தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே ❤ (அத்தியாயம் 15) – சஹானா கோவிந்த்

“இன்னும் ஒரு இட்லி போடவா’ண்ணா” என ராதிகா கேட்க

“போதும் ராதிம்மா, மொதலே நிறைய பொங்கல் வெச்சுட்ட” என்றவர்,  “நான் என்ன கெஸ்ட்டா? ஒரு ஐட்டம் செஞ்சா போதாதா?” என புன்னகைத்தார் ராதிகாவின் அண்ணன் பிரபு 

“கெஸ்ட் மாதிரி எப்பவோ ஒரு நாள் தான நீ வர்ற, அப்போ கெஸ்ட் மாதிரி தான ட்ரீட் பண்ணனும்” என கேலியுடன் புன்னகைத்த தங்கையை, மகிழ்வுடன் பார்த்தார் பிரபு 

தங்கையிடம் ஏதோ மாற்றம் தெரிவதை பிரபுவால் உணர முடிந்தது. முன் போல் மற்றவர்களுக்கான பாவனை சிரிப்பாய் அல்லாமல், அவளின் உள்ளார்ந்த மகிழ்வுடனான சிரிப்பை ரசித்தார்

காரணம் எதுவாக இருப்பினும், தங்கையின் மாற்றம் மனம் நிறையச் செய்ய, மகிழ்வாய் உணர்ந்தார்

“அண்ணியையும் பாப்பாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே’ண்ணா” 

“எங்கடா… பாப்பாவுக்கு ரெண்டு நாளா சளி புடிச்சுட்டு ஒரே ரகள. அதோட…” என தயக்கமாய் பிரபு நிறுத்த      

“என்ன’ண்ணா?” பெற்றவர்களுக்கு உடல்நிலை சரியில்லயோ என பதட்டமாய் வினவினாள் 

“அது… உங்கண்ணி மறுபடி…” என்றவனின் சங்கோஜ பாவனையில் விஷயத்தை யூகித்தவளாய்

 “குட்நியூஸா அண்ணா?” என சந்தோசமாய் கேட்டாள் ராதிகா

“ஆமா ராதிம்மா” என்ற அண்ணனின் வெட்க புன்னகையில் தானும் சிரித்தவள்

“வாவ், சூப்பர்’ண்ணா. மொதலே சொல்லியிருந்தா எதுனா ஸ்வீட் பண்ணி இருப்பனே” என்றாள் அதீத மகிழ்வுடன் 

“சந்தோசமான விஷயம் தான், ஆனா நீ இப்படி தனியா நிக்கறப்ப எந்த சந்தோஷத்தையும் என்னால முழுசா அனுபவிக்க முடியல ராதி” என கண்ணில் நீர் திரையிட கூறிய அண்ணனின் பாசத்தில் மனம் நெகிழ நின்றாள் ராதிகா

“அண்ணா ப்ளீஸ்… கொண்டாட வேண்டிய நேரத்துல இதென்ன கண் கலங்கிட்டு. என் லைப் இப்படியே இருந்துடாதுண்ணா, நீ டென்ஷன் ஆகாத” என சமாதானம் செய்தாள் 

தங்கை சொன்ன பதிலில் ஏதோ செய்தி இருப்பதை உணர்ந்த போதும், அவளே சொல்லட்டும் என மௌனமானார் பிரபு.

ஏதேனும் தவறாய் கேட்டு, அவளின் மனம் புண்பட செய்திடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தார் பிரபு

அண்ணாவின் நிம்மதிக்காகவேனும், விரைவில் கௌதமுடன் வாழ்வில் இணைத்திட வேண்டுமென தோன்றியது ராதிகாவிற்கு

கணவனின் இறப்புக்கு பின், ராதிகாவின் நிலையை எண்ணி, அண்ணன் தன் இல்வாழ்வில் ஒன்ற முடியாமல் தவித்ததை உணர்ந்த பின் தான், வாணி மருத்துவமனையின் பணியை ஏற்பதென முடிவு செய்தாள் ராதிகா

அதுவும், கண் முன்னே இருந்தால் தன்னை பார்த்து பார்த்து பெற்றோரும் அண்ணனும் நிம்மதியை தொலைப்பதை காண சகியாமல் தான், வெளியூர் பணியை ஏற்றாள்

எல்லாம் நன்மைக்கே, இங்கு வந்ததால் தானே கௌதமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என நினைத்தாள். கௌதமின் நினைவு வந்ததும், தன்னையும் அறியாமல் ராதிகாவின் புன்னகை விரிந்தது 

“என்னடா உனக்கு நீயே சிரிச்சுக்கற? சொன்னா நானும் சிரிப்பனே” என பிரபு கேலி செய்ய 

“அச்சோ, கண்டுகொண்டாரே” என பதறியவள்

“அ…அது… ஒண்ணுமில்லண்ணா” என்றவள், “அம்மாக்கு இப்ப கால்வலி பரவாயில்லையா’ண்ணா” என பேச்சை மாற்றினாள் 

“எங்க ராதிம்மா… முட்டு தேய்மானம், சர்ஜரி வேணா பண்ணலாம்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. அம்மா பயந்துக்கறாங்க?” என்றான் வருத்தத்துடன் 

“ரிஸ்க் தாண்ணா, எல்லாருக்கும் சக்ஸஸ் ஆகறதில்ல. வேணா இங்க கூட்டிட்டு வா, எங்க ஹாஸ்பிடல்லயே பாக்கலாம்” எனவும்

“சொல்லி பாக்கறேம்மா. அது சரி, ஏன் ரெண்டு மாசமா ஊர் பக்கமே காணோம்? அம்மா வேற கேட்டுகிட்டே இருக்காங்க. அம்மாவும் வரேன்னு தான் ரகள, கால் வலியோட வேண்டாம்னுட்டேன்” 

“சாரிண்ணா, கொஞ்சம் வேலை, அதான்…” என சமாளித்தாள்

உண்மை காரணம் கௌதமை காணாமல் நான்கு நாட்கள் இருக்க இயலுமா என்ற தயக்கமே என்பதை உள்மனம் கூற, காதல் வந்தால் பெற்றவர்கள் கூட இரண்டாம் பட்சமாகி விடுகின்றனரே என சற்றே குற்ற உணர்வு தோன்றியது ராதிகாவுக்கு

“ராதிம்மா, நீயும் சாப்டுட்டு சீக்கரம் கிளம்பு. மருதமலை கோவிலுக்கு போயிட்டு வரலாம். நான் நாலு மணி ட்ரெயினுக்கு ஊருக்கு போகணும்” 

“சரிண்ணா, அப்புறம்…” என தயக்கமாய் ராதிகா நிறுத்த 

“என்ன ராதிம்மா, வேற ஏதாச்சும் வேலையிருக்கா?”  

“அது… வேலை இல்லண்ணா. என் பிரெண்ட் ஒருத்தங்கள பாக்க வரேன்னு சொல்லியிருந்தேன், கோவில்ல இருந்து நேரா நாம அங்க போய்டலாமா?” 

“தாராளமா, அவங்க வீடு அந்த பக்கம் தானா?” எனவும் 

“இல்ல, ரெஸ்டாரண்ட் வரேன்னு சொன்னாங்க” என தன்னை நேரே பார்க்காமல் சொன்ன தங்கையின் குரலில், ஏதோ முக்கியமான விஷயம் என யூகித்தார் பிரபு. ஆனாலும், அவளே சொல்லட்டும் என மௌனமாய் தலையசைத்தார்

“தரிசனம் ரெம்ப நல்லா இருந்ததல்ல ராதிம்மா” என பிரபு சந்தோசமாய் கூற 

“ஆமாண்ணா, இதுக்கு முன்னாடி இவ்ளோ சீக்கரம் மருதமலைல தரிசனம் பாத்ததில்லை, மனசுக்கு ரெம்ப திருப்தியா இருந்தது” என ஆமோதித்தவள்

“அண்ணா, லஞ்சுக்கு போறதுக்கு இன்னும் டைமிருக்கு, நாம விஷ்ணு துர்கை கோவிலுக்கு போயிட்டு போலாமா?” என ராதிகா ஆர்வமாய் கேட்க

“அதுக்கென்ன, தாராளமா போலாம் ராதிம்மா” என்றார் பிரபு

விஷ்ணு துர்கை சன்னதியில் மனமுருக கண் மூடி நின்றாள் ராதிகா

“இன்னைக்கி அண்ணன்கிட்ட கௌதமை அறிமுகபடுத்தப் போறேன்’ம்மா, எல்லாம் நல்லபடியா நடக்கணும்.  அடுத்த முறை கௌதமோட மனைவியா, அவரோட கைகோர்த்து உன் முன்னால நிக்கணும் தாயே” என மனதிற்குள் வேண்டினாள்

“என் தங்கை வாழ்க்கை சீராகணும் சாமி, இப்படியே அவ தனியா நின்னுடக் கூடாது” என வேண்டினார் பிரபு 

தரிசனம் திருப்தியாய் அமைந்த போதும், ஏனோ மனதுள் சிறு சஞ்சலம் தோன்றியதை ராதிகாவால் உணர முடிந்தது. மனம் வருந்தும்படி ஏதோ நிகழப் போவதை அம்மன் தனக்கு உணர்த்துகிறாளோ எனத் தோன்றியது 

அதே நேரம், கௌதமின் எண் செல்பேசி திரையில் ஒளிர, சற்று தொலைவில் கோவில் பூசாரியிடம் அண்ணன் பேசிக் கொண்டிருப்பதை உறுதி செய்து கொண்டு, அழைப்பை எடுத்தாள் 

“என்ன டாக்டர் சார்? இப்ப தான் என் ஞாபகம் வந்ததா?” என்றவளின் கேலிக்கு 

“எனக்கு இப்பவாச்சும் ஞாபகம் வந்தது, மேடம் தான் ரெம்ப பிஸி போல” என பதிலளித்தான் 

மௌனமாய் சிரித்தவள், “ம்… ரெம்ப பிஸி” என்றாள் 

“ராதி…” என ஏதோ சொல்ல வந்தவன், அதற்குள் “ஒரு நிமிஷம் லைன்லேயே இரு” என்றவன், அங்கு யாரிடமோ பேசினான், ஆனால் தெளிவாய் கேட்கவில்லை 

சற்று நேரத்தில், “ம்… சொல்லு ராதி” என்றான் 

“யாருகிட்ட பேசிட்டு இருந்தீங்க?” 

“ரஞ்சனி ஏதோ…” என அவன் சொல்லி முடிக்கும் முன் 

“அவ எதுக்கு இப்ப வந்தா?” என்றாள் சற்றே கோபமாய் 

அவளின் உரிமையான கோபத்தை ரசித்தவன், “ம்… என்னை சைட் அடிக்கறதுக்கு” என வேண்டுமென்றே வம்பு செய்தான் கெளதம் 

“கொன்னுடுவேன்” என்றாள் நொடி கூட தாமதியாமல் 

“என்னையா? அவளையா?” என கெளதம் விடாமல் சீண்ட 

“ரெண்டு பேரையும் தான்” என்றவள் சீற 

“அச்சச்சோ சரியான ராட்சசிகிட்ட மாட்ட போற போலிருக்கே கெளதம், பாவம்டா நீ” என பொய்யாய் புலம்ப

“அவ்ளோ கஷ்டப்பட்டு ஒண்ணும் மாட்ட வேண்டாம் சார், நான் கட் பண்றேன்” என்றவளின் மிரட்டலில் 

“ஏய், கட் பண்ணிடாத ராதிம்மா. கஷ்டப்பட்டெல்லாம் இல்ல, இஷ்டப்பட்டு தான் மாட்டிக்கறேன்” என சரணடைந்தான் 

கௌதமின் பேச்சில் மனம் நெகிழ, “லவ் யு கெளதம்” என்றாள் இயல்பாய்

அவளின் அன்பின் வெளிப்பாட்டில் நெகிழ்ந்தவன், “லவ் யு ராதி, எனக்கு இப்பவே உன்ன பாக்கணும் போல இருக்குடா” என்றான் 

“இன்னும் ஒரு மணி நேரத்துல ரெஸ்டாரண்ட்ல இருப்பேன்” என்றாள் மகிழ்வுடன் 

“சஸ்பென்ஸ் தாங்கல ராதி. எதுக்கு ரெஸ்டாரண்ட் வரச் சொன்ன? ப்ளீஸ் சொல்லேன்” என கெஞ்சலாய் கேட்க 

“அஸ்கு புஸ்கு, சொல்ல மாட்டேன். வெயிட் பண்ணுங்க, இன்னும் ஒன் அவர் தான” என்றவள், பிரபு அவளை நோக்கி வருவதை கண்டு, “சரி, அப்புறம் பேசறேன் பை” என அவன் பதிலுக்கு காத்திராமல் அழைப்பைத் துண்டித்தாள் 

சற்று முன் இருந்த மனசஞ்சலம், கௌதமிடம் பேசியதும் சற்று குறைந்தது போல் உணர்ந்தாள். மீண்டும் அம்மனிடம் தன் கோரிக்கையை வைத்தவள், “போலாமா அண்ணா?” என்றாள் பிரபுவிடம் 

டேக்சியில் இருந்து உணவக வாயிலில் இறங்கியதும், “உன் பிரெண்ட் வந்துட்டாங்களானு போன் பண்ணிப்பாரு ராதிகா” என்றார் பிரபு 

“சரிண்ணா” என்றபடி செல்பேசியை கையில் எடுத்தாள்

அதே நேரம், முகம் கொள்ளா சிரிப்பும் கண் நிறைய காதலுமாய் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த கௌதமைக் கண்டதும், ராதிகாவின் முகம் மலர்ந்தது

ஆனால், ஒரே நொடியில் எல்லாம் தலைகீழாய் ஆனது  

என்னவென உணரும் முன்னே, “டேய் கொலைகார பாவி, இந்த ஊர்ல உனக்கென்னடா வேல? இங்க யாரைக் கொல்ல வந்திருக்க?” என கௌதமின் சட்டை காலரை பற்றியபடி, ஆக்ரோஷமாய் கத்திக் கொண்டிருந்தார் ராதிகாவின் அண்ணன் பிரபு 

ஏதோ சொல்ல வாயெடுத்த கெளதம், “அண்ணா, அவரை விடுங்க” என்ற ராதிகாவின் வார்த்தையில், அவர் ராதிகாவின் அண்ணன் என புரிந்ததும் மௌனமானான் 

“ராதிம்மா, இவன்… இவன்’தாம்மா மாப்ளய காரேத்தி கொன்னவன். பணத்தையும் அதிகாரத்தையும் காட்டி கேஸை ஒண்ணுமில்லாம பண்ணிட்டான்” என குற்றம் சாட்டினார் பிரபு 

இடி இறங்கியது போன்ற அதிர்ச்சியில் சமைந்து நின்றாள் ராதிகா. அப்போதும் கூட, தன் அண்ணன் சொன்னதை நம்ப இயலாமல், விளக்கம் வேண்டி கேள்வியாய் கௌதமை பார்த்தாள் 

பதில் சொல்ல இயலாமல், அவள் பார்வையை கெளதம் தவிர்க்க, அதுவே அவளுக்கு உண்மையை உணர்த்தியது

அதிர்ச்சியில் உறைந்து நின்றவளை தேற்றத் துடித்த மனதை அடக்கி, இது அதற்கான தருணமல்ல என அமைதியாய் நின்றான் கெளதம் 

அவள் அண்ணனின் முன், ராதிகா தனக்கு பரிட்சயமானவள் என காட்டிக் கொண்டால், அவளை இனி கண்ணில் கூட காண முடியாமல் ஊரைவிட்டே அழைத்துச் சென்று விடுவார் என பயந்தவனாய், கண்களாலேயே மன்னிப்பை யாசித்து நின்றான் கெளதம்

கெளதம் பயந்தது போலவே, “இனி ஒரு நிமிஷம் கூட இந்த கொலைகாரன் இருக்கற ஊர்ல நீ இருக்கக் கூடாது ராதிகா, இப்பவே கிளம்பு” என்றார் பிரபு 

“சார் ப்ளீஸ், நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க” என பிரபுவின் அருகே கெளதம் வர 

“இப்ப நீ இங்கிருந்து போகலைனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என கௌதமை மிரட்டியவர், “ராதிம்மா, ஊருக்கு போலாம் கிளம்பு ” என்றார் 

அதற்கு அவள் என்ன பதில் சொல்லப் போகிறாளென தவிப்புடன் அவள் முகம் பார்த்தான் கெளதம்

“அப்படி சட்டுனு கிளம்ப முடியாதுண்ணா, ஹாஸ்பிடல்ல சொல்லணும். அதோட, தப்பு செஞ்சவங்க தைரியமா இருக்கறப்ப, நான் எதுக்கு ஓடி ஒளியணும்” என்றாள் ஏதோ தீர்மானித்தவளை போல் 

அவளின் பதில் தன்னை தாக்கவே என புரிந்த போதும், இப்போதைக்கு அவள் ஊரை விட்டு போகப் போவதில்லை என்பதே கௌதமிற்கு போதுமானதாய் இருந்தது

டேக்சியில் ஏறியவள் தன்னை ஒரு கணமேனும் திரும்பிப் பார்க்க மாட்டாளா என ஏக்கத்துடன் தொடர்ந்து கௌதமின் பார்வை

அவனது எதிர்பார்ப்பை வீணாக்காமல் அவளும் பார்த்தாள்.

ஆனால், பார்க்காமலே இருந்திருக்கலாமோ என எண்ணும்படியான அவளின் அடிப்பட்ட பார்வை, அவனை கொன்று புதைத்து.

‘நம்பிக்கை துரோகி’ என சொல்லாமல் சொன்ன அந்த பார்வையில் குறுகி நின்றான் கெளதம்  

“இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல ராதிகா. இப்படியே என்கூட ஊருக்கு வா, சாமான் எல்லாம் அப்புறம் வந்து எடுத்துக்கலாம். ஹாஸ்பிடல்ல நான் வந்து பேசிக்கறேன்” என ரயில் நிலையத்தில் நின்றவாறு, நூறாவது முறையாய் தங்கையை வற்புறுத்திக் கொண்டிருந்தார் பிரபு 

“இல்லண்ணா, அப்படி பயந்து ஓடி வேண்டிய அவசியம் ஒண்ணுமில்ல. நான் பாத்துக்கறேன், நீ கிளம்பு” என இறுக்கமாய் பதிலளித்தாள் ராதிகா

“ராதிம்மா…” என மீண்டும் பிரபு ஏதோ சொல்ல வர 

“ப்ளீஸ்’ண்ணா, என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க” என்ற தங்கையின் தீர்மானமான குரலில் மௌனமானார் பிரபு 

ரயில் கிளம்பவே காத்திருந்தவள் போல், விரைந்து வெளியேறினாள் ராதிகா

Gift your better-half, these Romance Novels for Valentines Day👇

(தொடரும்… பிப்ரவரி 16, 2021)

எனது சிறுகதைத் தொகுப்புகள்👇

“சஹானா”  மாத இதழ்👇

Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே ❤ (அத்தியாயம் 15) – சஹானா கோவிந்த்
  1. நடுவிலே ஏதோ படிக்காமல் விட்டுட்டேனோ? ராதிகாவின் முதல் கல்யாணச் செய்தி புதுசா இருக்கே! இந்த அத்தியாயத்தில் தான் படிக்கிறேன். முன்னாடியே சொல்லி இருப்பீங்க போல! நான்படிக்காமல் விட்டிருக்கேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: