www.sahanamag.com
தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே❤ (பகுதி 17) – எழுதியவர்: சஹானா கோவிந்த்

அத்தியாயம் 16 வாசிக்க (Previous Episode)

டைசியாய் அந்த பெண்ணின் அண்ணன் சொன்னது இன்றும் கௌதமின் காதில் ஒலித்தது, “இன்னைக்கி வேணா உன் பண பலத்துல அதிகார பலத்துல நீ தப்பிச்சர்லாம், ஆனா என்னைக்காச்சும் ஒரு நாள், இதுக்கான தண்டனைய நீ அனுபவிப்ப” என்றார்

வர் சொன்னது இன்று பலித்துவிட்டது என்ற எண்ணத்தோடே, பழைய நினைவுகளில் இருந்து மீண்டான் கெளதம்

நடந்த விபத்தில் தன் தங்கை சுஜியின் மீது எந்த தவறும் இல்லாத போதும், அவளுக்கு பதில் தானே வாகனத்தை செலுத்தி வந்ததாய் சொன்ன பொய்க்கான தண்டனை இதுவென நினைத்தான் கெளதம் 

ஒருவேளை, அந்த விபத்தில் இறந்தவரின் மனைவி தான் ராதிகா என முன்பே தெரிந்திருந்தால், ஆரம்பத்தில் இருந்தே அவளிடம் நெருங்கி பழகாமல் இருந்திருந்தால், அல்லது அவள் அண்ணனுக்கு என் முகம் நினைவில் இல்லாமல் இருந்திருந்தால், என பல இருந்தால்’கள் கௌதமின் மனதில் வரிசை கட்டி நின்றது 

அன்னை இல்ல ஆண்டு விழா அன்று இரவு, ராதிகாவின் வீட்டு மேஜை இழுப்பறையில் அவள் தன் கணவனுடன் திருமண கோலத்தில் இருந்த புகைப்படத்தை கண்ட நொடி, அதிர்ந்து நின்றான் கெளதம்

அதன் பின் அவள் முகத்தை காணும் தைரியம் இன்றியே, அவளிடம் கூறாமல் வெளியேறினான்

ஆனால் அன்றில் இருந்தே, எப்படியேனும் இந்த உண்மையை ராதிகாவிடம் சொல்லிவிட வேண்டுமென தக்க சமயம் பார்த்து காத்திருந்தான் கெளதம். அதற்குள் அவள் அண்ணன் மூலம் இப்படி விஷயம் வெளியாகுமென அவன் எதிர்பார்க்கவில்லை 

எது எப்படி ஆயினும், ராதிகா என்னவள், அதை யாராலும் மாற்ற இயலாது. அவள் இல்லாத வாழ்வும் இனி சாத்தியமில்லை, நடந்த அனைத்தையும் ஒளிவுமறைவின்றி கூறி, மீண்டும் அவள் மனதை வெல்வேன் என உறுதி பூண்டான் கெளதம் 

றுநாள், மருத்துவமனைக்கு வரும் வழியில் ராதிகாவுக்காக காத்திருந்தான் கெளதம் 

“ராதி…” என்ற அழைப்போடு அவளை எதிர்கொண்டவன், அவளின் அந்நிய பார்வையில் தன்னையும் அறியாது பின்னடைந்தான் 

சுதாரித்தவன், “ராதி ப்ளீஸ், உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என  வழிமறித்து நின்றான் 

“உங்ககிட்ட பேசவோ கேட்கவோ எனக்கு எதுவுமில்ல” என்றாள் அவன் பார்வையை தவிர்த்து 

“தூக்கு தண்டனை கைதிக்கு கூட அவன் பக்க நியாயத்தை சொல்ல கடைசியா ஒரு வாய்ப்பு கிடைக்கும், எனக்கு அது கூட இல்லையா ராதி?” என கெஞ்சலாய் பார்க்க

“தப்பு செஞ்ச எல்லாருமே அவங்க செஞ்ச தப்புக்கு நியாயம் கற்பிப்பாங்க, அதுக்காக செஞ்ச தப்பு இல்லைனு ஆய்டாது” என்றாள் தாட்சண்யமின்றி

“ராதி….” என கெளதம் சொல்ல வந்ததை காதில் வாங்காமல், அவன் தடையை மீறி விலகிச் சென்றாள் 

அவள் மனம் சற்று சமாதானமாகட்டும், சற்று விட்டு பிடிப்போம் என தீர்மானித்தான் கெளதம்

எடுத்த தீர்மானத்தை செயல்படுத்த முனைந்தவனாய், அடுத்து வந்த வாரம் முழுதும் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. பேச முயற்சிக்கவில்லையே ஒழிய, அவளை காணாமல் இருக்க அவனால் இயலவில்லை 

ஏதேனும் சாக்கிட்டு மாமா டாக்டர் சந்திரசேகரை காணும் சாக்கில், அவள் இடத்திற்கு சென்று நின்றான். அது ராதிகாவை மனஉளைச்சலில் தள்ளியது. அவனை மறக்கவும் இயலாமல் மன்னிக்கவும் இயலாமல் தவித்தாள்

அவன் தன்னிடம் உண்மை தெரிந்தும் மறைத்திருக்கிறான் என்பதை, அவளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எல்லாம் அவனே என சரணாகதியானவளுக்கு, அவன் செய்த நம்பிக்கை துரோகம், தீராத மனவேதனையை தந்தது 

இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க, தன் பெற்றோரும் அண்ணனும் இருக்கும் சொந்த ஊருக்கு திரும்பி சென்று விட்டால் என்ன என, சில நேரம் தோன்றவும் செய்தது.

ஆனால் அந்த முடிவு, அண்ணனின் நிம்மதியான குடும்ப வாழ்வை குலைக்கும் என அந்த எண்ணத்தை கைவிட்டாள் ராதிகா

இரவு முழுதும் தூங்க இயலாமல் வேதனையில் உழன்றவள், இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தாள். அது தான் எல்லா பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வு என தனக்குத் தானே கூறிக் கொண்டாள் 

அதன்படி, தான் அடுத்து செய்ய வேண்டியவற்றை யோசித்து, ஒவ்வொன்றாய் செயல்படுத்தினாள் ராதிகா 

நோயாளியை பரிசோதித்து கொண்டிருக்க, கௌதமின் மேஜையில் இருந்த லேண்ட்லைன் போனில் அழைப்பு வந்தது

பெரும்பாலும் எல்லோரும் கைப்பேசிக்கே அழைப்பதால், யாருக்கும் அதிகம் பகிரப்படாத தன் தனிப்பட்ட லேண்ட்லைன் எண்ணிற்கு யார் அழைக்கிறார்கள் என்ற யோசனையுடன் பார்க்க, அழைப்பு நின்றது 

சற்று நேரத்தில், மீண்டும் அழைப்பு வந்தது. ஏதேனும் அவசர அழைப்பாய் இருக்குமோ என்ற யோசனையில், “எக்ஸ்கியூஸ் மீ” என பரிசோதனைக்கு வந்தவரிடம் கூறிவிட்டு, உடனே அழைப்பை எடுத்தான் கெளதம் 

“ஹலோ டாக்டர் கெளதம் ஹியர்” என்றவனின் குரலுக்கு, பதில் ஏதும் இருக்கவில்லை 

“டாக்டர் கெளதம் பேசறேன், நீங்க?” என்றான் மீண்டும். அதற்கும் பதில் இருக்கவில்லை.

பேசியை அதன் தாங்கியில் வைத்தவன், “மொதல்ல இந்த நம்பருக்கு காலர் ஐடி டிவைஸ் வெக்கச் சொல்லணும்” என நினைத்துக் கொண்டான் 

பரிசோதனைக்கு வந்தவர் வெளியேற, சற்று முன் வந்த அழைப்பு, கௌதமின் மனதில் ஏனோ உறுத்திக் கொண்டே இருந்தது 

யாருக்கெல்லாம் தன் தனிப்பட்ட எண் தெரியும் என யோசித்தவன், சட்டென உள்ளுணர்வு உந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினான் 

தாழிட மறந்த முன் கதவு திடீரென திறக்கப்பட்டதில், திகைப்புடன் எழுந்து நின்றாள் ராதிகா

அதுவும், அங்கு தவிப்புடன் நின்ற கௌதமைக் கண்டதும், இமைக்கவும் மறந்து பார்த்த வண்ணமே இருந்தாள்

அவளின் அந்த பார்வையில் நெகிழ்ந்தவன், “ராதி…” என அருகே வர, அப்போது தான் சுயநினைவு வந்தவள் போல் பார்வையை விலக்கி, விலகி நின்றாள் 

அவளின் அந்த விலகல் மனதை வருத்திய போதும், மௌனமாய் நின்றவன், “கொஞ்ச நேரம் முன்னாடி என்னோட பிரைவேட் நம்பருக்கு கால் செஞ்சியா ராதி?” எனவும், ராதிகாவின் முகம் வெளுத்தது

“இ…இல்ல, நான் ஒண்ணும் கால் பண்ணல” என்றவளின் தடுமாற்றத்தில் இருந்தே, அவள் தான் அழைத்தாள் என்பது அவனுக்கு நிரூபணமானது

“எதுக்கு ராதி கூப்ட்ட?” என வினவினான், அவள் சொன்னதே காதில் விழாதது போல் 

“நான் தான் கூப்பிடலைனு சொல்றேன்ல” என கிட்டத்தட்ட கத்தினாள்

அவளின் குரல் மற்றும் முகவெளுப்பில் இருந்து, அவள் பதட்டமாய் இருக்கிறாள் என்பதை  உணர்ந்தான் கெளதம். ஏதோ சரியில்லையென அவன் உள்ளுணர்வு கூறியது 

அதே நேரம், அவள் கையில் ஏதோ காகிதம் இருப்பது கௌதமின் கண்ணில் பட, அதை அவளிடமிருந்து வாங்க முயன்றான்

எங்கிருந்து தான் ராதிகாவிற்கு அத்தனை பலம் வந்ததோ, அந்த காகிதத்தை எடுக்க விடாமல் கௌதமை தள்ளினாள்

எதிர்பாராத அந்த தாக்குதலில் சற்று தடுமாறியவன், சமாளித்து நின்ற நொடி, அவள் கையில் இருந்த காகிதத்தை பறித்தான் 

“நோ கெளதம், அதக் குடுங்க” என உயிர்நாடியை பறித்தது போல் ராதிகா கத்த, அவளின் இரு கைகளையும் தன் ஒருகையால் அழுத்திப் பற்றியவன், மறுகையில் காகிதத்தை பிரித்து வாசித்தான் 

வாசித்தவன், அதிர்ச்சியில் நிலை குலைந்தான். உணர்ச்சி மிகுதியில் பேச நா எழாமல் ஒரு கணம் தடுமாறியவன், பின் சமாளித்து “என்ன பைத்தியக்காரத்தனம் இது?” என கத்தினான் 

“ஆமா, நான் சாகத் தான் போறேன். என் உயிர் என் இஷ்டம், அதை கேக்க நீங்க யாரு?” என்றவள் முடிக்கும் முன்னே, கௌதமின் ஐந்து விரலும் ராதிகாவின் கன்னத்தில் பதிந்திருந்தது

கன்னத்தில் விழுந்த அடியில், அதிர்ந்து நின்றாள் ராதிகா. அவளின் அதிர்வு கூட கௌதமை பாதிக்கவில்லை, அவள் செய்யவிருந்த காரியத்தின் அதிர்ச்சியில் இருந்து அவன் இன்னும் மீண்டிருக்கவில்லை    

“ஒவ்வொரு நாளும் ஒரு ஒரு உயிரையும் காப்பாத்த நாங்க என்ன பாடுபடறோம்னு கண்கூடா பாத்துட்டு தான இருக்க, அப்படியுமா உனக்கு உயிரோட மதிப்பு தெரியல?” என்றவனின் குரலில், கோபத்தை விட ஆதங்கமே மேலோங்கி இருந்தது

பதில் எதுவும் கூறாமல், கன்னத்தில் கைகளை தாங்கி நின்றாள் ராதிகா

சாகத் துணிந்துவிட்டாளே என்ற அந்த நிமிட கோபத்தில் அடித்தவன், வலி பொறுக்காமல் அவள் கன்னத்தில் கை தாங்கி நின்ற காட்சியில் மனம் வருந்தினான் 

“சாரி ராதி… கோபத்துல அடிச்சுட்டேன், ஏண்டா இப்படி ஒரு முடிவுக்கு வந்த?” என வேதனையுடன் வினவினான் 

“தினம் தினம் உங்க சித்ரவதைல கொஞ்ச கொஞ்சமா சாகறத விட, ஒரேடியா போறது மேல்” என்றாள் தீர்மானமான குரலில்

அவளின் அந்த குற்றச்சாட்டு, ஏற்கனவே குற்றஉணர்வில் இருந்த கௌதமை, இன்னும் வேதனையில் ஆழ்த்தியது 

“எ…என்ன? நான் என்ன ராதி… நான் தான் இந்த ஒரு வாரமா உன்கிட்ட பேச கூட முயற்சி பண்ணலியே” என்றான் 

“உங்கள பாக்கறதே எனக்கு சித்ரவதையா இருக்கு. எல்லாம் முடிஞ்சு போச்சுனு மனசை சமாதானம் பண்ணிக்கிட்டு வாழ்ந்துட்டு இருந்தவள, தேடி வந்து ஏன் இப்படி பண்ணீங்க? வாழணுங்கற ஆசைய மனசுல விதைச்சுட்டு, இப்படி சாகற முடிவுக்கு தள்ளிட்டீங்களே. இப்படி ஏமாந்துட்டமேனு என் மேலயே எனக்கு வெறுப்பா இருக்கு

மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம தினம் தினம் செத்துகிட்டு இருக்கேன். இத்தனை பட்டும் இந்த மனசு அடங்கலயே, கடைசியா ஒருவாட்டி உங்க குரல கேக்கணும்னு தான் போன் பண்ணித் தொலைச்சேன், இல்லைனா இப்ப உங்க இடையூறு இல்லாம நிம்மதியா போய் சேந்துருப்பேன். ஏன் என்னை இப்படி வாழவும் விடாம சாகவும் விடாம சித்ரவதை பண்றீங்க? கடவுளே, என்னால முடியலயே…” என்றவளின் கதறல், கௌதமை உயிரோடே கொன்றது

நெஞ்சோடு அணைத்து அவளின் கண்ணீர் துடைக்க துடித்த மனதை, ‘இப்போது அது சரியான தீர்வல்ல’ என கட்டுப்படுத்தி நின்றான் கெளதம்

தான் சற்று தாமதமாய் வந்திருந்தாலும் என்ன நடந்திருக்கும் என்ற நினைவில், கௌதமின் நெஞ்சம் பதறியது. தன்னை இங்கு வர செலுத்திய உள்ளுணர்வுக்கு நன்றி கூறினான்

“எந்த பிரச்சனைக்கும் சாவு தீர்வில்ல ராதி” என புரியவைக்க முயன்றான் 

“என்னோட பிரச்சனைக்கு இதான் தீர்வு” என்றாள் உறுதியாய் 

“உன்னால என்னை மன்னிக்கவே முடியாதா ராதிம்மா?” என கடைசி முயற்சியாய் கேட்டான்

அவனின் உணர்ச்சி ததும்பிய குரலில், தன் மனம் அவன் பக்கம் சாய்வதை உணர்ந்தவள், தன் நிலையற்ற மனதை சாடினாள். 

‘தான் உயிரோடிருக்கும் வரை இந்த சித்ரவதை தொடரும், எனவே தான் எடுத்த முடிவே சரி’ என மேலும் உறுதியானாள் ராதிகா

“எல்லாத்தையும் மறக்கணும் மன்னிக்கனும்னு தான் நானும் நினைக்கறேன், ஆனா என்னால முடியல. பெத்தவங்க பாத்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டினப்ப என் மனசுல எந்த எதிர்பார்ப்பும் இல்ல. அவரோட முகம் கூட மனசுல பதியறதுக்கு முன்னாடியே, அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்தப்ப, அதிர்ச்சியா இருந்ததே தவிர, இப்படி ரணமா கொல்லல. ஆனா…” என பேச இயலாமல் மூச்சடைக்க அழுகையை விழுங்கியவள் 

“ஆனா… முதல் முதலா என் மனசுல வந்த காதல் இப்படி ஒரு வேதனைய குடுக்கும்னு நான் நினைக்கலயே…” என சுயபச்சாதாபத்தில் ஒரு கணம் கரைந்தவள்

“உங்களை காதலிச்ச என்னையே இப்ப நான் வெறுக்கறேன். எனக்கு நீங்க எதாச்சும் நல்லது செய்யணும்னு நெனச்சா, தயவு செஞ்சு இங்கிருந்து போய்டுங்க” என்றாள் முடிவாய்    

காதலை மறுத்தால் போராடி பெறலாம், ஆனால் தன் மேல் அவள் கொண்ட காதலே இந்த முடிவுக்கு காரணம் என்பவளை, என்ன சொல்லி தேற்றுவது என புரியாமல் நின்றான் கெளதம்  

மனம் எத்தனை ரணப்பட்டிருந்தால், இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பாள் என்பதை கௌதமால் உணர முடிந்தது.  தன்னை முழுதாய் நம்பி மனதை கொடுத்தவளை, சாகும் நிலைக்கு தள்ளிய தன் மீதே கௌதமிற்கு கோபம் வந்தது

இனி தான் என்ன விளக்கம் அளித்தாலும், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதை உணர்ந்தவன், ஒரு முடிவுக்கு வந்தான் 

“நான் உன் கண் முன்னாடி இருக்கறது தான உனக்கு பிரச்சனை, நான் போய்டறேன் ராதி. இந்த ஊரை விட்டே நான் போய்டறேன். ஒரே ஒரு வாரம் எனக்கு டைம் குடு. அதுவும் நான் எனக்காக கேக்கல, ஹாஸ்பிடல்ல சில மாற்று ஏற்பாடுகள் செய்யணும், அதுக்குத் தான்

அப்புறம் நான் உன் கண் முன்னாடி வர மாட்டேன். இனி எப்பவும் எந்த வகைலயும் உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன் ராதி, இது ப்ராமிஸ்” மனதை கல்லாக்கிக் கொண்டு, அவள் நன்மைக்காய் தான் எடுத்த முடிவை கூறினான் கெளதம் 

நம்ப இயலாமல் அவனைப் பார்த்தாள் ராதிகா. இந்த மருத்துவமனை அவன் வாழ்வில் எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்தவளுக்கு, அவன் கூறியதை நம்ப இயலவில்லை 

அதை உணர்ந்தவன் போல், “இந்த சூழ்நிலைல என்னை நம்பறது உனக்கு கஷ்டமா தான் இருக்கும்னு புரியுது. ஆனா நிச்சயம் நான் சொன்னதை செய்வேன் ராதி, இனி உன் கண் முன்னாடி நான் வரவே மாட்டேன்” என்றான் உறுதியான குரலில்

ஆனால் அதை சொன்ன போது, தன் நெஞ்சுக்குள் யாரோ கத்தியை சொருகியது போன்ற வலியை உணர்ந்தான் கெளதம் 

தனக்கு வேண்டியதும் அது தான் என்ற போதும், ‘இனி உன் முன் வர மாட்டேன்’ என அவன் வாயால் சொல்லக் கேட்டதை, அவளால் தாங்க இயலவில்லை  

மௌனமாய் நின்றவள் முன் தன் கையை நீட்டியவன், “அதுக்கு பதிலா நீ எனக்கொரு ப்ராமிஸ் பண்ணித் தரணும். இனி எப்பவும் இப்படி ஒரு தப்பான முடிவுக்கு போக மாட்டேன்னு, உன் அம்மா அப்பா மேல ப்ராமிஸ் பண்ணனும்” என அவள் பதிலுக்கு காத்து நின்றான் 

அசையாமல் கண்ணில் நீருடன் நின்றவளை காண சித்ரவதையாய் இருந்த போதும், “ப்ராமிஸ் பண்ணு ராதி” என்றான் கண்டிப்பான குரலில்  

பெருமூச்சுடன் தன் கையை அவன் கை மீது வைத்தாள் ராதிகா.

இதுவே அவளின் கடைசி ஸ்பரிசம் என மனதில் உரைக்க, கையை விலக்க மனமின்றி இருவரின் இணைந்த கரங்களையே பார்த்து நின்றான் கெளதம்

அக்னியை வலம் வந்து, கைத்தலம் பற்ற கண்ட கனாவின் நினைவில், கண்ணில் நீர் நிறைந்தது கௌதமிற்கு. அவள் அறியாவண்ணம் அதை உள்ளிழுத்தான் 

அவன் கையில் பாந்தமாய் பதிந்திருந்த தன் கையை பார்த்து கொண்டிருந்த அவளுக்கும் அதுவே தோன்றியதோ என்னவோ, சட்டென விலகியவள், சரிந்து அமர்ந்து தன் கைகளால் முகம் பொத்தி அழுகையில் கரைந்தாள் 

தான் உயிராய் நேசிப்பவள் கண் முன்னே கதறிக் கொண்டிருக்க, எதுவும் செய்ய இயலாத கையறு நிலையை விட, பெரிய கொடுமை வேறேதும் இல்லை என மனம் நொந்தான் கெளதம்

இதற்கு மேல் இங்கிருந்தால் தன்னால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது என நினைத்தவன், வெளியேற எண்ணி எழுந்தான்.

கடிதத்தில் ‘தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலை செய்யப் போவதாய்’ அவள் எழுதி இருந்தது நினைவு வர, முன்னறையில் அதை தேடி சலித்தவன், ராதிகாவின் படுக்கை அறைக்குள் சென்றான் 

ஒருவழியாய் அவள் அறையின் மேஜை இழுப்பறையில் இருந்த தூக்க மாத்திரை பாட்டிலை கண்டுபிடித்தவன், அதை எடுத்து சிங்கில் கொட்டி குழாயை திறந்து நீரோடு வெளியேற்றினான் 

கௌதம் திரும்ப முன்னறைக்கு வந்த போது, அவன் உள்ளே சென்ற போது இருந்த அதே நிலையிலேயே இருந்தாள் ராதிகா

சில நாட்கள் முன், இதே இடத்தில், தன் அணைப்பில் உலகை மறந்து அவள் உருகி நின்ற காட்சி நினைவுக்கு வர, ‘அந்த சுகம் இனி ஒரு கணமேனும் கிடைக்காதா?’ என கௌதமின் மனம் ஏங்கியது

இனி தன் வாழ்வில் என்றும் அதற்கு வாய்பில்லை என்ற நிதர்சனம் முகத்தில் அறைய, அவளை விட்டு பார்வையை அகற்ற இயலாமல் நின்றான் 

முகம் பொத்தி இருந்த அவளின் கையை விலக்கி, இறுதியாய் ஒரு முறை அவள் முகம் பார்க்க துடித்த மனதை கட்டுப்படுத்தியவன், கடைசியாய் அவளிடம் விடைபெறும் தைரியம் கூட இன்றி வெளியேறினான் கெளதம்

#ad இந்த தொடர்கதையை எழுதி வரும் எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்…மார்ச் 16, 2021)

Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே❤ (பகுதி 17) – எழுதியவர்: சஹானா கோவிந்த்
  1. அழ வைச்சுட்டீங்களே! நல்ல அருமையான சரளமான நடை! பிச்சு உதறுகிறீங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: