சஹானா
தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே… ❤(தொடர்கதை – அத்தியாயம் 3)

தவைத் திறந்த வாணி, “என்னங்க… யாரோ உங்களுக்கு வேண்டியவங்க வந்திருக்காங்க” என்றபடி வந்தவனிடம் எதுவும் பேசாமல் சோபாவில் சென்று அமர்ந்தார்

“யாரு வந்திருக்கா?” என்றபடி சந்திரசேகரன் முன்னறைக்கு வர

“மை ஸ்வீட் அத்தைக்கு இன்னும் கோபமா?” என கெளதம் சோபாவில் அமர்ந்து, வாணியின் தோளில் உரிமையாய் தலை சாய்த்தபடி கேட்டான்

“ஆரம்பிச்சுட்டீங்களா உங்க சண்டைய?” என சிரித்தபடி மனைவியின் அருகே அமர்ந்தார் சந்திரசேகரன்

“பின்ன என்ன? எவ்ளோ வாட்டி சொன்னேன் உங்கிட்ட, சனிக்கிழமை நம்ம அன்னை இல்லத்துக்கு வாடானு, எனக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு பெரிய ஆள் ஆய்ட்டியோ?” என்றார் வாணி இன்னும் கோபம் விலகாமல்

“ஐயோ அப்படி இல்ல அத்த, ஒரு கான்பரன்சுக்கு பேப்பர் சப்மிசன் இருந்தது. அதுல கொஞ்சம் பிஸியா இருந்தேன், இல்லேனா நீங்க சொல்லி வராம இருப்பனா?” என பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கெளதம் கூற

“இப்படி பேசியே கரைக்கறதெல்லாம் எங்கிட்ட வேணா நடக்கும், நாளைக்கி உன் வீட்டுக்காரி வந்து முதுகுல ரெண்டு போடுவா பாரு” எனவும்

“நீ என்னை போடற மாதிரியா வாணி?” என சந்திரசேகரன் கேலியாய் சிரிக்க, அடக்க மாட்டாமல் சத்தமாய் சிரித்தான் கெளதம்

“உங்களுக்கு எப்ப என்ன பேசறதுன்னே இல்ல” என வாணி கணவனை முறைக்க

“ஹா ஹா… பாவம் எங்க மாமா, நான் இருக்கும் போதாச்சும் கொஞ்சம் பேசட்டும் விடுங்க அத்த” என சிரித்தான் கெளதம்

“நேரம்டா, கல்யாணமானப்புறம் என்ன சொல்றேன்னு பாப்போம்” என முறைத்தார் வாணி

கௌதமுக்கு ஏனோ திடீரென மாலை பார்க்கில் பார்த்த அந்த பெண்ணின் முகம் கண் முன் வந்தது, “ச்சே, இப்ப ஏன் அந்த ஊர் பேர் தெரியாதவ நெனப்பு வருது, ஆனாலும் ஓவர் படிப்ஸ் போல இருக்கு” என அவளின் நினைவில், கௌதமின் புன்னகை விரிந்தது

“என்ன கெளதம் முழிச்சுட்டே கனவு காண்ற? பொண்ணு பாத்துட்டியா என்ன?” என்ற அத்தையின் கேலியான குரலில் கலைந்தவன்

“டோண்ட் வொர்ரி அத்தை, பாத்தா மொதல்ல உங்ககிட்ட தான் கூட்டிட்டு வருவேன்” என சிரித்தான்

“எதுக்கு? கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி முதுகுல சாத்தறதுன்னு க்ளாஸ் எடுக்கவா?” என சமயம் பார்த்து சந்திரசேகரன் மனைவியை கேலி செய்ய, கோபம் காட்ட முயன்றும், கட்டுப்படுத்த முடியாமல் வாணியும் மற்ற இருவரோடு சேர்ந்து நகைத்தாள்

“அது சரி அத்த, நம்ம அன்னை இல்லத்துல என்ன நியூஸ்? அத சொல்லுங்க மொதல்ல, ரெம்ப நாளாச்சு அங்க வந்து” என கெளதம் ஆர்வமாய் கேட்க

“நீ லண்டன் போறதுக்கு முன்னாடி வந்தது இல்லையா கெளதம்? இப்ப நிறைய  மாறிப் போச்சு, புதுசா நிறைய குழந்தைகள் வந்திருக்காங்க. அதுல ஒரு கொழந்த வெறும் ஒரே வாரம் தான் ஆச்சு பொறந்து, எப்படி தான் பெத்தவளுக்கு மனசு வந்ததோ அப்படி போட்டுட்டு போக?

பிள்ளை வரம் வேணும்னு கோவில் கோவிலா ஏறி இறங்கின எனக்குத் தான் தெரியும் அந்த வலி, ஹ்ம்ம்…” என பெருமூச்சுடன் வாணி நிறுத்த, ஆறுதலாய் மனைவியின் தோளில் கை பதித்தார் சந்திரசேகரன்

“ரிலாக்ஸ் அத்தை, நீங்க கடவுள்கிட்ட ஒரு பிள்ளை கேட்டீங்க. இப்ப பாருங்க நம்ம அன்னை இல்லத்துல நூத்துக்கணக்கான குழந்தைங்க உங்கள அம்மானு கூப்பிடறாங்க, இது வரம் இல்லையா?” என கெளதம் ஆறுதல் கூற

“உண்மை தான் கெளதம்” என்றார் வாணி, கண்ணில் நீர் பனிக்க

“அது சரி, அந்த ரெண்டு வயசு குழந்தை நித்யாவை தத்து கேட்டுட்டு இருந்தாங்களே, அது என்னாச்சு அத்தை?” என பேச்சை மாற்றினான் கெளதம்

“நித்யாவை மட்டுமில்ல, அதுக்கப்புறம் இன்னும் அஞ்சு பிள்ளைங்களுக்கு கூட அம்மா அப்பா கிடைச்சுட்டாங்க கெளதம். என்ன தான் நாம எல்லா சௌகரியங்களும் செஞ்சு குடுத்தாலும், அம்மா அப்பானு குடும்ப அமைப்புல வாழுற பாக்கியம் பெருசு தானே. ஆனா என்ன, பிள்ளைங்க போனப்ப மனசுக்கு கஷ்டமா இருந்தது”

“அவங்க நல்லதுக்கு தானே அத்த. பட் யு ஆர் ரியல்லி கிரேட், இவ்ளோ பெரிய இல்லத்த நடத்தறது சாதாரண விஷயமில்ல” என்றான் கெளதம், மனமார்ந்த பாராட்டாய்

“நான் மட்டும் தனியா என்ன செய்ய முடியும் கெளதம்? முன்னைக்கி இப்ப நிறைய பேர் தொண்டு நோக்கத்தோட, தங்களோட நேரத்தை இல்லத்துக்காக செலவழிக்கறாங்க. டாக்டர் பிரகாஷோட வொய்ப், அதான் உன் பிரெண்ட் தீபா, வாரத்துல ரெண்டு நாள் ஈவினிங் ரெண்டு மணி நேரம் பசங்களுக்கு டிராயிங் கிராப்ட் கிளாஸ் எடுக்கறாங்க.

அப்புறம் நம்ம ஹாஸ்பிடல்ல வேலை செய்யற இன்னொரு பொண்ணு, வாரத்துல ஒரு நாள் டான்ஸ் சொல்லி தர்றாங்க. இப்படி எல்லாரோட பங்களிப்பும் தான் இருக்கு கெளதம். இந்த மாதிரி ஹெல்ப் இல்லாம அஞ்சு குழந்தைகள வெச்சு ஆரம்பிச்ச இல்லம், இப்ப மூந்நூறு பிள்ளைக அளவுக்கு போய் இருக்க முடியாது” என்றார் வாணி பெருந்தன்மையுடன்

“செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்னு கேள்வி, ஆனா போற போக்கைப் பாத்தா இன்னைக்கு பேச்சுல தான் வயத்த நிறைச்சுக்கணும் போல இருக்கு கெளதம்” என ஜாடையாய் மனைவியை பார்த்தபடி, சந்திரசேகரன் பாவமாய் கூற

“உங்கள…”, என கணவனை முறைத்தவள் “சரி சரி பேசிட்டு இருங்க, நான் டிபன் ரெடி பண்றேன்” என உள்ளே சென்றார் வாணி

“ரஞ்சனி, கேன் யு கம் இன்?” என கௌதமின் குரல் இண்டர்காமில் ஒலிக்க

“எஸ் சார்” என உற்சாகமாய் விரைந்து அவன் அறைக்குள் சென்றாள் ரஞ்சனி

அவள் வந்து நிற்பதை உணர்ந்தவனாய், “இன்னும் எவ்ளோ அப்பாயின்ட்மென்ட்ஸ் இருக்கு?” என்றான் கையில் இருந்த ரிப்போர்ட்டை பார்த்தவாறே

“இன்னும் மூணு பேஷன்ட்ஸ் இருக்காங்க சார்”

“ஒகே, இது பேஷண்ட் கிருஷ்ணகுமாரோட பைல். அவருக்கு நெக்ஸ்ட் வீக் சர்ஜரி பண்ணனும்னு சொல்லி இருக்கேன், என்னோட டேட்ஸ் பாத்து பிக்ஸ் பண்ணிடுங்க” என கையில் இருந்த பைலை அவளிடம் நீட்டினான்

அதை பெற்றுக் கொண்டவள், “ஓகே சார், சார்…” என தயங்கி நிற்க

“என்ன?” என தலையை உயர்த்தினான் கெளதம்

“அ…அது… உங்களுக்கு இந்த ஷர்ட் ரெம்ப நல்லா இருக்கு சார்” என சிரித்தாள் ரஞ்சனி

“தேங்க்ஸ்” என அவளை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தான் கெளதம்

அவன் நேரே பார்த்ததும், சட்டென பதட்டம் தொற்றி கொண்டது போல், கையில் இருந்த பைலை இறுகப் பிடித்தாள் ரஞ்சனி

அவளின் அந்த செய்கை கௌதமிற்கு எரிச்சலைக் கிளப்ப, “வேற ஒண்ணுமில்லையே, அடுத்த பேஷன்டை உள்ள அனுப்பறீங்களா?” என்றான்

“ஓ… ஒகே சார்” என வெளியேறினாள்

மௌனமாய் அவள் செல்வதை பார்த்தவன், “ஹ்ம்ம், கஷ்டம் இந்த பொண்ணோட” என பல்லைக் கடித்து முணுமுணுத்தான்

அதற்குள் செல்போன் ஒலிக்க, “ஹலோ டாக்டர் கெளதம் ஹியர்” என்றான்

“ஒரு நிமிஷம் உங்ககிட்ட பேசலாமா டாக்டர் கெளதம்?”

“சொல்லுங்க மாமா” என்றான் புன்னகையுடன்

“புது நெம்பர்ல இருந்து கூப்பிட்டேன், அப்பவும் கண்டுபிடிச்சுட்டயா? ஒகே, ஒரு குட் நியூஸ்” என்றார் சந்திரசேகரன்

“என்ன மாமா? அத்தை ஊருக்கு போறாங்களா?” என கெளதம் கேலியாய் சிரிக்க

“டேய், வம்புல மாட்டி விடாத என்னை” என்றவர்

“கேன்சர் அவேர்னஸ் கேம்ப் நடத்தறதுக்கு பெர்மிட் கிடைக்காம இழுத்தடிச்சுட்டே இருந்ததில்ல, இப்ப கிடைச்சுடுச்சு கெளதம்” என்றார் சந்திரசேகரன் உற்சாகமாய்

“வாவ், நல்ல விஷயம் மாமா” என்றான் கௌதம் மகிழ்வுடன்

“சரி அதை பத்தி கொஞ்சம் பேசணும், வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி என்னை பாத்துட்டு போ கெளதம்” எனவும்

தன் வாட்சை பார்த்தவன் “ஒகே மாமா, எப்படியும் இன்னும் ஒன் ஹவர் ஆய்டும்னு நினைக்கிறேன்”

“நோ ப்ராப்ளம், எனக்கும் அதுவரைக்கும் கொஞ்சம் வேலை இருக்கு” என்றார்

“சி யு தென்” என அழைப்பை துண்டித்தான் கெளதம்

ன்ன தான் மனதுக்கு பிடித்த வேலை என்ற போதும், அதிக வேலை பளுவில் சில சமயம் உடல் சோர்வுறும் நாளில், சலித்துத் தான் போகிறது என நினைத்தான் கெளதம்

ஆனால் இதையெல்லாம் தவிர்த்து, நாலு நாள் பெற்றோரை பார்க்க ஊருக்கு செல்லும் நாட்களில், நினைவு மொத்தமும் இங்கயே வட்டமிடுவதும் விசித்திரம் தான் என நினைத்துக் கொண்டான் கெளதம்

அன்று காலை ஐந்து மணிக்கு ஒரு எமெர்ஜென்சி கேஸ் என அழைப்பு வர கிளம்பி வந்தவனுக்கு, அதன் பின் நிற்கவும் நேரம் இருக்கவில்லை. கடிகாரம் மாலை ஆறு மணி எனக் காட்ட, விட்டால் அங்கேயே உறங்கி விடுவேன் என்றது அவனது விழிகள்

“மாமா வேற பாக்கணும்னு சொன்னாரே” என தனக்குத் தானே நினைவூட்டியவன், சோம்பல் முறித்தபடி தன் இருக்கையில் இருந்து எழுந்தான்

டாக்டர் சந்திரசேகரனின் அறையை நெருங்கிய கெளதம், பிரேக் போட்டது போல் நின்றான்

ஒரு கணம் தன் கண்களையே நம்ப முடியாதவன் போல் கண்ணை திறந்து மூடியவன், “ச்சே ச்சே, இது அவ இல்ல. மொதல்ல என் கண்ணை டெஸ்ட் பண்ணனும்” என தனக்குத் தானே கூறியபடி நடந்தான்

அருகில் சென்றதும், “குட் ஈவினிங் டாக்டர் கெளதம்” என சிரித்தாள் அந்த பெண்

“அவள் தான் அவளே தான். அன்று தீபாவின் வீட்டில் இருந்த வந்த போது, வழியில் இருந்த பார்க்கில் அமர்ந்திருந்த அந்த பெண் இவளே தான். என் கண்கள் பொய் சொல்லவில்லை. ” என்ற எண்ணம் மனதில் ஓட, சிரிப்பில் மலர்ந்த அவள் விழிகளை ஒரு கணம் இமைக்க மறந்து பார்த்தான் கெளதம்

ஆர்வமாய் பார்த்தவனை கண்டதும், புன்னகை சுருங்க “சார்…” என்றாள் அவள்

“நீ… நீங்க?” என கெளதம் யோசனையாய் பார்க்க

“என் பேரு ராதிகா சார்” என மரியாதையாய் அவள் கூற

“சார்’ங்கறது உங்க அப்பாவோட பேரா?” என அவன் கேலியை மறைத்தபடி கேட்க

“புரியல…” என ஒரு கணம் புருவம் சுருக்கி யோசித்தவள், “ஓ… நான் சார்’னு சொன்னது உங்கள” என மெல்ல புன்னகைத்தாள் ராதிகா

“அப்ப உங்க பேருக்கு அப்புறம் என் பேரா?” என மனதில் தோன்றிய வார்த்தைகளை, அதன் அர்த்தம் வேறு மாதிரி தோன்றும் என நினைத்து, கேட்காமல் நிறுத்தினான் கௌதம்

“நான் சந்திரசேகரன் சாரோட செக்ரட்டரி” என்றாள் அவளே தொடர்ந்து

“ஒகே ஒகே, சுதாவுக்கு பதிலா நீங்களா?” என சமாளித்தான்

“எஸ் டாக்டர், கரெக்ட். நீங்க ரெம்ப ஷார்ப்னு கேள்விப்பட்டிருக்கேன், இப்ப ஒத்துக்கறேன்” என்றாள் ராதிகா, அவன் கேலிக்கு பதில் கொடுப்பது போல்

கெளதம், அவள் குரலில் இருந்த கேலியை கண்டு கொள்ளாதவன் போல், “ரெம்ப தேங்க்ஸ். அதுமட்டுமில்ல, பேஸ் ரீடிங் கூட நல்லா தெரியும், ஒரு டெஸ்ட் பண்ணலாமா? உங்களப் பாத்தா, மணிக்கணக்கா பார்க்ல உக்காந்து புக் படிப்பீங்கன்னு தோணுது, கரெக்டா?” என அவன் சிரிப்பை அடக்கியபடி கேட்க, அவள் ஆச்சர்யமாய் பார்த்தாள்

“ஹா ஹா, ரெம்ப யோசிக்காதீங்க மிஸ் ராதிகா. இருக்கற கொஞ்சம் மூளையும் வேஸ்ட் ஆய்ட போகுது” என சிரித்தவன், பார்க்கில் அவளை பார்த்ததை விவரித்தான்

“இதெல்லாம் அநியாயம் சார், நான் ஒண்ணும் அஞ்சு மணி நேரம் பார்க்ல உக்காந்து புக் படிக்கல” என்றாள்

“சரி நாலரை மணி நேரம் படிச்சீங்க, ஓகே?” என அவன் முறுவலிக்க

“ஐயோ அப்படி இல்ல சார், அது எங்க அபார்ட்மெண்ட்ல இருக்கற பார்க் தான். லீவ் அன்னைக்கு போர் அடிச்சா அப்பப்ப அங்க போய் உக்காருவேன். அப்படி மத்தியானம் கொஞ்ச நேரம், சாயங்காலம் கொஞ்ச நேரம் நான் அங்க இருந்தப்ப நீங்க பாத்து இருக்கீங்க” என விளக்கம் போதுமா என்பது போல் பார்த்தாள்

“ஒகே ஒகே உங்கள நம்பறேன். அது சரி, நீங்க என்னை பாத்ததே இல்லையே. நான் தான் கெளதம்னு எப்படி தெரியும்?” ஒரு வேளை இவளும் என்னை பார்த்து இருப்பாளோ என யோசித்தபடி

அவன் எண்ணத்தை படித்தவள் போல், “நான் உங்கள எந்த பார்க்லயும் பாக்கல டாக்டர்” என புன்னகைத்தவள், “நம்ம ஹாஸ்பிடல் மேகசின்ல உங்க போட்டோ பாத்திருக்கேன், அதுல உங்கள பத்தி படிச்சும் இருக்கேன்” என்றாள்

“ஓ ரைட். அது சரி, ரெண்டு நாள் முன்னாடி சாரை பாக்க வந்தப்ப உங்கள இங்க பாக்கலையே?” என கௌதம் கேள்வியாய் நிறுத்த

“அன்னைக்கி கொஞ்சம் ஒடம்புக்கு முடியலைன்னு லீவ் போட்டிருந்தேன் சார்” என்றாள் ராதிகா

“இப்ப பரவால்லியா?” என்றவனின் குரலில் இருந்த வழக்கத்தை மீறிய அக்கறை, அவனுக்கே ஆச்சர்யமாய் இருந்தது

“ம், இப்ப ஒகே சார்” என முறுவலித்தவள், “சார் ப்ரீயா தான் இருக்காரு” என தலைமை மருத்துவர் என பெயர் பலகை பதித்த அறையை நோக்கி கை காட்டினாள் ராதிகா


ஏனோ இன்னும் சற்று நேரம் அவளுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென தோன்றிய தன் ஆவலை வியந்தபடி, “ரெம்ப போர் அடிக்கற கிளம்புனு சொல்லாம சொல்றீங்க, அப்படி தான?” என வேண்டுமென்றே பாவமாய் முகத்தை வைத்தபடி கெளதம் கேட்க

“ஐயோ இல்ல சார், நீங்க வருவீங்கனு சார் சொன்னாரு அதான்…” என்றாள் சற்றே பயந்த குரலில்

“ஜஸ்ட் கிட்டிங்” என சிரித்தவன், “ஒகே, அப்புறம் பாக்கலாம் ராதிகா” என நகர்ந்தான்

சற்று முன் வேலை பளுவினால் இருந்த சோர்வு போய், மனதில் புது உற்சாகத்துடன் தலைமை மருத்துவரின் அறையினுள் சென்றான் கெளதம்

#ad இந்த தொடர்கதையை எழுதி வரும் எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்…திங்கள் தோறும்…)

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே… ❤(தொடர்கதை – அத்தியாயம் 3)
  1. ராதிகாவா, ரஞ்சனியா? ஜெயிக்கப் போவது யாரு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: