சஹானா
தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே…❤❤❤  (அத்தியாயம் 6)

ன்று காலை முதலே ஏதோ ஒன்று மாற்றி ஒன்று, கௌதமின் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தது

முன் தினம் நடு இரவில் ஒரு எமெர்ஜென்சி கேஸ் என அழைப்பு வர, அது முடிந்து மூன்று மணிக்கு தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்

காலை ஐந்து மணிக்கு அலார சத்தத்தில் விழித்தவன்,  தலைவலி  மண்டையை பிளக்க, கண்கள் தாமாக மூடியது

இன்று விடுப்பு எடுத்து விடலாமா என நினைக்கும் போதே, அலாரம் வைத்ததன் காரணம் ஏழு மணிக்கு ஒரு சர்ஜரி என்பது நினைவு வர, எழுந்து குளித்து கிளம்பினான். திட்டமிட்டது போல், ஆறு மணிக்கு மருத்துவமனையை அடைந்தான் கெளதம்

“சார்…” என்றபடி சர்ஜரி வார்ட் நர்ஸ் திலகா, கௌதமின் அறைக்குள் நுழைந்தாள்

“தியேட்டர் ரெடி பண்ணிட்டீங்களா சிஸ்டர்? பேஷன்டுக்கு ப்ரீ-சர்ஜரி டெஸ்ட் எல்லாம் முடிச்சாச்சா?” என்ற கௌதமின் கேள்விக்கு

“சார் அது…” என தயங்கி நின்றாள் திலகா

“என்ன விஷயம் சொல்லுங்க” என்றான் தலைவலி தந்த எரிச்சலை பின்னுக்குத் தள்ளி

“அனஸ்தீஸ்யன் டாக்டர் செந்தில் ஏதோ பாமிலி டெத் வர முடியாதுனு போன் பண்ணினார் சார்” என்றாள்

“வாட்? எப்ப போன் பண்ணினார்?” என அதிர்ந்தான் கெளதம்

“அரை மணி நேரம் இருக்கும் சார்”

“இவ்ளோ நேரம் என்ன பண்ணினீங்க? வேற யாரயாச்சும் ட்ரை பண்ண வேண்டியது தான” என கோபம் எல்லை மீற கத்தினான் கெளதம்

“அது…சார்… நீங்க வரட்டும்னு” என திலகா இழுக்க

“நான் வர்றதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம். சர்ஜரி வார்டுக்கு ஹெட் நர்ஸ் போஸ்ட் உங்களுக்கு குடுத்தது, இப்படி எனக்காக வெயிட் பண்றதுக்கு இல்ல. என்ன பண்ணுவீங்களோ தெரியாது, பிளான் பண்ணின நேரத்துக்கு சர்ஜரி நடக்கணும். போய் ஆக வேண்டியத பாருங்க” என்றான் கோபம் குறையாத குரலில்

“ஒகே சார்” என்றபடி விரைந்து வெளியேறினாள் நர்ஸ்

வேறு ஒரு மயக்கமருந்து நிபுணரை வரச்செய்து, அறுவை சிகிச்சை நல்லபடியாய் முடிந்தது. கௌதமின் தலைவலியும் மாத்திரையில் சற்று மட்டுப்பட்டது

அதன் பின் காலை பத்து மணி தொடங்கி மாலை ஐந்து வரை, புற நோயாளிகளின் வருகையில் ஒரு நிமிடமும் கௌதமுக்கு ஓய்வு இருக்கவில்லை

மதிய உணவு இடைவேளையில் கூட, காலை அறுவை சிகிச்சை செய்த நோயாளிக்கு பிரஷர் மட்டுப்படவில்லை என நர்ஸ் வந்து அழைக்க, பாதி உணவில் எழுந்து சென்றான்

ஒருவழியாய் எல்லாம் முடிய, மாலை ஆறு மணி போல் இனி கிளம்பலாம் என நிம்மதியுடன் எழுந்த நேரம், கௌதமின் மேஜையில் இருந்த தொலைபேசி சிணுங்கியது

“ஹலோ டாக்டர் கெளதம் ஹியர்”

“….”

“எஸ் சார்”

“….”

“இல்ல சார், அப்படி எதுவும் இருக்க சான்ஸ் இல்ல”

“…..”

“ஒகே, நான் என்னனு பாக்கறேன்”

“….”

“கண்டிப்பா, உங்களுக்கு ரிப்போர்ட் பண்றேன் சார். சாரி அபௌட் தட்”

“…..”

“ஒகே பை” என அழைப்பை துண்டித்த கெளதம், இன்டர்காமில் “ரஞ்சனி கம் இன்” என்றான் கோபமாய்

அடுத்த நொடி, “எஸ் சார்” என புன்னகையுடன் வந்து நின்றாள் ரஞ்சனி

கெளதம் அவளை திருமணம் செய்து கொள்ள அழைத்தது போல், நாணி கோணி நின்ற ரஞ்சனியைக் கண்டதும், கௌதமின் கோபம் எல்லை மீறியது

“ரஞ்சனி, வில் யு ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்” என பெரும் குரலில் கத்தலாய் வெளிப்பட்டது அவன் கோபம்

சட்டென புன்னகை மறைய, அவன் கோபத்திற்கான காரணம் புரியாமல் விழித்தாள் ரஞ்சனி

“போன வாரம் செக்கப்புக்கு வந்திருந்த பேஷண்ட் ருத்ரமூர்த்தி நேத்து கால் செஞ்சாரா?” என்ற கௌதமின் கேள்விக்கு

“அ…அது…” என நினைவுக்கு கொண்டு வர முயன்றாள் ரஞ்சனி

“லங் கேன்சர் பேஷன்ட், இங்க இருக்கு பாருங்க  பைல்” என தூக்கி வீசாத குறையாய் அவளிடம் கொடுத்தான்

ஒரு கணம் பைலை பார்த்தவள், “ஆமா சார், நேத்து போன் பண்ணி இருந்தாரு” என்றாள் நினைவு வந்தவளாய்

“போன வாரம் எடுத்த டெஸ்ட் பத்தி எதுவும் கேட்டாரா?” என்றவனின் குரலில் இருந்து, எதற்காக கேட்கிறான் என அறிந்து கொள்ள முடியவில்லை ரஞ்சனிக்கு

ஆனால் அவன் கோபத்தில் இருந்தே ஏதோ சரியில்லை என உணர்ந்தவள் போல், பயத்துடன் மௌனமாய் நின்றாள் ரஞ்சனி

“ரஞ்சனி, தமிழ்ல தான கேக்கறேன், புரியலயா?” என்றான் கெளதம் எரிச்சலுடன்

“சார், அது…” என தயக்கமாய் பார்த்தாள்

“அவர்கிட்ட என்ன சொன்னீங்க?” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்து

“அது, நான் ஒண்ணும்…”

“பேஷன்ட்கிட்டயோ இல்ல அவங்கள சேந்தவங்ககிட்டயோ போன்ல தேவையில்லாம இன்பர்மேசன் குடுக்க கூடாதுனு உங்களுக்கு தெரியாதா? அதையெல்லாம் நீங்களே செய்யறதுன்னா, டாக்டர்னு நான் எதுக்கு இங்க இருக்கேன்?” என்றவனின் குரல், அறையை தாண்டி வெளியே கேட்டது

ஒரு போதும் கெளதம் இப்படி நிதானம் தவறி கத்தியதில்லை என்பதால், “சார், நானா எதுவும் சொல்லல சார்” என்றவளின் குரல் நடுங்கியது

“பொய் சொல்லாதீங்க, அவர்கிட்ட உங்க டெஸ்ட் ரிசல்ட் அவ்ளோ நல்ல நியூஸ் இல்லைனு நினைக்கிறேன்னு சொன்னீங்களா?”

“சார் அது, நான் மொதல்ல சொல்லல சார். மறுபடி மறுபடி போன் பண்ணிட்டே இருந்தாங்க, அதான்…”

“அதுக்காக அப்படி சொல்லுவீங்களா? இது பொறுப்பான பதில் இல்ல ரஞ்சனி. கவனம் வேலைல இருக்கணும், வேலை செய்யறதுக்கு இஷ்டமில்லைனா கெட் லாஸ்ட்” என்றான் அதீத கோபத்துடன்

“சாரி சார்” என கண்ணில் துளிர்த்த நீரை உள்ளிழுத்தபடி தலை குனிந்தாள் ரஞ்சனி

“ஈஸியா சாரினு ஒரே வார்த்தைல முடிச்சுடறீங்க, அரைகுறையா நீங்க ஒளரினதுல, எல்லாமே முடிஞ்சு போச்சுனு அவர் மனசொடிஞ்சு தற்கொலை முயற்சி செய்ய துணிஞ்சுட்டார். நல்லவேளையா அதுக்குள்ள பாத்து தடுத்துட்டாங்க. அவரோட மகன் நம்ம பப்ளிக் ரிலேசன்ஸ் டிபார்ட்மெண்ட்ல ரிப்போர்ட் பண்ணி இருக்கார். இதுக்கு நான் என்ன ஏக்சன் எடுக்கணும்னு நீங்களே சொல்லுங்க” என்றான் இன்னும் கோபம் குறையாமல்

“இனிமே இப்படி நடக்காது சார், நான் கவனமா இருக்கேன் சார்” என்றாள் தலையை உயர்த்தாமலே

“இதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங் ரஞ்சனி. இனி எதுவும் தப்பு நடந்தா, உங்க எடத்துக்கு வேற ஆளை பாக்க வேண்டியிருக்கும்” என்றதோடு கோபமாய் அறையை விட்டு வெளியேறினான் கெளதம்

கோபமும் சோர்வும் போட்டி போட, எதிரில் யார் வருகிறார்கள் என்று கவனிக்கும் மனநிலை கூட இன்றி, காரில் ஏறி வேகமாய் கிளப்பினான்

வீட்டுக்குச் சென்றதும், உடை மாற்றக்கூட தெம்பின்றி, அப்படியே படுக்கையில் சரிந்தான் கெளதம்

அதற்க்கே காத்திருந்த கண்கள், அடுத்த நொடி உறக்கத்தை தழுவியது

எத்தனை நேரம் அப்படியே உறங்கினானோ, எங்கோ மணி அடிக்கும் ஓசையில் மிகவும் சிரமத்துடன் இமைகளை பிரித்தான் கெளதம். ஆனாலும் எழுந்து கொள்ள உடல் ஒத்துழைக்கவில்லை

லேண்ட்லைன் டெலிபோன் மணி சத்தம் அது என உணர்ந்ததும், அடித்து ஓயட்டும் என்ற முடிவுடன், மீண்டும் கண் மூடினான். அடுத்த நிமிடம் மீண்டும் உறங்கிப் போனான்

சற்று நேரத்தில் மீண்டும் ஒலித்த மணியோசையில் விழித்தவனுக்கு, டாக்டர் பணிக்கே உரிய பொறுப்புணர்வில் “எதுவும் எமஜன்சியா இருக்குமோ?” என சிரமத்துடன் எழுந்து சென்று தொலைபேசியை எடுத்து, “ஹலோ” என்றான்

அவன் குரல் அவனுக்கே கேட்காதது போல் ஒலித்தது

மறுமுனை பதிலின்றி அமைதியாய் இருக்க. ஒருவேளை தான் பேசியது கேட்கவில்லையோ என நினைத்தான் கெளதம்

“ஹலோ, டாக்டர் கெளதம் ஹியர்” என்றான் சற்று உரக்க. அப்போதும் பதில் இருக்கவில்லை

தூக்கத்தை கெடுத்த கோபமும், உடல் சோர்வும் எரிச்சலை கிளப்ப, “ஹலோ… யார் நீங்க? வேற வேலை இல்லயா, தூங்கிட்டு இருந்தவன போன் பண்ணி எழுப்பி விட்டுட்டு, ஒண்ணும் பேசாம ஏன் உயிர வாங்கறீங்க?”  என்றான் கோபத்துடன்

“சாரி கெளதம், நான் அப்புறம் பேசறேன்” என தயக்கமாய் ராதிகாவின் குரல் ஒலிக்க, கௌதமின் மனதில் சட்டென உற்சாகம் குமிழிட்டது

“ராதி… ராதிகா… அயம் சாரி… நான்… யாரோனு நெனச்சு… சாரி…” என்றான், வேறு என்ன சொல்வதென தெரியாமல்

“நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் அப்புறம் பேசறேன்” என அவள் அழைப்பை துண்டிக்க போக

அவள் குரலில் இருந்து ஒருவேளை கோபித்து கொண்டாளோ என யூகித்தவனாய், “ப்ளீஸ் ப்ளீஸ் வெயிட், அயம் ரியல்லி சாரி… நீ’னு தெரில” என்றான் வருத்தமாய்

“இட்ஸ் ஒகே கெளதம். நான் தான் சாரி சொல்லணும், நீங்க இவ்ளோ சீக்கிரமே தூங்கி இருப்பீங்கனு நெனக்கல. தூங்குங்க, நான் நாளைக்கி பேசறேன்” என அவன் பதிலுக்கு கூட காத்திராமல் அழைப்பை துண்டித்தாள் ராதிகா

“ச்சே… எனக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்ல” என தன்னை தானே திட்டி கொண்டவன், உடனே ராதிகாவின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்

சற்று நேரம் அழைப்பு எடுக்கப்படாமல் இருக்க, தவித்துப்  போனான் கெளதம். அதன் பின் அவளின் குரல் கேட்டதும் தான் மனம் சமாதானமானது

“சாரி ராதிகா, இன்னைக்கி ஒரே டென்ஷன், அதான்… சாரி. நீ எப்பவும் என்னோட செல்லுக்கு தான கூப்பிடுவ, இது லேண்ட்லைன் கால்னால தெரில” என்றான் மீண்டும் மன்னிப்பு கோரும் குரலில்

அவனின் கெஞ்சல் போன்ற தோரணையில் இயல்பாகி, “செல் நாட் ரீச்சபிள்னு வந்தது கெளதம், அதான் இந்த போனுக்கு அடிச்சேன்” என்றவள், “இன்னைக்கி ஹாஸ்பிடல் பூரா உங்க பேச்சு தான்” என்றாள் பூடகமாய்

“என் பேச்சா? நான் அவ்ளோ பாப்புலர் ஆய்ட்டேனா?” என சிரித்தான், சற்று முன் இருந்த சோர்வும் கோபமும் எங்கு போனது என அவனுக்கே ஆச்சர்யமாய் இருந்தது

“ம்… துர்வாசர்னு பட்ட பேரு வெச்சாலும் ஆச்சர்யம் இல்ல” என சிரித்தாள்

“ஆஹா, அவ்ளோ தூரத்துக்கு போயிடுச்சா? என்ன விசயம்?” என்றான் அவளை பேச வைத்து கேட்கும் ஆவலில்

“காலைல சர்ஜரி வார்ட் நர்ஸ்ல ஆரம்பிச்சு, சாயங்காலம் உங்க செக்ரட்டரிகிட்ட டோஸ் விட்டது வரைக்குமான எல்லா விசயமும் தான்” என்றாள் கேலியாய்

“அடேயப்பா, ஹாஸ்பிடல்ல வேலை நடக்குதோ இல்லையோ, அரட்டை கச்சேரி மட்டும் நல்லாவே நடக்குதுனு புரியுது” என்றான் அவளின் கேலிக்கு பதிலாய்

“ச்சே ச்சே, அப்படியெல்லாம் இல்ல, ஆனா தேவி சொன்னது தான்…” என தயக்கமாய் நிறுத்த

அவளின் தயக்கம் கௌதமின் ஆர்வத்தைத்  தூண்ட, “யாரு? ஐ.சி.யு நர்ஸ் தேவியா? என்ன சொன்னாங்க அந்த சிரிக்காத சிற்பி?” என்றான்

“ஓ… உங்களுக்கும் அந்த பட்ட பேரெல்லாம் தெரியுமா?” என்றாள் ராதிகா ஆச்சர்யமாய்

“ஏன்? இந்த சிதம்பர ரகசியமெல்லாம் உங்களுக்கு மட்டும் தான் தெரிஞ்சுருக்குமா மேடம்?” என்றான் வம்பாய்

“அதில்ல… ” என சிரித்தாள்

“அது சரி, அந்த தேவியார் என்ன சொன்னங்கனு நீ இன்னும் சொல்லவே இல்லையே” என்றான் ஆர்வமாய்

“அந்த தேவியார் சொன்னதை தெரிஞ்சுக்கறதுல இவ்ளோ ஆர்வமா?” என ராதிகா கேலியாய் வினவ

“இல்ல, இந்த தேவியார் பேச்சைக்  கேக்கறதுல தான் ஆர்வம்” என மனதில் தோன்றியதை சொல்லாமல் மறைத்தவன், “சொல்ற எண்ணம் இருக்கா இல்லையா?” என்றான் அவனும் அதே குரலில்

“ம்… சொல்றேன், ஆனா நீங்க யார்கிட்டயும் சொல்லக் கூடாது” என்றாள்

“ஒகே, ஜஸ்ட் பிட்வீன் அஸ், சரியா? இப்ப சொல்லு” என்றான் உற்சாகமாய்

“அது, லஞ்ச் ரூம்ல பேசிட்டு இருக்கும் போது, சர்ஜரி வார்ட் நர்ஸ்கிட்ட நீங்க கோபப்பட்டதை பத்தி பேச்சு வந்தது. அதுக்கு தேவி சொன்னாங்க, கல்யாணமானவர்னா வீட்டுல சண்டைனு காரணம் சொல்லலாம், டாக்டர் கௌதமுக்கு இன்னும் கல்யாணம் ஆகலியே, ஒருவேளை காதலில் விழுந்துட்டாரோனு… தேவி தான்…” என ஆரம்பித்ததை எப்படி முடிப்பதென தெரியாமல் இழுத்தாள் ராதிகா

முதல் முறையாய் அவள் தன்னிடம் இது போல் பேசியதில் மனம் ஆகாயத்தில் பறக்க, இப்போது என்ன பேசினாலும் தன் மனதில் உள்ளதை உளறி விடுவேனோ என பயந்தவன் போல், மௌனமானான் கெளதம்

அந்த மௌனத்தை தான் பேசியதற்கு அவனின் கோபம் என புரிந்து கொண்ட ராதிகா, “சாரி… நான்… நான் அதை  சொல்லி இருக்கக் கூடாது” என தடுமாறினாள்

அவளின் மனம் புரிந்தவன் போல், அதே சமயம் தன் மனதையும் கொஞ்சம் புரிய வைக்கும் முயற்சியாய், “ராதிகா, அடுத்த வாட்டி தேவி இப்படி எதாச்சும் சொன்னா, நீ மறக்காம ஆமா கெளதம் காதலில் விழுந்துட்டார்னு சொல்லிடு” என்றான் காதலுடன்

சற்று நேரம் அவள் எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருக்க, “யார் அந்த காதலினு ஆராய்ச்சியா?” என மனதிற்குள் நினைத்து சிரித்தான் கெளதம்

“ஏன் சிரிக்கரீங்க? நீங்க சொன்னது நிஜமா?” என ராதிகா கேட்க, அவளின் குரலில் இருந்தது ஆர்வமா அல்லது ஏமாற்றமா என அறிந்து கொள்ள முயன்றுத் தோற்றான் கெளதம்

“ம்… ஆமா, நிஜம் தான்” என வேண்டுமென்றே வம்பு செய்தான்

ஆனால் அதை அவனின் வழக்கமான விளையாட்டென எடுத்துக் கொண்டவள், “ம்… இருக்கும் இருக்கும், எதிர்ல ஆள் வர்றது கூட தெரியாம போறீங்கன்னா இப்படித் தான் இருக்கும்” என்றாள் அவளும் வேண்டுமென்றே வம்பாய்

“எதிர்ல ஆள் வர்றது தெரியாமயா?” என்றான் கெளதம் புரியாமல்

“ஆமா, இன்னிக்கி சாயங்காலம் நீங்க ஹாஸ்பிடல் விட்டு வெளிய வரும் போது, நான் பார்மசிகிட்ட நின்னுட்டுருந்தேன். பேசலாம்னு வர்றதுக்குள்ள கண்டுக்காம போயிட்டீங்க, என்மேல என்ன கோபமோனு கேக்கலாம்னு தான் கூப்ட்டேன்” என்றவளின் குரலில், தான் பேசாமல் வந்ததில் தோன்றிய வருத்தம் வெளிப்பட்டது

இதை ஒரு நல்ல துவக்கமாய் எண்ணி மகிழ்ந்தான் என்ற போதும், அவளது வருத்தம் கௌதமின் மனதை வருத்தியது

“சாரி ராதி…கா”, என வழக்கம் போல் ஒரு “கா”வை சேர்த்து சமாளித்தவன், “அது… செம டயர்ட், அதான் கவனிக்கல போலிருக்கு” என்றான்

“ஹ்ம்ம்… நான் கூட அவங்கெல்லாம் சொன்னப்ப நம்பலை. ச்சே ச்சே, கெளதமுக்கு இப்படி எல்லாம் கோபம் வருமானு? ஆனா கொஞ்சம் முன்னாடி போன்ல குடுத்தீங்களே ஒரு டோஸ், அம்மாடி, ஒரு வாரத்துக்கு தாங்கும்” என்றாள் கேலியாய்

“சாரி ராதிகா” என நிஜமான வருத்ததுடன் அவன் கூற, அந்த வருத்தத்தை உடனே போக்க வேண்டுமென அவள் மனம் விளைந்தது

“சும்மா கிண்டலுக்கு சொன்னேன் கெளதம், நீங்க டென்ஷனாக வேண்டாம். சரி ரெஸ்ட் எடுங்க, நாளைக்கி பாக்கலாம்” எனவும்

“ம்… சாப்டாச்சா?” என அழைப்பை துண்டிக்க மனமின்றி பேச்சை வளர்த்தான் கெளதம்

“ம்… ஆச்சு, நீங்க?”

“இல்ல, செய்யறதுக்கு தெம்பில்ல”

“வெளில போய் சாப்பிடலாமே”

“இப்ப அதுக்கும் தெம்பில்ல” என்றான் சோர்வாய்

பெண்மைக்கே உரிய தாய்மை தலையெடுக்க, “ஐயோ… என்ன இப்படி சொல்றீங்க?” என்றாள்

அவளின் அக்கறை அவனுக்கு அவள் அருகாமை வேண்டுமென ஏக்கம் தலை தூக்கச் செய்தது

“ஹ்ம்ம், என்ன பண்றது? என்னை பாத்துக்க பக்கத்துல எங்கம்மா இல்லையே” என்றான் அவளை சீண்டும் எண்ணத்தில்

“கெளதம் நான் வேணா எதாச்சும் செஞ்சு எடுத்துட்டு ஒரு ஆட்டோ பிடிச்சு வரட்டுமா?” என அவள் தவிப்புடன் கேட்க

அவனுக்கும் அவளை நேரில் பார்த்தால் நன்றாய் இருக்குமென தோன்றிய போதும், இந்த நேரத்தில் அவளை சிரமபடுத்த மனம் வரவில்லை

“ச்சே ச்சே, வேண்டாம் ராதிகா. இப்ப ஒண்ணும் சாப்பிடவும் தோணல, கொஞ்சம் பால் குடிச்சா போதும்” என்றான்

“சரி நீங்க தூங்குங்க கெளதம், நான் வெக்கறேன்” என்றாள்

“ஒகே, குட்நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என சிரித்தான் கெளதம்

“குட்நைட்” என அழைப்பை துண்டித்தாள் ராதிகா

அவளுடன் பேசி கொண்டிருந்தவரை இருந்த பலமும் உற்சாகமும் மறைந்து சோர்வு ஆட்கொள்ள, அக்கணமே உறக்கத்தை தழுவினான் கெளதம்

#ad இந்த தொடர்கதையை எழுதி வரும் எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்… அக்டோபர் 1)

 

Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே…❤❤❤  (அத்தியாயம் 6)
  1. அடுத்ததாய் உணவு தயார் செய்து கொண்டு வரப்போகும் ராதிகா? ரஞ்சனி? யார் ஜெயிக்கப் போறாங்க? ராதிகா தான் என மனசு சொல்லுது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: