எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மனம் போன போக்கில் போய்க் கொண்டிருந்தான் அவன். தன்னிச்சையாக கரங்கள் ஸ்டீயரிங்கை பிடித்துக்கொண்டு இருக்க ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவனாக காரை ஓட்டிக் கொண்டு இருந்தான்.
பத்திரிகைத் துறையில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.
ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஸ்கூப் நியூஸ் கிடைக்க வேண்டுமே என்று பதட்டமும் பரபரப்புமாக அலைவது. விலைவாசி ஏறுவது போல சர்க்குலேஷன் ஏற புதுமையான நிகழ்ச்சிகளை அச்சில் ஏற்றவேண்டும். கொலை கொள்ளை போன்றவற்றை தவிர்த்து எதுவுமே இல்லையா என்பது மாதிரி செய்திகள் வருவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.
வழியிலிருந்த ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்தினான் அவன்.சில சமயங்களில் இந்த மாதிரி இடங்களில் கூட ஏதாவது விஷயங்கள் கிடைக்கும்.
யாரோ ஒருவன் அந்த கடைக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“இந்த தடவை நல்ல காய்ப்பு .பழங்களை வந்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள்.”
‘சாயந்திரமா வரேன் என்று சொல்லி அனுப்பியவன், மகராசி, என்னிக்கும் நல்லா இருக்கணும் “என்று வாய் விட்டு சொன்னான்.
கேட்டுக் கொண்டிருந்த பிரபு ஆச்சரியப்பட்டான்.
“பழம் வாங்கிக்க சொன்னதுக்கு மகராசி பட்டமா?” அவன் வாயைக் கிண்டினான். “சல்லிசான விலைக்கு வாங்கி வியாபாரம் பார்க்கிறியாக்கும்!’
“ஐயோ ! இல்லைங்க! அவங்களே எப்பவும் குறைச்ச விலைக்குத் தான் கொடுப்பாங்க.”
“புரியலையே நீ சொல்றது!. விவசாயம் பார்க்கிறவங்க லாபம் பார்க்காம எப்படி இருப்பாங்க! இவங்களுக்கு பணம் முக்கியமில்லைங்க!பொருள் செலவாகணும். அதுவும் நல்லபடியாக.எனக்கு கொடுப்பது மாதிரி ஆதரவற்றவர்கள் விடுதி , பள்ளிக்கூடங்கள் என்று தேர்ந்து எடுத்துத்தான் கொடுப்பார்கள்.பழம் ஒவ்வொண்ணும் அவ்வளவு பெரிசா இருக்கும் .இயற்கை முறையில் பயிரிடுவதால் சுவையும் அதிகம்.'”
‘சரி, இவ்வளவு மெனக்கெட்டு பண்ணுறவங்க பணம் ஏன் குறைவா கொடுக்கிறாங்க? “
“அவங்களுக்கு பணம் எதுக்குங்க? அயல் நாட்டிலே வேலை பார்க்கிறாங்க ! அதில்தான் அவர்களுக்கு நல்ல வருமானமாச்சே! “
உண்மையிலேயே மிகவும் ஆச்சரியப்பட்டான் பிரபு.
“ஆமாங்க ஐயா! ஒரு அஞ்சு பேர் சேர்ந்து அந்த கிராமத்தையே மாத்திட்டாங்க! மாத்தி மாத்தி வந்து கவனிச்சுப்பாங்க! சில சமயங்களில் அவங்க கூட வேலை பார்க்கிறவங்க கூட வருவாங்க. ஏழுஎட்டு வருஷத்துக்கு முந்தி சும்மா தரிசாக கிடந்த பூமிங்க! இவங்க அஞ்சு பொண்ணுங்களும் சேர்ந்து ஒரு சோலைவனமாவே ஆக்கிட்டாங்க!”
“என்னது ! பெண்களா!” அவன் மேலும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.
“இதுக்கே அசந்துட்டீங்க! அங்கே போய் பாருங்க ! நிறைய தெரிஞ்சுப்பீங்க!
எங்க கிராமத்திலே இப்ப பசி பட்டினியே கிடையாது. ஊர் பூராவுமே உழைக்குது. உங்களுக்கு பார்க்கணுமா! இந்த வள்ளியூர் தாண்டி ராதாபுரம் போற ரோடு வரும் அதிலே கிழக்கே திரும்பினீங்கன்னா எங்க கிராமம். போகும் போதே தெரியும் பச்சைப் பசேலென்று தென்னை வாழை மா என்று வரிசை கட்டி நிற்கும்”.
அவன் உடனே கிளம்பினான். அந்தக் கடைக்காரன் சொன்னது மாதிரி பச்சைப் பசேலென்று இருந்தது.சின்ன சின்ன காய்கறித் தோட்டங்கள் தக்காளி கத்திரி வெண்டை என்று பயிரிட்டிருந்தார்கள். எறும்பு மாதிரி சுறுசுறுப்பாக ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். வியப்பாக இருந்தது. கூடவே பூரிப்பாகவும் உணர்ந்தான் அவன்.
இந்தியாவின் உயிர் நாடியே கிராமங்கள் தானே! சலசலக்கும் சின்னக் கால்வாயில் நீரின் குளுமை தெரிந்தது.
வத்சலா அவனை வரவேற்றாள்.
“எங்க கிராமம் பார்க்க வரீங்கன்னு சோமு போன் பண்ணி சொன்னார்.”
“அதுமட்டுமில்லை ! எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு!”
அவள் வியப்புடன் நோக்கினாள்.
“ஆமாம்! அந்த சோமு சொன்னார்.நீங்க அஞ்சு பேர் சேர்ந்து இந்த இடத்தை இப்படி மாத்தியிருக்கீங்கன்னு! “
“எப்படி இந்த மாதிரி ஐடியா வந்தது? ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.சொல்லுவீங்களா? “
அவள் ஒரு நிமிடம் நிதானித்தாள்.
“ஒரு சின்னப் புள்ளியிலிருந்துதான் பெரிய பெரிய விஷயங்கள் ஆரம்பிக்கின்றன என்று சொல்லுவார்கள்.அது மாதிரிதான் .எங்க வேலையில அடிக்கடி ஃபாரின் ஆஃபர் வரும். ஒரு நான்கு மாதமாவது தங்குற மாதிரி வரும். அப்போ அப்பா அம்மாவைத் தனியா விட்டுட்டு போக யோசனையாக இருக்கும்.அவர்களும் அதே மாதிரி விட்டு விட்டு இருக்கிறோமே என்று ஃபீல் பண்ணுவார்கள்.உடம்பு சரியில்லை என்றால் யார் பார்ப்பார்கள் என்று கவலையாக இருக்கும். அப்படி நாங்க ஃப்ரெண்ட்ஸ் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் இந்த மாதிரி ஒரு ஐடியா வந்தது.”
‘இப்போ எங்க அஞ்சு பேரோட அப்பா அம்மாவும் இங்கே தான் இருக்கிறார்கள். நாங்கள் சேர்ந்து ஒரு நிலத்தை வாங்கி பயிரிட முயற்சி செய்தோம். முதலில் தென்னை மரங்கள், அப்புறம் கொய்யா மா வாழை என்று அதிகப் படுத்தினோம்.முதலில் ரொம்ப சிரமமாத்தான் இருந்தது.நிறைய பேர் கிட்ட ஆலோசனை கேட்டோம்.ரொம்ப மெனக்கெட்டோம்..மண்புழு உரம், சொட்டு நீர்ப்பாசனம், இயற்கை உரங்கள் எதையும் விடவில்லை. விவசாயிகளைக் கூட்டி வந்து அபிப்பிராயம் கேட்டோம்.”
“கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் நினைத்தபடி எல்லாம் சரியாக வந்தது.”
“எல்லா பெற்றோர்களையும் ஒரே ஊரில்குடி வைக்க ஒரு பெரிய வீடாக வாங்கினோம்.”
அவள் மூச்சு விட்டுக் கொண்டாள்.
“எங்களிடம் பணம் நிறைய இருந்தது. வசதியும் இருந்தது. நேரமும் உழைப்பும் வேண்டியிருந்தது. அதை இந்த கிராமத்து மக்கள் கொடுத்தார்கள்.”
கேட்டுக் கொண்டிருந்த ஊழியன் ஒருவன் சொன்னான்.
“எங்களுக்கு வேண்டுமென்பதெல்லாம் செய்து கொடுத்தார்கள். மாதாமாதம் சம்பளம் தருவதோடு வீட்டுக்கு வேணுங்கிற காய்கறி பழங்கள் தேங்காய் எடுத்துக் கொள்ள சொன்னார்கள். எதுவுமே கணக்கு என்று வைத்துக் கொள்ள மாட்டார்கள்.அதே மாதிரி நாங்களும் கணக்கு பார்த்து வேலை செய்வதில்லை. நாள் முச்சூடும் இங்கேயே தான். இருப்போம்.”
அவள் தொடர்ந்தாள். “தாயகம் என்று பெயர் வைத்தோம். எல்லோருக்குமே இது அன்னை மடி என்று ஆகிவிட்டது. ஒருத்தருக்கொருத்தர் ஆதரவாக உறுதுணையாக இருக்கிறதால் எங்களால் நிம்மதியா இருக்க முடியுது. முடிந்த போது நாங்கள் வந்து இன்னும் என்ன என்ன மாற்றங்கள் செய்யலாம் என்று பார்க்கிறோம்.”
“அதோடு எங்களுக்கும் நிறைய ஊக்கம் கொடுப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக ஆடுமாடு கோழி வளர்த்தல் என்று வளர்ந்து வருகிறோம்.” அவன் சொன்னான்.
“மொத்தத்தில் இந்த கிராமம் தன்னிறைவு அடைந்துவிட்ட ஒன்று என்றே சொல்லலாம். ஏழை மக்களுக்கு தேவை பணமும் ஊக்கமும் உந்துசக்தியும். நமக்கு தேவை உழைப்பும் அதற்கான நேரமும்! இரண்டையும் ஒன்றாக இணைத்தபோது நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே வந்துவிட்டது.”
அவள் சொன்னது அவனுக்கு நன்றாக புரிந்தது.
வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்கள் எப்படி எல்லாம் யோசித்து இருக்கிறீர்கள்!
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் தோழிகளைப்பார்க்க முடியுமா?
வாட்ஸ் அப்பில் பேசுவோம். முதலில் எங்கள் பெற்றவர்களை பாருங்கள் என்று உள்ளே கூட்டிப் போனாள்.
“மேடம்! ஒரு விஷயம் நான் ஒரு பத்திரிகைக்காரன். ஏதாவது நல்ல விஷயம் கிடைக்காதா என்று அலைந்து கொண்டிருந்தேன்.இது ரொம்ப நல்ல ஒரு கட்டுரைக்கே வாய்ப்பு கிடைத்து விட்டது.
தலைப்பு கூட யோசித்து விட்டேன் .பதினாறு வயதினிலே மயிலு மாதிரி 36 வயதினிலே வசந்தி மாதிரி 26 வயதினிலே இந்த கதாநாயகி என்று தலைப்பு கொடுக்கப் போகிறோம்..சரியா?”
அவள் திகைத்துப்போனாள்.. “ஏதோ ஆர்வத்தில் கேட்கிறீங்க அப்படின்னு நினைச்சேன்!” பெரிசா சொல்ற மாதிரி நாங்க ஒண்ணும் பண்ணலை. இன்னும் நிறைய தூரம் போகணும். அதோடுஇதிலே நான் ஒருத்தி இல்லே ! அஞ்சு பேர்! அஞ்சு விரல்கள் கொண்ட ஒருகரம்.”
அவள் ஒரு கையை விரித்துக் காண்பித்தாள்.
அவன் ரசித்து சிரித்தான்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings