செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
அவள் பெயர் சின்னா… வயது ஐந்து… நாய், பூனை, பறவைகள் மேல் கொள்ளை ஆசை. அப்பா தரும் பிஸ்கட் எல்லாம் நாய்க்கும் பூனைக்கும் தான். அம்மா திட்டுவாள்.
“ஏய் சின்னா… பூனையைக் கூப்பிடாதே… திருட்டுப்பூனை… சமையல்கட்டுல வந்து அத்தனை பாலையும் குடிச்சிட்டுப் போயிடும்… சீச்சீ…. போ… போ…” பூனையை விரட்டுவாள் அம்மா.
இந்த நிலையில் பக்கத்து வீட்டில் ஒரு பூனை குட்டி போட்டது. விஷயம் தெரிந்து சின்னா போய்ப் பார்த்து, அதற்கு பிஸ்கட் எல்லாம் கொடுத்தாள்.
“அம்மா கொஞ்சம் பால் தாம்மா…. பூனைக்குட்டி கள் பாவம்… ப்ளீஸ்….” அம்மா தரவில்லை.
“சின்னா…. நான் கடைக்குப் போயிட்டு வரேன். பூனை வந்து பாலைக் குடிக்காம பாத்துக்க” என்று சொல்லிவிட்டு அம்மா கடைக்குப் போனாள்.
‘ஆஹா… இதுதான் சமயம்’ என்று சமையலறையில் அம்மா வைத்திருந்த பாலை எடுக்கப் போனாள் சின்னா. மேடை சற்று உயரமாக இருந்தது. இவள் எப்படியோ உன்னி பால் பாத்திரத்தை எடுத்து கீழே வைத்தாள். ஒரு சிறு கிண்ணத்தில் கொஞ்சம் பாலை எடுத்தாள். கீழே எல்லாம் சிந்தியது.
அப்படியே பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, சிறுகிண்ணத்துடன் பக்கத்து வீட்டுக்கு ஓடினாள். பூனைக்குட்டிகள் பக்கத்தில் பாலை வைத்து விட்டு, ஒவ்வொரு குட்டியாக எடுத்து கிண்ணத்திலிருந்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டினாள்.
இதற்கிடையில் தாய்ப்பூனை, சின்னா வீட்டிற்குள் ஓடி கீழே சிந்தியிருந்த பாலையும் பாத்திரத்தில் இருந்த பாலையும் சுத்தமாக நக்கிக் குடித்து விட்டது.
அம்மா வந்தாள். வீடு திறந்திருக்க சின்னாவைக் காணாமல் அழைத்தாள். பக்கத்து வீட்டிலிருந்து சின்னா ஓடி வந்தாள்.
“உங்கிட்ட என்ன சொல்லிட்டுப் போனேன், பாரு திருட்டுப் பூனை பாலை சுத்தமா தொடைச்சிட்டுது. ஆமா பால் எப்படி மேடையிலிருந்து கீழ வந்தது. ஓ…. உன் வேலைதானா, இங்கே வா….” சின்னாவை அழைத்து முதுகில் நாலு சாத்து சாத்தினாள்.
சின்னா அழுது கொண்டே இருந்தாள். மாலையில் அப்பா வந்தார். விஷயத்தைக் கேள்விப்பட்டார். அம்மாவை கோபித்துக் கொண்டார். சின்னாவை அணைத்துக் கொண்டார்.
“ஏம்மா உனக்கு பூனைக்குட்டி வேணுமா? நான் எடுத்துண்டு வரேன்” என்று பக்கத்து வீட்டில் போய் அவர்களிடம் பேசி ஒரு பூனைக்குட்டியை எடுத்து வந்து கொடுத்தார். அதற்கு பால் பிஸ்கட் எல்லாம் எப்படிக் கொடுப்பது என சின்னாவுக்கு சொல்லிக் கொடுத்தார்.
அம்மாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவள் காலைச் சுற்றும் குட்டிப் பூனையை “சூ….சூ….” என விரட்டுவாள். பூனைக்குட்டி சின்னாவின் பராமரிப்பில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.
சின்னா பள்ளிக்குச் செல்லத் தொடங்கினாள். காலையில் பூனைக்குட்டிக்கு வேண்டிய ஆகாரங்களைக் கொடுத்துவிட்டு பள்ளிக்குச் செல்வாள். அம்மா அது சமையலறைக்கு வராமல் பூனைக் குட்டியை விரட்டிக் கொண்டே இருப்பாள்.
ஒரு நாள் அம்மா மட்டும் தனியாக இருந்த போது, பூனைக்குட்டி சமையலறையில் பூந்து பாலைக் கொட்டியது. பொறுக்க முடியாத அம்மா அதை வீட்டிற்கு வெளியே விரட்டி கதவைச் சாத்தினாள். மாலையில் வீட்டிற்கு வந்த சின்னா பூனைக்குட்டியைக் காணாமல் வீடு பூரா தேடினாள்.
“அம்மா, பூனைக்குட்டி எங்கேம்மா”
“அதுவா….. வெளியே ஓடிடுச்சு”
சின்னா வெளியே ஓடினாள், பக்கத்து வீட்டில் தேடினாள். அங்கும் இல்லை. அழுது கொண்டே தெருவில் இறங்கி தேடினாள். இந்தத் தெரு சாலையை சந்திக்கும் இடத்தில் ஒரு பைக்கில் அடிபட்டு, பூனைக்குட்டி இறந்து கிடந்தது.
சின்னா கதறி அழுதாள். அப்பா வந்தார், அம்மாவைத் திட்டினார், வேறென்ன செய்ய முடியும்?
“சின்னா… பூனைக்குட்டி போனால் போகட்டும். உனக்கொரு நாய்க்குட்டி வாங்கித் தர்றேன் சரியா… அழாதே” என்றார் அப்பா.
(முற்றும்)
” In general, one’s mother will be kind and considerate towards pet dogs or cats. Here you read a different story. Good to learn all kinds of pet stories. That is reality. Is it not?
-“M.K.Subramanian.”
An impressive story. Elders have to learn from the children how to love and be affectionate to the pet animals and show the same love and affection towards all the animals. China’s father is a model.