in ,

கொலைப் பணமும்… வீடியோவும் (சிறுகதை) – நாமக்கல் வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

துல ஒரு லட்சம் இருக்கு. அவனைப் போட்டுத் தள்ளிட்டு வந்து மீதி நாலு லட்சத்தை வாங்கிக்கோ. ஆனா ஒரு கண்டிஷன். அவன் குண்டடிபட்டு சாகறதை உன் மொபைல்ல வீடியோ எடுத்துட்டு வந்து என்கிட்ட காட்டனும்… ’

ரவுடி ராயப்பனிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு சந்தடியில்லாமல் திரும்பினார் கந்தசாமி. வேலப்பன் குண்டடிபட்டு அந்த இடத்திலேயே சாகும் காட்சி அவரது மனக்கண்கள் முன்னே படமாய் ஓட ஆரம்பித்தது.

‘ ஒழிஞ்சான் துரோகி… எடுத்த காண்ட்ராக்ட் எனக்குதான்… எனக்கேத்தான்… இனிமே நான்தான் அந்த மார்க்கெட்டுக்கே அதிபதி… ’ கொக்கரித்துக் கொண்டார் கந்தசாமி. அதே வேகத்துடன் புல்லட்டை முடுக்கினார் அவர்.

அடுத்த மாதம் மார்க்கெட் காண்ட்ராக்ட் வருகிறது. ஒருவருடமாக வேலப்பன்தான் மார்க்கட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். கந்தசாமியும் வேலப்பனும்தான் மாறி மாறி காண்ட்ராக்டை எடுக்கிறார்கள். சிலசமயம் எதிர்பாராதவிதமாய் காண்ட்ராக்ட் கைமாறிப் போய்விடும். அப்போது கந்தசாமி உடைந்து போவார். அப்படித்தான் கடந்தமுறையும் நடந்தது.

போனவருடத்திற்கு முன்பு வேலப்பன்தான் காண்ட்ராக்ட் எடுத்திருந்தான். அடுத்த குத்தகை நமது கைக்கு வரவேண்டும் என்று என்னென்னவோ தகிடுதத்தமெல்லாம் செய்து பார்த்தார் கந்தசாமி. ஆனால் ஏலம் கைவிட்டுத்தான் போனது. இல்லாத தில்லுமுல்லெல்லாம் செய்து வேலப்பனே மறுபடியும் காண்ட்ராக்டை எடுத்துவிட்டான். ஆடிப் போய் உட்கார்ந்துவிட்டார் கந்தசாமி. அப்போதே ஒரு  முடிவும் செய்துகொண்டார்.

‘ ராஸ்கல்… நான்மட்டும் இளிச்சவாயனா… நீ என்னென்ன தகிடுதத்தமெல்லாம் செஞ்சு காண்ட்ராக்ட எடுத்துட்ட… எனக்கு ஒரு வழி இல்லாமலா போகும்… அதான் ராயப்பனை ஏவி விட்டுருக்கேன். இப்போ அடுத்த ஏலம் எனக்குத்தான்டா… ஏன்னா அதை எடுக்க நீ உயிரோட இருக்கமாட்டே… ’

ஒருவருடமாகவே அவரது ஆழ்மனதில் திட்டத்தை எப்படி அரங்கேற்றலாம் என்ற யோசனை ஓடி ஓடி கடைசியில் வேலப்பனை ஒழித்துக் கட்டிவிட்டால், பிறகு நம்மை எதிர்க்க ஆளே கிடையாது… நாம்தான் பர்மனென்ட் காண்ட்ராக்டர்… என்று முடிவுசெய்து ராயப்பனுக்கு அட்வான்ஸ் தொகையையும் கொடுத்துவிட்டார்.

விஷயத்தைச் சொன்னார் கந்தசாமி. நான்கு லட்சம் கேட்டான் அவன். இவர் ஐந்து லட்சம் தருவதாகச் சொன்னதும் சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்டான்.

பணம் கைமாறியது.

மாரியம்மன் திருவிழா வரப் போகிறது. திருவிழா முடிந்த வாரமே காண்ட்ராக்ட்டும் திறக்கப் போகிறது.  அதை நான் மட்டும்தான் எடுக்கப் போகிறேன்… கொக்கரித்துக்கொண்டார் கந்தசாமி.

 ‘ ஐயா, ரெண்டே நாள்ல கச்சிதமா காரியத்தை முடிச்சிடறேன். உங்களை எப்போ வந்து சந்திக்கறது, வீடியோவைக் காட்டிட்டு பணத்தை வாங்கிக்கறதுன்னு சொன்னீங்கன்னா…’ என்று இழுத்தான்.

‘ திருவிழாவுக்கு காப்புக் கட்டியாச்சுன்னா, வெளியூருக்கு போகமுடியாது. அதனால எங்க வீட்லே எல்லாரும் அதுக்கு முன்னாடியே ஊருக்கு போயிட்டு திரும்பறதா உத்தேசிச்சு இருக்காங்க. நாளைக்கு கிளம்பிடுவாங்க. நீ வந்து எங்கவீட்டு பின்கதவுல மூணு தடவை தட்டு. அதுதான் நீ வந்து நிக்கறதுக்கு சிக்னல். நான் வந்து திறக்கறேன். வீடியோவைக் காட்டு பணத்தை வாங்கிட்டு ஓடு… ’ என்று ரகசியம் சொல்லிவிட்டு ஹஹஹா என்று சிரித்துக்கொண்டார். அவன் கிளம்பிப் போய்விட்டான்.

இந்த வருடம் மார்க்கெட் நம் கைக்கு வரப் போகிறது என்பதை  நினைக்கிற ஒவ்வொருதடவையும் அவருக்கு சந்தோஷம் பன்மடங்கானது.

பரபரப்புடனும் படபப்புடனும் நாட்களும் மணித்துளிகளும் ஓடின.

மறுநாள் அவரது மனைவியும் மகளும் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள்.

அதற்கடுத்த நாள்தான் ராயப்பனுக்கு கந்தசாமி கொடுத்த கெடு.  பகல் பொழுதை மிகவும் படபப்புடன் கழித்தார் கந்தசாமி. ‘ இனி நானே ராஜா… நானே மந்திரி… என்னை எதிர்க்கும் எதிரி நிரந்தரமாய் இல்லை… ‘ என்று நினைத்துக்கொண்டபடியே ராயப்பன் கொண்டுவரப் போகும் சந்தோஷமான செய்தியைக் காதால் கேட்கவும் ஆவலுடன் காத்திருந்தார். கொஞ்சம் கொஞ்சமாய் சரக்கையும் ஏற்றிக்கொண்டார்.

ராத்திரியும் வந்தது. இந்நேரம் வேலப்பனைப் போட்டிருப்பானா என்று நினைத்துக்கொண்டார். ‘ போட்டிருப்பான்… போட்டிருப்பான்…  ராயப்பன். அவன்தான் கில்லாடியாயிற்றே. இதுவரை மூன்று கொலைகளை செய்தவனாயிற்றே… ‘ என்று நினைத்துக்கொண்டவரின் மனக்கண்களில் வேலப்பன் சுருண்டுவிழும் காட்சி நிழலாய் ஓடியது.

போதையிலும் சிரித்துக்கொண்டார்.

அடிக்கடி பின்கதவை திரும்பித் திரும்பி பார்த்துகொண்டார்,  எப்போது வந்து அவன் கதவைத் தட்டுவானோ என்று… நேரம் ஆக ஆக நெஞ்சு படபடத்தது. அடுத்த பாட்டிலையும் திறந்து குடிக்க ஆரம்பித்தார்.

இரண்டாவது பாட்டில் சரக்கும் உள்ளே போக… கொஞ்சம் கிறக்கம் உண்டானது. எந்த நேரமும் அப்படியே சாய்ந்துவிடுவோமோ என்ற பயமும் லேசாய் உண்டானது. ஆனாலும் ரொம்பவும் பிரயத்தனப்பட்டு திடமாய் உட்கார முனைந்துகொண்டிருந்தார்.

கதவு தட்டும் சத்தம் கேட்டது.  உன்னிப்பாய் கவனித்தார். மூன்று முறை தட்டப்பட்டதும் எழுந்து போய் கதவைத் திறந்தார்.

‘ வந்துவிட்டான் ராயப்பன், நல்லச் செய்தியுடன் ‘ என்று நினைத்துக்கொண்டே ஓடினார்.

டுமீல்… டுமீல்… டுமீல்…

சைலன்ஸர் பொருத்திய ராயப்பனின் துப்பாக்கி சத்தமில்லாமல் அவரது நெஞ்சில் மூன்று தோட்டாக்களைச் பாய்ச்சியது.

‘ ரா…யா…ப்…பா… ’ என்றபடியே சரிந்து விழுந்தார் அவர்.

துப்பாக்கியை இடுப்புக்குள் செருகிகொண்டே, ‘ என்னை மன்னிச்சிடுங்கய்யா… நீங்க அஞ்சு லட்சம்தான் தர்றேனீங்க… ஆனால் அடுத்த நாளே வேலப்பன் என்னைக் கூப்பிட்டு பத்து லட்சம் தர்றேன், என் எதிராளி கந்தசாமியைப் போட்டுடுன்னார்… இந்தாங்க நீங்க கொடுத்த ஒரு லட்சம்…’ என்றபடியே பணத்தை எடுத்து அவர் மேல் விட்டெறிந்தான்.

கந்தசாமிக்கு எல்லாம் மங்கலாய்த் தெரிந்தன.

ராயப்பன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான்.

முற்றும் 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அங்காயியின் தீர்த்தக்காவடி (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன்

    எண்ணங்கள் வண்ணமாகட்டும் (தொடர்கதை – பகுதி 3) – கற்பக அருணா