www.sahanamag.com
தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே ❤ (அத்தியாயம் 16) – எழுதியவர் : சஹானா கோவிந்த்

அத்தியாயம் 15 வாசிக்க (Previous Episode)

ன்ன சொல்லி ராதிகாவுக்கு புரிய வெக்கறது, என்ன சொன்னாலும் நடந்தது இல்லைனு ஆகிடாதே. கடவுளே, என்ன செய்ய போறேன் நான். அவ இல்லாத வாழ்க்கைய என்னால கற்பனை கூட பண்ண முடியலியே’ என வேதனையில் உழன்று கொண்டிருந்த கெளதம், வீட்டின் அழைப்பு மணி சத்தத்தில் விதிர்த்து எழுந்தான் 

சுவாரஷ்யமின்றி கதவைத் திறந்தவன், அங்கு ராதிகாவை கண்டதும் நெகிழ்ந்தான்

“ராதி… உள்ள வா…” என உற்சாகமாய் அழைத்தான் 

அவனை காணக் கூட விருப்பமற்றவளாய், இறுகிய முகத்துடன் எங்கோ பார்வையை பதித்தபடி உள்ளே நுழைந்தாள் ராதிகா

‘இப்படி ஒரு நிலையிலா முதல் முறை அவள் தன் வீட்டுக்கு வர வேண்டும்’ என வருந்தினான் கெளதம் 

பலமுறை வீட்டிற்கு அழைத்த போதும், மறுத்து விட்டாள் ராதிகா. கௌதமின் மனைவியாய் மட்டுமே அங்கு கால் பதிப்பேன் என பிடிவாதம் காட்டினாள்

‘உரிமையாய் அவள் வீட்டிற்குள் வரும் நாளை பற்றி எத்தனை கற்பனை செய்திருப்போம்’ என வேதனையில் உழன்றான் கெளதம் 

அதே எண்ணங்கள் அவள் மனத்திலும் ஓடியதோ என்னவோ, மேலும் இறுகிப் போனாள்.

அவள் முகத்தை கண்டே, அவளின் சோர்வை உணர்ந்தவனாய், விரைந்து உள்ளே சென்று பழரசத்துடன் வந்தான் 

“ஜூஸ் எடுத்துக்கோ ராதி” என்றவனை தீர்க்கமாய் பார்த்தவள் 

“அதுல கொஞ்சம் விஷம் கலந்து குடுத்துட்டா, நிம்மதியா போய் சேந்துடுவேன்” என்றவள் முடிக்கும் முன்

“ராதி…” என பதறியபடி  அவளை நோக்கி எழுந்தவனை கை நீட்டி தடுத்தவள் 

“உங்க நிழல் என் மேல பட்டா கூட, என்னை உயிரோட பாக்க முடியாது” என்றாள் கோபமாய் 

அவளின் வார்த்தைகளில் தாக்கப்பட்டவனாய், அசைய முடியாமல் கால்கள் வேரூன்ற நின்றான் கெளதம்

தன் ஒன்றை பார்வைக்கே உருகி நிற்பவள், இன்று நிழல்பட்டாலும் உயிர் விடுவேன் என்றது, அவன் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்த்தது

‘அவள் தற்போது இருக்கும் மனநிலையில், தான் என்ன சமாதான வார்த்தைகள் பேசினாலும், அது தனக்கு எதிராகவே முடியும்’ என உணர்ந்தவன் போல், மௌனமாய் அவளுக்கு எதிரே இருந்த சோபாவில் மௌனமாய் அமர்ந்தான் கெளதம்

“முன்னாடியே நான் யாருங்கற விஷயம் உங்களுக்கு தெரியும், இல்லையா?” என ராதிகா நேரடியாய் கேட்க  

“ராதி… அது… நான் சொல்றத கொஞ்சம்…” என்றவனை  இடைமறித்தவள் 

“எனக்கு தேவையான பதில், தெரியுமா? தெரியாதா? அவ்ளோ தான்” என்றாள், வேறு எதைப் பற்றியும் தனக்கு அக்கறை இல்லை என பறைசாற்றுவது போல் 

தன் பக்க நியாயத்தை கேட்கும் மனநிலையில் அவள் தற்போது இல்லை என உணர்ந்தவனாய்,”தெரியும் ராதி, ஆனா…” என்றவனை மேலே பேச விடாமல் எழுந்தவள் 

“எந்த விளக்கமும் எனக்கு தேவையில்ல. இனி எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல” என உணர்ச்சி துடைத்த குரலில் ஆரம்பித்தவள், தன்னை மீறிய வேதனையில் விசும்ப

அதற்கு மேல் ஒதுங்கி நிற்க இயலாமல், ஒரே எட்டில் அவளை அணுகியவன், “ராதிம்மா…” என அவள் திமிறலையும் பொருட்படுத்தாது அணைத்து ஆறுதல்படுத்த முயன்றான் 

அவனின் அணைப்பு அவளை ஆறுதல்படுத்தவில்லை, மாறாக இன்னும் ரணத்தை கிளறியது

‘தன்னை விட அவனை நம்பினேனே, என் நம்பிக்கையை இப்படி பொய்க்கச் செய்து விட்டு, ஓர் அணைப்பில் எல்லாவற்றையும் சரி செய்து விடலாமென நினைக்கறானா?’ என்ற கோபத்தில், தன்னை அணைத்திருந்தவனை நெட்டி தள்ளினாள் ராதிகா  

அணைப்பை விட்ட போதும், அவள் கையை விடாமல் பற்றியவன், “எனக்கு ஒரே ஒரு சான்ஸ் குடு ராதி. இப்படி நீ வேதனைப்படறது என்னால தாங்க முடியல, அதுக்காகவாச்சும் நான் சொல்றத கேளு” என கெஞ்சினான் 

“இதென்ன அடுத்த பிளானா? இந்த பிளான் எப்ப போட்டீங்க? எங்க அண்ணன் உங்களை காட்டி குடுத்துக்கு அப்புறமா, இல்ல முன்னாடியே யோசிச்சு வெச்சுட்டீங்களா?” என அழுகையை கட்டுப்படுத்தி, மீண்டும் இறுகி நின்றாள் 

“ராதி, நான் சொல்றத முழுசா கேளு” என்றது காதில் விழாதவள் போல் 

“குட் பை மிஸ்டர் கெளதம்” என அவனுக்கு விளக்கமளிக்க வாய்ப்பே அளிக்காமல், விரைந்து வெளியேறினாள் ராதிகா

அவளோடு சேர்ந்து தன் சந்தோஷம் மொத்தமும் விடைபெறுவதை உணர்ந்தும், இந்த நிலையில் என்ன பேசினாலும் அவளை மேலும் காயப்படுத்தும் என பயந்தவனாய், தொடராமல் நின்றான் கெளதம் 

கௌதமின் மனம், மூன்றாண்டுகள் பின்னோக்கிப் பயணித்தது….

தங்கை சுஜிதாவின் திருமணம் அடுத்த மூன்று நாளில் என்ற நிலையில், ஒரு கணம் கூட நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தான் கௌதம் 

ஒரே செல்லத் தங்கையின் திருமணம், அதுவும் அவள் மனம் விரும்பிய அருணுடன் என்பதில், மகிழ்வுடன் ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தான்

அந்த நேரத்தில், அவன் கைப்பேசியில் இடியாய் ஒரு செய்தி வந்தது. பெற்றோரிடம் கூட பகிராமல், சம்பவ இடத்திற்கு விரைந்தான் கெளதம்

தன்னைக் கண்டதும், “அண்ணா…” என்ற அலறலுடன் தன் மார்பில் ஒண்டிய தங்கையை ஆறுதல்படுத்தியவன்

“பயப்படாத சுஜிம்மா, அண்ணா வந்துட்டேன்ல, நான் பாத்துக்கறேன்” என சமாதானம் செய்தான் 

அவளை விலகி நிற்கச் செய்தவன், சுஜிதாவின் காரில் மோதி ரத்த வெள்ளத்தில் கிடந்தவனை பரிசோதித்தான்.

பரிசோதனையில், அந்த ஆணின் உடலில் உயிர் இல்லை என்பதை உணர்ந்தான் கெளதம்

அதோடு, அவனிடமிருந்து வந்த மது வாடையில், நிதானமின்றி அவன் பைக் ஒட்டி வந்ததற்கான காரணமும் புரிந்தது

ஹெல்மெட் அணிந்திருந்தால் கூட உயிர் பிழைக்க வாய்ப்பிருந்திருக்கும், இப்படி அநியாயமாய் செத்து விட்டானே என ஒரு டாக்டராய் வருந்தினான் 

அடுத்த கணமே ஒரு அண்ணனாய், தங்கையை காப்பாற்றும் கடமை தலைதூக்க, சூழ்நிலையை ஆராய்ந்தான்

நல்ல வேளையாய் அதிகம் நடமாட்டம் இல்லாத சாலை என்பதால், சுஜிதா வண்டி ஓட்டி வந்ததை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை என நிம்மதியானான்

வீட்டிலிருந்து வரும் வழியில் யோசித்தது போல், தானே காரோட்டி வந்ததாய் போலீசிடம் கூற வேண்டுமென முடிவு செய்தான் கெளதம்

“அண்ணா என்னாச்சுண்ணா? பொழச்சுடுவார் தான?  அண்ணா, என் மேல தப்பில்லண்ணா, பைக் தான் ராங் சைட்ல வந்தது” என அழுகையுடன் சொன்ன தங்கையை தேற்றினான் 

சுஜிதாவின் உடல் இன்னும் நடுங்கி கொண்டிருக்க, அவள் இங்கு இருப்பது நல்லதல்ல என உணர்ந்தவனாய், “சுஜி, நான் வந்த கார எடுத்துட்டு நீ வீட்டுக்கு போ. அம்மா அப்பாகிட்ட எதுவும் சொல்லாத. வண்டி பஞ்சர் ஆயிடுச்சு, அண்ணா எடுத்துட்டு வருவான்னு மட்டும் சொல்லு போதும்” எனவும் 

“ஐயோ அண்ணா, உன்னை தனியா விட்டுட்டு எப்படி?” என சுஜிதா தயங்கி நிற்க 

“சுஜி சொன்னா கேளு, போலீஸ் வர்றப்ப நீ இங்க இருக்கறது நல்லதில்ல. இன்னும் மூணு நாளுல கல்யாணத்த வெச்சுட்டு ரிஸ்க் எடுக்க முடியாது. இப்ப கிளம்பப் போறியா இல்லையா?” என கெளதம் சற்று அதட்டலாய் கூற, சுஜிதாவின் கண்ணில் நீர் வழிந்தது 

அதே நேரம், “என்னாச்சு சுஜி?” என பதட்டத்துடன் அருண் வர, மனம் கவர்ந்தவனை கண்டதில் சுஜிதாவின் அழுகை இன்னும் பெரிதானது. அண்ணனுக்கு அழைத்த கையோடு, அருணுக்கும் அழைத்து விவரத்தை கூறியிருந்தாள் சுஜிதா 

“அருண்… இப்ப விளக்கமா சொல்ல நேரமில்ல. சுஜி என் கார் ஒட்டட்டும், நீங்க வீடு வரைக்கும் உங்க கார்ல அவ பின்னாடியே போங்க. வீட்ல இப்போதைக்கு வண்டி பங்ச்சர்னு மட்டும் சொல்லுங்க, நான் வந்து பேசிக்கறேன்” என கெளதம் கூற  

“ஓகே கெளதம், நான் சுஜியை வீட்ல விட்டுட்டு திரும்பி வரேன்” என்றவனை தடுத்த கெளதம்

“வேண்டாம் அருண், கல்யாண சமயத்துல நீங்க போலீஸ் கேஸ்னு சுத்தறது வம்பாயிடும். வரும் போதே, என் பிரெண்ட் லாயர் கணேஷுக்கு கால் பண்ணிட்டேன். அவன்கிட்ட கூட, நான் தான் வண்டி ஓட்டிட்டு வந்தேன்னு சொல்லியிருக்கேன், நீங்களும் அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க. கணேஷோட கசின் யாரோ போலீஸ்ல இருக்காங்களாம், பாத்துக்கறேன்னு சொல்லியிருக்கான். எந்த நேரமும் போலீஸ் வந்துடும், நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க” என விரட்டி, அவர்களை கிளம்பச் செய்தான் கெளதம் 

வேறு வழியின்றி இருவரும் கிளம்ப, சற்று நேரத்தில் போலீஸ், ஆம்புலன்ஸ், பொதுமக்கள் கூட்டம் என, அந்த இடம் பரபரப்பானது

“இன்ஸ்பெக்டர் சார்… நான் டாக்டர் கெளதம்” என இன்ஸ்பெக்டரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான் கெளதம் 

“என்ன சார் ஆச்சு? பாத்து வர்றதில்லயா” என போலீசுக்கே உரிய அதட்டலுடன் ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர் 

“நான் நார்மல் ஸ்பீட்ல தான் சார் வந்துட்டு இருந்தேன், அவர் ராங் சைட்ல வந்தார். அதோட குடிச்சுருப்பார் போலருக்கு, போர்ஸா வந்து மோதிட்டார். ஹெல்மெட்டும் போடல, இல்லேன்னா இவ்ளோ மோசமா அடிபட்டிருக்காது” என கெளதம் கூற 

“ம்… ஆமா, பாடிய லிப்ட் பண்ணும் போதே ஸ்மெல் வந்தது, குடிச்சுருக்கான். ஹெல்மெட் போடுன்னா எவன் கேக்கறான், என்னமோ எங்களுக்காக செய்யற மாதிரி சலிச்சுக்கறாங்க” என புகார் வாசித்தவர்

“சரி நான் முன்னாடி போறேன், நீங்க உங்க கார்ல ஜி.ஹெச்’க்கு வாங்க, ஸ்டேட்மெண்ட் குடுக்க வேண்டியிருக்கும்” கூறிச் சென்றார் இன்ஸ்பெக்டர்

கெளதம் ஜி.ஹெச் சென்ற போது, அங்கு இறந்தவனின் உறவினர் / பொதுமக்கள் என, பெரும் கூட்டமே கூடி இருந்தது

“கல்யாணமாகி, உன் பொஞ்சாதி தாலி மஞ்சள் கூட காயலியே, அவள இப்படி அம்போனு உட்டுட்டு போய்ட்டியேடா. அந்த புள்ள விஷயம் கேட்டதுமே மயங்கி விழுந்துட்டாளே” என நடுத்தர வயது பெண் ஒருவர் பெருங்குரல் எடுத்து அழ, கௌதமின் மனம் அந்த புது மணப்பெண்ணிற்காய் மிகவும் வருந்தியது 

‘புதிதாய் திருமணமானவன், தன்னை நம்பி வந்த பெண்ணை பற்றி கூட நினையாமல், இப்படியா பொறுப்பின்றி குடித்துவிட்டு வண்டி ஓட்டுவான்’ என இறந்தவன் மேல் கோபம் வந்தது

அதற்குள் அங்கிருந்த கான்ஸ்டபிள் மூலம் கெளதம் காரில் தான் விபத்து நேர்ந்தது என்பதை அறிந்த உறவினர்கள், கௌதமை முற்றுகையிட்டனர் 

“படுபாவி, என் தங்கச்சி வாழ்க்கையை சீரழிச்சுட்டியேடா” என கௌதமை அடிக்க வந்தார் ஒருவர் 

“இங்க பாருங்க, என்மேலே எந்த தப்பும் இல்ல. அவர் தான் குடிச்சுட்டு ராங் சைட்ல வந்தார்” என கெளதம் தன்னிலை விளக்கம் தர 

“ஐயோ என் தம்பி மேல அநியாயமா பழி போடறானே, அவனுக்கு குடிப் பழக்கமே இல்ல”  என அழுகையினூடே கூறினார் ஒரு பெண்மணி 

“அப்ப நாங்க பொய் சொல்றமா? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல எல்லாம் தெரிஞ்சுடும்” என்றார் இன்ஸ்பெக்டர் 

“ரிப்போர்ட் என்ன சார் பெரிய ரிப்போர்ட், இவனைப் பாத்தாலே காசு இருக்கறவன்னு தெரியுது. காச வாங்கிட்டு இவனுக்கு சாதகமா தான ரிப்போர்ட் எழுதுவாங்க” என குற்றம் சாட்ட 

“தேவையில்லாம பேசினா புடிச்சு உள்ள போட்ருவேன் ஜாக்கிரதை” என அவரை அடிக்கப் போனார்இன்ஸ்பெக்டர்

அவரை தடுத்த கெளதம், “ஒரு அண்ணனா அவரோட ஆதங்கத்துல பேசறார், பெருசு பண்ண வேண்டாம் சார்” என சமாதானம் செய்தான்

‘தானும் இன்று ஒரு அண்ணனாய் தங்கையின் வாழ்வு பாதிக்க கூடாதென்று தானே, பொய்யாய் பழி ஏற்று நிற்கிறேன்’ என மனம் உறுத்தியது 

“நல்லவன் மாதிரி பேசி தப்பிக்கலாம்னு நினைக்கறியா?” என மீண்டும் கெளதம் மேல் பாய்ந்தார் அந்த பெண்ணின் அண்ணன்.

உறவினர்கள் அவரை சமாதானம் செய்து, அங்கிருந்து அழைத்துச் சென்றனர் 

‘தன் தங்கை சுஜியின் மீது தவறு இருந்திருந்தால் நிச்சயம் அந்த பழியை அவளுக்கு பதிலாய் நான் ஏற்றிருப்பேன், தவறு பைக் ஒட்டிய அந்த நபர் மீது எனும் போது என்ன செய்ய இயலும்’ என நினைத்தான் கெளதம்.

இருந்த போதும், பாதிக்கப்பட்ட அந்த முகம் தெரியா பெண்ணின் நிலையை எண்ணி வருந்தினான்

கடைசியாய் அந்த பெண்ணின் அண்ணன் சொன்னது இன்றும் கௌதமின் காதில் ஒலித்தது, “இன்னைக்கி வேணா உன் பண பலத்துல அதிகார பலத்துல நீ தப்பிச்சர்லாம், ஆனா என்னைக்காச்சும் ஒரு நாள், இதுக்கான தண்டனைய நீ அனுபவிப்ப” என்றார்

 

#ad இந்த தொடர்கதையை எழுதி வரும் எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்…மார்ச் 1, 2021)

Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே ❤ (அத்தியாயம் 16) – எழுதியவர் : சஹானா கோவிந்த்
  1. சஸ்பென்ஸ் தெரிஞ்சாலும் கதையின் முடிவு இன்னமும் சஸ்பென்ஸ் தான். அடுத்த பதிவுக்குக்காத்திருக்கேன். தேர்ந்த எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறீங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: