www.sahanamag.com
தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே❤ (பகுதி 18) – ✍ சஹானா கோவிந்த்

“உனக்கென்ன பைத்தியமா கெளதம்?” என முகம் சிவக்க கத்திக் கொண்டிருந்தார் டாக்டர் சந்திரசேகர் 

“பைத்தியம் புடிச்சுடக்கூடாதுனு தான் மாமா இந்த முடிவுக்கு வந்தேன்” என்றான் கெளதம் நிதானமாய் 

“இப்ப என்ன ஆய்டுச்சுனு இங்கிருந்து போறேங்கற? இந்த விஷயம் ராதிகாவுக்கு தெரியுமா?”

இந்த முடிவே அவளுக்காகத் தான் என்பதை கூற இயலாமல் தயங்கியவன், “மாமா… நீங்க என் மேல வெச்சிருக்கற பாசம் நிஜம்னா, இதை பத்தி இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேக்காதீங்க. அதோட, ராதிகாவை பத்தி அம்மா அப்பாகிட்ட எப்பவும் சொல்லக் கூடாது, ராதிகாகிட்டயும் எதுவும் கேக்கக் கூடாது” என்றான் கட்டளை போல் 

“என்னடா நெனச்சுட்டு இருக்க உன் மனசுல, என்னை எமோஷனல் ப்ளேக்மெயில் பண்றியா? நான் கண்டிப்பா உங்கம்மா அப்பாகிட்ட ராதிகா பத்தி சொல்லத் தான் போறேன்” என்றார் தீர்மானமாய் 

“நான் எந்த முடிவு எடுத்தாலும் அதுக்கு ஒரு நியாயமான காரணம் இருக்கும்னு நீங்க நம்பறீங்க தான மாமா?” எனவும் 

“நம்பறேன், ஆனா…” என்றவரை மேலே பேச விடாமல் தடுத்தவன் 

“இதுவரைக்கும் எனக்காக உங்ககிட்ட நான் எதுவுமே கேட்டதில்ல மாமா, மொதல் தடவையா கேக்கறேன். இதைப் பத்தி இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க… ப்ளீஸ் மாமா” என்றவனின் வேதனை நிறைந்த குரல், சந்திரசேகரை அதற்கு மேல் பேச விடாமல் செய்தது 

எப்போதும் சிரிப்பும் கேலியுமாய் கௌதமை பார்த்து பழகியவருக்கு, இப்படி காண்பது வேதனை அளித்தது

தனக்கு வாரிசு இல்லை என்ற குறை தெரியாமல், சிறுவயது முதலே தன் மீது மாறாத அன்பு பொழிந்தவனின் ஜீவனற்ற கண்கள், அவரை கவலைக் கொள்ளச் செய்தது 

“மாமா… இது நம்ம ஹாஸ்பிடல் ஹெச்.ஆர்ல இருந்து வாங்கின டேட்டா. நம்ம ஹாஸ்பிடல்ல வேலை செய்ய விருப்பப்பட்டு, என்னோட பீல்டுல எக்ஸ்பீரியன்ஸ் உள்ள டாக்டர்ஸ் அனுப்பின அப்ளிகேஷன்ஸ் எல்லாம் இந்த பைல்ல இருக்கு. இதுல என்னோட போஸ்டுக்கு பொருத்தமா இருக்கறவங்கனு எனக்கு தோணினவங்களோட பேரை மட்டும் டிக் பண்ணியிருக்கேன். நீங்க ஒரு வாட்டி பாத்துட்டு சொன்னீங்கன்னா, நாளைக்கே இன்டர்வியூவுக்கு வரச் சொல்லிடலாம். இன்னும் நாலு நாளுல நான் ரிலீவ் ஆகறேன் மாமா” என்றான்

“நாலு நாள்லயா?” என அதிர்ந்தவர், “சார் அடுத்து எங்க போறதா இருக்கீங்க?” என்றார் கோபமாய் 

என்ன சொல்வதென தெரியாமல் ஒரு கணம் விழித்தவன், “யு.எஸ் போலாம்னு இருக்கேன் மாமா” என வாய்க்கு வந்ததை கூறினான் 

மாமாவை சமாளிக்கச் சொன்னவன், அப்படி சென்றால் தான் என்ன என மனம் கேட்டது. இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும், தன்னால் ராதிகாவை விட்டு விலகி இருக்க இயலாது

அவள் அறியாமலேனும் அவளைப் பார்க்க மனம் ஏங்கும். அது அவளுக்கு தான் கொடுத்த வாக்கை மீறுவதாகும். எனவே நினைத்தால் வரமுடியாத தூரத்திற்கு செல்வதே நல்லது என அந்த நொடியில் தீர்மானமான முடிவை எடுத்தான் கெளதம் 

மறுநாளே, டெல்லி கான்பரன்ஸின் போது தன்னை வேலைக்கு வரச்சொல்லி அழைத்த அமெரிக்க டாக்டர் கிம்பெல்லை தொடர்பு கொண்டு, தன் விருப்பத்தை தெரிவித்தான்

அதற்கு அடுத்த நாள், அந்த அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், ஹெச்.ஆர் குழுவும் வீடியோ கான்பரன்சிங் முறையில் சம்பிரதாயமாய் நேர்காணல் நடத்தினர்

அடுத்த ஒரு மணி நேரத்தில் வேலைக்கான அழைப்பு கடிதம் கௌதமின் மின்னஞ்சலுக்கு வர, உடனடியாய் தன் சம்மதம் தெரிவித்து பதில் மடல் அனுப்பினான் கெளதம்

காதல் தோல்வியில், ஊரை விட்டு உறவை விட்டு, தான் மிகவும் நேசிக்கும் பணியை விட்டு செல்வது கோழைத்தனமான முடிவாய் மனதிற்கு தோன்றிய போதும், ராதிகாவின் உயிர் இது எல்லாவற்றையும் விட தனக்கு முக்கியமானது என்பதால், இந்த முடிவே சரியானது என தனக்குத் தானே உறுதி செய்து கொண்டான் கெளதம் 

சொன்னது போல், அடுத்த நாலாவது நாள் மருத்துவமனையில் எல்லோரிடமும் விடைபெற்று, அமெரிக்கா செல்லும் முன் சில நாட்கள் பெற்றோருடன் இருக்க எண்ணி, சென்னைக்குக் கிளம்பினான்

புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மருத்துவர்கள், இன்னும் இரு வாரத்தில் பணியில் சேர ஒப்புக் கொள்ள, அதுவரை கௌதமின் பொறுப்புகள் தற்போது அந்த துறையில் பொறுப்பில் உள்ள மற்ற இரு மருத்துவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது 

பிரகாஷ், தீபா, வாணி, சந்திரசேகரன், நால்வரும் எத்தனை முயன்றும், கெளதம் ராதிகா இருவரிடமிருந்தும் ஒரு வார்த்தை கூட பெற இயலவில்லை  

கடைசியாய் ஒரு முறை ராதிகாவிடம் விடைபெற மனம் துடித்த போதும், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான் கெளதம். அவளைப் பார்த்தால் தன்னால் விலகிச் செல்ல இயலாது என பயந்தவன் போல், அவள் இருக்கும் பக்கம் கூட செல்லவில்லை 

கெளதம் ராதிகாவின் காதல் பற்றி மருத்துவமனையில் பலரும் அறிந்திருந்தபடியால், மற்றவர்களின் கேள்வியான பார்வை, ராதிகாவை வதைத்தது. உணர்வுகளின் கொந்தளிப்பில் இருந்த போதும், எதையும் வெளிக்காட்டாது மௌனமாய் மனதிற்குள் அழுதாள் 

“கெளதம் கண்ணா, என்னடா திடீர்னு வந்திருக்க? நாலு நாளா என்னமோ உன் நெனப்பாவே இருந்தது, நானே வரச் சொல்லணும்னு நெனச்சுட்டு இருந்தேன், நீயே வந்துட்ட… வா வா வா” என முகம் கொள்ளா சிரிப்புடன் வரவேற்ற அன்னையைக் கண்டதும், தாய் பசுவைக் கண்ட கன்று போல், மடியில் முகம் புதைத்து, எந்த கவலையும் அற்ற பால்ய வயதுக்கே செல்ல மனம் துடித்தது கௌதமிற்கு 

உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவன், “சும்மா தாம்மா வந்தேன்” என சமாளித்தான்

மனதளவில் அன்னையை சற்று தயார் செய்த பின்,  தான் அமெரிக்கா செல்லும் செய்தியை கூற வேண்டுமென முன்பே முடிவு செய்திருந்தான் கெளதம்

“அத்தை மாமா நல்லா இருக்காங்களா? அப்புறம் தீபாவுக்கு எப்ப டெலிவரி டேட்? அங்கேயே இருக்க போறாளாமே டெலிவரிக்கு? மொதல் பிரசவம் அம்மா வீட்ல நடக்கறது தான சம்பிரதாயம். அது சரி, அந்த…” என பேசிக் கொண்டே போன மனைவியை இடைமறித்த கௌதமின் தந்தை ராமகிருஷ்ணன் 

“வேணி, கொஞ்சம் மூச்சு விட்டுட்டு பேசு” என கேலி செய்தார்

“என் புள்ளகிட்ட பேசினா உங்களுக்கு பொறுக்காதே?” என முறைத்தார் கிருஷ்ணவேணி

“எல்லாம் அப்புறம் பேசலாம், மொதல்ல அவனுக்கு சாப்பிட ஏதாச்சும் ரெடி பண்ணு, பசில வந்திருப்பான்” என பேச்சை திசை மாற்றினார் ராமகிருஷ்ணன் 

“அச்சோ, ஆமால்ல. நீ குளிச்சுட்டு வா கெளதம், நான் டிபன் ரெடி பண்றேன்” என சமையல் அறைக்குள் சென்றார் 

விட்டதே போதுமென, கெளதம் தன் அறையில் தஞ்சமானான். தனிமை கிடைத்ததும், எப்போதும் போல் ராதிகாவின் நினைவு அவனை ஆட்கொண்டது. நினைவின் கனம் தாங்க இயலாமல், கண்மூடி படுக்கையில் சாய்ந்தான் 

எத்தனை நேரம் அப்படியே இருந்தானோ, அன்னையின் கோபக்குரலில் எழுந்து அமர்ந்தான் 

“என்னடா நெனச்சுட்டு இருக்க உன் மனசுல? அமெரிக்கா போகப் போறியாமே? உங்க மாமா இப்ப தான் போன் பண்ணினார், அவர் சொல்லித் தான் பெத்தவ நான் தெரிஞ்சுக்கணுமா?” என மூச்சு வாங்க கத்தினார் கிருஷ்ணவேணி

“டென்ஷன் ஆகாத வேணி, உக்காந்து பேசு” என மனைவியின் உடல்நிலையை எண்ணி சமாதானம் செய்த ராமகிருஷ்ணன், கௌதமின் அருகிலேயே அமரச் செய்தார்

“எப்படிங்க டென்ஷன் ஆகாம இருக்கச் சொல்றீங்க?” என கிருஷ்ணவேணி அழத் துவங்க 

“அம்மா ப்ளீஸ், நான் சொல்றத கொஞ்சம் கேளும்மா” என சமாதானம் செய்ய முயன்றான் கெளதம் 

“நான் சொல்றத நீ கேளு மொதல்ல. நீ அமெரிக்காவுக்கோ போ ஆப்ரிக்காவுக்கோ போ, அதைப் பத்தி எனக்கு கவலை இல்ல. ஆனா கல்யாணம் பண்ணி உன் வீட்டுக்காரியையும் சேத்து கூட்டிட்டு போ” என்ற கிருஷ்ணவேணி, இதற்கு மேல சொல்ல ஏதுமில்லை என்பது போல் பேச்சை நிறுத்தினார் 

கௌதம் இருந்த மனநிலையில், அன்னையின் கோபம் அவனை மிகவும் பாதித்தது

ராதிகாவை பற்றிய உண்மையை அறிந்த நாளில் இருந்தே, யாரிடமும் எதுவும் பகிர இயலாமல், உள்ளேயே மறுகி மறுகி சேர்ந்த மனஅழுத்தம் மொத்தமும் மேலெழ, தன்னையும் அறியாமல் அன்னையின் மடியில் முகம் புதைத்தவன்,”ப்ளீஸ்’ம்மா… நீயாச்சும் என்னை புரிஞ்சுக்கோம்மா” என வெடித்து அழுதான் கௌதம்

இதை சற்றும் எதிர்பாராத கௌதமின் பெற்றோர் திகைத்து நின்றனர் 

‘ஆண் பிள்ளை அழலாகாது’ என சொல்லி வளர்க்கப்பட்ட தலைமுறையில் வளர்ந்தவன், உணர்வுகளை மேலும் மேலும் அழுத்தி புதைத்ததில், இடமின்றி வெடித்து சிதறியது 

மற்றதெல்லாம் மறந்து மகனின் வேதனை தன்னையும் தாக்க, “ஐயோ… என்னாச்சுடா கெளதம்?” என பதறிய கௌதமின் அன்னை

கணவனிடம் திரும்பி, “என்னங்க ஆச்சு என் புள்ளைக்கு? கடவுளே, சின்னதுல கூட என் கொழந்த இப்படி அழுது நான் பாத்ததில்லையே” என கலங்கினார் 

பிள்ளையின் கதறல், ராமகிருஷ்ணனையும் கலங்கச் செய்தது, மனைவியை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் திணறினார். மொத்த வேதனையையும் அழுகையில் கரைப்பவன் போல், அழுது தீர்த்தான் கெளதம்

அதற்கு மேல் பிள்ளை அழுவதை காண சகியாமல், “கெளதம், எந்திரிடா… அழாத கண்ணா. இனி நான் உன்னை எதுவும் சொல்லல, உன் இஷ்டம் போல செய்டா” என அழுதபடியே மகனை சமாதானம் செய்ய முயன்றார் கிருஷ்ணவேணி 

அன்னையின் அழுகை கௌதமை நிகழ்வுக்கு கொண்டு வர, சுதாரித்து உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன், “சாரி’ம்மா” என பெற்றவளை பார்க்கத் தயங்கி, எங்கோ பார்த்தபடி கூறினான்  

“கெளதம்…” என கிருஷ்ணவேணி மகனிடம் ஏதோ கேட்க வர

எதுவும் பேசாதே என்பது போல் மனைவியிடம் செய்கை செய்த ராமகிருஷ்ணன், “குளிச்சுட்டு வா கெளதம், சாப்பிடலாம்” என்றவர் மனைவியை அழைத்துக் கொண்டு, கௌதமின் அறையை விட்டு வெளியேறினார்  

தன் தற்போதைய தேவை தனிமை தான் என உணர்ந்து பெற்றோர் வெளியேறியது, கௌதமின் மனதை நெகிழ்த்தியது

தனக்காக பார்த்து பார்த்து செய்யும் பெற்றோரிடம் கூட உண்மையை மறைக்கிறோமே என மனம் உறுத்திய போதும், உண்மையை அறிவதால் அவர்களும் சேர்ந்து மனஉளைச்சல் படுவது தான் மிஞ்சும் என உணர்ந்தான் 

அல்லது, ராதிகாவை சந்தித்து மனதை மாற்ற அம்மா முயற்சி செய்யக் கூடும். அது ராதிகாவின் நிம்மதியை நிச்சயம் கெடுக்கும், தன்னால் அவள் பட்ட வேதனை போதும் என நினைத்தான் கெளதம் 

ராதிகாவின் நினைவு மனதை ஆக்கிரமிக்க, இக்கணமே அவளை காண வேண்டி மனம் ஏங்கியது. வாக்காவது ஒன்றாவது என எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, அவளிடம் ஓட மனம் விழைந்தது

ஆனால், அதன் பின்விளைவுகளை எண்ணிப் பார்க்கவும் பயந்தான் கெளதம். அன்று சரியான நேரத்தில் தான் செல்லாமல் இருந்திருந்தால், இன்று அவள் உயிருடன் இருந்திருக்க மாட்டாள் என்ற நினைவே அவனை பயமுறுத்தியது 

எல்லாவற்றையும் மறந்து தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை. பெற்றோருக்காகவேனும், இங்கு இருக்கப் போகும் சில நாட்கள் மகிழ்வாய் இருப்பது போல் நடிக்கப் பழக வேண்டும் என நினைத்தான் கெளதம் 

அதேப் போல், அடுத்து வந்த நாட்களில் பெற்றோர் முன் இயன்ற வரை இயல்பாய் இருக்க முயன்ற கெளதம், அதில் வெற்றியும் கண்டான்

அன்னையை அவர் விரும்பிய கோவில்களுக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்தான். நீண்ட நாட்களுக்கு பின், தந்தையுடன் அமர்ந்து, அவர் விரும்பிக் கேட்கும் பழைய திரையிசை பாடல்களை கேட்டு மகிழ்ந்தான்

என்ன செய்த போதும், ராதிகாவின் நினைவை அவனால் விரட்ட இயலவில்லை. அவள் நினைவின் தாக்கத்தில் அவ்வப்போது சற்று சுணங்கியவன், பெற்றோருக்காக முயன்று தேறினான் 

தான் உணர்ச்சி மேலீட்டால் அழுதது பற்றி பெற்றோர் எதுவும் கேளாதது, கௌதமிற்கு பெரும் நிம்மதியை அளித்தது. கேட்டால் மீண்டும் உணர்ச்சி குவியலாகிவிடுவானோ என பயந்துவிட்டார்கள் போல என, பெற்றவர்கள் மேல் பரிதாபம் தோன்றியது 

“என்னம்மா சொல்ற… அண்ணா அழுதானா?” என நம்ப இயலாமல் கேட்டாள் கௌதமின் தங்கை சுஜிதா 

“ஆமா சுஜி, அவன அப்படி பாக்கவே முடியலடி” என வேதனையாய் கூறினார் கிருஷ்ணவேணி 

“அப்பவே என்னை கூப்பிட்டுருக்க வேண்டியது தானம்மா” என்றாள் மனம் தாளாமல் 

“அதிசயமா மாப்பிள்ளையும் நீயும் வெளியூர் போய் இருந்தீங்க, ஏன் தொந்தரவு பண்ணனும்னு தான் சொல்லல” என்றார்  

“என்ன பிரச்சனைனு கேட்டியாம்மா?” என சுஜிதா வினவ 

“உங்கப்பா அவனை எதுவும் கேக்கக் கூடாதுனு சொல்லிட்டார் சுஜி. அவனா சொல்லனும்னா சொல்லட்டும், நாம கேட்டு அவன கஷ்டப்படுத்தக்கூடாதுனு என் கையையும் கட்டிப் போட்டுட்டார்” என அங்கலாய்த்தார்

“அதுக்காக, அப்படியே விட்டுடறதா? இப்ப அண்ணா எங்க?” என மாடி படிக்கட்டில் கண் பதித்தபடி கேட்க 

“அமெரிக்கா போறதுக்கு ஏதோ விசா வாங்கணுமாமே, அங்க போயிருக்கான்”

“அமெரிக்காவுக்கா? என்கிட்ட சொல்லவே இல்ல” என்றாள் கோபமாய் 

“எனக்கே மாமா சொல்லித் தான் தெரியும். மனசுல எதையோ போட்டு கொழப்பிட்டு இருக்கான் சுஜி, அது மட்டும் நல்லா தெரியுது, ஆனா என்னனு தான் புரியல” என வருந்தினார் கிருஷ்ணவேணி 

“நம்மகிட்ட சொல்றதுக்கு என்னம்மா?”என சுஜிதாவும் வருந்தினாள்            

சிறிது நேரத்தில் கெளதம் தந்தையுடன் வீட்டுக்குள் நுழைய, அவனை கண்டும் காணாதவள் போல் முகம் திருப்பினாள் சுஜிதா 

“என்ன சுஜி மேடத்துக்கு எங்களையெல்லாம் கண்ணு தெரியல போல” என கேலி செய்தான் கெளதம். மகன் முயன்று இயல்பாய் இருப்பதை போல் காட்டிக் கொள்வதை ராமகிருஷ்ணன் கவனிக்கத் தவறவில்லை

“எங்களுக்கெல்லாம் கண்ணு தெரியுது, பாரின் போறவங்களுக்கு தான் தங்கச்சினு ஒருத்திகிட்ட அதை சொல்லணும்னு கூட தெரியல” என்றாள் சுஜிதா கோபமாய் 

“ஓ… அதான் கோபமா?” என முறுவலித்த கெளதம், “திடீர்னு தான்டா இந்த ஜாப் ஆபர் வந்தது, அதான்…” என சமாளிப்பாய் உரைத்தான்

“இதுக்கு முன்னாடி உனக்கு இதை விட பெட்டர் ஆபர் எல்லாம் வந்தப்ப கூட நீ போகலியே’ண்ணா” என்றாள் சந்தேகமாய் 

கெளதம் என்ன சொல்வதென தயங்கி நிற்க, “சுஜி, இப்ப எதுக்கு உங்க அண்ணன நிக்க வெச்சு கேள்வி கேட்டுட்டுருக்க? அவன் வேலை அவன் இஷ்டம்” என்றார் ராமகிருஷ்ணன், சற்றே கடுமையான குரலில் 

எப்போதும் கனிவாய் பேசும் தந்தை கடிந்து கொண்டதில், சுஜியின் கண்ணில் நீர் துளிர்க்க, “அப்போ எனக்கு அண்ணனவை கேள்வி கேக்கற உரிமை இல்லையாப்பா?” எனவும் 

“இல்ல” என்றவர், “உங்கம்மாவுக்கு சொன்னதை தான் உனக்கும் சொல்றேன். அவன் ஒண்ணும் சின்ன கொழந்தையில்ல, தப்பு சரி பாத்து தான் முடிவெடுப்பான். அதை கேக்கற உரிமை நம்ம யாருக்கும் இல்ல. நம்மகிட்ட சொல்ற விஷயம்னா அவனே சொல்லுவான், அவனை வற்புறுத்தி கஷ்டப்படுத்தறதை நான் அனுமதிக்கமாட்டேன்” என்றார் ராமகிருஷ்ணன் முடிவாய்    

தந்தை தன் மீது கொண்ட நம்பிக்கையும் அன்பும் மனதை நிறைக்க, அதே நேரம் உண்மையை சொல்ல முடியாத தன் நிலையை நொந்த கெளதம், “அப்பா… நான்…” என தயக்கமாய் பெற்றவரைப் பார்க்க 

“கெளதம், ஏதோ ஒரு விஷயம் உன்னை கஷ்டப்படுத்திட்டு இருக்குனு எனக்கு புரியுது. இப்ப அதை எங்ககிட்ட சொல்ற மனநிலைல நீ இல்லங்கறதையும் என்னால உணர முடியுது. உனக்கு எப்ப சொல்லணும்னு தோணுதோ அப்ப சொல்லு, வீணா மனசை போட்டு குழப்பிக்காத” என தந்தை கூறவும், மௌனமானான் கெளதம்

பிள்ளையின் வேதனை மனதை வருத்திய போதும், பேச்சை மாற்ற எண்ணி மனைவி பக்கம் திரும்பியவர், “வேணி, வெளிய போயிட்டு வந்தது அசதியா இருக்கு, நான் கொஞ்சம் படுக்கறேன், மோர் எடுத்துட்டு வா” என்றபடி அறைக்குள் சென்றார் 

பெற்றவர்கள் அகன்றதும், “கோபமா சுஜிம்மா?” என்றபடி தங்கை அருகில் சென்று அமர்ந்தான் கெளதம் 

“கோபம் எல்லாம் இல்ல’ண்ணா, ஆனா நீ ரெம்ப அழுதேனு அம்மா சொன்னப்ப என்னால தாங்க முடியல” என்றவளுக்கு கட்டுப்படுத்த முயன்றும் இயலாமல் கண்ணில் நீர் வழிந்தது

சிறுவயது முதல் எந்த ஒரு சின்ன விஷயத்திற்கும், பெற்றோரை விட தன்னையே நாடும் தங்கை, தன் பொருட்டு வருந்துவது மனதை கனக்கச் செய்ய, “அச்சோ, என் செல்லத்த அழவெக்கறீங்களானு மாப்பிள்ளை என்கிட்ட சண்டைக்கு வரப் போறார்” என கேலி போல் பேச்சை மாற்ற முயன்றான் கெளதம் 

“பேச்சை மாத்தாத’ண்ணா, அப்படி என்ன பிரச்சனை? எனக்கு கூட தெரியக் கூடாத ரகசியமா?” என தங்கை ஆதங்கத்துடன் வினவ 

“உனக்கு தான் கண்டிப்பா தெரியக் கூடாது” என மனதிற்குள் நினைத்துக் கொண்டான் கெளதம்

தெரிந்தால், “எனக்காக பழி ஏற்க போய் தானே, இன்று உனக்கு இந்த நிலைமை” என குற்ற உணர்வில் தங்கை வருந்துவாள் என பயந்தான் 

ஆனால் மழுப்பினால் அவள் விடப் போவதில்லை என உணர்ந்தவனாய், “ரகசியம்னு இல்ல சுஜிம்மா. ஆனா… இப்ப சொல்ல முடியாத சூழ்நிலைல இருக்கேன், தப்பா நினைக்காதடா” என கெஞ்சலாய் கெளதம் கூற

அதற்கு மேல் உடன் பிறந்தவனை சங்கடப்படுத்த மனமின்றி, “விசா வந்தாச்சா’ண்ணா? டிக்கெட் விசாரிச்சுட்டியா?” என பேச்சை மாற்றினாள் சுஜிதா

இதோடு விட்டாளே என நிம்மதியாய் உணர்ந்தவன், “விசா வாங்கின கையோட ட்ராவல்ஸ்ல போய் டிக்கெட் போட்டுட்டு தாண்டா வரேன், சனிக்கிழமை கெளம்பணும்” என்றான் 

“சனிக்கிழமைனா இன்னும் நாலே நாலு நாள் தாண்ணா இருக்கு, அதுக்குள்ள எப்படி?” எனவும்

“நாலு நாள் போதாதா ராதி” என்றான் அனிச்சையாய்

“என்னண்ணா சொன்ன?” 

“நாலு நாள் போதாதானு சொன்னேன்”    

“அதில்ல… ராதி’னு ஏதோ சொன்னியே, யாருண்ணா அது?” என சுஜிதா ஆர்வமாய் கேட்க, தன்னையும் அறியாமல் இயல்பாய் ராதிகாவின் பெயர் தன் பேச்சில் வந்திருப்பதை உணர்ந்தவன், அவள் நினைவில் முகம் மாறினான்  

ஏதோ பறிகொடுத்ததை போன்ற அண்ணனின் தவிப்பை சுஜிதாவால் உணர முடிந்தது. நிச்சயம் இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என யூகித்தாள் 

கௌதமின் முகமாற்றத்தை கவனியாதவள் போல், “ராதி யாரு’ண்ணா? உனக்கு தெரிஞ்சவங்களா?” என இயல்பாய் கேட்பது போல் கேட்க

“அ…அது… அப்படி யாருமில்ல. சும்மா, தெரியாம ஏதோ வாயில வந்துடுச்சு” என சமாளித்தவன், “கொஞ்சம் வேலை இருக்கு சுஜி” என நழுவினான்   

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

Contact admin@sahanamag.com for your advertisement needs.

40 ஆயிரம் பார்வையாளர்களை கடந்த இந்த இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய, அணுக வேண்டிய மின்னஞ்சல் admin@sahanamag.com

Advertise with us to increase your customer base

(தொடரும்…ஏப்ரல் 1, 2021)

Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே❤ (பகுதி 18) – ✍ சஹானா கோவிந்த்
  1. கௌதம் உண்மையாவே அம்பேரிக்காவுக்குக் கிளம்பிடுவானா? கௌதமின் அடுத்த திட்டம் என்னவாய் இருக்கும்? பார்க்கலாம். ஆனால் கதை முடியும் நேரம் வந்துடுச்சுனு நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: