2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஒண்ணா ரெண்டா எடுத்துச் சொல்ல, ஆசையற்ற பிறவி உண்டோ உலகில். புத்த பெருமானா நாம ஆசையை துறக்க? எல்லாத்தையும் பகிரங்கமா சொல்லத்தான் முடியுமா?
அது மட்டுமில்லை, உலகத்துல முன்னேற, நல்ல விஷயங்களை பெற, ஆசை இருந்தாதான் முடியும். தத்துவமெல்லாம் போறும் விஷயத்துக்கு வானு சொல்றீங்க அதானே?
சிறுசா இருக்கறப்ப பசங்களோட பம்பரம் விளையாட ஆசை. அதுலயும் ஆணியை கூராக்கின பம்பரத்தை, சாட்டையால சுத்தி வட்டத்துக்குள்ள இருக்கற பம்பரத்தை உடைக்கற மாதிரி சுண்டி குத்தாட்டம் ஆட ஆசை. அம்மா விட மாட்டா, அது என்ன பசங்களோட விளையாடறது, போய் பக்கத்து வீட்டு பேபியோட பல்லாங்குழி ஆடும்பா. அது ஒரே போர்.
பசங்களோட கபடி விளையாடக் கூடாது, திருடன் போலீஸ் விளையாடக் கூடாது, ரோட்ல குதிச்சு குதிச்சு பேட்மின்டன் விளையாடக் கூடாது. என்னென்ன கட்டுப்பாடுகள். எனக்கு வீம்பா அதெல்லாம்தான் ஆசை.
ஸ்கூல் கிரவுண்டல மத்த பெண்களோட ஆடுவேன் ஆனா அதுல எனக்கு திருப்தி இல்லை, பசங்களோட விளையாடி அவங்களை விட நான் திறமைசாலினு புரூவ் பண்ணணும்.
பரத் அண்ணா சைக்கிள் கொண்டு வருவான், அம்மாக்கு தெரியாம “அண்ணா, அண்ணா”னு கெஞ்சி சாவி வாங்கிட்டு போய் ரோட்லயே குரங்கு பெடல் போட்டு ஓட்டுவேன்.
பசங்க, “பாருடா ஆம்பளை பொண்ணு குரங்காயிடுச்சு”னு கேலி பண்னாங்க. அப்பாகிட்ட கெஞ்சி கூத்தாடி வாடகை சைக்கிள் எடுத்து ரேஸ்கோர்ஸ் மைதானத்துல, பரத் அண்ணா உதவியோட நல்லா பழகிட்டேன். தைரியமா ரோட்ல ஓட்டிட்டு வந்ததை அம்மா பாத்துட்டா.
அன்னிக்கு நல்ல விசிறிக் காம்பு அடி. அப்பாவுக்கும் சரியான அர்ச்சனை. காசு கொடுத்து கெடுத்த குற்றம் அவரோடதாச்சே. வயசுப் பொண்ணு சைக்கிள் ஓட்டி படாத இடத்துல பட்டுட்டா நாளைக்கு கல்யாணம் காட்சி பண்ண வேண்டாமான்னு.
நல்லவேளை… ஸ்கூல், காலேஜ் டயம்ல காதல் ஆசைல்லாம் வரலை, மத்த பெண்கள கேலி கூட பண்ணுவாங்க. “சரியான ஆண்-கணம்டீ நீ, ஒரு கிரஷ் கூடவா வராது”னு.
மேற்படிப்புக்கு பிரான்ஸ்ல ஸ்காலர்ஷிப்போட வாய்ப்பு கிடைச்சது. அம்மாவுக்கு இப்பல்லாம் என் மேல ரொம்ப நம்பிக்கை, அப்பா பயந்தா கூட “போகட்டுமே குழந்தை, லோகத்தையே ஜெயிச்சிட்டு வர திறமை இருக்கு என் செல்லத்துக்கு”ன்றா.
சோர்போன் யூனிவர்சிடி டி பிரான்ஸ்ல, லூயிஸ் டி சார்ல்ஸ்னு புரொபசர் கீழே என் டாக்டரேட் படிப்பு. பாரிஸ்ல செட் ஆறது கொஞ்சம் கஷ்டமா இருந்தது முதல்ல, ஆறே மாசத்துல ஓரளவு பிரென்ச் பேச கத்துட்டவுடனே பாரிஸ் லைஃப் கொஞ்சம் கவர்ச்சியா மாறியது.
படிப்பு மாதிரியே தெரியாத வண்ணம் படிப்பு வந்தது. மெல்ல லூயிஸ் நெருக்கமாகப் போனார். 35 வயது பேச்சுலர், யுனிவர்சிடியின் டாப் புரொபசர்கள்ல ஒருத்தர். மெல்ல நெருக்கம் வந்தது, என் பெண்மை மலர்ந்தது, காதலில் விழுந்தேன்.
ஆனா அந்த மென்மையான முரடன் லூயிஸ் ஒரு போதும் காதலை சொன்னதில்லை, தனியா இருக்கும் போது இறுக அணைச்சிப்பான், எல்லா சரசமும் செய்வான் ஒரு இயந்திரமா.
காதலை ஒரு நாள் சொல்வான், பெற்றோர் அனுமதியோட இந்திய முறைல கல்யாணம் பண்ணிக்கலாம்னு உள்ளூர ஆசை. என்னவோ தெரியலை அந்த மண்டூகத்துக்கு காதலை சொல்லத் தெரியலை.
என் ஆராய்ச்சி பேப்பரை சப்மிட் பண்ணியாச்சு, ரெண்டே மாசத்துல டாக்டர் பட்டமும் கான்வொகேஷனோட கிடைச்சது. அம்மா, அப்பா கான்வொகேஷனுக்கு வந்தாங்க, அம்மாக்கு அடக்க முடியாத பெருமையும் சந்தோஷமும்.
அம்மா அப்பாக்கு லூயிஸை அறிமுகம் பண்ணி வச்சேன்.. சின்ன தாடியும், புன்னகை முகமும் என் பெற்றோருக்கு ரொம்ப பிடிச்சது. என் கண்ணில் முதல்முறையா பெண்மையை பார்த்தாள் அம்மா.
“என்னடி புரொபசரை லவ் பண்றயா, கொஞ்சம் வயசு கூட இருக்கும் போல இருக்கே?”
“இல்லைம்மா.. 34 இல்லை 35 தான் இருக்கும். மரியாதைப்பட்ட மனிதர், நிறைய சம்பாதிக்கறார். என்னை நல்லா வச்சுப்பார்னு நம்பறேன்”
அன்றைய மாலை டின்னர் பார்ட்டியில் நாங்கள் 4 பேரும் ஒரொ டேபிளில். அப்பா மெதுவாக ஆரம்பிச்சார்.
“எங்க பொண்ணு கல்யாணத்தை விமரிசையா இந்திய முறைப்படி இந்தியால பண்ண ஆசைப்படறோம்”
“ஒய் நாட், கட்டாயமா பண்ணுங்க. சம்மர் வெகேஷன் டைம்ல பண்ணினா நானும் கூட வர முயற்சி பண்றேன், எனக்கும் இந்தியா பாக்க ஆசை” சொல்லிட்டு கவர்ச்சியா சிரிச்சான். அப்பாவும், அம்மாவும் என் முகத்தை பார்த்தனர்.
அப்பா, ”பட், என் பெண்ணை நீங்கள் விரும்புகிறீர்கள் என நினைத்தோம்”
“யா யா… ஐ லவ் யுவர் டாட்டர், ஆனா மேரேஜ் நாட் பாசிபிள். நீங்கள் பெரியவர் இன்னும் ரொம்ப விவரமா சொல்லத் தேவையில்லைனு நம்பறேன். கெட் எ ஸ்யூடபிள் மேன் ஃபார் யுவர் டாட்டர், குட் லக்”னு எந்திரிச்சு போயிட்டான்.
இதெல்லாம் நடந்து பதினஞ்சு வருஷம் ஆச்சு, இப்ப நான் பெங்களூர்ல ஒரு தனியார் கல்லூரில வேலை பாக்கறேன். அம்மா, அப்பா ரெண்டு பேரும் இல்லை இப்ப.
சென்னைல ஒரு கான்பரன்ஸ்ல என் ஆசான் லூயிசை பாத்தேன். காபி பிரேக்ல அவன் சொல்றான் “இந்தியா எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு, என் ரிடயர்மென்ட் லைப் உன் கூட இருக்க ஆசைப்படறேன்”னு.
எனக்கு சிரிக்கறதா அழறதா தெரியலை. இன்னும் 5 வருஷத்துக்கு அப்பறம் என் கூட சேந்து இருக்கணுமாம், என்ன பதில் சொல்ல?
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings