சஹானா
தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே ❤ (அத்தியாயம் 7)

“கிளாஸ் முடிஞ்சதா? கெளம்பலாமா ராதிகா?” என தீபா கேட்க, ராதிகாவின் பார்வை தன்னையும் அறியாமல் கௌதமை தேடியது

அது புரிந்த போதும், அவளே கேட்கட்டும் என நினைத்தவள் போல், “யாரைத் தேடற?” என்றாள் தீபா மெல்லிய கேலியுடன்

“அ… அது… இல்ல ஒண்ணுமில்ல” என சமாளித்தாள் ராதிகா

“ஓகே… வாணி ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டு போலாம் வா ராதிகா” என்றபடி அன்னை இல்லத்தின் அலுவலக அறை நோக்கி தீபா செல்ல, அவளைப் பின் தொடர்ந்தாள் ராதிகா

“ஹாய் ஆன்ட்டி பிஸியா?” என்றபடி வாணியின் அறைக்குள் நுழைந்தாள் தீபா

“வாங்க, க்ளாஸ் முடிஞ்சதா?” என இருவரையும் பார்த்து பொதுவாய் கேட்டார் வாணி

“முடிஞ்சது ஆன்ட்டி, வந்ததுல இருந்தே உங்கள பாக்க முடியல, பிஸியா இருந்தீங்க. அதான் இப்ப பாத்துட்டு போலாம்னு வந்தேன்”

“ஆமா தீபா, இன்னும் ஒரு மாசத்துல நம்ம இல்லத்தோட ஆண்டு விழா வருதே, அது விசயமா தான் கொஞ்சம் வேலை அதிகம்” என்றார் புன்னகையுடன்

“வேலை அதிகம்னு சிரிச்சுட்டே சொல்ற ஆள் நீங்க தான் ஆன்ட்டி” என தீபா கேலி செய்ய

“ஆத்ம திருப்திக்கு செய்யற வேலைனா அப்படி தான தீபா. இப்ப உன்னையே எடுத்துக்கோ, இப்படி அஞ்சு மாச கருவை வயத்துல சுமந்துட்டு வாரத்துல ரெண்டு நாள் இங்க வந்து க்ளாஸ் எடுக்கணும்னு சிரமம் பாக்காம வர்றியே. அதை விடவா என் வேலை கஷ்டம்?”

“உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாதுனு கெளதம் சொல்றது ரெம்ப கரெக்ட் ஆன்ட்டி” என வேண்டுமென்றே கெளதம் பேரை இழுத்தாள் தீபா, ஓரக் கண்ணால் ராதிகாவை பார்த்தபடியே

அவள் எதிர்பார்த்தது போலவே கௌதமின் பெயரைக் கேட்டதும், ராதிகாவின் முகம் மாறியது. மௌனமாய் மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் தீபா

“அவனுக்கு என்னை வம்பு பண்ணலைனா தூக்கம் வராது” என சிரித்த வாணி, “என்னம்மா ராதிகா டல்லா இருக்கே? ஒடம்புக்கு எதுனா சரியில்லையா?” என அக்கறையுடன் விசாரிக்க

“அ… அதெல்லாம் ஒண்ணுமில்ல மேடம்” என சிரித்து மழுப்பினாள் ராதிகா

“நம்பிட்டோம் நம்பிட்டோம்” என முணுமுணுத்த தீபா, “ஒகே ஆன்ட்டி நாங்க கெளம்பறோம், டைமாச்சு” என எழுந்தாள்

“பாத்து போ ராதிகா” என விடை கொடுத்தார் வாணி

“ஹலோ டாக்டர் கெளதம் இருக்காரா?” என தீபா வம்பிழுக்க

“இல்ல கம்பவுண்டர் கனகராஜ் பேசறேன்” என பதிலுக்கு வம்பு வளர்த்தான் கெளதம்

“ஐ… இது கூட உனக்கு பொருத்தமா இருக்கே கெளதம்” என சிரித்தாள் தீபா

“என்ன கிண்டலா? என் செல்போனுக்கு கூப்பிட்டா வேற யார் எடுப்பாங்களாம்?”

“ஹ்ம்ம்… எனக்கென்ன தெரியும். ஒருவேள ராதிகா மேடம் எடுப்பாங்களோனு நெனச்சேன்” என்றாள் தீபா கேலியாய்

“எடுப்பாங்க எடுப்பாங்க, இன்னும் கொஞ்ச நாள்ல” என சிரித்தான் கெளதம்

“போற போக்கை பாத்தா ராதிகா தான் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுவா போல இருக்கு” என தீபா கேலியாய் கூற

“ஏன்? உன்கிட்ட எதுவும் சொன்னாளா?” என்றான் கெளதம் ஆர்வமாய்

“ஆமா… சொல்லிட்டாலும். உன் ஆளு அவ்ளோ சீக்கரம் வாய தெறந்து பேசினா முத்து உதிந்து போய்டாதா என்ன?” என தீபா பொய்யாய் சலித்துக் கொள்ள

“ஏய்… ஏன்  தீபா அவளத் திட்ற?” என்றான் கெளதம் ஒரு கணமும் தாமதியாமல்

“அடேயப்பா… இப்பவே இப்படியா? ஒரு நாளாச்சும் நீங்க எனக்காக இப்படி சப்போர்ட் பண்ணி பேசி இருப்பீங்களா?” என அருகில் இருந்த கணவன் பிரகாஷிடம் செல்லமாய் கோபித்துக் கொண்டாள் தீபா

போனை அவளிடமிருந்து பறித்த பிரகாஷ், “டேய் கெளதம்… இப்ப திருப்தியாடா உனக்கு?” என்றவன் மேலும் தொடர்வதற்குள், கணவனிடமிருந்து போனை வாங்கி இருந்தாள் தீபா

“ஹா ஹா ஹா… ஏன் தீபா பிரகாஷ டென்ஷன் பண்ற? அது சரி, ஏன் திடீர்னு ராதிகாவே ப்ரொபோஸ் பண்ணிடுவா போலனு சொன்ன?” என்றான் அறிந்து கொள்ளும் ஆவலில்

“அதுவா… இன்னைக்கி தலைவனை காணோம்னு தலைவி முகம் வாடி போச்சு. கண்ணாலேயே தேடறாங்க பாவம். கொஞ்சம் விட்டா சங்க இலக்கிய காலம் மாதிரி பசலை பாடல் பாடிடுவாங்க போல இருக்கு” என சிரிப்புடன் கேலி செய்தாள் தீபா

தீபா கூறியதில் மனம் மகிழ்ந்த போதும், நம்ப இயலாமல் “நெஜமா தேடினாளா?” என்றான் கெளதம், மீண்டும் அதைக்  கேட்கும் ஆவலில்

“இல்ல… நான் தான் வேலை இல்லாம போன் பண்ணி சொல்றேன். நான் போன் வெக்கறேன்” என்றாள் தீபா பொய் கோபத்துடன்

“சாரி சாரி… அதில்ல…” என அதற்கு மேல் என்ன சொல்வதென புரியாதவன் போல் மௌனமானான் கெளதம்

அவன் மனநிலை புரிந்தவள் போல், “இட்ஸ் ஒகே கெளதம். ஆனா ரெம்ப லேட் பண்ணாம சீக்கரம் மனசு விட்டு அவகிட்ட பேசு. இல்லேனா இதயம் முரளி மாதிரி ஆய்ட போற” என தீபா கேலி செய்ய

“என்ன நக்கலா?”

“இல்ல தாக்கல்… சரி கெளதம் குட் நைட்”

“ஒகே தீபா, குட் நைட்”  எனவும்

“ஒகே பை” என அழைப்பை துண்டித்தாள் தீபா

ராதிகா தன்னை தேடினாள் என தீபா கூறியதில், கௌதமின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அப்போதே அவளை காண வேண்டும் போல் மனம் பரபரத்தது

மறுநாள் மருத்துவமனையில் காணும் வரை பொறுத்திருக்க முடியாது என தோன்ற, இப்போது நேரில் பார்க்காவிடினும் குரலையேனும் கேட்கவேண்டுமென மனம் உந்த, செல்பேசியை எடுத்து ராதிகாவிற்கு அழைத்தான் கெளதம்

“ஹலோ ராதிகா…”

“கெளதம்…” அன்று எதிர்பார்த்து அவனை காணாததாலோ என்னவோ, அவன் குரல் கேட்டதும் ராதிகாவின் குரல் உற்சாகமாய் ஒலித்தது

காற்றிலேயே கோட்டோவியம் வரைபவனுக்கு, தான் அழைத்ததும் கேட்க அவளின் உற்சாகக் குரல் பறக்கச் செய்தது

ஆனாலும் அவளை வம்பு செய்யும் எண்ணத்துடன், “என்ன மேடம் ரெம்ப ஹாப்பியா இருக்கீங்க போல இருக்கே. இன்னைக்கி என் அறுவைல இருந்து தப்பிச்சுட்டோம்னு சந்தோசமா?” என்றான்

“ச்சே ச்சே அதெல்லாம் இல்ல, ஏன் கெளதம் இன்னைக்கி வர்ல?” என்றவளின் குரலில் இருந்து எதையோ தேடுவது போல் சற்று நேரம் மௌனமானான் கெளதம்

“கெளதம்…” என்றவளின் குரலில் கலைந்தவன்

“அ… அது, நெக்ஸ்ட் வீக் அந்த டெல்லி கான்பரன்ஸ் இருக்குனு சொன்னேன்ல, அதுக்கு ரெடி பண்ற வேலை கொஞ்சம் இருந்தது, அதான் வர முடியல, சாரிம்மா” என்றான் உண்மையான வருத்தத்துடன்

“ம்… அப்புறம் சாப்டாச்சா?”

“இல்ல இனிமே தான், நீ?”

“ம்… ஆச்சு”

“என்ன ஸ்பெஷல் இன்னைக்கி?”

“ஸ்பெஷல் எல்லாம் இல்ல, நீங்க?”

“இன்னைக்கி என்னோட குக் லீவ்”

“ஓ… குக் இருக்காங்களா? நீங்களே சமைச்சுக்கரீங்கனு நெனச்சேன்”

“நானே தான், நான் தான் இன்னைக்கி லீவ்” என அவன் சிரிப்புடன் கூற

“ஐயோ பாவம், உங்க சமையலை நீங்களே சாப்பிடணும்” என்றாள் கேலியாய்

அவளின் கேலியை ரசித்த போதும், “என்ன கிண்டலா?” என்றான்

“ஏன் இந்த கஷ்டம்? சீக்கரம் கல்யாணம் பண்ணிகோங்களேன்” என ராதிகா இயல்பாய் கூற

“நீ சரின்னா, நான் இப்பவே ரெடி” என வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கியவன்

“எதுக்கு? என் சமையல் சாப்பிடற கஷ்டத்துல பங்கு எடுத்துக்கவா?” என கேலியாய் தொடர்ந்தான் கெளதம்

“ஹா ஹா ஹா பாவம் தான்” என சிரித்தாள் ராதிகா

இப்படி சிரிப்பும் பேச்சும் என, ஸ்வீட் நத்திங்ஸ் பேச்சில் நேரம் பறந்தது

Amazon.in Deals 👇

Amazon.com Deals 👇


ன்றும் ஓவ்வொரு வியாழக்கிழமையின் வழக்கம் போல், அன்னை இல்லத்தில் இருந்து ராதிகாவை அழைத்துக் கொண்டு, அவள் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தான் கெளதம்

“ஆண்டு விழாவுல இந்த வருஷம் உன்னோட டான்ஸ் டிராமா தான் ஹைலைட் போல இருக்கே” என்றான் கெளதம் கேலி போல், எத்தனை முயன்றும் அவன் குரலில் இருந்த பெருமிதத்தை மறைக்க இயலவில்லை

ஆனால் அதை அவனின் கேலி என புரிந்து கொண்ட ராதிகா, “கிண்டல் பண்றீங்களா?” என பொய்க் கோபத்துடன் முறைத்தாள்

ரோட்டில் இருந்து பார்வையை விலக்காமலே, “ச்சே ச்சே, கிண்டல் எல்லாம் இல்லை. வாணி அத்தை சொன்னத தான் சொன்னேன்” என்றான் முறுவலுடன்

“ம்… ஹைலைட்னு சொல்ல முடியாது, கொஞ்சம் புதுமையா இருக்கும்னு வேணா சொல்லலாம். இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு, அதுக்குள்ள எல்லாம் சரியா வரணும்னு டென்சனா இருக்கு” என்றாள்

“நீ டான்ஸ் ஆட போறியா ராதி…கா?” என கெளதம் ஆர்வமாய் கேட்க

“ஐயோ பாவம், ஆடியன்ஸ் கடைசி வரைக்கும் இருக்கட்டுமே” என்றாள் சிரிப்புடன்

“இந்த ஆடியன்சுக்காக ஆட மாட்டியா?” என கெளதம் தன்னை காட்டிக் கேட்க

“சோலோ பெர்பார்மென்ஸ் கேள்விபட்டிருக்கேன், சோலோ ஆடியன்ஸ் கேட்டதில்ல” என அடக்கமாட்டாமல் சிரித்தாள்

சிக்னலுக்காக காரை நிறுத்தி அவள் புறம் திரும்பியவன், அந்த சிரிப்பில் மயங்கி நின்றான்

அதன் பின், வீடு வரும் வரை ஏதேதோ பேச்சில் சிரிப்பும் வம்புமாய் நேரம் கடந்தது

வழக்கம் போல் “ஒரு கப் டீ  ப்ளீஸ்” என்றபடி அவனும் உள்ளே வருவான் என எதிர்பார்த்தவள் போல் மௌனமாய் இறங்கிய ராதிகா, கெளதம் இறங்காதது கண்டு கேள்வியாய் பார்த்தாள்

“என்னாச்சு? என் டீ மேல பயம் வந்துடுச்சா?” என ராதிகா கேலியாய் கேட்க

“இல்ல ராதிகா, நாளைக்கி எர்லி மார்னிங் பிளைட்ல டெல்லி கெளம்பறேன்ல. ஒரு வாரத்துக்கு வேணுங்கற திங்ஸ் எல்லாம் பேக் பண்ணனும், கெளம்பட்டுமா?” எனவும், அவள் முகத்தில் சற்று முன் இருந்த சிரிப்பு காணாமல் போனது

தன் பிரிவு அவளை பாதிக்கிறது என்பதில் மனம் மகிழ்ந்த போதும், அவளை பார்க்காமல் எப்படி ஒரு வாரம் இருக்கப் போகிறோம் என வேதனையாய் உணர்ந்தான் கெளதம்

அதன் காரணமாகவே இன்று அவளுடன் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க எண்ணினான். இன்று அவளிடம் அதிகம் பேசினால், ஒரு வாரம் பார்க்க இயலாதே என்ற தவிப்பில் ஏதேனும் உளறி விடுவோமோ என அஞ்சினான் கெளதம்

எப்படியும் டெல்லியில் இருந்து திரும்பி வந்ததும், தன் மனதில் இருப்பதை அவளிடம் முறையாய் சொல்ல வேண்டும் என்ற முடிவில் தான் இருந்தான்

அதற்குள், இப்போது அவசரமாய் சொல்ல மனம் ஒப்பவில்லை. அதோடு, காதலை பகிர்ந்தபின் அவளை விட்டு ஒரு வாரம் பிரிந்திருப்பதும் சாத்தியமில்லை எனத் தோன்றியது

“ஒகே, ஆல் தி பெஸ்ட்” என்றாள் ராதிகா, வழிய வரவழைத்து கொண்ட சிரிப்புடன்

கெளதம் மௌனமாய் அவள் கண்ணோடு கண் பார்த்தான், பார்வையாலேயே தன் மனதை வெளிப்படுத்த முயல்பவன் போல்

அவன் பார்வை அவளை தடுமாறச் செய்ய, அதைத் தவிர்த்தவள், “குட் நைட் கெளதம்” என அவன் பதிலுக்கு கூட காத்திராமல் திரும்பி நடந்தாள்

பார்வையை விட்டு மறைந்த பின்னும் கூட, அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்

உலகம் முழுதுமுள்ள பல நாடுகளை சேர்ந்த புற்றுநோய் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அந்த கருத்தரங்கில் குழுமி இருந்தனர்

புற்றுநோய் துறை பற்றிய புதிய முன்னேற்றள் குறித்தும், ஆராய்ச்சிகள் பற்றியும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் கருத்தரங்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது

இந்தியாவில் முதல் முறையாய் இது போல் நடக்கும் நிகழ்வு என்பதால், கருத்து பரிமாற்றம் மட்டுமின்றி, சுமுகமான சூழ்நிலையும் நிலவ வேண்டுமென, பப்ளிக் ரிலேசன்ஸ் கமிட்டி ஒன்றை அமைத்து இருந்தனர்

கௌதமையும் அதில் ஒரு அங்கமாய் இருக்கவேண்டுமென, அந்த கான்பரன்சை நடத்தும் அமைப்பினர் கேட்டிருந்தனர். அதற்கு முன் நடந்த சில உள்நாட்டு கருந்தரங்குகளில் அவன் பங்களித்த விதமும், அதற்கு ஒரு காரணம்

எல்லோரிடமும் இயல்பாய் தடையின்றி பழகும் அவனின் சுபாவம் அதற்கு துணை செய்ய, முதல் நாளே பலரிடமும் நன்கு பரிச்சயமானான் கெளதம்

எனவே, அவன் உரையாற்றும் முறை வந்த போது, நிறைய பேர் ஆர்வமுடன் கவனிக்கலாயினர். அதற்கு அவர்கள் மெனகெடத் தேவை இருக்கவில்லை

கௌதமின் உரை மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது. பல முக்கிய விடயங்களை எளிதான நடையில் கெளதம் பேசிய விதம், எல்லோரையும் கட்டி போட்டது

அதற்கு முன் பேசிய பலர், வெறும் மருத்துவ அறிக்கை போல் வாசிக்க, கௌதம் தனது நடையில் சலிப்பு தட்டா வண்ணம் சுவாரஷ்யமாய் பகிர்ந்ததில், எல்லோர் மனதிலும் சுலபமாய் பதிந்தது

கெளதம் மேடையை விட்டு இறங்கிய பின்னும் கூட, வெகுநேரம் கை தட்டல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. மேடையின் அருகிலேயே இருந்த பலர், எழுந்து நின்று கை குலுக்கி அவனைப் பாராட்டினர்

அன்று மதிய உணவு இடைவேளையின் போது, அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் தலைவர், கெளதமை தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய வருமாறு அழைப்பு விடுத்தார்

கெளதம் எப்படி தவிர்ப்பதென்ற யோசனையில் முறுவலிக்க, “Think about it young man. I will make sure you compensated a fortune” என்றார் அவர்

முகத்திற்கு நேராய் மறுத்தால் நன்றாய் இராது என நினைத்தவன், “I will think about it Dr.Kimbell” என மெல்லிய சிரிப்புடன் மழுப்பினான் கெளதம்

ஏழு நாள் நடைபெறும் அந்த மருத்துவ கருத்தரங்கு, தினமும் மாலை ஐந்துமணியுடன் முடிந்து விடும் என்றாலும், கெளதம் நினைத்தது போல் உடனே தன் அறைக்கு சென்று ஓய்வெடுக்க இயலவில்லை

கெளதம் முன் லண்டனில் பணி புரிந்த மருத்துவமனையில் இருந்து வந்திருந்த நண்பர்களை நீண்ட நாளுக்கு பின் காண்பதால், அவர்களுடன் பேசுவதில் நேரம் போனது

தினமும் மாலை அவர்களை டெல்லியின் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு அழைத்து சென்று, பின் இரவு உணவு முடித்து, இரவு பத்து மணிக்கு மேல் தான் அறைக்கு வந்து சேர்ந்தான் கெளதம்

அன்றும் அதே போல் தாமதமாய் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தவன், மிகவும் சோர்வாய் உணர்ந்தான்

மருத்துவ பணியில் இதை விட அதிகமாய் உறக்கம் இழந்த இரவுகளில் கூட, இப்படி சோர்வாய் உணர்ந்ததில்லை என நினைத்துக் கொண்டான் கெளதம்

அவன் சோர்வுக்கு காரணம் தூக்கமின்மையோ அலைச்சலோ அல்ல. கோவையில் இருந்து கிளம்பியதில் இருந்து, இந்த நான்கு நாட்களாய் ராதிகாவிடம் பேசாததே காரணம் என்பதை உணர்ந்தான்

இரவு பத்து மணிக்கு மேல் அழைத்தால் அவள் என்ன நினைப்பாளோ என யோசித்தே, அழைப்பதை தவிர்த்து இருந்தான்

பகல் நேரத்தில் ஒரு வார்த்தையேனும் பேசி இருக்கலாம் என தன்னைத் தானே கடிந்து கொண்டான் கெளதம்

ஆனால், மற்றவர் அருகில் இருக்கும் போது, அவளிடம் பேச அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை, தனிமையில் பேசவே விரும்பினான்

இன்றும் அதே போல் நேரம் ஆகி விட்டதே என முதலில் தயங்கியவன், இதற்கு மேல் தாங்காது என கைபேசியை எடுக்க, அது பேட்டரி தீர்ந்து போய் அணைந்து இருந்தது

இப்போதே அவள் குரலை கேட்டாக வேண்டுமென மனம் பரபரக்க, ஹோட்டல் அறையில் இருந்த லேண்ட்லைன் எண்ணில் இருந்து அழைத்தான்

ஒரு அழைப்பிலேயே “ஹலோ” என அவள் குரல் கேட்க, தன் அழைப்பை எதிர்பார்த்து தான் காத்திருந்தாளோ என, அந்த நினைவே அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

“ஹலோ” என்ற அவளின் குரல் மீண்டும் ஒலிக்க, சுய நினைவுக்கு வந்தவன்

“ராதி…கா, நான் கெளதம் பேசறேன். எப்படி… “

அவன் வாசகத்தை முடிக்கும் முன்பே, “பரவால்லையே, என் பேர் கூட உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்றவளின் குரலில் இருந்த ஆதங்கம், அப்போதே தன் மனதை அவளிடம் சொல்லிவிட தூண்டியது கௌதமை

ஆனாலும் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டவன், “இப்பவும் நான் தான் கூப்டேன், நீ இல்ல” என்றான், பொய்யாய் சண்டைக்கு தயாரான குரலில்

“கூப்டலாம்னு தான் நெனச்சேன்…” என ராதிகா தயக்கமாய் நிறுத்த, அவளுக்கும் தன் நினைவு இருந்து தான் இருக்கிறது என மகிழ்ந்தான் கெளதம்

“ஓஹோ… அப்பறம் ஏன் கூப்டலயாம். போன் பேச மாட்டேன்னு சொல்லுச்சா?” என விடாமல் சீண்டினான்

“அதெல்லாம் இல்ல, உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான்” என சமாளித்தாள்

“நீ ரெம்ப நாளாவே என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு தான இருக்க” என அவன் முணுமுணுக்க

“என்ன சொன்னீங்க?” என்றாள் புரியாமல்

“அ…அது ஒண்ணுமில்ல. அப்புறம், எப்படி இருக்க ராதிகா?” என்றவனின் அக்கறையான விசாரிப்பு, அவள் வாயை கட்டிப் போட்டது

பதில் வராமல் போக “ராதிகா, லைன்ல இருக்கியா?” என்றான் சந்தேகமாய்

“ம்… இருக்கேன்” என்றவளின் குரல், எப்போதும் போல் இன்றி தொண்டையில் ஏதோ அடைத்தது போல் ஒலித்தது

“என்னாச்சு? ஒடம்புக்கு எதுனா சரியில்லையா? வாய்ஸ் டல்லா இருக்கு” என்றான் சற்றே பதட்டமாய்

“அதெல்லாம் இல்ல கெளதம், ஐயம் பைன்” என்றாள்

“ம்… அப்புறம் வேற என்ன விஷயம்?” என்றான் அவளை பேச வைத்து கேட்கும் ஆவலில்

“இங்க பெருசா ஒண்ணுமில்ல, அதே ரொட்டீன் தான். நீங்க சொல்லுங்க, கான்பரன்ஸ் எல்லாம் எப்படி போகுது?”

“நல்லா போயிட்டு இருக்கு…” என அங்கு நடக்கும் நிகழ்வுகள், சந்தித்த நபர்கள் என எல்லாமும் பகிர்ந்து கொண்டான் கெளதம்

சிறிது நேர அரட்டைக்குப் பின், “ஒகே… போய் ரெஸ்ட் எடு ராதிகா. மார்னிங் நீ சீக்கரமே எழுந்துப்ப இல்லையா?” என்றான், இத்தனை தாமதமாய் அழைத்தோமே என்ற குற்ற உணர்வில்

அவள் ஏதோ கேட்க வந்து தயங்குவது போல் தோன்ற, “ராதிகா?” என கெளதம் கேள்வியாய் நிறுத்த

“எப்ப வருவீங்க?” என மௌனத்தை உடைத்தாள் அவள்

அந்த இருவார்த்தைகள், அவனை மொத்தமாய் புரட்டிப் போட்டது. ஏதோ அவள் தன் காதலை ஏற்றுக் கொண்டு விட்டது போல் மகிழ்ந்தான்

“ஐ மிஸ் யு ராதிகா” என்றான், அவள் கேள்விக்கு பதிலாய்

அது சரியான பதிலா இல்லையா என ஆராயும் மனநிலையில் இருவரும் இருக்கவில்லை. அதற்கு மேல் பேச்சிற்கும் அங்கு அவசியம் இருக்கவில்லை

யார் முதலில் பேசுவதன தயங்கியது போல், இருவரும் சற்று நேரம் மௌனமாய் இருந்தனர். பின் ராதிகா, “ஒகே கெளதம் பை” எனவும்

“டேக் கேர், சீக்கரம் வந்துடறேன், பை ராதி” என்றான் கெளதம்

அவள் அழைப்பை துண்டித்தப் பின்னும், பேசியை கீழே வைக்க மனமின்றி, அதையே பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்

#ad இந்த தொடர்கதையை எழுதி வரும் எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்… அக்டோபர் 16…)

Amazon.in Deals 👇

Amazon.com Deals 👇

Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே ❤ (அத்தியாயம் 7)
  1. ராதிகாவுக்கு ஏதோ உடல்நலம் சரியில்லையோ? சந்தேகமா இருக்கு. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: