in ,

மனைவியுடன் மாலை நேர வாக்கிங் (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

நான் என்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டால் தான் நீங்கள் மேற்கொண்டு படிக்கும் போது என் நிலைமை உங்களுக்கு நன்கு புரியும்.

நான் ராஜா. அதாவது என் பெயர் தான் ராஜா. அதாவது மாதக் கடைசியில் கடன் வாங்காமல் பொழுதை ஓட்டுவது எப்படி என்று தெரியாமல் முழி பிதுங்கி நிற்கும் ஒரு சாதாரண ஸ்டேட் கவர்ன்மென்ட் எழுத்தர்.

என் நிதி நிலைமையை உணராமல், ஏதோ ஒரு ஆசையாலும், ‘உனக்கென்னப்பா நீ ராஜா! கழுதை மேய்த்தாலும், கவர்மென்ட் உத்தியோகம்’ என்று மற்றவர்கள் ஏற்றி விட்டதாலும் தெரியாத்தனமாய், கல்யாணமும் செய்து கொண்டு, தெரியாத்தனமாய், ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு (எந்த ஆஸ்திக்கு?) ஒரு பையனும் பெற்றுக் கொண்டு விழி பிதுங்க வாழும் நடுத்தர குடும்பஸ்தன்.

என்ன தான் பற்றாக்குறை பட்ஜெட்டில்  வாழ்ந்தாலும், எனக்கு என் மனைவி மாலதி மேல் மிகவும் பிரியம் அதிகம். நான் என்ஆபிசிலிருந்து கிளம்பும் போதே வரும் வழியில் ரோடுக்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு வந்து விடுவேன்.

வீட்டிற்கு வந்தவுடன் என் ஒரே சொத்தான டூவீலறை பத்திரமாக நிறுத்திவிட்டு, வாங்கி வந்த ஒரேஒரு முழம் மல்லிகைப் பூவை மனைவியிடம் கொடுத்து விட்டு, காலில் செருப்பை மாட்டிக் கொண்டு வாக்கிங் கிளம்பிவிடுவேன்.

அந்த ஒரு முழம் மல்லிகைப்பூவில் பாதியை சாமி படத்திற்குப் போட்டுவிட்டு, கொஞ்சம் கிள்ளி அவள் தலையில் வைத்துக் கொண்டு, மீதியை தன் மகள் தலையில் வைத்து விடுவாள். ஆனால் எப்போது பார்த்தாலும் ஏதாவது வாயில் அரைத்துக் கொண்டே இருப்பாள்.

மாலையில் தெருக்கோடியில் இருக்கும் இட்லிகடை ஆயாவிடம் போண்டா, பஜ்ஜி, வடை என்று கணக்கு வைத்துக் கொண்டு வாங்கி வந்து சாப்பிடுவாள் போலும்.

தினமும் இப்படித்தான் ஏதாவது ஒரு எண்ணெய் பலகாரம் சாப்பிட்டு விட்டு யானை துதிக்கையைத் தூக்கி பிளிறுவது போல் ஒரு ஏப்பம் விடுவாள் (அதிலிருந்து வரும் வாடையே எட்டு திக்கும் வீசி அவள் சாப்பிட்ட பண்டங்களைப் பட்டியலிடும்).

எங்களுக்குத் திருமணம் ஆகி பத்து வருடங்கள் முழுதாக முடிந்து விட்டது. திருமணமான புதிதில் கொடி போல் மெல்லியளாகத் தான் இருந்தாள். இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் தான் இப்படிக் காத்தடித்த பலூன் போல், உருவமே இல்லாமல் கழுத்து எது, இடுப்பு எது என்று தெரியாமல் மொத்தமாக இப்படி ஆகிவிட்டாள்.

என் வீட்டவர்களோ ‘தனிக் குடித்தனம் போய், யாரையும் கிட்டே சேர்க்காமல் அவள் தனியாகவே, எங்கள் பிள்ளையின் மொத்த சம்பளத்தையும் காலி செய்கிறாள் இல்லையா? அவள் யானைக் குட்டி மாதிரி தான் இருப்பாள்’ என்று நொடிப்பார்கள் (ஆனால், மாதக் கடைசியில் என் செலவிற்கு உதவுவது அவள் அம்மா வீட்டில் போட்ட வளையல்களும், வட்டிக் கடை சேட்டும் தான் என்பது அவர்களுக்குத் தெரியாது)

அவள் வீட்டவர்களோ, ’மாப்பிள்ளை மிகவும் நல்லவர். வருவதும் தெரியாது போவதும் தெரியாது, எதிலும் தலையிடுவதில்லை, எந்த கணக்கும் கேட்பதில்லை. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டுவார், அவ்வளவு அப்பிராணி. அந்த சந்தோஷத்திலேயே பெருத்து விட்டாள்’ என்று சொல்கிறார்கள்.

ஆனால் எனக்கு மட்டும் மனம் உறுத்தும்.  ‘தினமும் மாலையில் வாக்கிங் போகும் போது அவளையும் அழைத்துச் சென்றால், நல்ல உடற்பயிற்சி இருந்தால் பழைய அழகான கொடி போன்ற உருவம் திரும்பும், அவளும் ஆரோக்யமாக இருப்பாள் இல்லையா?’ என்று என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

என் நினைப்பை செயல் படுத்த வேண்டி, அன்று மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்குள் வந்தவுடன், வழக்கம் போல் வாங்கி வந்த மல்லிகைப் பூவை அவள் கையில் கொடுத்து விட்டு, மெதுவாகத் தயங்கி “மாலு ! நீயும் என்னுடன் இன்று வாக்கிங் வருகிறாயா?” என்றேன் .

“இப்படி திடுமென்று கேட்டால் எப்படி வர முடியும்?” என்றாள் அவள் என்னை விட தயக்கமாக.

“இதெற்கெல்லாம் ஒரு வாரம் ‘அட்வான்ஸ் நோட்டீசா’ தர முடியும்? வா என்றால் வர வேண்டியது தானே? தினமும் வாக்கிங் போனால் ஆரோக்யத்திற்கு நல்லது. உன் நன்மைக்காகத் தானே சொல்லுகிறேன். நீயானால் இப்படிச் சொல்லுகின்றாய்” என்றேன் ஏமாற்றத்துடன்.

“இரவு டின்னருக்கு ஒவ்வொருவருக்கு ஒன்று தயார் செய்ய வேண்டும். எல்லாம் சூடாகவும் இருக்க வேண்டும். உங்களுக்கு இட்லி சட்னி சாம்பார், உங்கள் மகனுக்கோ ரெடிமேட் பராத்தாவும் குருமாவும், உங்கள் பெண்ணிற்கு தோசை. இதன் கூட நீங்கள் கொஞ்சம் மோர் சாதம் கேட்பீர்கள். மோரிலும் கடுகு, பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை எல்லாம் மிதக்க வேண்டும். இதெல்லாம் வீட்டில் இருந்தால் தானே நான் செய்ய முடியும். இங்கே என்ன சமையல்காரியா இருக்கிறாள்?  அதுவுமல்லாமல்,, உங்கள் பிள்ளைகளுக்கு ஹோம் ஒர்க் செய்யும் போது நான் கூடவே இருக்க வேண்டும். நாளை ஏதாவது கிளாஸ் டெஸ்ட், இல்லை மன்த்லி டெஸ்ட் இருந்தால் ஒழுங்காகப் படிக்க வைக்க வேண்டும்” என்று மூச்சு விடாமல் தான் செய்யும் வேலைகளைப் பட்டியலிட்டாள்.

“எல்லாப் பெண்களும் தான் இந்த வேலைகளைச் செய்கிறார்கள். ஆனால் நிறைய பெண்கள் மாலை நேரத்தில் வாக்கிங் போவதை நான் பார்க்கிறேன். உனக்கு என்னோடு வருவதில் விருப்பமில்லை என்றால் சொல்லி விடு” கொஞ்சம் கோபமாகத் தான் சொன்னேன்.

“ஐயோ சாமி ! பேச்சு என்ன திசை மாறுகிறது? இன்றைக்கு ஆளை விடுங்கள். நாளையிலிருந்து நீங்கள் வரும் போது நான் ரெடியாகி உங்களுடன்  வருகிறேன்”.

அடுத்த நாள் மாலை. அலுவலக வேலை முடிந்து வீடு திரும்பும் போது, ஏதோ சினிமாவிற்குப்  போவது போல் ஜோராக டிரஸ் செய்து கொண்டிருந்தாள். லிப்ஸ்டிக் வேறு! குழந்தைகளை வேறு வீட்டில் காணவில்லை.

“குழந்தைகள் எங்கே மாலு?” என்றேன்.

“நாம் வாக்கிங் போய் திரும்பும் வரை பக்கத்து வீட்டு அக்காவிடம் இருப்பார்கள்” என்றாள்.

“குழந்தைகள் இருவராகத் தானே இருக்கிறார்கள். நாம் போய் வர ஒரு மணி நேரம் தான் ஆகும். அதுவரை தனியாக இருக்க மாட்டார்களா? மற்றவர்களுக்கு ஏன் கஷ்டம் தரவேண்டும்?” என்றேன்.

“கடவுளே ! உங்கள் குழந்தைகளா?  நான் இருக்கும் போதே குடுமிப் பிடி சண்டை நடக்கும். யாரும் இல்லாமல் தனியாக விட்டால் அவ்வளவு தான்” என்று, தான் பெற்ற செல்வங்களுக்கு சான்றிதழ் வழங்கினாள் மாலதி.

தினமும் ஒவ்வொரு டீ மட்டும் குடித்து விட்டு மீதமிருந்த ஐந்து நாட்களை ஓட்டுவதற்கு வைத்திருந்த முன்னூறு ரூபாயை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கம்பீரமாக புல் மேக்-அப்புடன் வரும் என் மனைவியைப் பார்த்துக் கொண்டு நடந்தேன் .

போகிற வழியில் பாதையோரத்தில் ஒரு நடைபாதைக் கடை முன் நிறையக் கூட்டம்.  அது ஒரு பானிபூரி கடை. மாலதி அங்கேயே நின்று கொண்டாள்.

“ஏங்க, பானிபூரி சாப்பிடலாமா?” என்றவள் சின்னக் குழந்தை போல வண்டியின் அருகில் நின்று கொண்டு என்னைப் பார்த்தாள்.

முதலில் பட்ஜெட்டை மனதில் வைத்துக் கொண்டு ஒன்று வாங்கி இருவரும் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் அங்கே இருந்தவர்கள் பானிபூரியோடு வேறு ஏதேதோ சாப்பிடுவதைப் பார்த்து, பிரஸ்டிஜை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் இரண்டு பானிபூரி ஆர்டர் செய்ய, என் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாய் போய் விட்டது.

இன்னும் கொஞ்சம் தூரம் தான் நடந்திருப்போம். அங்கே ஒரு கன்னங்கரேலென்ற பெண்மணி அவள் நிறத்திலேயே ஒரு கடாயின் முன் நின்று கொண்டு  ஏதோ  பஜ்ஜி போல் போட்டுக் கொண்டிருந்தாள்.

“ஏங்க, ஏங்க, சிக்கன் பக்கோடா வாசனை மூக்கைத் துளைக்கிறது. நம் பிள்ளைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.  வாங்கிக் கொண்டு போகலாமா?” என்றாள் .

“மாலதி, நீ வாக்கிங் வந்தாயா? இப்படி ரோட் சைட் கடைகளில் சாப்பிட வந்தாயா? இதையெல்லாம் சாப்பிட்டால் உடம்பு தான் கெடும்” என்றேன் பாக்கெட்டை நினைத்துக் கொண்டே.

“அதெல்லாம் ஒன்றும் கெடாது, தினமுமா சாப்பிடுகிறோம்? என்றோ ஒரு நாள் தானே” என்று பிடிவாதமாகக் கூறி விட்டு இரண்டு பாக்கெட் வாங்கிக் கொண்டாள்.

அதோடு என் பாக்கெட் காலி.  இவள் இந்த ரீதியில் சாப்பிட்டால் எடை கூடாமல் என்ன செய்யும்? என் மனதில் இந்த மாதிரி ஒரு வாக்கிங் தேவையா என்ற எண்ணம் லேசாக அப்போதே எழுந்தது.

மேல் பாக்கெட்டில் இருந்த முன்னூறு ரூபாய் காலி. உள் பாக்கெட்டில் எப்போதும் யாருக்கும் தெரியாமல் இருநூறு ரூபாய் வைத்திருப்பேன். அது பத்திரமாக இருக்கிறதா என்று லேசாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். இவர்களோடு போனால் இப்படி எல்லாம் பணம் எடுத்துக் கொண்டு போனால் தான் ஆண்கள் ஆகிய நாம் பிழைக்க முடியும். நண்பர்களே! இந்த யுக்தியை நீங்களும் கையாளலாம். (இலவச யோசனை!)

இன்னும் கொஞ்சம் தூரம் தான் நடந்து சென்றிருப்போம். எங்கள் பின்னால்’ கணகண’வென்று மணி அடித்துக் கொண்டு ஐஸ்கிரீம் வண்டிக்காரன் வந்தார்.

‘கோன் ஐஸ், குச்சி ஐஸ் , குல்பி ஐஸ்கிரீம்’ என்று கத்திகொண்டே வந்தார். மாலதியைப் பார்தவுடன், வாங்காமல் போக மாட்டாள் என்று தெரிந்து கொண்டார் போலும் .மாலதியின் கால்கள் அங்கேயே தயங்கி நின்றது.

“என்னங்க!” என்றாள் .

அவள் மேலே தொடரும் முன்பே நான் சுதாரித்துக் கொண்டேன்.

“இங்கே பாரு மாலுக் கண்ணா ! நீ காலையில் இருந்து தும்மிக் கொண்டு இருந்தாய்!  இந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு தலைவலி, ஜூரம் என்று வந்தால் நான் என்ன செய்வேன்! குழந்தைகள் பள்ளிக்கூடம், பாடம் எல்லாம் என்ன ஆவது?” அவளுக்காக உருகுவே போலவே நடித்தேன்.

அவளோ, “நான் எங்கே தும்மினேன்?. அப்படியே தும்மி இருந்தாலும் அது அலர்ஜியால் இருக்கும்” என்றாள் ஐஸ்கிரீம் வண்டியில் இருந்த கண்ணை அகற்றாமல்.

மேற்கொண்டு ஏதும் செலவு செய்யாமல், அவளுக்கு மொத்தமாக ஐஸ் வைத்து ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

வீட்டிற்கு வந்த உடன், குழந்தைகளுக்கு வாங்கி வந்த பகோடாவைக் கொடுத்த மாலதி.

“என்னங்க, நாளைக்கு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வாக்கிங் போகலாமா? ரொம்ப ஜாலியாக இருந்தது” என்றாள் கொஞ்சலாக .

‘சாப்பிடும் உனக்கு ஜாலியாகத்தான் இருக்கும். பட்ஜெட் பார்த்து செலவு செய்யும் எனக்குத் தான் பயமாக இருக்கும். ஒரு நாள் வாக்கிங்கே முன்னூறு ரூபாயா? ஐயோ’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு தலையில் கைவைத்துக் கொண்டேன்.

“நாளையிலிருந்து காலையில் தான் வாக்கிங் ! மார்ச் மாதம் முடியும் வரை ஆபீஸில் நிறைய வேலை. பைனான்ஷியல் இயர் முடியும் வரை அப்படித்தான் இருக்கும்” என்று ‘எஸ்’ ஆனேன்.

ஐயோ சாமி, இனி எப்போதும் மாலை நேர வாக்கிங் பற்றி யோசிக்கவே மாட்டேன் . அது வாக்கிங்கா? இல்லை ஈட்டிங்கா?

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 8) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 18) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை