2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
2005ம் ஆண்டு. அமுதா ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
சனிக்கிழமை காலை பொழுது. அன்று மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக மாதம் ஒரு முறை மின் நிறுத்தும் செய்யும் நாள் இன்று.
கொள்ளு துவையல் செய்வதற்காக அம்மா உரலை கழுவிக் கொண்டிருந்தாள். மின் நிறுத்தம் செய்யும் நாளில் மட்டும் இப்படி அம்மி மற்றும் உரல் பயன்படுத்திக் கொள்வாள்.
அம்மாவோடு சேர்ந்து தானும் உரலை ஆட்டினாள். அம்மாவின் கைபிடித்தும் சில நேரம் அவள் மட்டும் முயற்சித்தும் ஆட்டுவாள். அப்படி அரைப்பது அமுதாவிற்கு விளையாட்டாக இருக்கும்.
உரலில் அரைத்த கொள்ளு துவையலை சுடச் சுட சாப்பாட்டில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அந்த சுவைக்கு ஈடேது. அதுவும் இப்படி மின் நிறுத்தம் என்றால் மாடி மேல் அமர்ந்து காற்றாட உண்பதில் என்ன சுகம்.
“ஹோம்வொர்க்லாம் எழுது அமுதா.. அப்புறம் திங்கட்கிழமை காலைல கிளம்பும் பொழுது எழுதுவ” என்றார் அமுதாவின் அம்மா
“அதெல்லாம் முடிச்சிடுவேன் மா.. கொஞ்ச நேரம் வெளிய விளையாடிட்டு வரேன் மா”
“இந்த தெருக்குள்ளயே விளையாடனும்.. வந்து தேடற மாதிரி பண்ணாத.. சீக்கிரம் வந்து ஹோம்ஒர்க் பண்ணு”
“சரிம்மா”
தெருவில் வந்து தோழிகளை தேடினாள் அமுதா. தூரத்தில் சிலர் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அம்மாக்கள் கூடி பேசிக் கொண்டிருந்தனர். சும்மாவே பேசிக் கொண்டிருப்பார்கள். இதில் மின்நிறுத்தம் வேறு, சொல்லவா வேண்டும். எதிர்வீட்டு காயத்ரியின் தாயார் வெளியே அரளிப்பூ பறித்துக் கொண்டிருந்தார்.
“காயத்ரி என்ன பண்றா மா?”
“அவளும் அவ அண்ணனும் கேரம் போர்டு வாடகைக்கு வாங்கிட்டு வந்தாங்க இரண்டு மணி நேரத்துக்கு.. வந்ததுல இருந்து அங்க இங்க நகரல.. போய் பாரு போ உள்ளதான் இருக்காங்க”
ஆர்வம் தாளாமல் உள்ளே ஓடிச் சென்று பார்த்தாள். காயத்ரியும் அவள் அண்ணனும் விளையாடிக் கொண்டிருந்தனர். தன்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளச் சொன்னாள்.
“இரண்டு பேர் இருக்கோம்.. இன்னொருத்தர் கூட்டிட்டு வா.. நாலு பேரா விளையாடலாம்”
அமுதா பக்கத்து வீட்டு செல்வாவையும் கூட்டிக் கொண்டு வந்தாள். நால்வரும் கேரம் விளையாடினார்கள். கேரம் வாடகை முடிய இரண்டு நிமிடங்கள் இருந்த பொழுது அமுதா ரெட் காயினை அடித்தாள். கருப்பு காயினை போட அவள் கை நடுங்கியது.
“டைம் முடிய போகுது.. சீக்கிரம் ஆடு” செல்வா பதட்டப்படுத்தினான். நடுக்கத்தோடே ஆடினாள். கருப்பு காயினும் உள்ளே விழுந்தது. மகிழ்ச்சி தாங்கவில்லை. அந்த மகிழ்ச்சியோடே கேரம் போர்டை சைக்கிளில் ஏற்றி விட்டாள். காயத்ரியும் அவள் அண்ணனும் கேரம் போர்டை திருப்பிக் கொடுத்து விட்டு வந்தனர்.
வாசலில் சேமியா ஐஸ் வண்டி சென்றது. அமுதா அதே தெருவில் வசித்து வந்த தன் தாத்தாவிடம் இரண்டு ரூபாய் வாங்கி வந்து சேமியா ஐஸ் வாங்கிச் சாப்பிட்டாள். பெரிதாக அவளுக்குப் பிடிக்கவில்லை. போன வாரம் சாப்பிட்ட குல்ஃபீ ஐஸ் இதை விட நன்றாக இருந்தது.
பின் காயத்ரி மற்றும் இதர தோழிகளுடன் பாண்டி விளையாடினாள்.
அமுதாவின் அம்மா வந்தார்.
“விளையாடியது போதும்.. வீட்டுக்குப் போலாம் வா”
“அம்மா.. நம்ம வீட்ல தான் கரண்ட் இல்லல்ல.. இன்னும் கொஞ்ச நேரம் விளையாடறேன் மா”
“வீட்டுக்கு வர மனசே வர மாட்டிக்கிது உனக்கு.. சரி வா சீக்கிரம்” என்று கூறிவிட்டு அமுதாவின் அம்மா கிளம்பினார்
ஐந்தில் விழுந்திருந்த கல்லை மிதித்து எடுத்துக் கொண்டு பாண்டியை தொடர்ந்தாள் அமுதா. கொஞ்ச நேரம் சென்றதும் செல்வா வந்தான். இரண்டு தெருக்கள் தள்ளிச் சென்று கிரிக்கெட் விளையாட காயத்ரி மற்றும் நண்பர்களை அழைத்துச் சென்றான்.
அமுதாவும் ஆசையில் கிளம்பினாள். காயத்ரி வாங்கிய ஒரு ரூபாய் நெல்லிக்காய் பொட்டணத்தில் உள்ள உப்பும் மிளகாய்தூளும் கலந்த நெல்லிக்காயை ருசித்துக் கொண்டே கிளம்பினார்கள்.
பக்கத்தில் தான் பக்கத்தில் தான் என்று கூறி நான்கு தெரு தள்ளி கிரிக்கெட் பார்க்கப் போனார்கள். பறந்து வந்து விழுந்த பந்துக்களை பொறுக்கிப் போட்டுக் கொண்டிருந்தாள் அமுதா. பந்து பொறுக்க அமுதா பின்னாடி ஓடும் பொழுது அவளின் அம்மா அவளைப் பிடித்தாள்.
“நம்ம தெருவுலயே விளையாட சொன்னா.. நீ இங்க வந்து பால் பொறுக்கிட்டு இருக்கியா.. அப்பா கூப்பிட்டாரு வா போலாம்”
அமுதா பயந்து விட்டாள். பந்தை தூக்கிப் போட்டு விட்டு ஓடினாள். உள்ளே சென்றதும் கை கால் முகம் கழுவிக் கொண்டு படிக்க அமர்ந்தாள்.
தமிழில் மனப்பாடச் செய்யுள் படித்து வரச் சொல்லியிருந்தார்கள். தமிழம்மா வகுப்பிற்கு வரும்போது வணக்கத்துடன் சேர்த்து செய்யுளும் கூற வேண்டும். அமுதாவும் மனப்பாடம் செய்தாள்.
“பணியாரம் ஊத்தரேன். வா சாப்பிடலாம்”
“பணியாரமா… வரேன் மா” சந்தோசத்தோடு சாப்பிட எழுந்தாள்
சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம் அன்று நடந்த அனைத்தையும் விவரித்தாள். தாத்தாவிடம் இருந்து பணம் வாங்கி ஐஸ் வாங்கியதற்கு திட்டு விழுந்தது. அப்படியே அம்மாவின் அரவணைப்பில் உறங்கினாள்.
பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு, இன்றும் சனிக்கிழமை மின்நிறுத்தம். அலைபேசியோடு இருந்து சலித்துப் போய் வெளியில் வந்து நின்றாள் அமுதா.
வானம் பளிச்சென்று நீல நிறத்தில் இருந்தது. தெருவைப் பார்த்தாள். இடதுபுறத்தில் இருந்து வலதுபுறம் ஒரு முறையும், வலது புறத்தில் இருந்து இடதுபுறம் ஒரு முறையும் சுற்றிலும் யாரையும் காணவில்லை.
‘இந்த பசங்களாம் விளையாட வெளிய வரதே இல்லையே.. என்ன தான் வீட்டுக்குள்ளயே பண்றாங்க..’ மனதிற்குள் கேட்டுக் கொண்டாள் அமுதா.
பக்கத்தில் வீட்டில் இருந்து ஏதோ கத்தும் சத்தம் வந்தது. அலைபேசியில் கேம் விளையாடும் சத்தம். இவர்கள் யாரும் வானத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லையோ!
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings