தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே… (அத்தியாயம் 5)

தற்கு பின் வந்த நாட்களில், மருத்துவமனையிலும் அன்னை இல்லத்திலும், கெளதம் ராதிகாவின் சந்திப்பு தொடர்ந்தது

குறிப்பாய் ராதிகா அன்னை இல்லம் செல்லும் நாட்களில், கௌதமை அங்கு எதிர்பார்க்கலாம் என கூறும் அளவிற்கு ஆனது

அப்படி செல்லும் போதெல்லாம், வகுப்பு முடிந்து ராதிகாவை வீட்டிற்கு சென்று விடுவதும் கௌதமின் வாடிக்கை ஆனது

முன் போல் இன்றி, சகஜமாய் அவனிடம் பேச தொடங்கி இருந்தாள் ராதிகா. அவர்களின் இந்த நெருக்கத்தை தீபாவும் வாணியும் கவனிக்க தவறவில்லை

தீபா அதை பற்றி கௌதமிடம் கேட்க, அவனும் மறைக்காமல் தன் மனம் ராதிகாவின் மேல் ஈடுபாடு கொண்டிருப்பதை தெரிவித்தான். அதோடு, அதை பற்றி இப்போதைக்கு யாரிடமும் கூற வேண்டாம் என கேட்டுக் கொண்டான்

ராதிகாவை பார்க்காத நாட்கள், முழுமை பெறாததாய் கௌதமிற்கு தோன்றியது. வேலை பளு அழுத்தும் நாட்களிலும், கிடைக்கும் ஒரு நிமிட இடைவெளியிலேனும் சந்திரசேகரனை பார்க்கும் சாக்கில் அவளை பார்க்க சென்றான் கெளதம்

அவளிடம் அவன் அளவிற்கு ஆர்வம் வெளிப்படையாய் தெரியாத போதும், இயல்பாய் நட்புடன் பேசினாள்

செல்பேசி ஒலிக்க, சோர்வாய் கண் திறந்தவள், சுவர் கடிகாரம் பன்னிரெண்டு என காட்ட,  பதறி எழுந்தாள் ராதிகா

“இந்த நேரத்துல யாரு போன் பண்றா? ஒருவேள ஊர்ல யாருக்காச்சும்…” என அதற்கு மேல் யோசிக்க இயலாமல், அவளின் இதயத்துடிப்பு அதிகரித்தது

 அழைப்பது யார் என்று கூட காண இயலாதபடி கண்ணீர் மறைக்க, அழைப்பை எடுத்து நடுங்கும் குரலில், “ஹலோ” என்றாள்

“ஹாப்பி பர்த்டே ராதிகா” என கௌதமின் குரல் ஒலிக்க

அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத குரலில் “தேங்க்ஸ்” என்றாள்

அவளின் குரலின் நடுக்கத்தை உணர்ந்தவன் போல், “பயந்துட்டயா ராதிகா? சாரி, நீ இப்படி பயந்துப்பேனு நெனக்கல” என்றவன்

“உன் அபார்ட்மெண்ட் முன்னாடி தான் நிக்கறேன். செக்யூரிட்டிகிட்ட உள்ள விட சொல்றியா? இரு தரேன்” என காவலாளியிடம் தர, அவள் ஒப்புதலின் பின், கெளதம் உள்ளே அனுமதிக்கப்பட்டான்

நாலாவது மாடியை அடைந்து, அழைப்பு மணியை அழுத்தினான் கெளதம். கதவு திறந்தவளின் வெளிறிய முகத்தை கண்டதும், கௌதமிற்கு குற்ற உணர்வு மேலோங்கியது

“சாரி ராதிகா, சர்ப்ரைஸ் பண்ணலாம்னு தான் இந்த நேரத்துல…” என தன் கையில் இருந்த, மெழுவர்த்தி ஏற்றிய கேக்கை அவள் முன் நீட்டியபடியே பாவமாய் கூறினான் கெளதம்

ஒரு கணம் கண்ணில் ஆச்சர்யத்துடன் பார்த்தவள், “இட்ஸ் ஒகே கெளதம்” என்றாள்

தூக்கம் கலைந்த விழிகளுடன், தலை முடியும் கலைந்து நலுங்கிய தோற்றத்தில் கூட ஒருவர் இத்தனை அழகாய் இருக்க முடியுமா என, அவளை கண் எடுக்காமல் பார்த்தான் கெளதம்

“என் பர்த்டே உங்களுக்கு எப்படி தெரியும்?” நகர்ந்து அவன் உள்ளே வர வழி விட்டபடி ஆச்சர்யமாய் கேட்டாள் ராதிகா

சோபாவில் அமர்ந்து கேக்கை முன்னிருந்த டீ-பாயில் வைத்தவன், “மொதல்ல கேக் கட் பண்ணு, அப்புறம் சொல்றேன்” எனவும்

“எதுக்கு இதெல்லாம்?” என்றாள் சங்கோஜமாய்

“எது கேக்கா? சாப்பிடறதுக்கு தான்” என்றான் சிரிப்பை மறைத்தபடி

அந்த கேலியில் முறைத்தவள், பின் இயல்பாகி கேக் கட் பண்ண கத்தி வேண்டுமே என தோன்ற, “இருங்க கத்தி எடுத்துட்டு வரேன்” என்றாள்

“அம்மா தாயே, சும்மா கேக் கட் பண்ண சொன்னதுக்கெல்லாம் இப்படி வைலன்ட் ஆக கூடாது. நான் இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு, அதுக்குள்ள கத்தி குத்துப்பட்டு சாகனுமா?” என அவன் சிரிப்பை அடக்கி பயந்த பாவனை காட்ட, அவள் முகம் சட்டென மாறியது

ஒரே நொடியில் முகமெங்கும் வியர்வை துளிர்க்க, இனி எப்போதும் சிரிக்கவே மாட்டாளோ என எண்ணும் படி சோகமானாள்

அப்படி என்ன தவறாய் சொல்லி விட்டேன், சாதாரணமாய் எப்போதும் போல் விளையாட்டாய் தானே பேசினேன் என குழம்பினான் கெளதம்

உடல்நிலை ஏதும் சரியில்லையோ என பதறி எழுந்தவன், “ராதி… என்னாச்சு?” என அவளின் நெற்றியை தொட, நெருப்பை தீண்டியது போல் விலகி நின்றாள் ராதிகா

இன்று இங்கு வந்ததே தவறோ என தோன்ற தொடங்கியது கௌதமிற்கு

“சாரி ராதிகா, நான் சும்மா விளையாட்டுக்கு…” என சமாதான குரலில் கூற

“சாவை பத்தி பேசறது விளையாட்டா?” என சீறினாள். அவளை ஒருபோதும் இப்படி கோபமாய் கண்டிராதவன் அதிர்ச்சியாய் பார்த்தான்

அவளை இயல்பாக்கும் முயற்சியாய், “ஏய் ரிலாக்ஸ் ராதிகா, இதுக்கு போய் ஏன் இப்படி…” என்றவன், இன்னும் அவள் கோபம் மாறாமல் நிற்பதை கண்டதும்

“ஓகே, அயம் சாரி. ஏன் இந்த சின்ன விசயத்துக்கு இப்படி டென்ஷன் ஆகறேனு எனக்கு சத்தியமா புரியல? ஆனா, பர்த்டே அன்னைக்கி உன்னை மூட் அவுட் பண்ணினதுக்கு வெரி சாரி” என்றான் வருத்தமாய்

அவன் குரலில் இருந்த வேதனை அவளை பாதித்ததோ என்னவோ, கண்ணில் நீர் கரிக்க, அவன் அதை பார்த்துவிடகூடாதென வேறு பக்கம் திரும்பி நின்றாள். அதை அவளின் கோபம் என எடுத்து கொண்டான் கெளதம்

அவளின் கடந்த கால வாழ்வின் ஏதோ ஒன்று, அவளை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அது என்னவென அறிந்து அவளின் கவலையை போக்க கௌதமின் மனம் துடித்தது

ஆனால் அதை கேட்பதற்கான நேரம் இதுவல்ல என புரிந்தவனாய், அதற்கு மேலும் அங்கிருந்து அவளை சங்கடப்படுத்த மனமின்றி,   “ஒகே ராதிகா, நான் கெளம்பறேன்” என்றான்

அவள் மௌனமாய் நிற்க, அவன் வெளியேறினான்.  கதவை சாத்தி தாளிட்டவள் அப்படியே சரிந்து அமர்ந்து அழுதாள்

ன்று மருத்துவமனைக்கு சென்றதும், முதல் வேலையாய் கௌதமிற்கு அழைத்தாள் ராதிகா

அவள் எண்ணை பார்த்ததும் உடனே எடுத்தவன், “சொல்லு ராதிகா” எனவும்

“சாரி கெளதம்” என்றாள்

“ஏய், எதுக்கு சாரி? நான் தான் தேவயில்லாம ஏதோ பேசி மூட் அவுட் பண்ணிட்டேன், சாரி” என்றான் வருத்தமாய்

இருவரும் அடுத்து என்ன பேசுவதென தெரியாமல் மெளனமாக, பின் ராதிகாவே பேசினாள் “உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்?” என்றாள் தயக்கமாய்

“ஒண்ணெல்லாம் கஷ்டம், வேணா அஞ்சு பத்துனு கேளு” என்ற கௌதமின் கேலியில், தயக்கம் நீங்கி சிரித்தாள்

“அதில்ல, நீங்க ப்ரீயா இருந்தா ஈவினிங் டின்னருக்கு வீட்டுக்கு வரீங்களானு…” என அதற்கு மேல் பேச இயலாமல் தயங்கியபடி நிறுத்தினாள்

ஒவ்வொரு முறையும், அழையா விருந்தாளியாய் கெளதம் அவள் வீட்டுக்கு செல்வது தான் இதுவரை நடந்து கொண்டிருந்தது

அதுவும் பெரும்பாலும் அன்னை இல்லத்தில் இருந்து திரும்பும் போது, அவளை வீட்டில் விட சென்று, வேண்டுமென்றே “உன்னை டிராப் பண்ற டிரைவருக்கு ஒரு கப் காபி கூட கிடையாதா?” என கேலி செய்து, சற்று நேரம் அவளுடன் பேசி கொண்டிருந்து விட்டு வருவான்

அவளுடன் தனிமையில் இருக்கும் நேரத்தை மேலும் கொஞ்சம் நீடிக்கும் முயற்சியே அது என்பது அவளுக்கு புரியவில்லையா, அல்லது புரியாதது போல் நடிக்கிறாளா என அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை

இப்படி இருக்கும் நிலையில், அவளிடமிருந்து இருந்து வரும் முதல் அழைப்பு இதுவென மிகவும் மகிழ்ந்தான் கெளதம்

காலையில் நடந்ததற்கு பிராயசித்தம் போல் தான் இந்த அழைப்பு என புரிந்த போதும், அதை பற்றியெல்லாம் யோசிக்கும் மனநிலையில் அவன் இருக்கவில்லை. காதல் வெட்கம் மட்டுமல்ல, கௌரவமும் அறியாது தான் போலும்

அன்று காலை அவள் சோகமாய் நின்ற தோற்றமே கண் முன் வர, மீண்டும் அவள் முகத்தில் சிரிப்பை வரவைத்து காண வேண்டுமென நினைத்தான் கெளதம்

“நீங்க பிஸியா இருந்தா இட்ஸ் ஒகே” என்றவளின் குரலில் கலைந்தவன்

“நோ நோ, கண்டிப்பா வரேன்” என்றான் அவசரமாய், எங்கே அவள் மனம் மாறி விடுமோ என பயந்தவன் போல்

“ஒகே அப்ப ஈவினிங் பாக்கலாம்” என்றாள்

“ஒகே, ஹாப்பி பர்த்டே ஒன்ஸ் மோர்” என்றான் மகிழ்வுடன்

“தேங்க்ஸ்” என அழைப்பை துண்டித்தாள் ராதிகா 

பிரசித்தி பெற்ற அலங்கார பொருட்கள் விற்கும் அந்த கடையில், “ராதிகாவுக்கு என்ன கிப்ட் வாங்கறது?” என மண்டையை உடைத்துக் கொண்டிருந்தான் கெளதம்

 நடு இரவில் கேக்குடன் செல்ல வேண்டுமென முடிவெடுத்த போதே, ஏதேனும் பரிசு வாங்க தோன்றிய மனதை, அவள் ஏதேனும் தவறாய் நினைப்பாளோ என பயந்தவனாய் கட்டுப்படுத்தினான்

ஆனால் இரவு விருந்துக்கென அவள் அழைத்ததும், வெறும் கையுடன் செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. அதே சமயம் என்ன பரிசு வாங்குவதெனவும் குழம்பினான்

நாளுக்கு நாள் ராதிகா மேல் தான் கொண்ட ஈர்ப்பு அதிகமாவதை, கௌதமால் உணர முடிந்தது

வெறும் ஈர்ப்பெனில் சற்று நெருங்கி நட்பானால் மறைந்து விடும் என நினைத்து தான், முதலில் அவளிடம் நட்பானான்

ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாய், ராதிகாவின் மீதான ஈர்ப்பும் தேடலும் இன்னும் அதிகமாக, அவள் மேல் தான் காதல் வயபட்டிருப்பதை உணர்ந்தான் கெளதம்

அதுவும் அன்று காலை, தான் சாவை பற்றி விளையாட்டாய் பேசிய போது, அவள் வேதனையில் நின்ற தோற்றத்தை கண்டதும், தன் மனதில் தோன்றிய தவிப்பு, அவனுக்கு தன் மனதை தெளிவாய் உணர்த்தி இருந்தது

ராதிகாவிடம் இன்று தன் மனதில் இருப்பதை சொன்னால் என்ன என தோன்றியது கௌதமிற்கு, ஆனால் அப்படி செய்ய தயக்கமாகவும் உணர்ந்தான்

அவள் மனதில் என்ன இருக்கிறதென ஒரு சிறு குறிப்பேனும் தெரிந்தால், அதை வைத்து தொடங்கலாம். அப்படி இன்றி தான் மட்டும் ஏதேனும் கூறி, அவள் மொத்தமாய் உன் உறவே வேண்டாமென விலகி விட்டால் என்ன செய்வதென பயந்தான்

இறுதியில், இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் என்ற முடிவுக்கு வந்தவனாய், அவளுக்கு பிடித்த பரிசொன்றை வாங்கிக் கொண்டு அவளை பார்க்க சென்றான்

“வாங்க” என சிறு புன்னகையுடன் கௌதமை வரவேற்றாள் ராதிகா

கண்ணை உறுத்தாத எளிமையான உடையில் இருந்த போதும், கௌதமால் அவளை விட்டு பார்வையை அகற்ற முடியவில்லை

எப்போதுமே எளிய ஒப்பனையில் இருப்பவள் தான், இப்போதும் அதே போல் தான் இருந்தாள் என்ற போதும், இன்று ஏனோ அவன் கண்ணுக்கு ராதிகா இன்னும் அழகாய் தெரிந்தாள்

பரிசு பொருளை அவள் முன் நீட்டியவன், “ஹாப்பி பர்த்டே ராதி…. கா” என்றான் சற்றே தடுமாறி

தனியே இருக்கும் போது கற்பனையில் அழைப்பது போல் “ராதி”என்று விட்டு, பின் அவள் முகம் மாற கண்டதும் “கா…” என சேர்த்து சமாளித்தான் கெளதம்

பரிசை வாங்காமல் சங்கடமாய் அவனை பார்த்தவளை, “ஒரு பிரெண்ட் குடுக்கற கிப்ட் வாங்கிக்க மாட்டியா? பெருசா ஒண்ணுமில்ல, ஜஸ்ட் எ சிம்பிள் கிப்ட். ஆனா உனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன், பிரிச்சு பாரு” என்றான் பூடகமாய்

ஒரு கணம் தயங்கியவள், பின் மௌனமாய் பரிசை வாங்கி கொண்டாள்

பின் “டீ… காபி என்ன குடிக்கறீங்க?” என உபசரித்தாள்

“மொதல்ல கிப்ட் ஓபன் பண்ணு” என்றான், அதை காணும் போது அவள் முகத்தில் தோன்றும் உணர்வுகளை ரசிக்கும் ஆவலில்

மெல்லிய சிரிப்பை உதிர்த்தவள், பரிசை சுற்றி இருந்த காகிதத்தை பிரித்தாள். பளிங்கினால் செய்யப்பட்ட அந்த அழகிய மீரா சிலையை பார்த்ததும், அவள் கண்ணில் தோன்றிய மகிழ்ச்சியில், கௌதம் மிகவும் மகிழ்ந்தான்

ஆச்சர்யமாய் அவனை ஏறிட்டவள், “உங்களுக்கு எப்படி?” என புரியாமல் பார்த்தாள்

“அன்னைக்கி அன்னை இல்லத்துல ஆண்டு விழா பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தப்ப, உனக்கு பிடிச்ச சிங்கர் யாருனு தீபா கேட்டதுக்கு, பக்த மீரா தான் எனக்கு பிடிச்ச பாடகினு நீ சொன்ன, ஞாபகமிருக்கா?”  என்றான், அவள் முகத்தில் தோன்றிய உணர்வுகளை ரசித்தவாறே

அவன் தன் விருப்பம் அறிந்து பரிசை தேர்வு செய்ததை கேட்டதும், அவள் கண்ணில் நீர் துளிர்த்தது. அதைக் கண்டதும், தவறாய் ஏதேனும் பேசி விட்டோமே என பதறியவனாய் “என்னாச்சு?” என்றான்

“ஒண்ணுமில்ல, தேங்க்ஸ்… ரெம்ப தேங்க்ஸ்” என ராதிகாவின் குரலில் இருந்த சந்தோசமும் தவிப்பும், கௌதமை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது

சிறிது நேர அரட்டைக்கு பின், “டைம் ஆச்சு, சாப்பிடலாமா?” என ராதிகா கேட்க

“கொஞ்சம் இரு ராதிகா, எதுக்கும் நம்ம ஹாஸ்பிடல்ல பெட் ப்ரீயா இருக்கானு ஒரு வாட்டி விசாரிச்சுக்கறேன்” என கெளதம் கேலியாய் அவள் சமையலுக்கு பயந்தது போல் கூற

“நம்ம ஹாஸ்பிடல்ல வேலை செய்யறவங்களுக்கு அங்க ப்ரீ ட்ரீட்மென்ட் தானே கெளதம்” என்றாள் அவளும் பதிலுக்கு, சிரிப்பை அடக்கியபடி

“அடப்பாவி, அப்ப ஒரு முடிவோட தான் இருக்கியா?” என்றான் நிஜமாய் பயந்தவனாய்

அவன் பயத்தை கண்டு நகைத்தவள், “பயம் வேண்டாம் டாக்டர் சார். அந்த காலத்துல ராஜாக்கள் எல்லாம் சாப்பிடறதுக்கு முன்னாடி, அதை சமைச்சவங்களே சாப்பிட்டு காட்டினப்புறம் தான் ராஜாவுக்கு குடுப்பாங்களாம். இப்பவும் அதே மாதிரி, எல்லாத்தையும் நான் டேஸ்ட் பண்ணிப்புறம் நீங்க சாப்பிடுங்க” என்றாள் சமைத்தவற்றை டேபிளில் எடுத்து வைத்தவாறே

“அப்ப இன்னும் டேஸ்டா தான் இருக்கும்” என்றான் கெளதம் மெல்லிய குரலில்

“என்ன சொன்னீங்க?” ராதிகா கேட்க

“அ..அது… உன் சமையல் நல்லாவே இருக்கும்னு வாணி அத்தை சொன்னாங்க” என சமாளிக்க ஏதோ கூறினான்

“வாணி மேடம் என் சமையலை சாப்பிட்டதே இல்லையே” என விழித்தாள் ராதிகா

“ஐயோ, ஏண்டா இப்படி ஒளறி மாட்டிக்கற?” என தன்னை தானே மனதிற்குள் திட்டி கொண்ட கெளதம், “அ… அது… ம்…தெர்ல… ஒருவேள நீயே சொல்லி இருக்கலாம்” என மீண்டும் உளறினான்

“எனக்கு ஞாபகம் வந்துடுச்சு. ஒரு நாள் மேடமுக்கு உடம்பு சரியில்லைனு பாக்க போய் இருந்தப்ப, அன்னைக்கினு   பாத்து வேலைக்காரி வேற கட் அடிச்சுட்டா. நான் சும்மா கொஞ்சம் மிளகு ரசம் பண்ணி குடுத்தேன், அதை வெச்சு சொல்லி இருப்பங்களோ?” என அவள் கேள்வியாய் அவனை பார்க்க

“அப்பாடா பொழச்சேன்” என அதையே விடாமல் பற்றியவன், “ஆமா, அதே தான், அதான் சொன்னாங்க. நான் தான் மறந்துட்டேன்” என சமாளித்தான்

“ஞாபக மறதிக்கு வல்லாரை கீரை சாப்பிடுங்க, நடந்தது நடப்பது நடக்க போவது எதுவும் மறக்காது” என குறும்பாய் ஏதோ விளம்பர பட பாணியில் அபிநயத்துடன் ராதிகா கூற, அவளை விட்டு கண்ணை எடுக்க இயலாமல் நின்றான் கெளதம்

“கெளதம்…” என அவள் சத்தமாய் அழைக்க

கனவில் இருந்து விழித்தவன் போல், “ம்… என்ன?” என கெளதம் கேட்க

“அதை நான் தான் உங்ககிட்ட கேக்கணும்” என சிரித்தாள் ராதிகா

“இவ புரிஞ்சே பூடகமா பேசறாளா, இல்ல சாதாரணமா பேசறதை நான் தான் கற்பனை பண்ணிக்கறேனா?” என குழம்பினான் கெளதம்

“வாவ், நிஜமாவே சமையல் சூப்பர். சமைச்ச கைக்கு ஒரு…” முத்தம் என சொல்ல வந்து நிறுத்தியவன் “…பரிசு குடுக்கலாம்” என சமாளித்தான் கெளதம்

“அதான் குடுத்துட்டீங்களே” என முன்னே இருந்த மீரா சிலையை ரசித்தபடி, “ரெம்ப அழகா இருக்கு” என்றாள் ராதிகா

ரசிக்கும் அவளின் அழகை ரசித்தபடி “ஆமா, ரெம்ப அழகா இருக்கு” என்றான் அவனும்

தன்னை கெளதம் பார்ப்பது போன்ற உள்ளுணர்வில் ராதிகா சட்டென திரும்ப, “சிலை நல்லா… கலை நயத்தோட இருக்கில்ல ராதிகா” என சமாளித்து சிரித்தான் கெளதம்

இப்படியாய் சிரிப்பும் ரசிப்பும், அதை தொடர்ந்த சமாளிப்புமாய் நாட்கள் நகர்ந்தது

டுத்து வந்த இரு வாரமும் கொஞ்சமும் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருந்தான் கெளதம்

முதல் வாரம் “புற்றுநோய் விழிப்புணர்வு முகம்” என அதில் நேரம் கணிசமாய் போக, சில எமெர்ஜென்சி அழைப்புகளுக்கு இடையே, மருத்துவமனைக்கும் முகாம் நடக்கும் இடத்திற்கும் அலைந்து கொண்டிருந்தான்

அதோடு, டெல்லியில் ஒரு மருத்துவ கருத்தரங்கில் பேச அழைப்பு வந்திருக்க, அதற்கு தயார் செய்வதும் சேர்ந்து வேலை பளுவை கூட்டியது

மாமா சொல்வது போல் புற்றுநோய் பிரிவில் இன்னும் சில மருத்துவர்களை பணிக்கு நியமிப்பது தான் சரியோ என யோசிக்கத் தொடங்கி இருந்தான் கெளதம்

எல்லாவற்றிக்கும் மேலாய், ராதிகாவுடன் சரியாய் பேசி நாளானதே தன்னை  சோர்வுற செய்கிறது என்பதை உணர்ந்தான் கெளதம்

அவளை காணும் வரை இருந்த மனநிலைக்கும், இப்போதுள்ள மனநிலைக்கும், நிறைய மாற்றமிருப்பதை அவனால் மறுக்க இயலவில்லை

முன்பெல்லாம் டாக்டர் பணி மட்டுமே முதல் முக்கியம், மற்ற எல்லாமும் எல்லாரும் அதன் பின் தான் என இருந்தவனுக்கு, இப்போது ராதிகாவின் நினைவு அதை தடை செய்வதை உணர்ந்தான்

அதற்காக பணியில் அக்கறை குறைந்து விடவில்லை என்ற போதும், முன்னிருந்த முழு ஈடுபாடு குறைந்து போனதை உணர்ந்தான் கெளதம்

விரைவில் தன் மனதை அவளுக்கு வெளிப்படுத்தி விட்டால், மனம் சற்று அமைதியுறும் என நினைத்தான்

(தொடரும்… )

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே… (அத்தியாயம் 5)
  1. ஏற்கெனவே ஒரு காதலனை இழந்து தவிக்கிறாள் என நினைக்கிறேன். அதனால் தான் இப்போது யோசிக்கிறாளோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: