in

விசித்திர உலகமடா (சிறுகதை)- ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ரவு நடைப்பயிற்சிக்குத் தெருவில் நடந்து கொண்டிருந்த பசுபதி, அந்த வீட்டினுள் இருந்த வந்த சப்தத்தைக் கேட்டவுடன் நின்று விட்டார். 

லோகு எனப்படும் லோகநாதன் மற்றும் கனகா எனப்படும் கனகவல்லி தம்பதியினரின் வீடு அது.  சண்டைக்கு இடையில் குழுந்தைகளின் அழுகுரலும் கலந்து கேட்டது.  அந்த வீட்டில் சண்டை அடிக்கடி நடக்கும் என்பதால், அக்கம்பக்கத்தினர் யாரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் பசுபதியால் அப்படிக் கடந்து செல்ல முடியவில்லை.  காரணம் அவர் சார்ந்துள்ள இயக்கம் அவருக்கு அப்படி போதிக்கவில்லை.

தோளில் கிடந்த சிவப்புத் துண்டை சரி செய்தவாறே வீட்டின் உள்ளே நுழைந்தார்.  வாய் வார்த்தை முற்றிப் போய் லோகு கனகாவின் மேல் கை வைக்க ஓங்கவும், பசுபதி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.  அவரைப்  பார்த்ததும் கனகா அழுது கொண்டே வந்து அவர் அருகில் நின்று கொண்டு நியாயம் கேட்டாள்.

“ஐயா பாருங்க… உங்க முன்னாடியே அடிக்க வர்ராரு. சொன்ன பேச்சே கேக்கறதில்லைங்க, கேளுங்கைய்யா”

அதற்குள் வீதியில் ஒரு அரசியல் கட்சியின் வாக்காளர், தன் படையுடன் கோஷம் போட்டுக் கொண்டு செல்லவும், இவர்கள் சண்டை கொஞ்சம் நின்றது. இன்னும் பத்து  நாட்களில், அந்த ஊரில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற இருப்பதால்தான் இந்தப் பரபரப்பு.  அமைதியாக இருந்த அந்த ஊர், அரசியல் பிரமுகர்களின் வருகையால் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டிருந்தது. 

எங்கு பார்த்தாலும் கட்சிக் கொடிகளும், பறக்கும் கார்களும், வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் தங்கள் கட்சித் துண்டுடன் சுற்றும் சிறு தலைவர்களும் அந்த ஊரைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தனர்.  தங்குவதற்கு விடுதிகளில் இடம் இல்லை. உணவு விடுதிகளில் எந்நேரமும் நிரம்பி வழியும் கூட்டம். 

ஆங்காங்கே கூடாரம் இடப்பட்டு, தொண்டர்களுக்கு உணவு மற்றும் இத்யாதிகள் வழங்கல் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதுவே முன்பாக இருந்திருந்தால், பசுபதியும் அவர் சார்ந்துள்ள அரசியல் கட்சியின் சார்பில் கொடி பிடித்து, ஊர்வலம் சென்று ஓட்டுக் கேட்டிருப்பார். இன்றைய பணம் கலந்த அரசியல் நடப்பு அவருக்குப் பிடிக்காததால் அவர் ஒதுங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். 

ஆனாலும் பொது வாழ்வில்  பிழைக்கத் தெரியாதவர் என்று அவர் பின்னால் பேசினாலும், அவரின் நேர்மைக்கு என்று ஒரு மரியாதை இருந்தது. அந்த ஊர் மக்கள், நியாயமான‌ அவரின் பேச்சுக்கு இன்னும் மரியாதை கொடுத்து வந்தனர். தெருவில் ஒலித்த‌ சப்தம் ஓய்ந்தவுடன், வீட்டில் மறுபடியும் கணவன் மனைவி சப்தம் ஆரம்பித்தது.

சபாபதி குறுக்கிட்டார், “ஏம்மா கனகா நீ சொல்லு… இப்ப என்ன சண்டை உங்களுக்கு?” 

அதற்குள் குழந்தைகள் இரண்டும் சபாபதியின் அருகில் வந்து நின்றனர். எப்போதும் தோள்பட்டையில் தொங்கும் பையினுள் இருக்கும் பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து குழந்தைகளின் கையில் கொடுத்து, “சண்டை போடாமல் உள்ளே போய் சாப்பிடுங்க”என்று அனுப்பி வைத்தார்.

கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்த கனகா ஆரம்பித்தாள், “கேளுங்க ஐயா… சொன்ன பேச்ச கேக்கறதே இல்லை.  எல்லா வீட்லயும் புருசனும், பொண்டாட்டியும் சேர்ந்து கை நிறைய சம்பாரிக்கறாங்க. இந்த மனுசனை வெச்சுக்கிட்டு எப்படி நா பொழைக்கறது?”

ஒரு கணம் குழம்பிப் போய் நின்றார் பசுபதி.  இவங்க பஞ்சாயத்துத்தான் என்ன?  கேட்க ஆரம்பிப்பதற்குள் தன் பங்குக்கு போதையில் புலம்பினான் லோகு.

:ஐயா, நீங்க சொல்லுங்க நியாயத்தை. புருசன் சொல்றத பொண்டாட்டி கேட்கணுமா? இல்ல பொண்டாட்டி சொல்றத புருசன் கேட்கணுமா?”

இப்படியே விட்டால் தன்னைக் குழப்பி விடுவார்கள் என்பதால் உடனடியாகக் குறுக்கிட்டார் சபாபதி.

“இதோ பாரு கனகா… என்ன பிரச்சனை என்பதை தெளிவாச் சொன்னா நா பேசுறேன். நீ சொல்லு.. என்னதா பிரச்சனை  உங்களுக்குள்ள?‌”

 “சொல்றேங்க ஐயா. உங்களுக்குத் தெரியுமில்ல… நம்ம ஊர்ல எலெக்சன் வந்திருச்சு. எல்லா வீட்லயும், புருசனும் பொண்டாட்டியும் பட்டிக்குப் போய் கை நிறைய சம்பாரிக்கறாங்க. காசு மட்டுமில்லாம புடவை, வேட்டி, வெள்ளித்தட்டு எல்லாம் கொடுக்கறாங்க. இந்த ஆளு பட்டிக்கு வர மாட்டேங்றாரு” என்றாள்.

“பட்டியா?  அப்படின்னா?” என்றார் சபாபதி அப்பிராணியாக.

“அட போங்கைய்யா… நீங்க அரசியல்வாதி, ‘பட்டி’ன்னா உங்களுக்குத் தெரியாதா?  அதாங்கையா, காலையில வீட்டுக்கு வந்து எல்லாரையும் கூட்டிக்கிட்டுப் போய் கொட்டகையில உட்கார வெச்சுருவாங்க, அந்த கொட்டகை பேருதா ‘பட்டி’. காலைல டிபன் எல்லாம் குடுப்பாங்க.  பதினொரு மணிக்கு டீ, காபியோட நொறுக்குத் தீனி. பொழுது போக‌ ஸ்கிரீன் கட்டி சினிமா போடுவாங்க.  பன்னிரெண்டு மணிக்கு ஆம்பிளங்களுக்கு குவார்ட்டர்.  ஒரு மணிக்கு எல்லாருக்கும் பிரியாணி. சாயங்காலம் வரைக்கும் டீ, காபி, ஜூஸ் எல்லாம் கிடைக்கும். வீட்டுக்கு வரும்போது எல்லாருக்கும் கையில காசு. எல்லாரு வீட்லயும் புருசன், பொண்டாட்டி ரெண்டு பேரும் பட்டிக்குப் போய் சம்பாரிக்கிறாங்க, இந்த ஆளு மாத்திரம் வர மாட்டேங்றாரு” என்று புகார் கூறினாள் கனகா.

இப்போது லோகுவை மரியாதையுடன் நோக்கினார் சபாபதி.  குடிகாரன் என்றாலும் கூட சித்தாந்தத்துடன் வாழ்பவன் போலும் என்று பூரிப்படைந்தார்.  என்னதான் சமுதாயம் கெட்டுக் கிடந்தாலும், இன்னும் சிலபேர் நேர்மையுடன் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று பெருமை கொண்டார்.

இருந்தாலும், அவன் வாயால் அதைக் கேட்கலாம் என்று லோகுவைப் பார்த்துக் கேட்டார், “ஏம்பா, அதான் உனக்குத் தேவையான எல்லாம் கிடைக்குதே.. ஏன் போக மாட்டேங்கிறே?”

“என்னங்க ஐயா, நீங்களும் இவ மாதிரி புரியாம பேசறீங்க?  அவங்க ஒரு மணிக்கு ஒரு குவார்ட்டர் கொடுக்கறாங்க.. அவ்ளோதான், அதுக்கு மேல ஒரு சொட்டு கூட கிடைக்காது.  நமக்கு கொசு கடிச்ச மாதிரி… நமக்கெல்லாம் காலைல ஆரம்பிச்சா, நைட் வரை குடிக்கணும். இதெல்லாம் நமக்கு ஒத்து வருமா, அதான் போறதில்ல. அது தெரிஞ்சுக்காம இவ ‘நை, நை’ங்றா”  என்றான் லோகு கூலாக.

“பைத்திக்கார மனுசன்யா இந்தாளு. சும்மா கிடைக்கறத விட்டுட்டு, காசு போட்டு குடிக்கிது பாருங்க. அதுதாங்க சண்ட” என்று தன் பக்கத்து நியாயத்தைச் சொன்னாள் கனகா.

காலத்தை நொந்து கொண்டு நடையைக் கட்டினார் பசுபதி.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – பகுதி 5) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

    எழுத்துகளே இவரின் சுவாசம்… எழுதுபவரின் ஏக்கம் தீர்க்கும் ஆம்பல்…