சஹானா
தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே ❤ (அத்தியாயம் 14) – சஹானா கோவிந்த்

வெகுநேரம் அழுது ஓய்ந்து உறங்கிய ராதிகாவிற்கு, அழைப்பு மணியின் சத்தம் எங்கோ கனவு போல் கேட்டது

மீண்டும் மீண்டும் அழைப்பு மணி ஒலிக்க, முயன்று கண்ணை திறந்தவள், எழுந்து வந்து யாரென “வியூவர்” வழியாய் பார்த்ததும், பின்னடைந்தாள்

அதை உணர்ந்தவன் போல், “ராதி ப்ளீஸ் கதவத் தெர, எவ்ளோ நேரமானாலும் நான் இங்கயே தான் இருப்பேன்” என தீர்மானமாய் ஒலித்தது கௌதமின் குரல் 

“இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” என கோபத்துடன் கேட்டபடி கதவை திறந்தாள் ராதிகா

ஒன்றும் பேசாமல், அவளை விழி எடுக்காமல் பார்த்தான் கெளதம்

இனி பார்க்கவே இயலாதோ என ஏங்கியவன் போன்ற அவனின் பார்வையில் ஒரு கணம் நெகிழ்ந்தவள், “நான் உயிரோட தான் இருக்கேனானு பாக்க வந்தீங்களா?” என கோபமாய் கேட்க 

அதற்கு மேல் விலகி நிற்க இயலாதவனாய், “ராதி ப்ளீஸ் அப்படி சொல்லாத” என அவள் திமிறலையும் பொருட்படுத்தாது, ஏதிலிருந்தோ அவளை காக்க முயல்பவன் போல் அணைத்தான் கெளதம்

அவனின் அந்த செய்கை, ராதிகாவின் கோபத்திற்கு இன்னும் தூபமிட்டது

அவனை கீழே தள்ளாத குறையாய் விலக்கியவள், “என்ன நெனச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல? ஒரு நிமிஷம் கொஞ்சுவீங்க? அடுத்த நிமிஷம் சொல்லாம கொள்ளாம ஊரை விட்டு போவீங்க? என்னோட உணர்வுகளோடு விளையாடறது தான் உங்க புது பொழுதுபோக்கா?” என சீறினாள் 

“இல்ல ராதி, நான்…”

“பேசாதீங்க, அந்த ரஞ்சனி எல்லாம் என்னை கேலியா பாக்கற அளவுக்கு ஆயிடுச்சில்ல என் நெலம” 

“ரஞ்சனியா?” என கெளதம் புரியாமல் விழிக்க 

“ஆமா, உங்க செக்ரட்டரி ரஞ்சனி தான். சார் ஊருக்கு போனது உனக்கே தெரியாதானு நக்கலா கேக்கறா?” என அந்த நிமிட அவமானத்தின் நினைவில், பேச இயலாமல் கண்ணில் நீர் கோர்க்க தடுமாறினாள் 

“ராதிம்மா” என கெளதம் சமாதானம் செய்ய அருகே வர 

“கிட்ட வராதீங்க” என வேகமாய் விலகியவள், அவனை பார்க்கவும் விருப்பம் இல்லாதவள் போல் வேறு புறம் திரும்பினாள் 

இரு தினம் முன், வெட்கமும் காதலும் போட்டி போட தன் மார்பில் முகம் புதைத்து நின்றவள், இப்போது வெறுத்த தோரணையில் விலகி நின்றது கௌதமின் மனதை பிசைந்தது.

இதுவே நிரந்தரம் ஆகி விடுமோவென பயந்தவனாய், அவளை தன் புறம் திருப்பினான் 

அவள் மேலும் முறுக்கிக் கொள்ள, “நான் ஏன் ஊருக்கு போனேன்னு தெரிஞ்சா நீ இப்படி தள்ளி நின்னு பேச மாட்ட?” என வேண்டுமன்றே வரவழைத்த உற்சாகத்துடன் பேசினான் கெளதம்

அவள் சந்தேகமாய் பார்க்க, “நம்ம கல்யாணத்த பத்தி அம்மா அப்பாகிட்ட பேசத்தான் போனேன்” என்றான்

முதல் முறை ராதிகாவிடம் பொய் சொல்கிறோமே, இது இனி எத்தனை பொய்களை கோர்க்க போகிறதோ என்ற குற்ற உணர்ச்சி எழாமல் இல்லை கௌதமிற்கு

“நிஜமாவா?” என ஒரு கணம் முகம் மலர்ந்தவள், “அத ஏன் என்கிட்ட சொல்லல?” என மறுபடியும் கோபமுகம் காட்டினாள் 

“சர்ப்ரைஸா வந்து சொல்லலாம்னு தான் சொல்லாம போனேன் ராதி” என்றான் 

“ஓ… என்னாச்சு?” என்றாள் தவிப்புடன் 

“என்ன என்னாச்சு?” என கெளதம் விழிக்க 

“ப்ச்… அதான் கல்யாண விஷயம் பேசப் போனதா சொன்னீங்களே, அது என்னாச்சு” என அவள் ஆவலாய் கேட்க, குற்ற உணர்வில் மறுகினான் கெளதம் 

“ஹ்ம்ம்… அது… அப்பாவுக்கு இன்னும் ஹெல்த் அவ்ளோ சரியாகல ராதி, உக்காந்து நிதானமா பேசற சூழ்நிலை இல்ல, அதான் கிளம்பி வந்துட்டேன்” என ஒருவழியாய் பொய் மாலை கோர்த்து சமாளித்தான் 

“சாரி, இது தெரியாம நான் உங்கள ரெம்ப திட்டிட்டேன்” என கெஞ்சலாய் பார்த்தவள், அவன் மார்பில் ஒண்டினாள் 

எதுவும் பேசாமல் அவளை அணைத்துக் கொண்டான் கெளதம், எப்போதும் இது நீடிக்க வேண்டுமென மனம் பிராத்தித்தது 

டுத்து வந்த நாட்களில், எத்தனை வேலை இருந்தாலும், தினமும் கொஞ்ச நேரமேனும் ராதிகாவுடன் செலவிட தவறவில்லை கெளதம். அன்றும் அப்படி தான், இரவு எட்டு மணிக்கு ராதிகாவை அழைத்தான்

“ஹலோ… என்ன கெளதம் இந்த நேரத்துல?” என ராதிகா கேட்க 

“நீ இன்னும் சாப்பிடல இல்ல?” எனவும் 

“நான் என்ன கேக்கறேன், நீங்க என்ன சொல்றீங்க?” என்ற ராதிகாவின் உரிமையான அதட்டலை ரசித்தவன் 

“கேட்டதுக்கு பதில் சொல்லு, சாப்டியா இல்லையா?” என அவனும் அதட்டினான் 

“இல்ல, இனிமே தான்”

“சரி ரெடியாகு, வெளில போய் சாப்பிடலாம்” என்றான் 

“இந்நேரத்துக்கா? போங்க கெளதம்”

“பயப்படாத, நான் ஒண்ணும் உன்னை கடத்திட்டு போய்ட மாட்டேன்” என்றவனின் கேலி சிரிப்பிற்கு 

“கடத்தினாலும் எனக்கொண்ணும் பயமில்ல” என்றவளின் வார்த்தையில், ராதிகா தன் மீது கொண்ட நம்பிக்கை வெளிப்பட, வேறு நினைவில் குற்ற உணர்வு தலை தூக்கியது கௌதமிற்கு

“இருபது நிமிசத்துல வரேன்” என அவள் பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்தான் 

“என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு? இன்னைக்கே மொத்தமா என்னை பாத்து முடிச்சுடணும்னு பாக்கற மாதிரி”, என கௌதமை கேலி செய்தாள் ராதிகா 

அதற்கு பதிலேதும் கூறாமல், எதிரே அமர்ந்திருந்தவளின் கையை பற்றி தன் கையோடு கோர்த்தவன், அவளை கண்ணெடுக்காமல் ரசித்தான்

தொடர்ந்த பார்வையில் முகம் சிவக்க குனிந்தவள், “போதும் கெளதம், நான் எங்கயும் ஓடிட மாட்டேன், வாழ்நாள் பூரா இதே மூஞ்சிய தான பாக்க போறீங்க, அப்புறம் போர் அடிச்சுடும்” என சிரித்தாள் 

ராதிகா இயல்பாய் கூறிய வார்த்தை, கௌதமின் மனதை தைத்தது.

“வாழ்நாள் முழுதும் பார்க்க இயலாமல் போய் விடுமோ என்று தான் தவிக்கிறேனடி” என மனதில்    தோன்றியதை சொல்ல இயலாமல் விழுங்கியவன்

“என்ன சாப்பிடற?” என பேச்சை மாற்றினான் 

அதே நேரம், “ஆர்டர் சார்?” என்றபடி உணவக பணியாளும் வந்து நிற்க, தங்களுக்கு வேண்டியதை கூறினர் 

பணியாள் நகர, “அதென்ன புதுசா இந்நேரத்துக்கு வெளிய போயே ஆகணும்னு பிடிவாதம்” என ராதிகா முறைக்க 

மீண்டும் அவள் கை கோர்த்தவன், “என்ன பண்றது? காலைல இருந்து செம பிஸி, உன்னை பாக்கவே முடியல”

“நாளைக்கு பாத்தா போச்சு, ஒரு நாள் பாக்கலைனா என்ன ஆயிடுமாம்” எனவும் 

“பாத்துட்டா நிம்மதியா தூங்குவேன், இல்லேனா நாளே கம்ப்ளீட் ஆகாத மாதிரி இருக்கும் ராதி” என மனதில் தோன்றியதை மறைக்காமல் உரைத்தான்

கௌதமின் பதிலில், தன் மீது அவன் கொண்ட அளவு கடந்த காதல் புரிய, பெருமிதமாய் உணர்ந்தாள் ராதிகா

அடுத்த ஒருமணி நேரம் காதலும் சீண்டலுமான அளவளாவலுடன் உணவை உண்டு முடித்தனர் 

அவளின் இருப்பிடம் வந்ததும் கெளதம் காரை நிறுத்த, “ஓகே கெளதம், நாளைக்கு பாக்கலாம்” என ராதிகா இறங்கப் போக

“ராதி, ஒரு நிமிஷம்” என கைப் பற்றி தடுத்தான் கெளதம் 

“என்ன கெளதம்?” என்றவளின் கேள்விக்கு, ஒரு கணம் மௌனமாய் அவளைப் பார்த்தவன் 

“ராதி, நான் ஒண்ணு கேட்டா, நீ உண்மையான பதில சொல்லுவியா?” என தயக்கமாய் நிறுத்தினான் 

“நாம காதல சொல்லிகிட்ட நாளுல இருந்து, நான் உங்ககிட்ட எதையும் மறைச்சதில்ல கெளதம், இதென்ன புதுசா கேள்வி?” என்றவளை, நேரே காண இயலாமல் தவிர்த்தான் கெளதம்

“என்னாச்சு கெளதம்? எதுனா பிரச்னையா?” என்றவளின் கவலை தெனித்த குரலில் தெளிந்தவன் 

“சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்ல ராதி” என சமாளித்தான் 

“இல்ல கெளதம், ஊருக்கு போயிட்டு வந்ததுல இருந்து நீங்க இயல்பா இல்ல. எனக்கு இப்ப ஒரு சந்தேகம் வருது” என்ற ராதிகாவின் ஊடுருவிய பார்வையில் 

“எ…என்ன… என்ன சந்தேகம் ராதி?” என்றவனின் குரல் தடுமாறியது 

“ஊருக்கு போனப்ப நீங்க நம்ம கல்யாணத்தை பத்தி பேசி, உங்க அம்மா அப்பா சம்மதிக்கலயோனு…” என வாக்கியத்தை கூட முடிக்க இயலாமல், கண்ணில் நீர் நிறைய தவித்து நின்றாள்

அதை காண சகியாமல், சாலையில் நிற்கிறோம் என்பதை கூட பொருட்படுத்தாமல், அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான் கெளதம்

“ஏய் ராதி… எதுக்கு இப்ப அழற? அப்படி எல்லாம் ஒண்ணுமில்லடா… உஷ், மொதல்ல அழறத நிறுத்து” என்றான் சற்றே கண்டிப்பான குரலில் 

அவள் சற்று சமாதானமாக, “சரி ராதி, நீ போய் தூங்கு, காலைல நேரத்துல எந்திரிக்கணும்ல” என விடை கொடுக்க 

“என்கிட்ட ஏதோ கேக்க வந்தீங்களே கெளதம்?” என அப்போது தான் நினைவு வந்தவளாய் கேட்க 

“அ…..அது…முக்கியமா ஒண்ணுமில்ல ராதி. எனக்கு ரெம்ப டயர்டா இருக்கு, கெளம்பட்டுமா?” என்றவனின் சோர்வு முகம், அவளை மற்ற எல்லாவற்றையும் மறக்க செய்தது

அப்படிக் கூறினால் தான் அவளின் கவனம் திசை திரும்பும் என்பதை அறிந்தே சொன்னான் கெளதம் 

“அச்சோ… இதுக்கு தான் வெளில போக வேண்டாம்னேன். சரி, நீங்க போய் ரெஸ்ட் எடுங்க கெளதம்” என விடை கொடுத்தாள்  

அவளின் அக்கறையின் வெளிப்பாட்டில், பேசக் கூட திராணி இல்லாதவனாய், மௌனமான தலையசைப்பில் விடைபெற்றான் கெளதம் 

டுத்த இரண்டாவது நாள், அதிகாலையிலேயே உற்சாகமாய் கௌதமை அழைத்தாள் ராதிகா 

“ஹலோ கெளதம்…” என்றவளின் குரலில் இருந்த உற்சாகம் அவனையும் தொற்றிக் கொள்ள 

“என்ன மேடம் ஒரே குஷியா இருக்கீங்க போல?” என கேலியில் இறங்கினான் கெளதம் 

“ஆமா குஷி தான், ஆனா அது என்னங்கறது சர்ப்ரைஸ்” என பீடிகையுடன் நிறுத்தினாள்

“என்ன ராதி புதிர் போடற? எனக்கு சர்ப்ரைஸ் எல்லாம் ஒத்து வராது, இப்பவே சொல்லு” என பிடிவாதம் செய்ய 

“அதெல்லாம் முடியாது. நான் இன்னைக்கி லீவு, ஹாஸ்பிடல் வர மாட்டேன். மதியம் லன்ச் பிரேக்ல நாம எப்பவும் போற ரெஸ்டாரண்ட்ல மீட் பண்ணலாம், அப்ப சொல்றேன்” என சிரிப்புடன் முடித்தாள்

“ப்ளீஸ் ராதி… என் செல்லம் இல்ல. எனக்கு மட்டும் சொல்லுவியாம்” என கெஞ்சலும் கொஞ்சலுமாய் கெளதம் தாஜா செய்ய முயல 

“என்ன ஐஸ் வெச்சாலும் நடக்காது மிஸ்டர் கெளதம். ஒரு மணிக்கு ரெஸ்டாரண்ட்ல பாக்கலாம்” என மேலும் பிகு செய்தாள் 

“போடி… ரெம்பத் தான் பண்ற” என கெளதம் சிலுப்பிக் கொள்ள 

“அப்படித் தான் போடா” என அவளும் இயல்பாய் திருப்பிக் கொடுத்தாள் 

அவளின் அந்த உரிமையான செய்கை கௌதமை சிலிர்க்கச் செய்த போதும், வேண்டுமென்றே, “ஏய்… என்ன மரியாதை தேயுது?” என பொய்க் கோபம் காட்டினான்

“நீங்க என்ன குடுக்கறீங்களோ அதான் திரும்ப கிடைக்கும்” என பழிப்பு காட்டினாள் 

“அப்ப நான் குடுக்கறதெல்லாம் திருப்பி தருவியா ராதி?” என்றவனின் மையல் குரலில் மயங்கியவள், பேச இயலாமல் மௌனமானாள் 

“ஹலோ… என்ன பதிலே காணோம்?” என்ற கௌதமின் கேலியில் 

“நேரமாச்சு, போய் ஹாஸ்பிடலுக்கு கிளம்புங்க” என பேச்சை மாற்றினாள் 

அதை புரிந்தவனாய் சத்தமாய் சிரித்தவன், “லவ் யு ராதி” என்றதுடன் அழைப்பு நிறைவுக்கு வந்தது

கௌதமுடனான பேச்சின் தாக்கத்தில் சற்று நேரம் மயக்கத்தில் உழன்றவள், அன்று செய்ய வேண்டிய வேலைகள் நினைவு வர, படுக்கையை விட்டு எழுந்தாள் ராதிகா

என்னவாக இருக்கும் என யோசித்த கெளதம், சரி மதியம் பாப்போம் என எழுந்தான் 

#ad இந்த தொடர்கதையை எழுதி வரும் எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும் – பிப்ரவரி 1, 2021)

Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே ❤ (அத்தியாயம் 14) – சஹானா கோவிந்த்
  1. என்னவாய் இருக்கும்? யோசிச்சு யோசிச்சு ஒண்ணும் புரியலை. நல்ல சஸ்பென்ஸ். தொடர்ந்து மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கீங்க! 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: