேரம் கடைப்பிடிக்க நானே வலியப் போய் பேசினேன்.
‘என்னப்பா… என்னாச்சு உங்களுக்கெல்லாம்?… வழக்கமான கலகலப்பெல்லாம் காணாமப் போயி… இஞ்சி தின்ன ‘அது‘ மாதிரி இருக்கீங்களே” நான் அப்படிக் கேட்டதும் அவர்கள் மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
‘அட… பேச்சுக் கூட வரமாட்டேங்குது… ஊமை ஆயிட்டீங்களா எல்லாரும்?” சீண்டினேன்.
மூவரில் சற்று சீனியரான கனகசபாபதி பேசினார். ‘திவாகர்… எவ்வளவு சீக்கிரம் வேற ரூம் பார்க்க முடியுமோ… அவ்வளவு சீக்கிரம் பார்த்துட்டு… இந்த ரூமை காலி பண்ணிடு!… உனக்கும் எங்களுக்கும் ஒத்து வராது!”
அந்த மாதிரியான ஒரு நேரடித் தாக்குதலை சிறிதும் எதிர்பார்த்திராத நான் அதிர்ந்து போனேன். பேசவே நா எழவில்லை.
‘கனகு…அப்படியெல்லாம் சொன்னா இவன் ‘வேற ரூம் கெடைக்கலை” ன்னு சொல்லி;ட்டே ரொம்ப நாளைக்கு இங்கே டேரா அடிச்சிடுவான்… அதனால ‘வேற ரூம் கெடைச்சாலும் சரி… கெடைக்கா விட்டாலும் சரி… மூணு நாள்தான் டைம்… அதுக்குள்ளார வெளியேறிடணும்!”ன்னு கண்டிப்பா சொல்லிடு” இது ஆல்பர்ட்.
‘இப்ப இருந்தே உன்னோட பொருட்களையெல்லாம்… தனியாப் பிரிச்சு பேக் பண்ண ஆரம்பிச்சிடு!… அப்புறம் பேக்கிங்க்கு டைம் வேணும்ணு இருந்திடாதே!” இது தினேஷ்.
அவர்களின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாதவனாய் ‘ஏன்?…ஏன் இப்படி திடீர்னு என்னைக் கழட்டி விடத் தீர்மானிச்சீங்க?…. சொல்லுங்க… என் மேல என்ன தப்பு?”
மீண்டும் கனகசபாபதியே பேசினார் ‘த பாரு திவாகர்…. நாங்க முணு பேருமே… பட்டதாரிக… நல்ல கௌரவமான உத்தியோகத்துல இருக்கறவங்க!…. நான் பேங்க்ல ஒர்க் பண்றேன்… இந்த ஆல்பர்ட்… எக்ஸ்போர்ட் கம்பெனில கம்ப்யூட்டர் ஆபரேட்டரா இருக்கான்… அந்த தினேஷ்…. பெரிய ஜூவல்லரில கேஷியர்… !…நீ?….வெறும் எட்டாம் கிளாஸ்… அதுவும் ஃபெயில்!… உத்தியோகமோ ஹோட்டல்ல சர்வர்!”
சொல்லிவிட்டு நிறுத்திய கனகசபாபதியின் முகத்தையே கூர்ந்து பார்த்தேன்.
‘அது மட்டுமில்லாம…எங்க மூணு பேரோட தோற்றத்தையும் பாரு..அப்படியே உன்னோட லடசணத்தையும் பாரு…நாங்கெல்லாம் நல்லா செவப்பா…பார்க்க டீசண்டா… இருக்கோம்!… நீ?… கன்னங்கரேல்னு பார்க்கவே அசூசையா இருக்கே… அதான் நீ எங்களோட ஒரே ரூம்ல இருக்கறது… எங்களுக்குக் கொஞ்சம் கௌரவக் குறைச்சலாய் இருக்கு!”
நெஞ்சு கனத்துப் போய் பேசினாலே அழுது விடுவோம் என்கிற நிலையில் ‘ஓ.கே! ஃபிரண்ட்ஸ்…. ரெண்டே நாள்ல நான் காலி பண்ணிடறேன்!” என்று கரகரத்த குரலில் சொல்லியவாறே அறையை விட்டு வெளியேறினேன்.
‘ஏன்?… இவர்களின் இந்த அதிரடித் தீர்மானத்திற்கு என்ன காரணம்?…” யோசித்தேன்…… யோசித்தேன்… எதுவுமே புலப்படாமல் போக ராத்திரி பதினோரு மணி வரையில் வெளியில் திரிந்து விட்டு அதன் பிறகே அறைக்கு வந்து படுத்தேன். அப்போதும் கூட அவர்கள் என்னுடன் பேசவுமில்லை என்னைக் கண்டு கொள்ளவுமில்லை.
இரவில்…. கனவில்…. அவர்கள் மூவரும் என்னைக் கல்லால் அடித்துத் துரத்துவது போல் வர திடுக்கிட்டு விழித்து மௌனமாய் அழுதேன். ‘ச்சே… எவ்வளவு கேவலமா என்னைப் பார்க்கவே அசூசையா இருக்குன்னு சொல்லிட்டாங்களே!”
மறுநாள் காலை வழக்கத்திற்கும் சற்று முன்னதாகவே கிளம்பி நான் சர்வராகப் பணியாற்றும் ஹோட்டலுக்கு வந்தேன்.
‘என்ன திவா மொகமெல்லாம் வாடிக் கெடக்கு… ஒடம்பு கிடம்பு சரியில்லையா?” கல்லாவிலிருந்த முதலாளி கேட்க
இட. வலமாய்த் தலையாட்டினேன். ஆனாலும் வழக்கமான கலகலப்பும்… சுறுசுறுப்பும் என்னிடம் இல்லாதிருப்பதைக் கவனித்து விட்ட அவர் ‘திவா…. வாப்பா இங்க…. சொல்லு என்ன பிரச்சினை உனக்கு?” அக்கறையுடன் கேட்டார்.
ஒரு நீண்ட பெருமூச்சிற்குப் பின் சொன்னேன்.
அமைதியாய்க் கேட்டு முடித்தவர் ‘கவலைப்படாதே திவா!… நான் மதியம் பேங்க்குக்கு போவேன்… அங்க கனகசபாபதி சாரைப் பார்ப்பேன்… அவர்கிட்ட இதைப் பத்தி விசாரிக்கறேன்…”
மாலை நாலு மணி வாக்கில் பேங்க்கிலிருந்து திரும்பிய என் முதலாளி என்னை அழைத்தார். ‘திவா…. நீயும் நானும் நினைக்கற மாதிரி உன் அறை நண்பர்கள் மோசமானவர்களோ… கெட்டவர்களோ இல்லைப்பா!… ரொம்ப ரொம்ப நல்லவங்கப்பா!”
வேறு புறம் முகத்தைத் திருப்பி விரக்தியாய்ச் சிரித்த நான் ‘அதனாலதான் ‘உன்னையப் பார்க்கவே அருவருப்பாய் இருக்கு… நீ எங்களோட ஒரே ரூம்ல இருக்கறது எங்களுக்கு கவுரவக் குறைச்சல.!ன்னு நேருக்கு நேர் சொல்லி என்னைத் துரத்தியடிக்கறாங்களா?”
சில விநாடிகள் என் முகத்தையே உற்றுப் பார்த்த என் முதலாளி ‘திவா!… போன வாரம் உங்கப்பா ஊரிலிருந்து வந்திருந்தாரா?”
‘ஆமாம்… பட்… அதை நான் ரூமுக்கெல்லாம் கூட்டிட்டு வரலை!”
‘ஏன் கூட்டிட்டு வரலை?”
‘அது… வந்து…” என்று சத்தமாய் ஆரம்பித்தவன் சட்டென்று முதலாளியின் முகத்துக்கு நேரே குனிந்து சன்னமான குரலில் ‘சார்… அது படிப்பறிவே சுத்தமா இல்லாத….. ஒண்ணா நம்பா; பட்டிக்காட்டு ஆளு சார்…!.. நாகரீகம்ன்னா என்னன்னு கூடத் தெரியாது…..மேல் சட்டை போடாம… கன்னங்கரேல் பாடிய ஊருக்குக் காட்டிக்கிட்டு… சேவிங் பண்ணாத கருத்த மூஞ்சில வெள்ளைத் தாடியோட திரியும்!…. அது மட்டுமில்லை வெத்தலைக் காவி மிளிரும் முன் பல்லைக் காட்டிக்கிட்டு… செருப்பில்லாத கால்ல வாத்து நடை போட்டுக்கிட்டு அது வர்றதைப் பார்த்தா எனக்கே குமட்டும் சார்…!… அதைக் காட்டி ‘இதுதான் எங்கப்பா!‘ன்னு நாலு பேரு கிட்டச் சொன்னா… அதுக்கப்புறம் அவங்க என்னையே ஒதுக்கிடுவாங்க!”
‘அப்படியா?” முதலாளி ஒரு நக்கல் சிரிப்புடன் கேட்க
‘ஆமாம் சார்… அதனால அது என்னைப் பார்க்க வர்றேன்னு சொன்னா ”வர வேண்டாம்… வரக் கூடாது”ன்னு சொல்லிடுவேன்!… சில சமயங்கள்ல என்னைப் பார்க்கணும் போல இருக்குன்னுட்டு என் பேச்சை மீறிக் கௌம்பி வந்துடும்…அந்தச் சமயங்கள்ல எங்காவது வெளிய வெச்சுப் பேசிட்டு அப்படியே திருப்பி ஊருக்கு அனுப்பிச்சிடுவேன்!”
‘ஏன் திவா?”
‘பின்னே?… அதை அப்பான்னு சொல்லி என்னோட இமேஜைக் கெடுத்துக்கச் சொல்லறீங்களா?”
‘நீ உங்கப்பா கிட்ட நடந்துக்கற இந்த முறைதான் உன் நண்ர்களுக்கு உன் மேல கோபத்தை ஏற்படுத்தியிருக்கு!… போன வாரம் வந்திருந்த உங்கப்பாவை நீ பஸ் ஸ்டாண்டோடவே திருப்பி அனுப்பிச்சிட்டியாமே?..அதை கனகசபாபதி சார் பார்த்திருக்கார்…! உங்கப்பாவை விட்டுட்டு நீ போனதும் அவர் உங்கப்பாகிட்டப் பேசியிருக்கார்…!”
‘அப்படியா?… என்கிட்டச் சொல்லவேயில்லையே!”
‘கனகசபாபதி சார்கிட்ட உங்கப்பா தன்னோட வேதனைகளைக் கொட்டி அழுதாராம்!… அந்தத் தந்தையோட மனசு எத்தனை வேதனைப் பட்டிருக்கும்!…. அதை நீயும் உணரணும்…. என்பதற்காகத்தான் அப்படியெல்லாம் உன்கிட்டப் பேசியிருக்காங்க… நடந்திருக்காங்க!”
‘அப்படின்னு கனகசபாபதி சாரே சொன்னாரா?” கேட்டேன்.
‘சும்மாவல்ல கண் கலங்கி… சொன்னார்”
நான் மனம் லேசாகி நின்றேன்.
‘தப்பு திவா நீ செய்தது!… உன்னை ஏத்துக்கிட்ட உன் நண்பார்ள் உங்கப்பாவை ஏத்துக்கவா மாட்டாங்க?… அவரை நீ ரூமுக்கு கூட்டி வந்திருக்கணும்!… நண்பர்க்கு அறிமுகப்படுத்தியிருக்கணும்!”
என் தவறு அப்போதுதான் எனக்கு உறைக்க ஆரம்பித்தது. ‘சார்…நாளைக்கே ஊருக்குப் போய் அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு… அவரைக் கையோட கூட்டிட்டு வந்து அறை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி… “பாருங்கப்பா இந்த தங்க மனசுக்காரங்களை”ன்னு பெருமையோட சொல்லப் போறேன்”
‘அதென்ன நாளைக்கு?…. இன்னிக்கு நைட்டே பஸ் ஏறலாமே”
என் முதலாளி சொல்ல என் உள்ளம் இந்த உலகத்தை சந்தோஷமாய்… மிகமிக சந்தோஷமாய்ப் பார்த்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings