தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே ❤❤ (அத்தியாயம் 8)

டெல்லியில் விமானத்தில் ஏறிய கணத்தில் இருந்தே, வீட்டுக்கு போகிறோம் என்பதை விட, ராதிகாவை விரைவில் காணப்  போகிறோம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது கௌதமின் மனதில்

அந்த அளவிற்கு, அவனை அவள் ஆக்ரமித்திருந்தாள். அவனே கூட, அந்த நிமிடம் வரை அதை உணரவில்லை

விமானத்தை விட்டிறங்கி, சம்பிரதாயங்களை எல்லாம் முடித்து வெளியே வந்த நொடி, கௌதமின் கண்கள் ராதிகாவை தேடியது

விமான நிலையத்திற்கு வருவதாய் அவள் கூறி இராத போதும், ஏனோ தேடினான்

“ஹலோ… என்ன? தேடும் கண் பார்வை தவிக்கவா?” என்ற கேலியான குரலில் திரும்பியவன், அங்கு பிரகாஷ் நின்றிருக்கக் கண்டான்

“ஏய் பிரகாஷ், நீ எப்ப வந்த?” என்றான் கெளதம், ராதிகாவை காணாத ஏமாற்றத்தை முயன்று மறைத்து

“ம்… நான் ஒரு மணி நேரமா இங்க தான் நிக்கறேன். ஆனா நீ தான் பிஸியா யாரையோ தேடிட்டு என்னைக் கண்டுக்கல” என மேலும் கேலி செய்தான் பிரகாஷ்

“அதெல்லாம் இல்ல, நீ ஏர்போர்ட்டுக்கு வரேனு சொல்லவே இல்லையே, அதான் கேட்டேன்” என சமாளித்தான் கெளதம்

“நல்லாவே சமாளிக்கற” என சிரித்தான் பிரகாஷ்

“எதுக்கு இந்நேரத்துக்கு நீ வந்த, நான் ஒரு டாக்ஸி எடுத்து போய் இருப்பேன்ல” என நண்பனுக்கு தன்னால் சிரமம் என்ற குற்ற உணர்வில் கௌதம் கூற

“இந்த சாக்குலயாச்சும் தீபாகிட்ட இருந்து கொஞ்ச நேரம் எஸ்கேப் ஆகலாம்னு தான்” என முறுவலித்தான் பிரகாஷ்

“அவகிட்ட போட்டு குடுக்கறேன் இரு” என கெளதம் மிரட்ட

“சொல்லு சொல்லு” என சிரித்த பிரகாஷ், “சரி போலாமா, வண்டி பார்கிங்ல போட்டிருக்கேன்” என நடக்க, உடன் நடந்தான் கெளதம்

வாகன நெரிசல் தாண்டி சற்று இலகுவாய் செல்லத் தொடங்கியதும், “என்ன கெளதம் ஒரே யோசனை? ராதிகா மேடம் பத்தி தான” என்றவனின் கேள்விக்கு

“ஓவரா ஓட்டாத பிரகாஷ், அப்புறம் தீபாகிட்ட கன்னா பின்னானு எதுனா மாட்டி விட்டுடுவேன்” என சிரித்துக் கொண்டே பொய் மிரட்டல் விடுத்தான் கெளதம்

“வேண்டாம் சாமி, சும்மாவே வம்பா இருக்கு” என்றவனின் குரலில், வழக்கமான கேலி இல்லாமல் ஏதோ வருத்தம் தெரிந்தது

அதை உணர்ந்த கெளதம், “என்ன பிரகாஷ், ஏதாச்சும் பிரச்சனையா?” என்றான் உண்மையான அக்கறையுடன்

பிரகாஷ் ஏதோ சொல்லத் தொடங்க, அதற்குள் கௌதமின் செல்பேசி அழைத்தது

“தீபா தான்…” என கெளதம் கூற

“தின்க் ஆப் தி டெவில்” என சிரித்தான் பிரகாஷ்

நண்பனின் கேலியில் தன்னை மீறி சிரித்தபடி கைபேசியை உயிர்ப்பித்த கெளதம், “ஹாய் தீபா” என்றான்

“ஹாய் கெளதம், எப்படி இருக்க?” என விசாரித்தாள் அவனின் உற்ற தோழி

“நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க? வழக்கம் போல பிரகாஷ் கூட சண்டை போட்டுட்டு இருக்கியா?” என்றான் கேலி போல், ஆனால் என்ன பிரச்சனை என அறிந்து கொள்ளும் அக்கறையுடன்

“ப்ச்… ஒண்ணுமில்ல”, என அந்த பேச்சை தவிர்த்தவள், “கெளதம், நாளைக்கி சண்டே நீ ப்ரீ தான, லஞ்சுக்கு வா. அதச் சொல்ல தான் கூப்ட்டேன்” என்றாள்

நாளை முழுவதும் ராதிகாவுடம் இருக்க வேண்டுமென காத்து கொண்டிருந்தவன், எப்படி தவிர்ப்பது என புரியாமல், “நான்… நாளைக்கு…” என ஏதோ காரணம் தேட முயல

“ராதிகாவும் வரா, இப்ப ஒகேவா?” என்றாள் தீபா கேலியாய்

“டபிள் ஒகே” என சிரித்தவன், “என்ன ஸ்பெஷல்?” என்றான்

“ஸ்பெஷல் எல்லாம் ஒண்ணுமில்ல, நீ வீட்டுக்கு வந்து நாளாச்சு அதான்” என்றாள்

“ஒகே ஒகே” என்றான் சந்தோசமாய்

“அதான் அப்பவே டபிள் ஒகே சொல்லியாச்சே, இப்ப இதையும் சேத்து நாலு ஒகேவா” என்றவள், “கெளதம், அப்புறம் நீ வர்ற வழில ராதிகாவ பிக் அப் பண்ணிக்குவேனு அவகிட்ட சொல்லி இருக்கேன், உனக்கு ஒகே தான, இல்லேனா சொல்லு நான் கூப்ட்டுக்கறேன்” என வேண்டுமென்றே நண்பனை சீண்டினாள் தீபா

“அம்மா தாயே… உருப்படியா ஒரு ஹெல்ப் பண்ணி இருக்க, அதை கெடுத்துடாதே” என்றான் கெளதம் பாவமாய்

“ஹா ஹா ஹா… ஒகே நாளைக்கு பாக்கலாம், பை கெளதம்” எனவும்

“பை தீபா” என அழைப்பைத் துண்டித்தான்

அதற்குள் கௌதமின் வீடு வந்துவிட்டிருக்க, “சரி கெளதம், நான் அப்படியே கெளம்பறேன், நாளைக்கு பாக்கலாம்” என்றான் பிரகாஷ்

“உள்ள வா பிராகாஷ், டீ போடறேன்” என கெளதம் அழைக்க

“அதுக்கு நான் தீபா குடுக்கற பனிஷ்மெண்ட்டே வாங்கிக்கறேன்” என சிரித்தான் பிராகாஷ்

“இரு  அவகிட்ட நாளைக்கு போட்டுத் தரேன் ” என பயம் காட்டினான் கெளதம்

“எப்படியும் ராதிகாவ பாத்தா நீ எல்லாமே மறந்துடுவ, சோ நான் எஸ்கேப்” என கேலி செய்த பிரகாஷ், “சரி கெளதம் டைமாச்சு பை” என விடைபெற்றுக் கிளம்பினான்

தனியாய் வீட்டுக்குள் நுழைந்ததும், ராதிகாவின் நினைவு கௌதமை மீண்டும் ஆக்கிரமித்தது

தன்னை இப்படி ஆட்டி வைக்கிறாளே என, அவள் மேல் அந்த கணம் ஏனோ கோபம் வந்தது

“இன்னைக்கி வரேனு தெரியுமல்ல, ஏர்போர்டுக்கு வந்தா என்னவாம், சரியான பந்தா” என மனம் கவர்ந்தவளை மனதார திட்டினான்

அதே நேரம் எதிரில் இருந்த சுவர் கடிகாரம் இரவு பதினொரு மணி எனக் காட்ட, “ச்சே பாவம், இந்த நேரத்துல அவ எப்படி தனியா வருவா?” என தானே அவளுக்கு வக்காலத்து வாங்கினான்

அடுத்த கணமே மறுபடியும், “வர முடியாது சரி, ஒரு போன் கூடவா பண்ண மூடியாது? கொழுப்பு, நாளைக்கி அவகிட்ட பேசவேக் கூடாது” என அந்த கணத்தின் பிரிவாற்றாமை ஏற்படுத்திய   கோபத்தில்  தீர்மானித்தான் கெளதம்

#ad

Amazon.in Deals👇

#ad

Amazon.com Deals👇

“வாங்க கெளதம்” என சிரிக்கும் கண்களுடன் ஆர்வமாய் ராதிகா வரவேற்க, முன்தின இரவு போட்டிருந்த தீர்மானங்கள் எல்லாம், போன இடம் தெரியவில்லை கௌதமிற்கு

இமைக்காமல் கெளதம் தன்னை பார்ப்பதை உணர்ந்த ராதிகா, சட்டென பார்வையை தழைத்து, அவன் உள்ளே வர வழி விட்டு விலகி நின்றாள்

தன்னைக் கண்டதும் அவள் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி, அவனுக்கு ஏதோ சேதியை சொல்வது போல் இருந்தது

கொஞ்சம் மெலிந்தது போல் தெரிந்தாள், ஒரு வார பிரிவுக்கு பின் பார்ப்பதால் தனக்கு அப்படி தோன்றுகிறதோ என நினைத்துக் கொண்டான் கெளதம்

“எப்படி இருக்க ராதிகா?” என்றான், இன்னும் அவளை விட்டு பார்வையை விலக்காமலே

“நல்லா இருக்கேன் கெளதம்” என்றாள், ஏனோ அவனின் பார்வை அவளை இயல்பாய் பேச விடாமல் செய்தது

“நல்லா இருக்கற மாதிரி தெரியலயே, கொஞ்சம் வெயிட் லாஸ் ஆன மாதிரி இருக்க?” என்றான், அவளை ஆராய்வது போல் பார்த்துக் கொண்டே

“இதெல்லாம் ரெம்ப ஓவர் கெளதம், ஒரு வாரத்துல யாராச்சும் வெயிட் லாஸ் ஆவாங்களா?” என்றாள் கேலியாய்

“ஏன் ஆகாம? ஸ்கூல் தமிழ் புக்ல, சங்க இலக்கியம் எல்லாம் படிச்சதில்லையா?” என்றான் அவனும் அதே கேலியுடன். மறைமுகமாய் தன் மனதை புரிய வைக்கவும் முயன்றான்

அவன் என்ன சொல்கிறான் என புரியாதவளாய், “சங்க இலக்கியமா? அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” என கேள்வியாய் பார்த்தாள் ராதிகா

தன் மனதில் இருப்பதை சொல்ல இதுவே சரியான தருணம் என தோன்ற, “அது…” என கெளதம் தொடங்க, அவன் கைப்பேசி அலறியது

 அதில் தீபாவின் எண் ஒளிர, பல்லைக் கடித்தபடி, “கரடி…” என்றான் சற்று சத்தமாகவே

“யாரு…?” என்பது போல் ராதிகா புரியாமல் பார்க்க

அவளுக்கு பதில் சொல்வது போல், “சொல்லு தீபா” என்றான் கெளதம் பேசியில்

“இன்னும் காணோம்னு தான் கூப்ட்டேன்” என தீபா கூற

“கெளம்பிட்டோம், இன்னும் பத்து நிமிசத்துல அங்க இருப்போம் ஒகே வா” என்றான் சற்றே கோபமாய்

ராதிகாவுடன் மனம் விட்டு பேச நினைத்த தருணத்தில் கைப்பேசியில் அழைத்து, நல்லதொரு  வாய்ப்பை கெடுத்து விட்டாளே என்ற ஆதங்கம் தோன்றியது கௌதமின் மனதில்

“சரி சரி, அதை ஏன் இப்படி கொலவெறியோட சொல்றனு தான் புரியல, ஒகே சீக்கரம் வாங்க பை” என அழைப்பைத் துண்டித்தாள் தீபா

“காணோம்னு கூப்ட்டாங்களா தீபா?” என தீபா அழைத்ததன் காரணத்தை புரிந்தவளாய் ராதிகா கேட்க

“இதெல்லாம் புரியும், ஆனா புரிய வேண்டியது புரியாது” என முணுமுணுத்தான் கெளதம்

“என்ன சொன்னீங்க?” என்றாள் ராதிகா கேள்வியாய்

கேள்வியில் கோடிட்டிருந்த அவளின் நெற்றியை தொட துடித்த விரல்களை, பேண்ட் பாக்கெட்டில் நுழைத்து கட்டுப்படுத்தியவன், “ஒண்ணுமில்ல மேடம், கெளம்பலாமா?” என சிரித்து மழுப்பினான்

“ஒகே சார், கெளம்பலாம்” என அவளும் அவன் பாணியிலேயே கேலியாய் பேசி முறுவலித்தாள்

அதன் பின் தீபாவின் வீட்டுக்கு வரும் வரை, ஏதேதோ பேச்சில் நேரம் கழிந்தது

இன்று எப்படியும் தன் மனதை ராதிகாவிடம் கூறி விடவேண்டுமென தீர்மானத்துடன் வந்தவன், அவளின் ரசனையான பேச்சில், மயக்கும் சிரிப்பில் எல்லாம் மறந்தான் கெளதம்

“வெல்கம் வெல்கம், தங்கள் வரவு நல்வெல்கம் ஆகுக” என வரவேற்றான் பிரகாஷ்

“ஒண்ணு தமிழ்ல சொல்லு இல்ல இங்கிலீஷ்ல சொல்லு, ஏன் இப்படி ரெண்டையும் சேத்து கொல்ற பிரகாஷ்?” என கேலி செய்தான் கெளதம்

“என்னப்பா செய்யறது, நாங்கெல்லாம் உள்ளூர் டாக்டர்ஸ், நீ பாரின் டாக்டர், அதான் இங்கிலீஷ் பாதி தமிழ் பாதி கலந்து செய்த வரவேற்பு” என நடிகர் கமல் குரலில் பிரகாஷ் மிமிக்ரி செய்ய

“நல்லா மிமிக்ரி பண்றீங்களே?” என ஆச்சர்யமாய் பார்த்தாள் ராதிகா

“இதெல்லாம் ஜுஜுபி ராதிகா, இன்னும் நிறைய திறமை எல்லாம் இருக்கு, ஆனா எனக்கு விளம்பரம் புடிக்காது யு சி” என பிரகாஷ் தன்னடக்கம் போல் கூற

“யாரு உனக்கா? அதை தீபாகிட்ட கேக்கணும், எங்க தீபா மேடம் ஆளைக் காணோம்?” என சோபாவில் அமர்ந்தபடி கேட்டான் கெளதம்

அதே நேரம் “ஹாய் ராதிகா வா வா, சாரி கிட்சன்ல கொஞ்சம் வேலையா இருந்தேன்” என ராதிகாவின் அருகில் அமர்ந்து, அவளை அணைத்து வரவேற்றாள் தீபா

“இந்த சமயத்துல ஏன் தீபா ஸ்ட்ரெயின் பண்ணிக்கறீங்க?” என தீபாவின் மேடிட்ட வயிற்றை பார்த்தபடி ராதிகா கேட்க

“ஒண்ணும் பிரச்சனை இல்ல ராதிகா” என்றவளை

“ஹலோ நானும் வந்திருக்கேன், கண்ணு தெரியுதா?” என்றான் கெளதம் பொய்க் கோபத்துடன்

“ஓ… நீயும் வந்திருக்கியா, சாரி கவனிக்கல” என வேண்டுமென்றே நண்பனிடம் வம்பு செய்தாள் தீபா

“இப்படி அநியாயமா பேசறியே தீபா, பழசெல்லாம் மறந்துட்டியே, நாம ஸ்கூல் படிக்கும் போது…” என கெளதம் ஆரம்பிக்க

“டேய், வேற எதாச்சும் புது டிராமா போடுடா” என்றான் பிரகாஷ் கேலியாய்

கெளதம் பதில் சொல்லும் முன்  அவனே தொடர்ந்து, “ஆனா நீ சொன்ன ஒரு விஷயம் ரெம்ப கரெக்ட் கெளதம், அநியாயமா பேசறதுல உன் பிரெண்டை அடிச்சுக்க ஆளில்ல” என்ற பிரகாஷின் பார்வை, இப்போது தன் மனைவியின் மீது யோசனையுடன் படிந்திருந்தது

பிரகாஷை முறைத்த தீபா, “கிட்சன்ல கொஞ்சம் வேலை இருக்கு, வா ராதிகா” என எழுந்து கொண்டாள்

பார்வையை விட்டு மறையும் வரை, பிரகாஷின் கண்கள் மனைவியையே தொடர்ந்தது

இருவரின் பேச்சும் பார்வையும் ஏதோ பிரச்சனை தான் என்பதை உறுதி செய்ய, “என்ன பிரகாஷ்? ஏதாச்சும் பிரச்னையா?” என்றான் கெளதம்

“ப்ச்… அத விடு கெளதம்” என சலித்து கொண்ட பிரகாஷ், “அப்புறம் கான்பரன்ஸ்ல உன்னோட ஸ்பீச் ஹைலைட் ஆய்டுச்சாமே” என பேச்சை மாற்றினான்

நெருங்கிய நட்பே ஆனாலும், அதற்கு மேல் கணவன் மனைவி அந்தரங்கத்தில்  தலையிடுவது நாகரீகமல்ல எனத் தோன்ற, கான்பரன்சில் நடந்த நிகழ்வுகள் பற்றி விவரித்தான் கெளதம்

கௌதமின் கண்கள் அவ்வப்போது ராதிகாவை தேடுவதை உணர்ந்து, கேலியாய் சிரித்தான் பிரகாஷ்

“எல்லாம் ரெடி, சாப்பிடலாம் வாங்க” என்ற தீபாவின் அழைப்புக்கு, வேகமாய் எழுந்தான் கெளதம்

“நீ தீபா சமையல் சாப்பிடறதுக்கு இப்படி ஆர்வமா போற மாதிரி எனக்குத் தோணல” என பிரகாஷ் சீண்ட

“அவ காதுல விழுந்தா… நீ தீந்த பிரகாஷ்” என மிரட்டினான் கெளதம்

“இல்லேனா மட்டும்” என முணுமுணுத்தபடி கௌதமை தொடந்தான் பிரகாஷ்

ராதிகா அமர்ந்ததும், இயல்பாய் அமர்வது போல் அவளருகே அமர்ந்தான் கெளதம்

அதை உணர்ந்து தீபா கௌதமை பார்த்து கேலியாய் சிரிக்க, எதுவும் சொல்லாதே என்பது போல் கெஞ்சலாய் பார்த்தான் கெளதம்

மௌனமாய் முறுவலித்தபடி, எதிர்புறம் பிரகாஷின் அருகில் இருந்த இடத்தில் அமர்ந்தாள் தீபா

“இவ்ளோ செஞ்சுருக்கீங்க தீபா, அதுவும் இந்த நேரத்துல” என ராதிகா குறைபட்டுக் கொள்ள

“ராதிகா, நானும் இந்த வீட்ல தான் இருக்கேன், அதை மறந்துட்டு பேசறீங்களே” என கேலி போல் தீபாவை வம்புக்கு இழுத்தான் பிரகாஷ்

“ஆமா… அது ஒண்ணு தான் கொறச்சல்” என முறைத்தாள் தீபா

“கௌதம் நீயே சொல்லு, சமையல்ல யாரு எக்ஸ்பெர்ட்?” என பிரகாஷ் கேட்க

“டேய் பிரகாஷ், உனக்கே இது நியாயமா இருக்கா? இப்ப நான் கொல பசில இருக்கேன், எதாச்சும் எக்குத்தப்பா சொன்னா தீபா தொரத்தி விட்டுடுவா, எதுவானாலும் அப்புறம் பேசுவோம்” என பயந்த பாவனையுடன் பதில் அளித்துவிட்டு, கர்ம சிரத்தையாய் கெளதம் உண்ணத் தொடங்கினான்

கெளதம் சொன்ன விதத்தில், வாய் விட்டு சிரிக்கலானாள் ராதிகா

சிரித்த சிரிப்பில் அவளுக்கு புரை ஏற, “ஏய்… மெதுவா மெதுவா” என அவள் தலையில் வலிக்காமல் தட்டியவன், “இந்தா தண்ணியக் குடி” என குடிக்கச் செய்தான் கெளதம்

“இதுக்கே இப்படினா, இனி மக்கன் பேடா செஞ்ச கதையெல்லாம் சொன்னா என்ன ஆகும், இல்ல கெளதம்” என பிரகாஷ் மீண்டும் வம்பு செய்ய, கணவனை முறைத்தாள் தீபா

அதை கண்டும் காணாதவனாய் பிரகாஷ் தொடர்ந்து கேலி செய்ய, பேச்சும் சிரிப்புமாய் உணவு மேஜை கலகலத்தது

(தொடரும்… நவம்பர் 1, 2020)

Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே ❤❤ (அத்தியாயம் 8)
  1. என்ன பிரச்னை கணவன், மனைவிக்குள்ளே! அதுவும் இந்த நேரத்தில்? ஏதேனும் சின்ன விஷயமா இருக்கும்/ பார்க்கலாம். அடுத்த பதிவில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: