சஹானா
தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே… ❤ (அத்தியாயம் 12) – எழுதியவர் : சஹானா கோவிந்த் 

 ல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அன்னை இல்லத்தின் ஆண்டு விழா நாள் வந்தது

காலையிலேயே ராதிகாவை அழைத்து வர அவள் வீட்டிற்குச் சென்றான் கெளதம்

அழைப்பு மணியை அழுத்திய மறு கணமே, கெளதம் தான் என உணர்ந்தவளாய், புன்னகையுடன் கதவைத் திறந்தாள் ராதிகா

வெண்பட்டுச் சேலையில், அதற்கு தோதாய் சின்ன முத்து ஜிமிக்கியும், அழகிய வேலைப்பாடமைந்த முத்து மாலையுமாய் நின்றாள் அவள்

பெரிய ஒப்பனை ஏதுமில்லாமலே அழகோவியமாய் கவர்ந்தவளை கண் நிறையக் கண்டவன், “வாவ்” என வியந்தான்

“என்ன வாவ்?” என்றாள் ராதிகா வேண்டுமென்றே

“ம்ம்… அப்படியே நேராப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுது” என புன்னகையுடன் கெளதம் அவளருகே வர

“நெனப்பு தான்” என விலகியவள், “டிபன் சாப்ட்டுட்டு சீக்கரம் கிளம்பலாம்” என்றபடி உள்ளே சென்றாள்

இருவருக்கும் உணவு உண்ண தட்டை எடுத்து வைத்தவள், கௌதமின் மறுபக்கம் இருந்த சேரில் அமர்ந்தாள்

“போற போக்க பாத்தா எனக்கு சமையலே மறந்துடும் போலிருக்கு ராதி, தினமும் இங்க தான் சாப்பிடறேன்” என கெளதம் பொய்யாய் சலிக்கவும்

“எப்படியும் காலம் பூரா அனுபவிக்க போற பனிஷ்மென்ட் தான, இப்ப ட்ரையல் செஷன் தான்” என சிரித்தாள் ராதிகா

“ட்ரையல் முடிஞ்சு ரியல் செஷன் எப்ப ஸ்டார்ட் ஆகும் ராதி?” என கெளதம் ஆவலுடன் கேட்க

“அத நீங்க தான் சொல்லணும்” என்றாள் புன்னகையுடன்

“ஹ்ம்ம்… அப்பாவுக்கு காய்ச்சல் வராம இருந்திருந்தா, இன்னைக்கி ஆண்டு விழாவுக்கு வந்திருப்பாங்க. இவ தான் உங்க மருமகனு இண்ட்ரடியூஸ் பண்ணியிருக்கலாம், மிஸ் ஆயிடுச்சு. சரி விடு, அடுத்த வாரம் ஊருக்கு போய் மொதல் வேலையா எங்கம்மாவ உங்க வீட்டுக்கு அனுப்பனும்”

“எதுக்கு?”

“ஹ்ம்ம்… ஊறுகாய் போடறதுக்கு. கேக்கறா பாரு கேள்வி” என முறைத்தான்

அவன் பேச்சில் அவள் மனம் விட்டு சிரிக்கவும், தனக்கு மட்டுமே உரித்தான அவளின் அந்த மனம் நிறைந்த சிரிப்பில் மயங்கி, “சிரிச்சே மயக்கிட்டடி” என்றான் காதலுடன்

“என்ன புதுசா ‘டி’ எல்லாம் வருது” என்றாள் பொய் கோபத்துடன், தானும் அதை ரசித்ததை மறைத்து

“ம்… ட்ரையல் பாக்கறேன்” என கெளதம் சிரிக்க

“அப்படியா, அப்ப நானும் பூரி கட்டைல ட்ரையல் பாக்கட்டுமா?” என ராதிகா பொய்யாய் மிரட்ட

“கூடவே இன்னொரு ட்ரயலுக்கும் நீ ரெடினா இதுக்கு நானும் ரெடி” என கண் சிமிட்டினான் கெளதம்

அவள் தன் உணர்வுகளை மறைக்க போராடிய வேளையில் கைப்பேசி அழைக்க, அது தான் சாக்கென எழுந்து ஓடினாள். மௌனமாய் புன்னகைத்தபடி உண்டு முடித்தான் கெளதம்

“தீபா தான் பேசினா, இன்னும் கெளம்பலையானு கேட்டா” என்றவளின் முகத்தில் இன்னும் மிச்சமிருந்த நாணத்தை ரசித்தவன்

“இனிமே அவள கரடினு தான் கூப்பிடப் போறேன்” என சிரித்தான் கெளதம்

“டைமாச்சு போலாம்” என பேச்சை மாற்றினாள் ராதிகா

“போலாம் போலாம், மொதல்ல உன் தட்ட காலி பண்ணு” என உண்ணச் செய்தான். காய்ச்சலில் கொஞ்சம் மெலிந்திருந்தவள், கௌதமின் கண்டிப்பில் தேறி வந்தாள் என்றே சொல்லலாம்

அன்னை இல்லத்தை கார் நெருங்கியிருக்க, “உங்களுக்கு இன்னைக்கி ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றாள் ராதிகா பூடகமாய்

“என்ன? நான் சொன்ன ட்ரையலுக்கு நீ ரெடியா?” என கெளதம் கேலி செய்ய

“அச்சோ, வேற நெனப்பே இல்லையா?” என சிணுங்கினாள்

“இவ்ளோ அழகான காதலியை பக்கத்துல வெச்சுகிட்டு வேற நெனப்பு வந்தா தான் ராதி தப்பு” என சிரித்தான்

“போங்க, சர்ப்ரைஸ் கேன்சல்” என பொய்யாய் மிரட்டினாள்

“ஓகே ஓகே, இனி பேசல. என்ன சர்ப்ரைஸ் சொல்லு?” எனவும்

“அதே சர்ப்ரைஸ், அதெப்படி சொல்ல முடியும்?” என இப்போது கேலி செய்வது அவள் முறையானது

“பார்றா… உன்ன அப்புறம் கவனிச்சுக்கறேன்” என்றபடி காரிலிருந்து இறங்கினான் கெளதம்

ருவரும் ஜோடியாய் அன்னை இல்லத்தினுள் நுழைய, “மணமகளே மருமகளே வா வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா வா” என கேலி செய்தாள் தீபா

“தீபா…” என ராதிகா வெட்க சிணுங்கல் சிணுங்க, வழக்கம் போல் அவளை கண்ணெடுக்காமல் ரசித்தான் கெளதம்

“ஹலோ நாங்களும் இங்க இருக்கோம்” என தீபாவின் கணவன் பிரகாஷ் தொண்டையை கணைக்க

“யார் நீ? உனக்கு தெரியுமா ராதி?” என வேண்டுமென்றே வம்பு பேசினான் கெளதம்

“ஏம்மா ராதிகா, இவனுக்கு அம்னீஷியா இருக்கும் போலிருக்கே. இத்தன வருஷம் பழகின என்னையே யாருனு கேக்கறான், நாளைக்கே உன்னை தெரியாதுனு சொன்னாலும் சொல்லுவான். இவன நம்பி லவ் பண்ணணுமானு யோசிச்சுக்கோ” என கௌதமின் வீக் பாயிண்ட்டில் பிரகாஷ் அடிக்க

“தோழா தோழா தோள் கொடு தோழா” என சரண்டர் ஆனான் கெளதம். அந்த ரகளையில் எழுந்த சிரிப்பலை அடங்க சிறிது நேரமானது

அதன் பின் மாலை வரை, நேரம் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது.

முடிந்தவரை  ராதிகாவின் அருகிலேயே இருந்தான் கெளதம். தீபாவும் பிரகாஷும் கேலி செய்ததை இருவரும் உள்ளுக்குள் ரசிக்கவே செய்தனர்

ஒருவழியாய் ஆண்டுவிழா தொடங்கியது

கலெக்டர் முதல், அந்த நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் அங்கு கூடியிருந்தனர். வாணியின் சேவையும் சந்திரசேகரின் நட்பு வட்டமும் அங்கு பல பிரபலங்களை அழைத்து வந்திருந்தது

நிகழ்ச்சி தொடங்க, கூட்டத்தில் சலசலப்பு அடங்கியது

முதலில் ராதிகாவின் பயிற்சியில், அன்னை இல்லத்தை சேர்ந்த எட்டு வயது மித்ரா, எம்.எஸ்.அம்மா பாடிய “குறையொன்றுமில்லை…” என்ற பாடலை பாடி, அன்றைய நாளை இனிதாய் துவக்கி வைத்தாள்

இனிய பாவனையில், நல்ல இசையில், சுருதி மாறாது ஒலித்த அந்த பிஞ்சு குரலில் மொத்த கூட்டமும் லயித்து நின்றது. பாடல் முடிந்ததும் அத்தனை பேரும் கை தட்டினர்

அதை பார்த்த ராதிகாவிற்கு, மகிழ்ச்சியில் கண்களில் நீர் கோர்த்தது. அவளையே பார்த்திருந்த கெளதம், “அநியாயத்துக்கு சென்சிட்டிவா இருக்காளே” என அதையும் ரசித்தான்

அடுத்து, அன்னை இல்லத்தின் பொறுப்பாளராய் வரவேற்புரை ஆற்றினார் வாணி

தொடர்ந்து பேசிய மாவட்ட கலெக்டர், வாணியின் சிறந்த சேவையை பாராட்டி பேசினார். அதோடு, தன்னால் ஆன உதவியை செய்வதாய் வாக்களித்தார்

தொடர்ந்து வந்த கலை நிகழ்ச்சிகள் களை காட்டியது. முதலில் ராதிகாவின் பயிற்சியில், குழந்தைகள் அரங்கேற்றிய “தசாவதாரம்” என்ற நாட்டிய நாடகம் எல்லோராலும் பாராட்டப்பட்டது

பின், தீபாவின் வழிகாட்டுதலில், ஆறாம் வகுப்பு பிள்ளைகள் நடத்திய “நவீன ராமாயணம்” என்ற நகைச்சுவை நாடகத்தை அனைவரும் ரசித்தனர்.

தொடர்ந்து குழந்தைகளின் வண்ண ஓவியங்களும், தெர்மோகோல் கொண்டு செய்யப்பட்ட கலை வடிவங்களும் காட்சிபடுத்தப்பட்டன

அது முடிந்ததும், அழகிய ராதை ஒப்பனையுடன், சலங்கை கட்டி ராதிகா மேடை ஏற, விழிவிரித்து நம்ப இயலாமல் பார்த்தான் கெளதம்

கண்ணோடு கண் பார்த்தவள், அவனுக்கு மட்டும் புரியும் வண்ணம் “சர்ப்ரைஸ்” என, மெல்லிய உதட்டசைவில் கூறினாள்

தனக்கு மட்டும் உரித்தான அந்த செய்கையில், அவளை நோக்கி செல்ல துடித்த கால்களை கட்டுப்படுத்தி அமர்ந்தான் கெளதம்

“பாத்து கெளதம், கண்ணு தெறிச்சு வெளிய வந்துர போகுது” என பிரகாஷ் கேலி செய்ய, எதுவும் காதில் விழாதவனாய், தன்னவளையே பார்த்திருந்தான் கெளதம்

“அலைபாயுதே…. கண்ணா… என் மனம் அலைபாயுதே…” என்ற பாடலுக்கு ராதிகாவின் சலங்கை ஒலிக்க, சற்று நேரத்தில் தன் அபிநயத்தால், உணர்வுகளின் வெளிப்பாடால், கால்களின் ஜதி அலையால், மொத்த பார்வையாளர்களையும் கட்டிப் போட்டாள்

இடையிடையே, கௌதமிற்கு மட்டுமே என பாய்ந்த ராதிகாவின் பார்வையும் கண்ணசைவுகளும், கௌதமை புரட்டிப் போட்டது

ராதிகா நடனம் பயின்றவள் என கெளதம் அறிந்திருந்த போதும், இப்படி “மெஸ்மரைஸ்” என ஆங்கிலத்தில் சொல்வது போல், “ஆளையே கட்டிப் போடும்” அளவிற்கு ஆடுவாள் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை

அவளின் நடனம் மட்டுமின்றி, தன் மீது அவள் கொண்ட அதீத காதலின் வெளிப்பாடாய் அமைந்த, அந்த உணர்வுகளின் ஊர்வலம் அவனை நிலைகுலையச் செய்தது

முன் எப்போதும் விட, தான் அவளை அதிகம் நேசிப்பதை உணர்ந்தான் கெளதம்.

அவளும் அவ்வாறே தன்னை உயிராய் நேசிக்கிறாள் என்பதை, இந்த நடனத்தின் ஊடே தனக்கான பிரத்யோக பார்வை பரிமாறல்களில் அவள் உணர்த்தியதை, மனதார உணர்ந்தான் கெளதம்

அக்கணம், ஒரு போதும் அவள் மனம் வருந்தும்படி நடந்து கொள்ளக் கூடாதென தனக்குள்ளே உறுதி எடுத்துக் கொண்டான்

நடனம் முடிந்ததும் மொத்த கூட்டமும் எழுந்து நின்று கரவொலி எழுப்ப, அசையாமல் அமர்ந்திருந்தான் கெளதம்

மூச்சு வாங்கியபடி, பார்வையாளர்களின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாய் கைகூப்பி நின்றிருந்தவளின் பார்வை, “எப்படி என் நடனம்?” என அவனிடம் கேட்பது போல் கேள்வியாய் தொக்கி நின்றது

பதில் பார்வை செலுத்தக் கூட தெம்பில்லாதவனாய் மௌனமானான் கெளதம்

ஒரு நடனம் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என நம்ப இயலாமல் பார்த்த விழி பார்த்தபடி இருந்தான். அதற்குள் மேடை ஏறிய வாணி, ராதிகாவை அணைத்து தன் அன்பை வெளிப்படுத்த, அத்தையை பொறாமையாய் பார்த்தான் கெளதம்

“என்ன கெளதம்? வாணி மேடம் மேல பொறாமையா இருக்கா?” என தன் உணர்வுகளை படித்தவன் போல் பிரகாஷ் கேலி செய்ய, புன்னகைத்து சமாளித்தான் கெளதம்

அடுத்து தொடர்ந்த மழலைகளின் கலை நிகழ்ச்சிகளில் ஒருமணி நேரம் கரைய, இன்னும் ராதிகாவின் நடனத்தில் இருந்து மீண்டு வர இயலாமல் அமர்ந்திருந்தான் கெளதம்

இறுதியாய் மாவட்ட கலெக்டர் பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்க, வாணி மருத்துவமனை நிறுவனரும் கௌதமின் தாய்மாமாவுமான டாக்டர் சந்திரசேகரன் நன்றி நவில, விழா இனிதே நிறைவுற்றது

அனைவருக்கும் “பப்பே” முறையில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கெளதம், பிரகாஷ், தீபா மூவரும் எல்லாம் சரியாய் இருக்கிறதாவென மேற்பார்வை பார்க்க, தொய்வின்றி விருந்து நடந்தேறியது

ஆசிரம பிள்ளைகளை வழக்கம் போல் உணவருந்தும் அறைக்கு அழைத்து சென்று உண்ண செய்தனர். மற்ற ஆசிரியர்களுக்கு துணையாய் அந்த பணியில் ஈடுபட்டிருந்தாள் ராதிகா

ஆனால் அவள் மனம், கௌதமை எப்போது தனியே காண்போம் என துடித்துக் கொண்டிருந்தது

தன் நடனம் முடிந்த பின் கெளதம் எந்த முகபாவமும் இன்றி அமர்ந்திருந்தது, அவளை குழப்பத்தில் ஆழ்த்தியது.

அதற்கு அவனிடம் விளக்கம் கேட்காவிட்டால் மண்டை வெடித்து விடும் போல் இருந்தது. அவனுக்காக மட்டுமே ஆடிய நடனம் அதுவென கூற காத்துக் கொண்டிருந்தாள்

விருந்தினர்கள் எல்லாம் விடைபெற்று சென்றதும், கௌதம் தீபா பிரகாஷ் மற்றும் சந்திரசேகரன் அமர்ந்திருந்த இடத்தில் வந்து ஆசுவாசமாய் அமர்ந்தார் வாணி

“கிரேட் ஜாப் ஆன்ட்டி, ஹாட்ஸ் ஆப் டு யு” என தீபா ஆத்மார்த்தமாய் பாராட்ட

“நீங்க எல்லாம் கை குடுக்காம நான் மட்டும் என்ன செய்ய முடியும் தீபா?” என பெருந்தன்மையோடு கூறினார் வாணி

கெளதம் மௌனமாய் இருப்பதை கண்ட தீபா, “என்ன கெளதம், இன்னும் உன் ஆளோட டான்ஸ்ல இருந்தே வெளில வர்லியா?” என கேலி செய்ய

மௌனமாய் புன்னகைத்தவன், “உனக்கு டயர்ட் ஆகலையா? கெளம்பு” என பேச்சை மாற்றினான் கெளதம்

அதே நேரம் ராதிகா அங்கு வந்து சேர, “ரெம்ப அருமையா இருந்ததுமா உன் டான்ஸ்” என மனதார பாராட்டினார் சந்திரசேகரன்

“ஆமா ராதிகா, இன்னைக்கி ஹைலைட்டே உன்னோட டான்ஸ் தான்” என பிரகாஷும் பாராட்ட, மெல்லிய புன்முறுவலுடன் அதை ஏற்றுக் கொண்டாள் ராதிகா

கெளதம் கவனமாய் ராதிகாவின் பார்வையை தவிர்த்து, வாணியிடம் ஏதோ பேசும் பாவனையில் அமர்ந்திருந்தான்

அவனின் பாராமுகம் ராதிகாவை குழப்பியது, அதோடு அவளின் சிரிப்பும் காணாமல் போனது

சற்று நேரம் விழாவை பற்றியும், அடுத்து செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றியும் அளவளாவியபின், தீபாவின் தொடர்ந்த கொட்டாவியை கேலி செய்தபடி, எல்லோரும் வீடு செல்ல கிளம்பினர்

அப்போதும் நேர்பார்வை இன்றி, “போலாமா?” என்றதற்கு மேல்,  ராதிகாவிடம் கெளதம் எதுவும் பேசவில்லை.

காரில் ஏறி பாதிதூரம் வரும் வரையும் கூட, மௌனத்திலேயே கழிந்தது

அதற்கு மேல் பொறுக்க இயலாமல், “என் டான்ஸ் பத்தி நீங்க ஒண்ணுமே சொல்லலியே கெளதம்?” என ராதிகா ஏக்கமாய் கேட்க

அந்த குரலும் பார்வையும் தன்னிலை மறக்கச் செய்த போதும், “சாப்டியா?” என சம்மந்தமின்றி ஏதோ கேட்டான் கெளதம்

அவன் வேண்டுமென்றே பேச்சை மாற்றுவதை உணர்ந்த ராதிகா, தான் மேடையில் ஆடியது அவனுக்கு பிடிக்கவில்லை போலும் என யூகித்து வருந்தினாள்

கண்ணில் துளிர்த்த நீரை மறைக்க, வேறு பக்கம் பார்வையை செலுத்தினாள், மௌனமாய் காரை  செலுத்தினான் கெளதம்

மிகவும் மகிழ்வான், பெருமிதமாய் உணர்வான், காதலை பொழிவான் என்றெல்லாம் எதிர்பார்த்திருந்த ராதிகாவிற்கு, கௌதமின் பாராமுகத்தை தாங்க இயலவில்லை

தான் எல்லார் முன்னிலும் ஆடியது அவனுக்கு பிடிக்கவில்லையோ அல்லது தான் ஆடியதே பிடிக்கவில்லையோவென பலதும் நினைத்து குழம்பினாள்

கௌதமிற்கென யோசித்து யோசித்து, மேடையில் தான் வெளிப்படுத்திய உணர்வுக்கு, எந்த எதிர்வினையும் இல்லாதது அவளை வேதனைப்படுத்தியது

ராதிகாவின் அடுக்கு மாடி குடியிருப்புக்குள் சென்றதும், அவளிடமிருந்த சாவியை வாங்கி, தானே வீட்டைத் திறந்தான் கெளதம்

உள்ளே நுழைந்த நொடி, கதவை சாத்தியவன், இருவருக்குள்ளும் காற்று கூட புகமுடியா வண்ணம் ராதிகாவை இறுக அணைத்தான்

கௌதமின் இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத ராதிகா, அவனை விட்டு விலக முயல, “ராதி… ஒரே ஒரு நிமிஷம், இப்படியே இரு ப்ளீஸ்” என நெஞ்சோடு அணைத்து உச்சியில் இதழ் பதித்தான்

அதற்கு மேல் மறுக்காமல், ராதிகாவும் மௌனமாய் நின்றாள், ஆனால் தன்னையும் அறியாமல் அவள் கண்ணிலிருந்து நீர் வழிந்தது

சிறிது நேரம் கழித்தே அதை உணர்ந்த கெளதம், “ராதி… என்னாச்சு?” என பதற, கட்டுப்படுத்த இயலாமல் விசும்பினாள்

“ராதிம்மா, ப்ளீஸ் அழாத” என சிறுபிள்ளை போல் தேற்றி அணைக்க, மனம் கவர்ந்தவனின் அன்பின் வெளிப்பாடு அவளை மேலும் பலவீனமாக்கியது

“ஏன் கெளதம் என்னை இப்படி அழ வெக்கறீங்க?” என ராதிகா விசும்ப

“நான் அழ வெக்கறேனா?” என அவன் புரியாமல் விழிக்க, அது அவளை மேலும் வருத்தியது

“பின்ன, எவ்ளோ ஆசையா நீங்க என் டான்ஸ் பத்தி என்ன சொல்லுவீங்கனு எதிர்பாத்துட்டு இருந்தேன் தெரியுமா? எல்லாரும் பாராட்டினாங்க, நீங்க எதுவுமே சொல்லல, எனக்கு ரெம்ப கஷ்டமா இருக்கு கெளதம். நான் ஆடினது உங்களுக்கு பிடிக்கலையா?” என்றவளின் ஏக்கம் தெறித்த குரல், அவன் உயிர் வரை ஊடுருவியது

“பிடிக்கலையாவா?  ராதி… அந்த உணர்வை என்ன சொல்றதுனே எனக்கு தெரியல. உன்னை நேரா பாத்தாலே என்னால கட்டுப்படுத்திக்க முடியாதுன்னு தான் விலகி நின்னேன். இப்படி உன்னை அணைச்சுக்கற தருணத்துக்காக, நீ ஆடின அந்த நிமிசத்துல இருந்து ஏங்கிட்டு இருக்கேன் ராதிம்மா.

உன்னோட ஒரு ஒரு அபிநயமும் என்னை அப்படியே கட்டி போட்டுடுச்சு, என்னால அசையவே முடியல. அது வெறும் டான்ஸ் இல்ல, உன்னோட காதலின் வெளிப்பாடா தான் எனக்கு தெரிஞ்சது.

இவ்ளோ அழகா யாரும் தன்னோட லவ்வ வெளிப்படுத்தி இருக்க முடியாது ராதி. அயம் வெரி லக்கி” என்றவனின் குரலில் இருந்த காதலில் கரைந்தவள், மௌனமாய் அவன் மார்பில் தன்னை புதைத்துக் கொண்டாள்

உணர்வு மேலீட்டால் கௌதமின் அணைப்பு இறுகியது. சற்றே நெகிழத் தொடங்கிய ராதிகா, பின் சுதாரித்து, “நான் டீ போடறேன்” என அவன் முகத்தை பார்க்கும் வலுவின்றி விலகிச் சென்றாள்

ஏமாற்றமாய் உணர்ந்த போதும், அவளின் உணர்வுக்கு மதிப்பளித்து, அவள் பின்னோடு செல்ல துடித்த கால்களை கட்டுப்படுத்தினான் கெளதம்

ஆனாலும் வேண்டுமென்றே, “டீ போட நான் ஹெல்ப் பண்ணட்டுமா ராதி?” என முன்னறையில் இருந்தபடியே அவளை சீண்ட

“ஒண்ணும் வேண்டாம், நீங்க அங்கயே இருங்க” என்றவளின் அவசரமான பதிலில், வாய் விட்டு சிரித்தான் கெளதம்

அவள் வரும்வரை டிவி பார்ப்போம் என்ற எண்ணத்தில் ரிமோட்டைத் தேட, அதை காணாமல் டிவியின் கீழ் இருந்த அலமாரியின் ஒரு இழுப்பறையை இழுத்தான்

அவன் இழுத்த வேகத்தில் அந்த இழுப்பறை கையோடு வந்து, அதிலிருந்த பொருட்கள்  கீழே சரிந்தது

“ஓ நோ, ராதி திட்டப் போறா” என அவசரமாய் பொருட்களை அள்ளி உள்ளே போட்டவன், அலமாரி இடுக்கில் ஏதோ சிக்கிக் கொண்டிருப்பதை பார்த்து எடுத்தான், அதை பார்த்ததும் உறைந்து நின்றான்

நம்ப இயலாமல் அதை கையில் எடுத்து அருகே வைத்து பார்த்தவனுக்கு, உடல் மொத்தமும் வியர்த்துப் போனது

அதற்கு மேல் ஒரு கணம் கூட தாமதிக்காமல் ஓசையின்றி வெளியேறினான் கெளதம்

சிறிது நேரத்தில், “டீ ரெடி” என புன்னகையுடன் வந்த ராதிகா, முன்னறையில் கௌதமை காணாது விழித்தாள்

“ரெஸ்ட் ரூம்ல இருக்கீங்களா?” என்ற கேள்விக்கு பதிலில்லாமல் போக

“விளையாடாதீங்க கெளதம், வந்து டீ குடிங்க” என செல்ல அதட்டல் போட்டவள், தன் டீ கோப்பையுடன் சோபாவில் அமர்ந்தாள்

அப்போதும் பதில் இல்லாமல் போக, வேண்டுமென்றே தன்னை சீண்டுகிறான் என நினைத்தவள், “நான் மறுபடி டீ சூடு பண்ணி தர மாட்டேன், வந்து குடிங்க கெளதம்” என்றாள் பொய்யாய் வரவழைத்து கொண்ட கோபத்துடன்

அதற்கும் பதில் இல்லாமல் போக, முணுமுணுப்புடன் மற்ற அறைகளில் தேடினாள். அவன் எங்கும் இல்லை என்பது ஊர்ஜிதமானதும், “ஏதேனும் எமர்ஜன்சி என்று சென்றிருப்பானோ?” என நினைத்தவள்

“ஆனாலும் இங்கேயே இருக்கும் தன்னிடம் சொல்லாமல் செல்ல வழியில்லையே?” என்ற குழப்பத்துடன், கௌதமின் கைப்பேசி எண்ணுக்கு அழைத்தாள்

அழைப்பு நீண்ட நேரம் சென்றும் எடுக்கப்படவில்லை. மீண்டும் முயற்சித்த போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றது. தொடர்ந்து முயன்றவள், சோர்ந்து அப்படியே உறங்கிப் போனாள்

காலையில் தூக்கம் கலைய எழுந்த ராதிகா, “தான் ஏன் சோபாவில் படுத்து இருக்கிறோம்?” என ஒரு கணம் புரியாமல் விழித்தாள்

பின் கோர்வையாய் முன்னிரவின் சம்பவங்கள் நினைவுக்கு வர, உடனே கௌதமிற்கு அழைத்தாள், முன்னிரவு போலவே  அழைப்பு எடுக்கப்படாமல் நின்றது

ஒருவேளை இரவு எமர்ஜன்சி ஏதேனும் முடிந்து தாமதமாய் வீடு திரும்பி இன்னும் உறங்குகிறானோ என சற்று நேரம் யோசனையுடன் அமர்ந்திருந்தவள், நேரமாவதை உணர்ந்து விரைந்து பணிக்கு கிளம்பினாள்

#ad இந்த தொடர்கதையை எழுதி வரும் எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்…ஜனவரி 1, 2021)

Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே… ❤ (அத்தியாயம் 12) – எழுதியவர் : சஹானா கோவிந்த் 
  1. என்ன ஆச்சு? நல்ல கட்டத்தில் நிறுத்தி இருக்கீங்க. அடுத்த பகுதி வரும் வரை காத்திருக்கணும். நல்லா எழுதறீங்க! கௌதம் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று யோசிச்சு மண்டையை உடைச்சுட்டு இருக்கேன். 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: