தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே ❤❤❤ (அத்தியாயம் 9)

ணவு முடிந்து நால்வரும் அரட்டையில் மூழ்கியிருக்க, “ஒரு நிமிஷம், இதோ வரேன்” என உள்ளே எழுந்து சென்றாள் தீபா

“அப்புறம் பிரகாஷ், ஹாஸ்பிடல்ல என்ன நியூஸ்?” என கெளதம் கேட்க

“நியூஸ் ஒண்ணும் பெரிசா இல்ல கெளதம், ஆனா அந்த…” என ஏதோ சொல்ல வந்த பிரகாஷ், திடீரென கோபமாய் எழுந்தான்

ஒரு கையில் சிறு டீபாய் ஒன்றும், மற்றொரு கையில் ஒரு தட்டும் ஏந்தி சற்று சிரமத்துடன் தீபா உள்ளிருந்து வந்து கொண்டிருந்தாள்

அருகே சென்று அவள் கையில் இருந்ததை கோபமாய் தட்டி பறிப்பது போல் வாங்கிய பிரகாஷ், “வெயிட் தூக்காதனு ஒருவாட்டி சொன்னா புரியாதா உனக்கு? எல்லாம் தெரிஞ்சவ மாதிரி பேச மட்டும் தெரியும்” என்றான் அதீத கோபத்துடன்

பிரகாஷை இதற்கு முன் இது போல் கோபமாய் பார்த்திராத கெளதம் அதிர்ச்சியாய் பார்க்க, “சும்மா சின்ன கொழந்தை மாதிரி ட்ரீட் பண்ணாதீங்கனு ஒரு வாட்டி சொன்னா உங்களுக்கு புரியாதா?” என்றாள் தீபா பதிலுக்கு அதே கோபத்துடன்

தான் ரசிக்கும் ஜோடியான பிரகாஷ் தீபாவின் ஊடல் மனதை வருத்த, கண்களில் கலக்கத்துடன் கௌதமின் அருகில் வந்து அமர்ந்த ராதிகா, “என்னாச்சு கெளதம்?” என்றாள் கவலையுடன்

“தெரியல” என்றான் கெளதம் மெல்லிய குரலில்

“கொழந்த மாதிரி நடந்துகிட்டா கொழந்த மாதிரி தான் ட்ரீட் பண்ணனும்” என்றான் பிரகாஷ் குற்றம் சாட்டும் குரலில்

“என்னை எப்படி பாத்துக்கணும்னு எனக்கு தெரியும், நான் ஒண்ணும்…” என்றவளை மேலே பேச விடாமல் கைகளை உயர்த்தி தடுத்த பிரகாஷ்

“இந்த ஒரு உதாரணம் போதும், என்னோட முடிவு தான் சரினு ப்ரூவ் பண்றதுக்கு” என்றவன், தீபாவின் முறைப்பை பொருட்படுத்தாமல் வேகமாய் விலகி கௌதமின் அருகில் வந்து அமர்ந்தான் பிரகாஷ்

அப்போது தான் ராதிகா இருப்பதை உணர்ந்தவன் போல் “சாரி ராதிகா” என்ற பிரகாஷ், “அப்புறம், என்ன பேசிட்டு இருந்தோம் கெளதம்?” என சமாளிப்பாய் பேச்சை மாற்றினான்

தர்மசங்கடமாய் ராதிகாவை பார்த்த தீபா, விருந்தினர் முன் தலை குனிய வைத்துவிட்டானே என ஆதங்கத்தில் கண்ணில் நீர் துளிர்க்க, அதை மறைக்க எண்ணி சமையல் அறைக்குள் சென்றாள்

தீபாவின் கண்ணீர் பிரகாஷின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது, ஆனால் எப்படியோ அழட்டும் என விடவும் மனம் வரவில்லை

“ஒரு நிமிஷம்” என இருவரிடமும் பொதுவாய் கூறிவிட்டு, உள்ளே எழுந்து சென்றான்

சமையலறை மேடையில் சாய்ந்தபடி, கண்ணீரை கட்டுப்படுத்த இயலாமல் உதடு கடித்து நின்றவளைக் கண்டதும், கோபமும் வேதனையும் ஒருங்கே மேலெழுந்தது பிரகாஷின் மனதில்

இப்போதைக்கு அவள் அழுகையை நிறுத்தினால் போதுமென நினைத்தவன், “நம்ம சண்டையெல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம், அவங்க இருக்காங்க வா” என்றான் பிரகாஷ் ஒட்டாத குரலில்

அவனை பார்வையைத் தவிர்த்து கண்ணீரைத் துடைத்தவள், மௌனமாய் அவன் பின்னோடு முன்னறைக்கு வந்தாள்

சூழ்நிலையை சரியாக்க எண்ணி தொலைகாட்சியை உயர்பித்த பிரகாஷ், “கெளதம், ஸ்கோர் என்னனு பாத்தியா?” என பேச்சை மாற்ற

தீபாவின் அழுது சிவந்த கண்கள் கௌதமை பொறுமையிழக்கச் செய்ய, பிரகாஷின் கையில் இருந்த ரிமோட்டை பிடுங்கி டிவியை அணைத்தான் கெளதம்

எல்லோரின் பார்வையும் கெளதம் மீதே நிலைத்திருக்க, “என்ன பிரச்சனனு இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா?” என்றான் கோபமாய் பிரகாஷ் மற்றும் தீபாவைப் பார்த்து

அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் தீபா அழத் தொடங்கினாள்

அதை காண சகியாமல், “ஏய் தீபா, என்ன இது சின்ன கொழந்த மாதிரி அழுதுகிட்டு? ஏன் பிரகாஷ் இந்த நேரத்துல அவள அழ வெக்கற?” என்றான் கெளதம் ஆதங்கத்துடன்

“நான் அவள அழ வெக்கறேனா? நீயும் புரியாம பேசாத கெளதம்” என்றவன், ராதிகாவின் பக்கம் திரும்பி, “சாரி ராதிகா” என்றான் பிரகாஷ்

“இட்ஸ் ஒகே” என்ற ராதிகா, தீபாவின் அருகே சென்று அமர்ந்து, ஆதரவாய் அவளை தோளில் சாய்த்து கொண்டாள். ஆதரவு கிடைத்ததும் தீபாவின் அழுகை மேலும் வலுத்தது

“என்ன பிரச்சன பிரகாஷ்?” என்றான் கெளதம் பொறுமையிழந்து

“மொதல்ல அவ அழுகையை நிறுத்த சொல்லு கெளதம்” என்றான் பிரகாஷ் எரிச்சலாய்

“அழாம என்ன செய்யறது? ப்ரெக்னன்ட்டா இருக்கற பொண்ணுகிட்ட என்ன வேணும்னு கேட்டு கேட்டு ஆசைய நிறைவேத்தறது தான் நான் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா எனக்கு…” என தீபா விசும்பலுடன் நிறுத்த

“என்ன தீபா, இதுக்கு போய் அழுவாங்களா? என்ன வேணும்னு சொல்லுங்க” என்றாள் ராதிகா

“நீயே சொல்லு ராதிகா, டெலிவரிக்கு அம்மா வீட்டுக்கு போகணும்னு ஆசைபடறது தப்பா? அதுவும் முதல் கொழந்தை, அதானே முறையும் கூட” எனவும்

“முறை சம்பிரதாயமெல்லாம் நம்ம சௌகரியத்துக்கு ஏற்படுத்தினது தான், அது ஒண்ணும் சட்டமில்ல” என்றான் பிரகாஷ் இன்னும் கோபம் குறையாத குரலில்

“அப்ப என்னோட விருப்பம் உங்களுக்கு முக்கியமில்லயா?” என்றாள் தீபா குற்றம் சாட்டும் குரலில்

“அதையே நானும் கேக்கலாம் இல்லயா?” என்றான் பிரகாஷும் அதே போல்

“ஒகே ஒகே, சண்டை வேண்டாம். தீபா சொல்றதும் நியாயம் தானே பிரகாஷ்” என கெளதம் தீபாவுக்கு பரிந்து பேச

“நீ உன் பிரெண்டுக்கு தான சப்போர்ட் பண்ணுவ” என பிரகாஷின் கோபம் இப்போது கௌதமின் பக்கம் திரும்பியது

“ஐயோ அதில்ல பிரகாஷ்” என கெளதம் சமாதானம் செய்ய முயல

அதற்குள், “நீங்க என்ன சொன்னாலும் சரி, நான் வளைகாப்பு முடிஞ்சு எங்கம்மா வீட்ல தான் இருப்பேன்” என்றாள் தீபா தீர்மானமாய்

“வளைக்காப்பு வரைக்கும் எதுக்கு வெயிட் பண்றே, இப்பவே கெளம்பு, போய் தொல” என்றான் பிரகாஷ் கோபமாய்

“டெலிவரிக்கு போறப்ப இப்படி போய் தொலனு அபசகுனமா…” என தீபா மீண்டும் அழத் தொடங்கினாள்

“பிரகாஷ், ஏன் அவள அங்க போக வேண்டாங்கற? சென்னைல நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க, நான் வேணா என்னோட பிரெண்ட்ஸ்….” என்ற கௌதமை இடைமறித்தவன்

“இட்ஸ் நாட் அபௌட் தட் கெளதம்” என முடித்தான் பிரகாஷ்

“அவருக்கு என் மேல நம்பிக்கை இல்ல கெளதம், நான் என்ன சின்ன கொழந்தையா? என்னைப் பாத்துக்க எனக்குத் தெரியாதா?” என தீபா பிடிவாதமாய் பேச

“ரெம்ப நல்லாத் தெரியும், அதான் கொஞ்ச நேரம் முன்னாடி பாத்தோமே” என அவள் சிரமப்பட்டு டீபாய் தூக்கியதை சுட்டிக் காட்டினான் பிரகாஷ்

“சரி என்மேல நம்பிக்கை இல்ல, எங்கம்மா அப்பா என்னைப் பாத்துக்க மாட்டாங்களா?”  என்றாள்

ஓரு கணம் ஒன்றும் பேசாமல் தீர்க்கமாய் அவளைப் பார்த்தவன், “எல்லாரும் பாத்துப்பாங்க, ஆனா நான் பாத்துக்க முடியாதில்ல?” என்ற பிரகாஷின் குரலில், கோபத்தை விட பிரிவாற்றாமையின் வேதனை அதிகம் தெரிந்தது

அதை உணர்ந்ததும், தீபாவுக்கும்  அப்போது தான் பிரிவுத் துயரம் புரிய, மௌனமாய் தலை குனிந்தாள்

தீபா கோபமாய் பேசியதையும் அழுததையும் கூட பொறுத்துக் கொண்ட பிரகாஷிற்கு, அவளின் இந்த மௌனம், தாங்கமுடியாததாய் போனது

பிரகாஷ் எழுந்து தீபாவின் அருகே வர, ராதிகா விலகி கௌதமின் அருகில் சென்று அமர்ந்தாள்

தீபாவின் அருகே அமர்ந்து அவளை தோளோடு அணைத்துக் கொண்ட பிரகாஷ், “சாரிடா உன்னை ரெம்ப அழ வெச்சுட்டேன், உன் இஷ்டப்படி நீ உன் அம்மாவீட்டுலயே இருந்துக்கோ சரியா?” என்றான் சமாதானமாய்

“நான் எங்கயும் போகல உங்க கூடவே இருக்கேன், சாரிப்பா” என தீபா கணவனின் தோளில் சாய்ந்து விசும்ப, அதைப் பார்த்த ராதிகாவின் கண்களில் நீர் துளிர்த்தது

அவள் கண்ணீரைக் கண்டதும், அணைத்துத் தேற்ற தன்னையும் அறியாமல் கௌதமின் கைகள் மேலெழுந்தது

அதை கட்டுப்படுத்தியவன், சூழ்நிலையை இலகுவாக்க எண்ணி, “ஹலோ, நாங்க ரெண்டு பேரும் இங்க இருக்கோம்னு ஞாபகம் இருக்கா இல்லையா?” என கெளதம் கேலியாய் சிரிக்க, கூச்சத்துடன் கணவனிடமிருந்து விலகினாள் தீபா

“ஏண்டா கெளதம் உனக்கிந்த நல்ல எண்ணம்? ஒரு வாரமா மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு இருந்தவ இன்னைக்கி தான் பக்கத்துல வந்திருக்கா, அதை கெடுக்கறியே கரடி” தீபாவை விலக விடாமல் பற்றிக் கொண்டே பிரகாஷ் கூற

“யாரு நான் கரடியா? எல்லாம் நேரம் தான். எப்படியோ போங்கனு விட்டிருக்கணும், மனசு கேக்காம நாட்டாமை வேலைக்கு வந்தேன் பாரு, என்னைச் சொல்லணும்” என பொய் கோபத்துடன் முறைத்தான் கெளதம்

அது மற்ற மூவரையும் சிரிக்கச் செய்ய, புன்னகையில் விரிந்த ராதிகாவின் முகத்தை ரகசியமாய் ரசித்தான் கெளதம்

#ad

ப்போது இயல்பாய் சிரித்தாள் என்ற போதும், வீடு திரும்பும் வழியில் மௌனமாய் ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தாள் ராதிகா

கெளதம் பேச வைக்க முயன்ற போதும், அவள் ஆர்வம் காட்டவில்லை

வீடு வந்ததும், “ஒகே கெளதம், அப்புறம் பாக்கலாம்” என விடை கொடுத்தாள்

“இவ்ளோ தூரம் கொண்டு வந்து விட்டுருக்கேன், இப்படி கழட்டி விடறது நியாயமா?” என கெளதம் பாவமான தோரணையில் கேட்க

“ஐயோ அதில்ல, நீங்க… உங்களுக்கு வேலை…” என திணறியவளை, மெல்லிய முறுவலுடன் ரசித்தவன்

“ஒகே ஒகே… ரெம்ப கஷ்டப்படாத, ஒரு கப் டீ கிடைக்குமா?” என கேலியாய் கேட்க

“ரெண்டு கப்பே தரேன் வாங்க” என முயன்று முறுவலித்தாள் ராதிகா

தேநீர் தயாராகிக் கொண்டிருக்க, மீண்டும் யோசனையில் மூழ்கி இருந்தவளை பார்த்தவன், “எவ்ளோ லாபம் மொத்தமா?” என்றான் கெளதம்

“என்ன?” என புரியாமல் விழித்தாள் ராதிகா

“இல்ல, எந்த கோட்டையை பிடிக்க இவ்ளோ யோசனைனு தோணுச்சு, அதான் அதுல லாபம் எத்தனைனு கேட்டேன்” என சிரித்தான்

பதில் சொல்லாமல் மௌனமானவளின் அருகே வந்தவன், “சொல்ல கூடாத ரகசியமா ராதிகா?” என கெளதம் கேட்க

“அ…அப்படி இல்ல, நான் தீபாவை பத்தி தான் நெனச்சுட்டு இருந்தேன்” என்றாள்

“அதானே பாத்தேன், என்னைப் பத்தியோனு கனவு கண்டுட்டேன்” என முணுமுணுத்தான்

“என்ன சொன்னீங்க?” என அவள் விழிக்க

“இல்ல, தீபாவ பத்தியானு கேட்டேன்” என சமாளித்தான்

“ம்… தீபா எவ்ளோ லக்கினு தோணுச்சு. பிரகாஷ் சார் அவங்க மேல உயிரையே வெச்சுருக்காரு இல்லயா, அந்த அன்புக்கு மேல ஒரு பொண்ணுக்கு வேற என்ன வேணும்னு தோணுது”, என்றவளின் குரலில் இருந்த ஏக்கமும், அதை சொன்ன போது அவள் கண்ணில் துளிர்த்த நீரும், கௌதமை தன்னிலை மறக்கச் செய்தது

உனக்கு நான் இருக்கிறேன் என செயலில் காட்டுவது போல், அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்

கௌதமின் அணைப்பில் ராதிகா சிலையாய் நின்றாள்

நடப்பது கனவா அல்லது நிஜமா என புரியாத நிலையில், மூச்சு விடக்கூட மறந்தவளாய் இருந்தாள்

அவளின் நிலை புரிந்தவன் போல், அதே நேரம் அவளை விட்டு விலகவும் மனமின்றி, சற்றே விலகி இன்னும் அணைப்பில் பிடித்தபடி நின்றான்

அதே நிலையில் அவள் முகம் பார்த்தவன், “அந்த அன்பை நேசத்தை நான் உனக்கு குடுக்கணும்னு ஆசைப்படறேன் ராதி, ஏத்துப்பியா?” என அவள் கண்ணோடு கண் பார்த்து கேட்க, பேச நா எழாமல் கண்ணில் நீர் வழிய அவனைப் பார்த்தாள் ராதிகா

அவள் கண்ணீரைத் துடைத்தவன், “ராதி… ராதி… எவ்ளோ நாள் இப்படி உரிமையா செல்லமா கூப்பிடணும்னு ஏங்கிருக்கேன் தெரியுமா? நிறைய வாட்டி இப்படி சுருக்கி கூப்பிட்டுட்டு, அப்புறம் சமாளிச்சும் இருக்கேன்” என கெளதம் சிரிப்புடன் கூற, அப்போது தான் சுயநினைவு வந்தவள் போல் அவனை விட்டு விலக முயன்றாள் ராதிகா

அணைப்பை இன்னும் இறுக்கியவன், “ப்ளீஸ், எதாவது பேசு ராதி” என ஏக்கமாய் கௌதம் பார்க்க, அந்த பார்வையின் வேகத்தை சமாளிக்க இயலாதவளாய், பார்வையைத் தழைத்து அவனிடமிருந்து விலகினாள்

“ராதி” என கெளதம் அருகே வர, விலகியவள் “ப்ளீஸ் கெளதம், இங்கிருந்து போய்டுங்க” என்றாள் அழுகையைக் கட்டுப்படுத்திய குரலில்

“இல்ல, உன் பதில் தெரியாம நான் போக மாட்டேன்” என்றான் தீர்மானமான குரலில்

“என்னைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு? நா… நான்… “, என அதற்கு மேல் சொல்ல இயலாமல் தவித்தவளின் கரம் பற்றி ஆறுதலாய் அழுத்தியவன்

“தெரியும் ராதி, எல்லாமே தெரியும். நீ ஏற்கனவே கல்யாணம் ஆனவ, மூணு வருஷம் முன்னாடி அவர் ஒரு விபத்துல இறந்துட்டாரு. நான் உன்னை விரும்பறத புரிஞ்சுட்டு, கொஞ்ச நாள் முன்னாடி வாணி அத்தை உன்னை பத்தின எல்லா விசயமும் என்கிட்ட சொன்னாங்க. எல்லாம் தெரிஞ்சு தான் சொல்றேன், ஐ லவ் யு ராதி. எனக்கு நீ வேணும், காலம் பூரா எனக்கு மனைவியா என் குழந்தைகளுக்கு அம்மாவா நீ வேணும்” என்றான் கெளதம் பிடிவாதமாய்

அவனுக்கு தன் கடந்த காலம் பற்றி எல்லாம் தெரியும் என்பதை அறிந்ததும், அதிர்ச்சியில் உறைந்தாள் ராதிகா

மெல்ல அதிலிருந்து மீண்டவள், “என்னைக் கொஞ்சம் தனியா இருக்க விடுங்க ப்ளீஸ்” என்றாள் அவனைப் பார்ப்பதை தவிர்த்து

அதற்கு மேல் அவளைக் கட்டாயப்படுத்த மனமின்றி, “ஒகே, உனக்கு யோசிக்க டைம் வேணும்னு நினைக்கிற. பட், எனக்கு ரெம்ப பொறுமை இல்ல ராதி, ஏற்கனவே நிறைய டைம் வேஸ்ட் பண்ணிட்டேனு தோணுது. என்னை வெயிட் பண்ண வெக்காத ப்ளீஸ், நாளைக்கி பாக்கலாம் ராதி” என்றவன், கட்டுப்படுத்த இயலாமல் அவள் கன்னத்தை வருடி ஒரு கணம் அப்படியே நின்றவன், பின் மனமின்றி நகர்ந்தான்

அந்த ஒரு சிறு அன்பான தொடுகையில், தன் நேசத்தின் ஆழத்தை அவன் சொல்லாமல் சொன்ன விதத்தில், அவள் செயலற்று நின்றாள்

கதவருகே நின்றவன், “ராதி” என்றழைக்க

இன்னும் என்ன என்பது போல் அவள் திகைப்புடன் பார்க்க, “ஐ லவ் யு” என காதலுடன் உரைத்து, பறக்கும் முத்தத்தை பரிசளித்து, அவளை மேலும் திகைக்கச் செய்து விட்டு புன்னகையுடன் வெளியேறினான் கெளதம்

#ad

ன்றிரவு நீண்ட நேரம் உறக்கம் வராமல் தவித்த ராதிகா, பழைய நினைவுகளில் மூழ்கினாள்

அப்போது ராதிகாவிற்கு இருபத்தியொரு வயது. கல்லூரி படிப்பு முடித்து, வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாள்

அந்த சமயம், பெற்றோர் அவளின் திருமண பேச்சை ஆரம்பித்தனர்

அப்படி வந்த முதல் வரன் தான் அரவிந்த். பெண் பார்க்க வந்த அன்றே ராதிகாவை பிடித்துப் போக, சம்மதம் தெரிவித்தான் அரவிந்த்

படிப்பு அழகு குணம் என, எல்லா விதத்திலும் ராதிகாவிற்கு பொருத்தமாய் இருந்தான் அரவிந்த்

தனக்கென தனிப்பட்ட விருப்பம் எதிர்பார்ப்பு ஏதுமின்றி, பெற்றோர் தனக்கு நல்லதே செய்வர் என, அவர்கள் தேர்ந்தெடுத்த மாப்பிளைக்கு தலையாட்டினாள் ராதிகா

மகளுக்கு ஏற்ற மணமகனை தேர்ந்தெடுத்த சந்தோசத்தில் இருந்த ராதிகாவின் பெற்றோர், ஊரே மெச்சும்படி திருமணத்தை நடத்தினர்

அரவிந்த் டெல்லியில் பணியில் இருந்தபடியால், திருமணம் நிச்சயம் ஆன கையோடு, வேலையை ராஜினாமா செய்திருந்தாள் ராதிகா

திருமணம் முடிந்த இரண்டு நாளில், அரவிந்தின் அக்கா வீட்டில் விருந்துக்கு அழைப்பு வர, இருவரும் அங்கு சென்றிருந்தனர்

அக்காவின் வீட்டுக்கு சென்ற மறுநாள், தன் கல்லூரி நண்பர்கள் சிலரை பார்த்து வருவதாய் பைக்கை எடுத்து சென்ற அரவிந்த், அதன் பின் வீடு திரும்பவில்லை. ஒரு சாலை விபத்தில் பலியானான்

திருமணமாகி மூன்றே நாளில் மகளின் வாழ்வு பறிபோன துக்கம், ராதிகாவின் பெற்றோரை மீளா துயரத்தில் ஆழ்த்தியது. ராதிகாவிற்கு எல்லாமும் ஒரு கனவு போல் முடிந்து போனது

அரவிந்தின் முகம் கூட முழுதாய் மனதில் பதியும் முன், ராதிகாவின் வாழ்வில் இருந்து அவன் காணாமல் போனான்

ஊரும் உறவும் பேசிய பேச்சுக்கள், அவளை இழப்பை விட அதிக துக்கப்படுத்தியது

வாழ்வை இழந்து நிற்கும் பெண்ணுக்கு ஆறுதல் கூறாவிடினும், ராசி இல்லாதவள் அது இதென அவள் மனம் நோகும் வண்ணம் பேசினர்

இனியும் வீட்டில் இருந்தால் உருக்குலைந்து போய் விடுவாள் என, விடுதியில் தங்கி மேற்படிப்பை தொடர செய்தார் ராதிகாவின் அண்ணன் பிரபு

படித்து முடிந்த பின்னும் கூட, சொந்த ஊரில் இருக்க ராதிகா விரும்பவில்லை

தெரிந்தவர்களின் பரிதாப பார்வையும், வேண்டாத பேச்சுகளும், அவள் நிம்மதியை கெடுத்தன

மறுமணம் பற்றி அண்ணன் பேச்செடுக்க, அதைப் பற்றி பேசவே வேண்டாம் என மறுத்து விட்டாள் ராதிகா

மன ரணம் ஆற, இன்னும் கொஞ்சம் காலம் போகட்டும் என நினைத்த பிரபு, அவள் வெளியூரில் வேலைக்குச் செல்ல சம்மதித்தார்

டாக்டர் சந்திரசேகரின் மனைவி வாணியின் தோழி கேட்டுக் கொண்டதன் பேரில், வாணி மருத்துவமனையில் வேலை கிடைத்து, ராதிகா கோவை வந்து சேர்ந்தாள்

தோழியின் மூலம் ராதிகாவின் வாழ்வில் நடந்த துயரத்தை அறிந்த வாணி, அவளிடம் மிகுந்த கனிவுடன் நடந்து கொண்டார்

அதன் பின் இயந்திரமயமாய் இருந்த ராதிகாவின் வாழ்வில், கெளதம் மூலம் வசந்தம் வீசியது. ஆனால் இப்போது அதுவே அவளை மனப்போராட்டத்தில் ஆழ்த்தியது

ழைய நினைவுகளில் இருந்து மீண்டவளுக்கு, கௌதமின் சிரித்த முகமும், அவன் தன்னை உரிமையுடன் அணைத்து தன் விருப்பத்தை கூறிய விதமும் கண் முன் தோன்றி, கண்ணில் நீர் நிறைத்தது

கெளதம் காதலை சொன்ன அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர இயலாமல் தவித்தாள் ராதிகா

“உன் மனதில் அவன் இல்லையா?” என உள் மனம் பரிகசிக்க, “இல்ல, அது சரியில்ல, கௌதமுக்கு நான் இணையானவ இல்ல” என அதை ஓதுக்கினாள்

அடுத்த நொடியே, “ஏன்? எனக்கென்ன கொற? எல்லாம் தெரிஞ்சு தானே கெளதம் என்னை விரும்பறார்” என நினைத்தாள்

“வேண்டாம், எதுவும் வேண்டாம். தப்பு, இது ரெம்ப தப்பு. ஏன் இப்படி தோணுது? ச்சே” என தன் மீதே கோபம் வந்தது

“என்ன தப்பு? மறுபடி வாழற தகுதி எனக்கில்லையா? வாழ்க்கைனா என்னனு புரியறதுக்கு முன்னாடியே எல்லாமும் முடிஞ்சு போச்சே. காலம் பூரா இப்படியே இருக்க முடியுமா?” என தனக்குத் தானே வாதாடினாள்

“ஆனா கெளதம்… இல்ல இது வேண்டாம், கௌதமுக்கு நல்ல வாழ்க்கை அமையணும். நான் அவருக்கு சரியானவ இல்ல, இனி கௌதமை பாக்கறதை பேசறதை அவாய்ட் பண்ணனும்.  எல்லார்கிட்டயும் போல கெளதம்கிட்டயும் இனி பட்டும் படாம இருந்துக்கணும்” என தனக்குத் தானே அறிவுறுத்தி கொண்டாள்

ஆனால் அது அத்தனை சுலபம் இல்லை என்பதை, அவளையும் அறியாமல் கண்ணில் வழிந்த நீர் சொல்லியது

ங்கே கௌதமின் நிலையோ, இன்னும் கொடுமையாய் இருந்தது. அந்த கணத்தின் உந்துதலில் காதலை சொல்லிவிட்ட போதும், ராதிகாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அவனை பயமுறுத்தியது

அவள் மனதில் தான் இருப்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்ற போதும், ஓட்டுக்குள் நத்தையாய் இருக்கும் அவளின் சுபாவம் அவனை அச்சுறுத்தியது

ஆனால் காதல் எத்தகைய மனிதனையும் தன் கூட்டுக்குள் இருந்து வெளிக்கொண்டுவரும் என நம்பினான் கெளதம்

மறுநாள் எப்போது விடியும், எப்போது ராதிகாவை பார்ப்போம் என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தான்

(தொடரும்… நவம்பர் 16, 2020)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: