தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே (தொடர்கதை – அத்தியாயம் 1)

“கெளதம், லைன்ல இருக்கியா?” என்ற அன்னையின் குரலுக்கு

“சொல்லும்மா” என்றான் கெளதம்

“கண்ணா… நேத்து மாளவிகானு ஒரு பொண்ணு போட்டோ காட்டினேனே, என்ன முடிவு பண்ணின?” என்றார் அன்பாய் 

“அம்மா… சிக்னல் சரியா இல்ல, அப்புறம் பேசறேன்” என கெளதம் அழைப்பை துண்டிக்கப் போக

“இந்த மழுப்பற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம் கெளதம்” என்றார் கிருஷ்ணவேணி, சற்றே கண்டிப்பான குரலில்

“இல்லம்மா, அது….” என சமாதான குரலில் கெளதம் தொடங்க

“போன வருஷம் கேட்டப்ப, லண்டன் போயிட்டு வந்து கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கறேன்னு நீ வாக்கு குடுத்த. இப்ப லண்டன்ல இருந்து வந்ததும் வராததுமா, என்கிட்ட இருந்து தப்பிக்கரதுக்கே கோயமுத்தூருக்கு கெளம்பிட்ட. அவனவன் பெத்தவங்களுக்காக என்ன என்னமோ செய்றான். நான் கல்யாணம் பண்ணிக்கோனு தானே கேக்கறேன்” என்றார் மூச்சு வாங்கியபடி

“டென்ஷன் ஆகாதீங்க மிசஸ் கிருஷ்ணவேணி ராமகிருஷ்ணன், எப்படி மூச்சு வாங்குது பாரும்மா” என கெளதம் சிரிக்க

“பேச்ச மாத்தாத கெளதம்” என்றார் இன்னும் கோபமாய்

“நான் ஈவினிங்  போன் பண்றேன் மம்மி, சரியா?” என்றான் கெஞ்சலாய்

“முடியாது, இப்பவே சொல்லு” என்றார் கிருஷ்ணவேணி விடாமல்

“அம்மா நான் டிரைவ் பண்ணிட்டு இருக்கேன், சரியா பேச முடியல” என்றான், வேண்டுமென்றே கைப்பேசியை சற்று நகர்த்தி வைத்து

சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு தான் அழைப்பை எடுத்தான் என்ற போதும், வேண்டுமென்றே பெற்றவளிடமிருந்து தப்பிக்க, பொய் உரைத்தான் கெளதம் 

அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல், “வண்டி ஒட்டிட்டே போன் பேசாதனு எத்தன வாட்டி சொல்லி இருக்கேன் கெளதம், நான் கட் பண்றேன், அப்புறம் பேசு” என பதட்டமாய் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் கிருஷ்ணவேணி

“அப்பாடா, இன்னிக்கி எப்படியோ எஸ்கேப் ஆயாச்சு” என சிரித்தபடி, சாலை ஓரத்தில் நிறுத்திய காரை உயிர்பித்தான் கெளதம்

கெளதம் – டாக்டர் கெளதம் ராமகிருஷ்ணன், 27 வயது எலிஜிபில் பேச்சிலர். இளமை பருவத்திற்கு உரிய குறும்புத்தனமும் சில பலவீனங்களும் இருந்த போதும், கண்ணை கவரும் தோற்றமும், நல்ல பண்பும், மெச்சும் படிப்பும் ஒருங்கே அமைவது அரிது என கூறும்படி இருந்தான்

உடன் பிறந்தவள், ஒரே தங்கை சுஜிதா. மூன்று வருடம் முன்பு, அவள் விரும்பிய அருணுடன் திருமணம் முடிந்து, இப்போது ஒன்றரை வயதில் ஒரு ஆண் பிள்ளை

மகனுக்கும் உரிய வயதில் திருமணம் செய்ய கௌதமின் அன்னை வற்புறுத்திக் கொண்டிருந்தார், அவன் பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்தான்

பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில். சென்னையிலேயே அவனுக்கு நல்ல பணி வாய்ப்புகள் வந்த போதும், அதை மறுத்து கோவை வந்தான்

அதற்குக் காரணம், அவன் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்ட, அவன் பணிபுரியும் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், அதன் நிறுவனருமான கௌதமின் தாய் மாமா டாக்டர் சந்திரசேகரன்

வாரிசுகளற்ற சந்திரசேகரன், அந்த மருத்துவமனை மூலம் சிறந்த சமுதாய நலப்பணிகளும் செய்து வந்தார். அதற்கு உறுதுணையாய் நின்றார் அவர் மனைவி வாணி

சிறுவயது முதலே தன் மாமாவைப் பார்த்து, தானும் மருத்துவர் ஆக வேண்டுமென ஆசைப்பட்டு அதில் வெற்றியும் கண்டான் கெளதம். எனவே படித்து முடித்ததும் அவருடன் சேர்ந்தே பணிபுரியும் ஆவலில் கோவை வந்து சேர்ந்தான்

மாமாவும் அத்தையும் எத்தனை வற்புறுத்திய போதும், அவர்களுடைய வீட்டில் தங்க மறுத்துவிட்டான் கெளதம்

மருத்துவப் பணி, கால நேரம் பாராமல் செய்யும் பணி, தனியே இருப்பதே தனக்கு வசதி என அவன் கூற, அவன் வேண்டாமென்றும் கேளாமல் அவன் தந்தை கௌதமின் பெயரில் கோவையில் ஒரு வீட்டை வாங்கி பரிசளித்தார்

கௌதமின் தந்தை ராமகிருஷ்ணன், சென்னையில் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர். ஆரம்பத்தில் சென்னையில் மட்டும் கிளைகள் கொண்டிருந்தது, இன்று கோவை, திருச்சி, மதுரை என பல இடங்களிலும் தங்கள் தொழிலை விரிவுபடுத்தி இருந்தார்

சிறு வயதில் பெரிய குடும்பத்தின் மூத்த மகன் என்ற பொறுப்பில், தான் நினைத்தது போல் அதிகம் படிக்க வாய்ப்பின்றி, உழைப்பால் மட்டும் உயர்ந்தவர் ராமகிருஷ்ணன்

அதற்காக தன் விருப்பத்தை பிள்ளைகள் மீது அவர் ஒருபோதும் திணித்ததில்லை. அவர்கள் விருப்பப்படி படிக்க வைத்தார்

அவருக்கு தன் மகன் கெளதம், டாக்டர் என்பதில் நெஞ்சம் கொள்ளா பெருமை உண்டு

தொழில் தொடங்கிய ஆரம்ப நாட்களில் பொருளாதாரத்தில் சற்றுப் பின்னே இருந்த போதும், பிள்ளைகளை அவர் ஒருபோதும் முகம் வாட விட்டதில்லை. அதே நேரம் அதிக செல்லமும் தந்ததில்லை, உழைப்பின் உன்னதத்தை சொல்லித் தந்து வளர்த்தார்

தனியே தங்கியிருந்தான் என்றாலும், கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வாணி அத்தையை பார்க்க, அவர் ஆதரவற்ற பிள்ளைகளுக்காக நடத்தி வரும் “அன்னை இல்ல”த்திற்கு சென்று விடுவான் கெளதம். வாணியும் அவனை தன் சொந்த பிள்ளையைப் போலவே பாவிப்பாள்

எம்.பி.பி.எஸ் முடித்து, புற்றுநோய் மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்தவுடன், “வாணி மருத்துவமனை”யில் புற்றுநோய் மருத்துவ நிபுணராக மூன்று வருடத்திற்கு முன் பணியில் சேர்ந்தான் கெளதம்

அதற்கு முன் விசிட்டிங் டாக்டர்களை மட்டும் கொண்டிருந்த புற்றுநோய்ப் பிரிவு, கெளதமின் வரவுக்கு பின் முழுநேரப் பிரிவாய் தனி கட்டிடம் அமைக்கப்பட்டு விரிவு படுத்தப்பட்டது

சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாய், அந்தப் பகுதியில் புற்றுநோய் சிகிச்சைக்கு “வாணி மருத்துவமனை”யே சிறந்தது எனப் பெயர் வரத் தொடங்கியது

கௌதமின் தொடர்ந்து கற்று கொள்ளும் ஆர்வமும், கற்றதை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் பெருந்தன்மையும், அந்த மருத்துவமனையையும் தாண்டி அவன் புகழை பரப்பியது. பல்வேறு மருத்துவ கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு உரையாற்றினான்

இந்த சிறுவயதிலேயே, புற்றுநோய் துறையில் “சிறந்த டாக்டர்” எனப் பெயர் பெற்றான்

அதன் காரணமாய் லண்டனில் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு மருத்துவமனை, “ஸ்கில்ஸ் எக்ஸ்சேன்ஜ்” முறையில் ஒரு வருடம் பணிபுரிய அழைப்பு விடுத்தது

அதன்படி லண்டன் மருத்துவமனையின் டாக்டர் “வாணி மருத்துவமனை”யிலும், கெளதம் லண்டன் மருத்துவமனையிலும் ஒரு வருடம் பணிபுரிய வேண்டுமென ஒப்பந்தம் கேட்டு அனுப்பியது

இப்படிச் செய்வதன் மூலம், இரு சாராரும் நிறைய புது விசயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்குமென கோடிட்டு காட்டி இருந்தனர்

“வாணி மருத்துவமனை”யை விட்டுச் செல்ல கெளதம் தயங்க, அவன் இல்லாத ஒரு வருடம் தன் மருத்துவமனையை பாதிக்கும் என்ற போதும், கேன்சர் துறையில் உலக பிரசித்திப் பெற்ற அந்த லண்டன் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு நல்ல வாய்ப்பை தவற விட வேண்டாமென, அவன் மாமா தான் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்

அந்த ஒரு வருட பணி முடிந்து, இரண்டு நாள் முன்பு தான் இந்தியா திரும்பியிருந்தான் கெளதம். சென்னையில் உள்ள தன் வீட்டில் ஒரு நாள் தங்கியவன், மறுநாளே இதோ வேலைக்கு புறப்பட்டு விட்டான்

“வாணி மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல்” என்ற பெயர்ப் பலகை தாங்கிய கட்டிட வாயிலில் நுழைந்த கெளதம், வாகன நிறுத்துமிடத்தில் தன் காரை நிறுத்தி விட்டு, வெண்ணிற ஓவர் கோட்டை தோளில் போட்டபடி, மருத்துவமனைக்குள் நுழைந்தான்   

அவனைப் பார்த்ததும் வரவேற்பில் இருந்த பெண் முகம் மலர, “குட் மார்னிங் டாக்டர் கெளதம், வெல்கம் பேக்” என்றபடி, அவனுக்கு பின்னால் யாரையோ தேடுவது போல் பார்த்தாள்

“குட் மார்னிங் ரூபா, யாரத் தேடறீங்க?” என்றபடி புன்னகையுடன் அவளருகே   சென்றான் கெளதம்

“லண்டன் போனவர் தனியாவா வருவீங்க, ஒரு வெள்ளக்கார பொண்ணு பின்னாடி வரணுமே, காணோம்னு பாத்தேன் சார்” என்றாள் ரூபா வம்பாய் 

“வெள்ளக்கார பொண்ணுக எல்லாம் தெளிவா இருக்காங்க ரூபா, யாரும் ஏமாறலை. நம்ம ஊர்ல யாரயாச்சும் ஏமாத்த முடியுதானு தேடணும்” என சிரித்தபடி, அவளுக்கு சரியாய் கேலி பேசினான் கெளதம்

கெளதமின் இயல்பே அது தான், வேலையின் எத்தனை கறாராய் இருக்கிறானோ, அதே போல் உடன் பணிபுரிவோரிடம் “தான்” என்ற அகந்தையின்றி, நேசக்கரம் நீட்டுவதிலும் அவனுக்கு நிகர் அவனே

அதனாலேயே, குறுக்கிய காலத்தில் எல்லோருக்கும் பிடித்தவனாய் ஆகிப் போனான் கெளதம் 

“நீங்க ம்’னு சொன்னா பொண்ணுங்க உங்க பின்னாடி கியூவுல நிப்பாங்க டாக்டர்” என்றாள் ரூபா விடாமல்

“அப்படியா? ம்… சொல்லிட்டேன், யாரையும் காணோமே பின்னாடி”, என்றபடி கெளதம் பின்னால் திரும்பி பார்க்க, ரஞ்சனி வந்து கொண்டிருந்தாள்

அவளை கண்டதும் கண்ணில் ஓர் எச்சரிக்கை உணர்வு தோன்ற, “ஒகே ரூபா. சேர்மன் சார் பாக்கணும்னு சொல்லிட்டு இருந்தார், சி யு லேட்டர்” என்றபடி நகர்ந்தான்

“ஐயோ அதுக்குள்ள போயிட்டாரா?” என புலம்பியபடி வரவேற்பு பகுதிக்கு வந்தாள் ரஞ்சனி

“என்ன ரஞ்சனி, உன் ஆளு எஸ்கேப் ஆய்ட்டாருனு டென்சனா?” என சிரித்தாள் ரூபா

“நீ தான் சொல்லணும் என் ஆளுனு. நானும் இந்த ஹாஸ்பிடல்ல சேந்ததுல இருந்து ட்ரை பண்றேன், ஒண்ணும் நடக்கல. போதாததுக்கு இப்ப ஒரு வருஷமா லண்டன் வாசம் வேற. ஹ்ம்ம், பாத்து எத்தன நாளாச்சுனு ஓடி வந்தா, அதுக்குள்ள எஸ்கேப்” என்றாள் புலம்பலாய்

“ஒரு வருஷமென்ன, பத்து வருஷம் பாரின்ல இருந்தாலும் டாக்டர் கெளதம் அப்படியே தான் இருப்பார். கொஞ்சம் கூட பந்தா இல்லாம ரெம்ப நல்ல டைப் இல்லையா ரஞ்சனி”

“நல்ல டைப் தான். ஆனா சரியான விஸ்வாமித்திரர்டி” என்றாள் ரஞ்சனி பெருமூச்சுடன் 

“அப்ப நீ மேனகையா மாறிடு” என சிரித்தாள் ரூபா 

“என்னமோ போ” என சலித்துக் கொண்டாள் ரஞ்சனி 

“அப்படி ஒண்ணும் பொண்ணுங்கள பாத்தாலே ஓடற ரகம் இல்லையே, எல்லார்கிட்டயும் நல்லாத் தான பேசறார் ரஞ்சனி”

“பேசறதெல்லாம் நல்லாத்தான் பேசுவார், ஆனா பிடி குடுக்க மாட்டார். சரி ரூபா, டைம் ஆச்சு, அப்புறம் பாக்கலாம்” என்றபடி தன் அலுவல் அறை நோக்கி நடந்தாள் ரஞ்சனி

ரஞ்சனி, புற்றுநோய்ப் பிரிவில் கௌதமிற்கு செக்ரட்டரியாக பணி புரிகிறாள். அவனின் தினப்படி சந்திப்புகள், நோயாளிகள் வருகை எல்லாம் குறித்து வைத்து, சரியாக நினைவூட்ட வேண்டியது அவளின் முக்கியப் பொறுப்பு

அது தவிர, அந்த துறைக்கு தேவையான மருந்துகளை ஆர்டர் செய்வது, மற்ற டாக்டர்களிடமிருந்து வரும் கடிதங்களுக்கு ஏற்ப பதில்களை தயார் செய்வது, நோயாளிகளின் பைல்களை பராமரிப்பது என பலவும் செய்வாள்

இதையெல்லாம் மீறி, கௌதமை காதலிப்பதை முக்கிய வேலையாய் செய்து கொண்டிருந்தாள். கண்டதும் அவன் மேல் காதல் கொண்டு, மறைமுகமாய் தன் மனதை அவனிடம் வெளிப்படுத்தியும் இருக்கிறாள். ஏனோ அவன் கண்டும் காணாதது போல் இருந்தான்

தனக்கு தெரிந்து வேறு எந்த பெண் மீதும் அவன் மனம் ஈடுபடவில்லை என்பதே, இப்போதைக்கு ரஞ்சனிக்கு ஆறுதலாய் இருந்தது

“மே ஐ கம் இன் சார்?” என கதவுத் தட்டப்பட 

“கம் இன்” என்றார் டாக்டர் சந்திரசேகரன், தான் பார்த்து கொண்டிருந்த மருத்துவ அறிக்கையில் இருந்து தலையை உயர்த்தாமலே

“அஞ்சு நிமிஷம் பேசலாமா டாக்டர்?” என்ற பரிட்சயமான குரலில் நிமிர்ந்தவர்

கௌதமை கண்டதும் முகம் மலர, “டேய் கெளதம்” என மகிழ்வாய் விரைந்து அவனருகே வந்து அணைத்துக் கொண்டார்

“எப்படி இருக்கீங்க சார்?” என கெளதம் கேட்க

“ஓத வாங்க போற கெளதம். நாம மட்டும் இருக்கறப்ப சார் போடாதேனு எவ்ளோ வாட்டி சொல்லி இருக்கேன் உனக்கு?” என்றார் சற்றே கோபமாய்

“ஒகே மாமா, எப்படி இருக்கீங்க? வாணி அத்தை வழக்கம் போல உங்கள மிரட்டிட்டு இருக்காங்களா?” என குறும்பாய் சிரித்தான் 

“உனக்கு கொலஸ்ட்ரால் செக் பண்ணனும் மொதல்ல”, என அவன் முதுகில் செல்லமாய் அடித்தார் சந்திரசேகரன்

“அது சரி மாமா, முன்னாடி கேபின்ல உங்க செக்ரட்டரி சுதாவ காணோமே” என கெளதம் குறும்புச் சிரிப்புடன் கேட்க

“டேய், நீ இப்ப என்னை பாக்க வந்தியா? என் செக்ரட்டரிய பாக்க வந்தியா?” என முறைத்தார் சந்திரசேகரன்

“ச்சே ச்சே… என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா மாமா?” என கெளதம் சிரிக்க

“தெரியுண்டா, நல்லாத் தெரியும்” என கேலியாய் சிரித்தவர்

“என் செக்ரட்டரி சுதா கல்யாணம் பண்ணிட்டு மதுரைக்கு போய் ஆறு மாசமாச்சே” எனவும்

“ஒரு அப்பாவி மனுஷன் வாழ்க்கை போச்சே” என்றான் கெளதம் கேலியாய் 

“அதெல்லாம் இருக்கட்டும், லண்டன் எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்தது?” என்றார் ஆர்வமாய் 

“அதான் தினமும் போன்ல உங்களுக்கு அப்டேட் பண்ணிட்டனே மாமா. சூப்பர் வெதர், சூப்பர் ஹாஸ்பிடல், சூப்பர் டெக்னாலஜிஸ், சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ், இருந்தாலும் ஐ மிஸ்ட் வாணி ஹாஸ்பிடல்” என்றான் மெல்லிய முறுவலுடன்

“அப்ப இந்த மாமாவ மிஸ் பண்ணல, ஹாஸ்பிடல தான் மிஸ் பண்ணி இருக்க, ஹ்ம்ம்” என்றார் வேண்டுமென்றே பெருமூச்சுடன்

“நீங்க வேற ஹாஸ்பிடல் வேறயா மாமா?” என கெளதம் சமாளிக்க

“நல்லா பேச கத்து வெச்சுருக்க, சீக்கரம் கல்யாணம் பண்ணி வெச்சா தான் நீ அடங்குவ” என்றார் மிரட்டல் போல்

“ஐயோ நீங்களும் ஆரம்பிச்சுடாதீங்க மாமா, வந்தவுடனே இதுக்கு பயந்துட்டு தான் உங்க தங்கச்சிகிட்ட இருந்து எஸ்கேப் ஆகி வந்திருக்கேன்”

“பாவண்டா உங்கம்மா, நேத்து பேசினப்ப கூட பொலம்பினா. டேய், நான் சீரியசா கேக்கறேன், மனசுல யாரயாச்சும் நெனச்சுட்டு தான் இப்படி பிடி குடுக்காம இருக்கியா? எதுவா இருந்தாலும் சொல்லு, உங்கம்மாகிட்ட நான் பேசறேன்” என்றவரின் குரலில், உண்மையான கவலை எட்டிப் பார்த்தது

“என்ன மாமா நீங்க? அப்படி இருந்தா இதுக்குள்ள உங்ககிட்ட ஒளறி இருக்க மாட்டேனா? அதெல்லாம் இல்ல. கொஞ்ச நாள் ப்ரீயா இருக்கணும்னு தோணுது”

“அப்ப நாங்கெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு ஜெயில்ல இருக்கோமா?” என்றார் சந்திரசேகரன் கோபமாய்

“அதை நான் சொல்ல முடியாதே மாமா” என சிரித்தான் கெளதம்

சந்திரசேகரன் முறைக்க, “டென்ஷன் ஆகாதீங்க மாமா. இன்னும் ஆறே மாசம், அப்புறம் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கறேன் ஒகே வா. அயம் ஜஸ்ட் 27, பெருசா ஒண்ணும் வயசாகல” என்றான் சமாதான குரலில்

“என்னமோ சொல்ற, பாக்கலாம். அப்புறம், லஞ்சுக்கு நீ வீட்டுக்கு வரணும்னு உன் அத்தையோட ஆர்டர்” என சிரித்தார்

“ஓ… வாணி மேடம் ஆர்டரை எங்கள் தலைவரே மீறாத போது, நான் எப்படி மீறுவேன். தற்போது அலுவல் அழைப்பதால் நான் விடைபெறுகிறேன் தலைவா”, என பணிவாய் குனிந்து சிரித்தபடி வெளியேறினான் கெளதம்

(தொடரும் – திங்கள் தோறும்…)

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

Similar Posts

10 thoughts on “பார்த்த முதல் நாளே (தொடர்கதை – அத்தியாயம் 1)
 1. விறுவிறு. முடிவு வித்தியாசமாய் இருக்கும்னு தோணுது.

   1. Super Starting Akka!!
    Sema flow. Already started to like gowtham!! As usual oru romantic ranagalam waiting for us😍👌👌
    Excited and all the best to u 🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: