2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அலுவலகத்தில் உணவு இடைவேளை நேரம் …சஞ்சலத்துடன் இருந்த அனுஷாவை பார்த்து அவள் அருகில் வந்தான் தருண்.
“அனுஷா! ஏன் இப்படி பயந்து நடுங்குற? நீயும் நானும் மேஜர். நம்ம லைஃப் நாமளே முடிவு பண்ணக்கூடிய பக்குவமும் வயசும் வந்தாச்சு. “
“ப்ளீஸ் தருண்! அவசரப்படாதே… நான் ஊருக்கு போய் அப்பா, அம்மாவை சமாதானப்படுத்தி நல்ல செய்தியோடு வர்றேன். கொஞ்சம் பொறுமையா இரு.”
சொன்னபடி ஒரு வாரம் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு ஊருக்கு கிளம்பினாள் அனுஷா. தென்காசி அருகே உள்ள இலஞ்சி…இயற்கை அழகு கொஞ்சும் ஊர்…. அங்குதான் அவள் குடும்பம் இருந்தது.. ஓஹோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவு வசதியான குடும்பம்.
அனுஷாவை பார்த்ததும் குடும்பமே குதூகலமானது. அம்மா பார்த்து பார்த்து அவளுக்கு பிடித்ததை செய்தாள். அப்பா உள்ளங்கையில் வைத்து தாங்கினார். நேரடியாக அவர்களை பார்க்க முடியாத குற்ற உணர்வில் தலை குனிந்து கொண்டாள் அனுஷா .
இரவு எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும், கூடத்தில் அமர, அனுஷா தயக்கத்தோடு பேச்சை ஆரம்பித்தாள். மெல்ல தருணை பற்றி சொல்ல குடும்பமே அதிர்ந்து போனது.
“என்னடி சொல்ற? காதல்.. கத்தரிக்கா.. இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வருமா?” என்று கொதித்தாள் அம்மா.
“வேலைக்கு போய் கிழிச்சதெல்லாம் போதும் வீட்டோட இரு” கத்தினான் அண்ணன் ஆகாஷ்.
“குலம், கோத்திரமெல்லாம் பாக்க வேண்டாமா? ஊர் உலகம் என்ன சொல்லும்? சொந்தபந்தம் மதிக்குமா?? உன்ன பெத்து, வளர்த்து, சக்திக்கு மிச்சமாக படிக்க வைச்சு, ஆளாக்கினதுக்கு நல்ல மரியாதை பண்ணிட்டடி… எங்க தலையில நெருப்பை அள்ளிக் கொட்டிடடி..” அம்மா தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.
ஆகாஷ் குறுக்கிட்டு, “இந்த ஓடுகாலி நாய்க்காக நீ ஏன் அழுகிற. எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா..அவ செத்துப் போயிட்டான்னு நினைச்சுக்கிறேன். நீயும் தலைமுழுகிடு” என்றான்.
அனுஷா அப்பாவை பார்க்க, அவர் உறைந்து போய் அமர்ந்திருந்தார்.” அப்பா! நீங்க சொல்லுங்கப்பா! தருண் நல்ல பையன், கெட்டிக்காரன்,எனக்கு பொருத்தமானவன். நாங்க கல்யாணம் பண்ணிகிட்டா எங்க வாழ்க்கை நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறோம்”
“அடி செருப்பால! படிச்சு வேலைக்கு போற திமிரில பேசுறியாடி? உன்ன கொன்னு போட்டுட்டு ஜெயிலுக்கு போக கூட தயங்க மாட்டேன்” என்று ஆகாஷ் கத்தினான்.
“நீ பேசாம இரு ஆகாஷ்! அப்பா அவனை அதட்டினார். உன்னை படிக்க வைச்சு, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திட்டோம். நீ பேசறது உனக்கு நியாயமா படலாம், ஆனா எங்களுக்கு அது ஏத்துக்க முடியாத ஒன்னு! நீ இந்த முடிவில மாறித்தான் ஆகணும் எங்களுக்காக.”
“அப்பா ப்ளீஸ்! நீங்க எல்லோரும் எனக்கு எப்படி முக்கியமோ, அதே மாதிரி தருணும் முக்கியம். அவனை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது.”
“அப்ப நீ உன் வாழ்க்கைய பாத்துட்டு போ! இனி உனக்கு இந்த குடும்பத்துல இடம் கிடையாது.எங்களுக்கு ஒரு பையன் மட்டும் தான் நினைச்சுகிறோம்.காலையில நீ கிளம்பி போயிடு. உன் கல்யாணத்துக்கு சேர்த்துவைத்த நகைகளையும், பணத்தையும், வாங்கிட்டுப் போயிடு!” என்றார் உறுதியாக.
காலையில அவள் கிளம்பும் போது அம்மா கதறி அழுதாள். “அம்மா! எனக்கு உங்க உறவே இல்லைங்கறப்ப, நகையும், பணமும், வேண்டாம் நான் போறேன்… உங்களுக்கு உங்கள் மகள் சந்தோஷத்தை விட,மானம்,மரியாதை, தான் முக்கியமா போச்சு! நல்லா இருங்க! எனக்கு தருண் வேணும்! அவன் இல்லாம என்னால வாழ முடியாது. போயிட்டு வர்ரேன்!” என்றவள் மனம் கனக்க… வீம் போடு நடந்தாள்.
அம்மா விறுவிறுவென போய் குடத்தில் இருந்த தண்ணீரை தலையில் ஊற்றி” என் மக செத்துப்போயிட்டா! அவன கட்டிக்க, பெத்தவங்களை உதறிட்டு போறல்ல…. நீ நல்லாவே நல்லாவே இருக்கமாட்ட!” அம்மாவின் சாபம் காதில் விழ, விடுவிடுவென நடந்தாள்.
சடாரென பஸ் பிரேக் போட…. நினைவுகள் கலைய…. எதார்த்த உலகிற்கு வந்தாள் அனுஷா. இந்த 20 வருடங்களில் என்னென்னவோ நடந்து விட்டது. வயதுக்குரிய வீம்பு அன்று இருந்தது. தருணை கோவிலில் கல்யாணம் பண்ணிக்கொள்ள… தகவல் சொல்லியும் ஒருவரும் வரவில்லை.
ஐந்து வருட இல்வாழ்க்கை இன்பமாக கழிய… அம்மா விட்ட சாபமோ… அவள் செய்த பாவமோ… விபத்து ரூபத்தில் வந்து தருணை கொண்டு போனது. 3வயது ரித்து மட்டுமே கையில் ஆறுதலாய்…. அவளை வளர்க்க அவள் பட்ட கஷ்டங்கள் சொல்லி முடியாது. தருண் சாவை கேள்விப்பட்டும் அம்மா வீட்டார் யாரும் வரவில்லை.
அவளை அவர்கள் மன்னிக்கத் தயாராக இல்லையென்பதை புரிந்து கொண்டாள. தன் மேல் உயிரையே வைத்திருந்த குடும்பம் இன்று தன் கஷ்டத்திற்கு கூட துணையில்லையே என்ற வேதனை நெஞ்சை அடைத்தது. ரித்து வளர்ந்து கல்லூரி வந்துவிட்டாள். அவள் மட்டுமே அனுஷாவின் வாழ்க்கையின் ஒரே ஆறுதல்.
இதோ அம்மா படுக்கையில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள். ஐந்து வருடங்களுக்கு முன்பு,அப்பா இறந்தது கேள்விப்பட்டு போன போது கூட அவளை மன்னித்து அம்மா உள்ளே விடவில்லை.இப்போதாவது தன்னை மன்னிப்பாளா? என்று ஏங்கினாள்.
“இலஞ்சி! இறங்கறவங்க இறங்குங்க!” என்று கண்டக்டர் குரல் காதில் விழ, இறங்கி, வீட்டை நோக்கி நடந்தாள். அம்மாவுக்குப் பிடித்த பண்டங்கள், பழங்கள், பையில் இருக்க… அவள் பாசத்தைப் போலவே, பையும் கனத்தது. பழைய ஞாபகங்கள் நெஞ்சை அடைக்க, வீட்டை நெருங்கிக் கதவைத் தட்டினாள்.
“அம்மா!” கதவைத் தட்டியவளுக்கு கண்ணீரும் கூடவே வந்தது.
ஒரு சிறு வயது பெண் கதவைத் திறந்தவள்,” அம்மா யாரோ வந்திருக்காங்க!” என உள்ளே பார்த்து கூற…
“யாரோ இல்லம்மா…. உன் அத்தை… “என்றாள் அனுஷா.
ஆகாஷ் வெளியே வர,ஒரு கணம் அதிர்ந்து… பின் நக்கலாக, “என்னமா தங்கச்சி! திடீர்னு புறந்தவீட்டுப் பாசம்?” தலை நரைத்து வயது கூடியிருந்த அண்ணனை பார்த்தவள்….
பாசத்தோடு” அண்ணா எப்படி இருக்க?” என்றாள்.
அதற்குள் அண்ணி..” விட்டுப்போன சொத்தை வாங்க வந்திருப்பாக நாத்தி”என்றாள் நக்கலாக.
“அண்ணி!சொந்தங்களே இல்லாத போது சொத்து எதுக்கு? என் கஷ்டங்களை நான் தனியா தாண்டி வந்துட்டேன்? என் மகள் ரித்துதான் எனக்கு மிகப்பெரிய சொத்து. பெத்தவ பாசத்தை உதர முடியாம கடைசியா அவ முகத்தை ஒரு தடவை பாத்துட்டுப் போகலாம்ன்னுதான் வந்தேன். இப்பவாவது அவளுக்கு மனசிருந்தா என்ன மன்னிக்கட்டும்.இல்லேன்னா…. நான் வந்த வழி போயிடுறேன்!” என்றாள் கண்ணீருடன்.
இதைக் கேட்டு உள்ளறையில் படுத்திருந்த அம்மா கண்ணீர் விட்டாள். அருகில் வந்த அனுஷாவின் கையைப் பிடித்தவள், “கண்ணு வந்துட்டியாடி! எங்க உன்னை பார்க்காம, பேசாம போயிடுவேனோன்னு பயந்துகிட்டே இருந்தேன். உன்ன விலக்கி வைச்சு பெரிய தப்பு பண்ணிட்டேன்டி!. நீரடிச்சு நீர் விலகாது! உன் கஷ்டத்தை கேட்டு இறங்கி வந்த உன் அப்பாவையும் நான் தடுத்திட்டேன். வீம்பில இருந்து என்ன சாதிச்சேன்? சாகப்போற போதுதான் புத்தி வந்திருக்கு. நீ என்கிட்ட மன்னிப்பு கேட்க வேணாம்டி நான்தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும்!” என்று கண்ணீர் விட்டாள்.
அம்மாவின் மெலிந்த கைகளை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அனுஷா, “அம்மா! ஒரு குற்ற உணர்வு இவ்வளவு நாளா என்னை ஆட்டிப் படைச்சது. நீ என்னை மன்னிச்சிட்டேன்னு சொன்னதுக்கப்புறமா தான் என் மனசு நிம்மதியாச்சு! உன் உடம்பை கவனிச்சுக்கோ! என்ன பத்தி கவலைபடாதே!”
“பேத்தியை கூட்டிட்டு இங்கேயே வந்திடேம்மா” ஏக்கமாக அம்மா கூற
“அதெல்லாம் சரிப்பட்டு வராதும்மா! உன்னை பார்த்த திருப்தியே எனக்கு போதும். நான் கிளம்புறேன்” என்றவள் வெளியே நடந்தாள். இத்தனை நாள் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் விலகியவளாய்…மனநிறைவோடு நடந்தாள் அனுஷா.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings