www.sahanamag.com
தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே❤ (அத்தியாயம் 13) – சஹானா கோவிந்த்

ருத்துவமனைக்கு வந்ததும், ராதிகாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. உடனே சென்று கௌதமை பார்க்க வேண்டுமென மனம் பரபரத்தது

அடுத்த கணமே, “இல்ல… பேசவே கூடாது, சொல்லாம கொள்ளாம போனதுக்கு அதான் பனிஷ்மெண்ட்” என தீர்மானித்தாள்

அவளின் அந்த தீர்மானம், அரைமணி நேரம் கூட நீடிக்கவில்லை. உடனே அவன் அறை நோக்கி நடந்தாள்

ராதிகாவை பார்த்ததும், கௌதமின் செக்ரட்டரி ரஞ்சனியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. தன் நிலை இலவு காத்த கிளியின் நிலை ஆனதற்கு, இவள் தானே காரணம் என பொருமினாள் ரஞ்சனி

ஆனாலும் அதை மறைத்து, புன்னகையை வலிய இழுத்து, “சொல்லுங்க ராதிகா? என்ன இந்த பக்கம்?” என பல்லை கடித்தபடி வினவினாள்  

“கெளதம் பிரீயா இருந்தா கொஞ்சம் பேசணும், அதான் வந்தேன்” எனவும்

“சார் ஊருக்கு போயிருக்காரே, உங்ககிட்ட சொல்லலியா?” என்றாள்

“எனக்கு தெரிந்தது கூட உனக்கு தெரியாதா?” என்ற கேள்வியும் கேலியும் ரஞ்சனியின் பார்வையில் தொக்கி நின்றதை, கவனிக்க தவறவில்லை ராதிகா

இவள் எல்லாம் கேலியாய் பார்க்கும் நிலையில் என்னை வைத்தானே என, அத்தனை கோபமும் கெளதம் மீதே திரும்பியது

இன்னும் ரஞ்சனி கேள்வியுடன் தன்னை நோக்குவதை உணர்ந்தவள், “ஓ அதுக்குள்ள கிளம்பியாச்சா? மதியத்துக்கு மேல தான் போறாதா சொன்னாரு, பிளான் மாறிடுச்சு போல. என்னோட போன் வேற கொஞ்சம் பிரச்சனை, அதான் லைன் கிடைச்சிருக்காதுனு நினைக்கிறேன். சரி, நான் அப்புறம் பேசிக்கறேன்” என சமாளித்து, ரஞ்சனியின் முகத்தில் மீண்டும் எள்ளும் கொள்ளும் வெடிக்கச் செய்து விட்டு, அங்கிருந்து நகர்ந்தாள் ராதிகா 

தன் இடத்தில வந்து அமர்ந்ததும், மீண்டும் கௌதமின் எண்ணிற்கு ராதிகா அழைக்க, முன் போலவே அழைப்பு எடுக்கப்படாமல் நின்றது

மேலும் சில முறை முயற்சித்தும் பதிலின்றி போக, கோபத்தின் உச்சிக்கே சென்றாள். பலவாறாக திட்டி வாட்ஸ்அப்பில் தட்டச்சு செய்தவள், பின் அதையும் அனுப்பாமல் அழித்தாள் 

“இனி அவனாய் பேசும் வரை, தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது” என முடிவு செய்தவளாய், முயன்று வேலையில் மூழ்கினாள் ராதிகா

கடிதம் ஒன்றில் கையெழுத்து வாங்க டாக்டர் சந்திரசேகரனின் அறைக்குள் சென்றவளை, புன்னகையோடு வரவேற்றார் அவர்

நீட்டிய காகிதத்தில் கையெப்பமிட்டவர், “கொரியர்ல அனுப்பிடும்மா” என்றார்

பின், அவள் முகவாட்டத்தை உணர்ந்தவராய், “என்னம்மா? என் மருமகன் ஊருக்கு போய் ஒரு நாள் கூட ஆகல, அநியாயத்துக்கு டல் அடிக்கற?” என கேலியாய் வினவினார் 

“அதெல்லாம் ஒண்ணும் இல்லங்க சார்” என வலிய புன்னகையை இழுத்து சமாளித்தாள்

கெளதம் ஊருக்கு சொல்வது தன்னைத் தவிர எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான் போல என, ராதிகாவின் மனம் மேலும் வருந்தியது 

மதிய உணவு இடைவேளைக்கு பின், கொரியர் அனுப்ப வேண்டியதை எடுத்துக் கொண்டு வரவேற்பு பகுதிக்கு சென்றாள்

அங்கு பணியில் இருந்த ரூபா போனில் யாரிடமோ பேசியபடி, ஒரு நிமிடம் என செய்கை செய்ய, அவள் பேசி முடிக்க காத்திருந்தாள் ராதிகா

“இல்ல சார், டோனர் பத்தி மெசேஜ் எதுவும் வரல, வந்த உடனே உங்களுக்கு அனுப்பறேன். ஓகே சார், பை” என அழைப்பை முடித்தவள்

ராதிகாவின் பக்கம் திரும்பி சிரித்தபடி, “போன்ல உங்காளு தான்பா, ஊருக்கு போயும் கடமை உணர்ச்சி தாங்க முடியல போ. கல்யாணத்துக்கு அப்புறம் நீ கொஞ்சம் மிரட்டியே ஆகணும் ராதிகா” என இயல்பாய் கேலி செய்தாள் 

தான் இருக்கும் மனநிலையில், ரூபாவின் கேலிக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழித்தவள், வெறுமனே சிரித்து மழுப்பினாள் ராதிகா

சற்று முன் ரூபாவிடம் கெளதம் பேசியதில் இருந்து, தன் அழைப்பை மட்டும் அவன் தவிர்ப்பதை உணர்ந்தாள்

ராதிகாவால் அதை தாங்கிக் கொள்ளவே இயலவில்லை, தான் அத்தனை வேண்டாதவளாய் ஆகி விட்டேனா என மனம் வேதனையுற்றது 

தன் கேபினுக்கு வரும் வரை எப்படியோ சமாளித்தவள், அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல், அலுவலக கோப்புகள் இருந்த அலமாரியின் மறைவில் சென்று ஓசையின்றி அழுதாள்

பின் ஒரு முடிவுடன், “கொஞ்சம் தலைவலியா இருக்கு சார், நாளைக்கு கொஞ்சம் ஏர்லியா வந்து பெண்டிங் ஒர்க் பினிஷ் பண்ணிடறேன்” என டாக்டர் சந்திரசேகரிடம் தெரிவித்து விட்டு வெளியேறினாள் 

ராதிகாவின் வீட்டில் தான் பார்த்ததை இன்னும் நம்ப இயலாதவனாய், இதெல்லாம் வெறும் கனவாய் கலைந்து போய்விடாதா என ஏங்கினான் கெளதம்

“விதி என்பது இது தானா?” என நொந்து போனான்  

இதை எப்படி சரி செய்யப் போகிறோம் என புரியாமல், யாரிடமும் இதைப் பற்றி பேசவும் இயலாமல், அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான்

முன் தின இரவு, ராதிகாவின் வீட்டில் இருந்து கிளம்பியதில் இருந்து இப்போது வரை, அவள் பலமுறை அழைத்தும், அழைப்பை ஏற்கும் தைரியமின்றி தவிர்த்தான் கெளதம்

நிச்சியம் தன் மேல் அவள் மிகுந்த கோபத்தில் இருப்பாள் என உணர்ந்த போதும், தான் இருக்கும் மன நிலையில் நிச்சயம் அவளோடு பேச இயலாதென அழைப்பை தவிர்த்தான் 

வெகுநேரம் அதையும் இதையும் யோசித்து, தன் பிரச்சனைக்கு தீர்வு எதுவும் தோன்றாமல் சோர்ந்தான். ஆனால், ராதிகா இல்லாத வாழ்வை தன்னால் நினைத்து கூட பார்க்க இயலாது என்பதில் உறுதியாய் இருந்தான் கெளதம்

திடீரென, “ஒளிவு மறைவின்றி எல்லாத்தையும் ராதிகிட்ட சொல்லிட்டா என்ன? நிச்சயமா என் ராதி என்னை புரிஞ்சுக்குவா” என நினைத்தான். அக்கணமே, அது தான் சரியென தீர்மானித்தான்

எடுத்த தீர்மானத்தில் மனம் தெளிவுற, தன் மனதிற்கு இனியவளிடம் பேசும் ஆவலில் கைப்பேசியை எடுத்தான் 

அதே நேரம், “அண்ணா”, என தங்கை சுஜியின் குரல் அறைக்கு வெளியே ஒலிக்க, “ஐயோ…” என்றானது கௌதமிற்கு 

பின் விளைவுகளை யோசியாமல், ஒரு கணம் எத்தனை பெரிய தவறை செய்ய இருந்தேன் என மருகினான்.  தான் இத்தனை சுயநலமாய் எப்போது மாறினோம் என தன்னையே நொந்து கொண்டான்

“அண்ணா” மீண்டும் ஒலித்த தங்கையின் குரல் அவனை நிதர்சனத்திற்கு இழுத்து வர, “வரேன் சுஜி” என்றபடி கதவைத் திறந்தான் 

இயல்பாய் தன்னை காட்டிக் கொள்ள முயன்ற போதும்,  அண்ணனின் முகத்தில் பதிந்த வேதனை ரேகைகள், சுஜிதாவின் கண்களுக்கு தப்பவில்லை

“நீ வந்திருக்கேனு அம்மா போன் செஞ்சதும் உடனே கிளம்பி வந்தேன் என்ன’ண்ணா ஆச்சு,  இப்படி டல்லா இருக்க?” என்றாள் கவலையாய் 

“ஒண்ணுமில்லடா, ஜஸ்ட் டயர்ட்” என முயன்று முறுவலித்தவன், “அது சரி, குட்டி பையன் எங்க?” என பேச்சை மாற்றினான் கெளதம் 

கெளதம் எதிர்பார்த்தது போலவே, மகனை பற்றிய பேச்சில் மற்றதெல்லாம் மறந்தவள், “அந்த வாலு அம்மா அப்பாவை ஒரு வழி பண்ணிட்டு இருக்கு” என பெருமிதமாய் புன்னகைத்தாள் சுஜிதா 

“அருண் வந்திருக்காரா?” எனவும்

“ஆமா, அவர் வந்துட்டாலும், பிஸி பிஸி பிஸி தான் எப்பவும்” என சுஜிதா சலித்துக் கொள்ள  

“பின்ன… காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணை, கண் கலங்காம வெச்சுக்கணும்னா, ஓடி ஓடி சம்பாதிக்க மச்சான் பிஸியா தான இருக்கணும்” எனவும் 

கணவனை பற்றிய கேலி பேச்சில் முகம் சிவக்க, “போண்ணா நீ” என்றவள், “அம்மா நீ இன்னும் சாப்பிடலைனு ஒரே புலம்பல்” என தான் அவனை தேடி வந்ததற்கான காரணத்தை கூறினாள்

“நீ கீழ போ சுஜி, நான் பைவ் மினிட்ஸ்’ல வரேன்” என தங்கையை அனுப்பி விட்டு, குளியல் அறைக்குள் சென்று தாளிட்டான் கெளதம்

“ஹாய் அர்ஜுன் குட்டி” என வரவழைத்த உற்சாகத்துடன் படிகளில் இறங்கி வந்த மாமனைக் கண்டதும், உற்சாகமாய் கைகளை விரித்தபடி கௌதமிடம் தாவினான் சுஜிதாவின் ஒன்றரை வயது மகன் அர்ஜுன் 

“பாத்தியா வேணி இவன, நாம என்ன தாங்கினாலும் மாமன கண்டா நம்மள கழட்டி விட்டர்ரான்” என மனைவியிடம் குற்றப் பத்திரிக்கை வாசித்தார் கௌதமின் தந்தை ராமகிருஷ்ணன் 

“என் புள்ளயோட முகராசி அப்படி” என பெருமிதமாய் புன்னகைத்தார் கௌதமின் தாய், வேணி என்ற கிருஷ்ணவேணி 

சற்று நேரம் எல்லாம் மறந்தவனாய், மருமகனின் மழலையில் சொக்கி நின்றான் கெளதம்

பிள்ளை பேசியது புரியாத போதும், அவனின் கிள்ளை மொழியும் அபிநயமும் மனதை மயக்க, தன்னை மறந்து பிள்ளையோடு பிள்ளையாய் விளையாடினான்

“சரி சரி, மாமனும் மருமகனும் விளையாடினது போதும், மொதல்ல சாப்பிடு கெளதம். மணி பதினொன்னாச்சு, இன்னும் நீ காலை டிபனே சாப்பிடல” என அங்கலாய்த்தார் வேணி 

“உன் புள்ள நடு ராத்திரி வந்ததும், அரை லிட்டர் பால் குடிச்சது மறந்து போயிடுச்சோ?” என, அந்த நடு இரவிலும் எதுவும் வேண்டாமென ஒதுக்கிய கௌதமை, வற்புறுத்தி வேணி பால் குடிக்க செய்ததை சுட்டிக்காட்டி ராமகிருஷ்ணன் கேலி செய்ய

“கடவுளே… என் புள்ள மேல கண்ணு போட வேற யாரும் வேண்டாம் சாமி, அரை லிட்டர் பாலாம். மொதல்ல உங்க காலடி மண்ணை தான் சுத்தி போடணும்” என்றாள் கௌதமின் அன்னை கோபமாய் 

பெற்றவர்களின் அன்னியோன்யமான சண்டை, கௌதமிற்கு ராதிகாவின் நினைவை இழுத்து வந்தது

எப்போதும் அவள் நினைவு தான் என்ற போதும், “தானும் ராதிகாவும் இது போல் இருக்கும் நாள் வருமா?” என மனம் ஏங்கியது

“இனி அது சாத்தியமா?” என்ற கேள்வியும் உடன் எழ, சோர்ந்து போனான் 

அதை அவனின் பசி என நினைத்துக் கொண்ட வேணி “உங்கப்பா விட்டா பேசிட்டே இருப்பார், நீ வந்து சாப்பிடு” என இழுத்துச் சென்றார் 

உணவின் பின் அரட்டையில், அர்ஜுன் செய்த குறும்பில் கொஞ்சம் ஆசுவாசமானான் கெளதம்

அர்ஜுன் விளையாடி களைத்து கௌதமின் மடியிலேயே உறங்கத் தொடங்க, பிள்ளையை அறைக்குள் படுக்க வைத்து விட்டு வந்தாள் சுஜிதா

“வர்றவன் நேரத்தோட வரணும், இல்லேனா சாவகாசமா காலைல வரணும், எதுக்கு தூக்கத்த கெடுத்துட்டு நடுராத்திரி பிளைட்ல வந்த?” என பொறுப்புள்ள தந்தையாய் வினவினார் ராமகிருஷ்ணன்

கெளதம் என்ன சொல்வதென யோசிக்க, அதற்குள் “உங்களுக்கு காய்ச்சல் அன்னை இல்ல ஆண்டு விழாவுக்கு வரலனு சொன்னதும், மனசு கேக்காம வேலை எல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு என் புள்ள  வந்தா, என்ன நீங்க இப்படி கேக்கறீங்க?” என வழக்கம் போல் மகனுக்கு பரிந்து, கணவரை முறைத்தார் வேணி

“அப்பாடா… அம்மாவே சமாளிச்சுட்டாங்க” என பெருமூச்சு விட்டான் கெளதம்

“பேசாம சரண்டர் ஆய்டுங்க’ப்பா, மகன பாத்த குஷில அம்மா பக்கம் பக்கமா டயலாக் பேச ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க” என சுஜிதா கேலி பேச

“அப்படி தான் போடி” என பதில் கொடுத்தார் வேணி 

“அதில்ல, நான் கூட வேற என்னமோனு நெனச்சேன்” என கௌதமின் தந்தை பீடிகையுடன் நிறுத்த

“என்னப்பா?” என தன் பதட்டத்தை மறைத்தபடி வினவினான் கெளதம் 

“இல்ல, உங்க மாமாகிட்ட கொஞ்சம் முன்னாடி பேசினேன். உன் கல்யாணம் பத்தி கவலைபட்டதுக்கு, அதெல்லாம் இனி ஒண்ணும் பிரச்சினையில்ல அவனே சொல்லுவான்னாரு, அதான் கேட்டேன்” என கேள்வியாய் மகனை பார்த்தார் ராமகிருஷ்ணன்

“ஐயோ இப்ப இருக்கற பிரச்சனைல மாமா வேற இப்படி சொல்லி வெச்சுருக்காரே, கடவுளே” என மனதிற்குள் புலம்பினான் கெளதம் 

“என்ன கண்ணா? அப்பா என்னமோ சொல்றாரு?” என ஆவலுடன் வேணி கேட்க 

“நான் அப்பவே நெனச்சேன், அண்ணா மூஞ்சில கொஞ்சம் அசடு வழியுதேனு” என சுஜிதாவும் வம்பு செய்தாள்

“சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்ல. மாமா சும்மா உங்கள சமாதானப்படுத்த சொல்லி இருப்பாரு” என கெளதம் சமாளிக்க, அவனை நம்பாத பார்வை பார்த்தார் ராமகிருஷ்ணன்

“போடா நீ, நான் ஒரு நிமிஷம் மண்டபம் புக் பண்ற வரைக்கும் யோசிச்சுட்டேன்” என கௌதமின் தாய் புலம்ப 

“விட்டா நீ அவன் புள்ளைக்கே பேர் செலக்ட் பண்ணிருவ” என சூழ்நிலையை இலகுவாக்க முயன்றார் ராமகிருஷ்ணன் 

“கெளதம், ஒரு அருமையான ஜாதகம் வந்திருக்கு. நீ திடீர்னு வரவும், நல்ல சகுனமா இருக்கேனு நெனச்சேன்” என உற்சாகமாக ஆரம்பித்த தாயை, மேலே பேச விடாமல் தடுத்தவன் 

“எப்ப பாத்தாலும் இதே தானா’ம்மா?” என சலித்துக் கொண்டான் கெளதம் 

“சொல்றத கொஞ்சம் முழுசா கேளேண்டா, அந்த பொண்ணும் டாக்டர் தான். MBBS முடிச்சுட்டு மேல பீடிங்ட்ரிக்ஸ்’சோ என்னமோ படிக்கறாளாம்”

“அம்மா, அது பீடிங்ட்ரிக்ஸ் இல்ல பீடியாட்ரிக்ஸ்” என சுஜிதா சிரிக்க 

“என்னமோ ஒண்ணு, எனக்கு வாயில வரல, அத விடு. இன்னும் ரெண்டு மாசத்துல படிப்பு முடியுதாம், பொண்ணு அப்படி ஒரு அழகு தெரியுமா? இரு போட்டோ எடுத்துட்டு வரேன்” என ஆவலுடன் எழுந்த அன்னையை தடுத்த கெளதம் 

“ம்மா… இதே தான் பேசுவீங்கன்னா, நான் இப்பவே கிளம்பறேன்” என்றான் கோபமாய்

தன் மனப்போராட்டம் புரியாமல் பேசுகிறார்களே என்ற ஆதங்கத்தில், அன்னையை வருந்தச் செய்கிறோம் என்பதை கூட உணராமல் வார்த்தையை விட்டான் கெளதம்

எப்போதும் கேலியும் கொஞ்சலுமாய் பேசும் பிள்ளை, முதல் முறையாய் கோப முகம் காட்ட, அதிர்ந்து நின்றார் வேணி

அண்ணனின் செய்கையை நம்ப இயலாமல் சுஜிதா அதிர்ச்சியுடன் பார்க்க, தந்தையின் கண்டன பார்வையில் தலை குனிந்தான் கெளதம் 

எல்லாவற்றையும் விட, கண்ணில் நீர் துளிர்க்க அன்னை அமர்ந்திருந்த தோற்றமே கௌதமின் மனதை வருத்தியது

விரைந்து அன்னையிடம் சென்றவன், “அம்மா… சாரிம்மா, ப்ளீஸ்ம்மா. நான் வேணும்னு அப்படி பேசல, ஏதோ டென்ஷன்ல…” என மன்னிப்பு கோரினான்

“இனிமே உன் கல்யாணத்த பத்தி நான் பேசவே மாட்டேன் கெளதம்” என்றார் வேணி தீர்மானமாய்

பெற்றவளின் உள்ளடங்கிய குரல் அவரின் மனநிலையை உணர்ந்த, குற்ற உணர்வில் வருந்தினான் கெளதம்

“நான் அப்படி சொல்லலம்மா. கொஞ்சம் டைம் குடும்மா, ப்ளீஸ்” என பிள்ளை கெஞ்சலாய் பார்க்க

“உன் இஷ்டம்” என்றதுடன், வேறெதுவும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றார் வேணி

பின்னோடு சுஜியும் ராமகிருஷ்ணனும் வேணியை சமாதானம் செய்ய செல்ல, முதல் முறையாய் தன் வீட்டிலேயே மிகவும் தனிமையாய் உணர்ந்தான் கெளதம்

“இந்த பிரச்சனை மட்டும் இல்லாதிருந்தால், இப்போதே ராதிகாவை பற்றி கூறி இருக்கலாம். விசால மனம் கொண்ட பெற்றவர்கள், நிச்சியம் எந்த எதிர்ப்பும் இன்றி சம்மதித்திருப்பார்கள் . மகிழ்வுடன் இருந்திருக்க வேண்டிய தருணம், எத்தனை வேதனையை கொடுத்திருக்கிறது” என வருந்தினான் கெளதம்

“நேற்று இதே நேரம், அன்னை இல்ல ஆண்டு விழாவை எதிர்நோக்கி, ராதிகாவுடன் எத்தனை மகிழ்வாய் ஏற்பாடுகளில் மூழ்கி இருந்தோம். ஒரே நாளில் எல்லாம் இப்படி கனவாகும் என நினைத்தேனா?” என மனதிற்குள் புலம்பினான் கெளதம் 

மருத்துவமனையில் இருந்து சில அழைப்புகள் வர அதை முடித்த கெளதம், அம்மாவை எப்படி சமாதானம் செய்வதென்ற யோசனையில் ஆழ்ந்தான்  

தே நேரம், மருத்துவமனை அருகில் இருந்த ஒரு டெலிபோன் பூத்தில் இருந்து, கௌதமின் எண்ணிற்கு அழைத்தாள் ராதிகா

மன உளைச்சலில் இருந்த கெளதம், ஏதோ நினைவில் அழைப்பை எடுத்து, “ஹலோ டாக்டர் கெளதம் ஹியர்” எனவும், ராதிகாவின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது 

தான் பொது இடத்தில இருக்கிறோம் என்பதை கூட மறந்தவளாய், “ஐ ஹேட் யூ” என கத்தினாள். நல்ல வேலையாய் பூத் கதவு மூடியிருக்க, வெளியே எதுவும் கேட்கவில்லை 

“ராதி…” என அதிர்ச்சியாய் கௌதமின் குரல் ஒலிக்க 

“என்ன சார்? அதிர்ச்சியா இருக்கா? என்ன பண்றது… உங்ககிட்ட பேசணும்னா என்னோட நம்பர்ல இருந்து கூப்ட்டா கால் போகலியே? வேற நம்பர் எல்லாம் ரீச் ஆகுது போல” என்றாள் கோபமாய் 

“ராதி ப்ளீஸ், நான் சொல்றத கொஞ்சம்…” என்றவனை பேச விடாமல் 

“என்ன சாக்கு சொல்ல போறீங்க? மெதுவா யோசிச்சு புதுசா ஏதாச்சும் கதை             சொல்லுங்க, ஒண்ணும் அவசரமில்ல” என்றவளின் குரலில் இருந்தே, அவளின் அதீத கோபத்தை  உணர்ந்தான் கெளதம்

“ராதிம்மா… நான்…” 

“எங்கிட்ட பேச பிடிக்கலைன்னா நேரடியாவே சொல்லி இருக்கலாமே கெளதம், அப்பறமும் மேல வந்து விழற அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போய்டல” என அழுகையை அடக்கிய குரலில் ராதிகா பேச 

“கடவுளே…” என, அவளை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் திகைத்தான் கெளதம்

“ஒதுங்கி இருந்தவள காதல் கண்ராவினு ஆசை காட்டிட்டு ஏன் இப்படி சித்தரவதை பண்றீங்க?” என கட்டுப்படுத்த இயலாமல் ராதிகா விம்ம, தன்னையே வெறுத்தான் 

“லெட் மீ எக்ஸ்பிளைன் ராதி…” என்றவனின் சமாதானக் குரல் காதிலேயே ஏறாதவளாய் 

“எதுவும் தேவையில்ல, ஐ ஹேட் யூ கெளதம், கெட் லாஸ்ட், குட் பை” என அவன் பதிலுக்கு கூட காத்திராமல் அழைப்பைத் துண்டித்தாள் ராதிகா

சற்று நேரம் மனம் உடல் எல்லாம் மரத்து போனவனாய், அசையக்கூட இயலாமல் அமர்ந்திருந்தான் கெளதம் 

திடீரென வேறொரு விஷயம் நினைவு வர, தன் மாமா சந்திரசேகரனுக்கு அழைத்தான் 

“டேய் கெளதம், என்னடா அப்பா அம்மாகிட்ட கல்யாணத்துக்கு ஓகே  வாங்கியாச்சா? அதுக்கு தான இவ்ளோ அவசரமா கெளம்பி போன” என சூழ்நிலை புரியாமல் அவர் கேலி செய்ய 

“மாமா…” என இடைமறித்ததை  காதில் வாங்காதவராய் 

“நீ ஒரு நாள் இல்லாம போனதுக்கே இங்க ஒரே சோகம் தான் போ, இப்போ தான் கொஞ்சம் முன்னாடி தலைவலினு கிளம்பினா ராதிகா? சரி, கல்யாணம் எப்போ?” என உற்சாகமாக கேட்டார் 

“மாமா ப்ளீஸ், என்னை கொஞ்சம் பேச விடுங்க” என்றவனின் குரலில் இருந்த மாற்றத்தை அப்போது தான் உணர்ந்தார் சந்திரசேகரன் 

“என்னாச்சு கெளதம்? எதுனா பிரச்னையா? நான் வேணா உங்கப்பாகிட்ட பேசவா?” என அக்கறையுடன் வினவினார் 

“இல்ல மாமா, வேண்டாம். இப்போதைக்கு அப்பாவா கேட்டா கூட நீங்க ராதிகாவ பத்தி எதுவும் சொல்லிடாதீங்க, ப்ளீஸ்” என்றான் வேண்டுதலாய்

“என்னடா இப்படி சொல்ற?” என பதறினார் அவர்

“ப்ளீஸ் மாமா, இப்ப என்கிட்ட எதுவும் கேக்காதீங்க. அப்பா கண்டிப்பா உங்களுக்கு கூப்பிடுவாரு, ராதிகாவ பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்” என்றான் தீர்மானமாய் 

“என்னடா இப்படி புதிர் போடற? உங்களுக்குள்ள எதுனா பிரச்னையா? நான் வேற உங்கப்பா இன்னைக்கி காலைல பேசினப்ப, நம்பிக்கை குடுக்கறாப்ல பேசிட்டனே” என அங்கலாய்த்தார் 

“அது… எப்படியாச்சும் சமாளிங்க மாமா ப்ளீஸ்” என கெளதம் கெஞ்சலாய் கேட்க 

“சரி விடு, நான் பாத்துக்கறேன்” என்றார்  

அதன் பின் கெளதம் எத்தனை முறை முயன்றும், ராதிகா அவன் அழைப்பை ஏற்கவில்லை

அவளை என்ன சொல்லி இப்போதைக்கு சமாளிப்பது என யோசித்தவனுக்கு, மாமாவுடன் பேச்சின் போது சொன்ன ஒரு விஷயம் உகந்ததாக இருக்கும் என தோன்றியது. அந்த விஷயம் ஓரளவு முடிவானவுடன், சற்று மனம் தெளிவுற அன்னையை தேடிச் சென்றான் 

பேசிப்பேசி ஒருவழியாய் அன்னையை சமாதானம் செய்த கெளதம், இன்னும் ஆறு மாதத்திற்குள் நிச்சியம் திருமணம் செய்து கொள்வதாய் வாக்களித்தான், அதற்குள் எல்லாமும் சரியாகி விட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் 

யோசனையுடன் அவனைப் பார்த்த தந்தை, அவன் வெளியேறியதும், “அவன் மனசுல என்னமோ இருக்கு வேணி” என்றார் 

“எப்படி சொல்றீங்க? உங்ககிட்ட எதுனா சொன்னானா?” என மனைவி ஆவலாய் கேட்க 

“உங்கிட்டயே சொல்லாதவன் எங்கிட்ட சொல்லுவானா?” என்றார் 

“பின்ன எப்படி சொல்றீங்க?” என்றாள் நம்பிக்கையின்றி  

“தாய் அறியாத சூல் இல்லைனு சொல்லுவாங்க, அது சில விஷயங்கள்ல தந்தைக்கும் பொருந்தும்” என்றார் பீடிகையுடன் 

“எதுவா இருந்தாலும் நம்மகிட்ட சொல்றதுக்கு என்னங்க? இவன் சந்தோஷத்துக்கு மேல நமக்கென்ன இருக்கு” என வருந்தினார் கிருஷ்ணவேணி

“வாஸ்தவம் தான் வேணி, ஆனா ஏதோ குழப்பத்துல இருக்கான்னு தோணுது. கொஞ்சம் விட்டு பிடி, எல்லாம் சீக்கரம் சரியாகும். நீ டென்ஷன் ஆகி பிரஷரை ஏத்திக்காத” என்றார் பொறுப்புள்ள கணவனாய் 

அன்றிரவு, அனைவருக்கும் உறங்கா இரவானது 

#ad இந்த தொடர்கதையை எழுதி வரும் எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும் – ஜனவரி 16, 2021)

Link to subscribe to Sahanamag’s YouTube Channel 👇

https://www.youtube.com/channel

 

Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே❤ (அத்தியாயம் 13) – சஹானா கோவிந்த்
  1. எனக்குமே ரொம்பக் கவலையா இருக்கே! அப்படி என்ன புதிரான விஷயம்? ஒண்ணும் புரியலை. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: