தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே ❤ (அத்தியாயம் 11) – எழுதியவர் : சஹானா கோவிந்த்

றுநாள் காலை நேரம், மூச்சு விடவும் நேரமின்றி புறநோயாளிகள் கூட்டம் திணறச் செய்தது. தேநீர் இடைவேளையில், ஒரு கணம் கண் மூடிய கௌதமிற்கு, ராதிகாவின் முகம் கண்ணுக்குள் வந்தது

முன் தினம் கண்ட அவளின் அழுது சிவந்த முகம் நினைவில் வர, ஞாயிறு வரை காத்திருக்க நினைத்த தீர்மானமெல்லாம் காற்றில் பறந்தது

“இதுக்கு மேல தாங்காதுடா சாமி, இப்பவே போய் பாக்கணும்” என்றவனாய் இருக்கையை விட்டு எழுந்தான்

அதே நேரம் கைப்பேசி அழைக்க, “இதொண்ணு நொச்சு நொச்சுனு, மனுஷன் டென்ஷன் புரியாம” என சலிப்புடன் பேசியை கையில் எடுத்தான்

திரையில் தீபாவின் எண் ஒளிர, “என்ன இந்த நேரத்துல கூப்பிட்றா?” என யோசித்தபடியே, “சொல்லு தீபா?” என்றான் கெளதம்

“கெளதம், பிஸியா இருக்கியா?” என்றாள், டாக்டர்களின் பணிச்சுமையை உணர்ந்தவளாய்

“இல்ல தீபா சொல்லு, ஏன் என்னமோ போல பேசற?” என்றான் பதட்டமாய்

“அது… ராதிகாவுக்கு… “என அவள் முடிக்கும் முன்னே

“என்னாச்சு?” என பதறினான் கெளதம்

“டென்ஷன் ஆகாத கெளதம், பயப்பட ஒண்ணுமில்ல. நேத்து கிளம்பும் போது ரெம்ப டல்லா இருந்தானு, இப்ப கொஞ்சம் முன்னாடி ராதிகாவுக்கு போன் பண்ணியிருந்தேன். என்னமோ கொஞ்சம் உடம்புக்கு முடியலைனு சொன்னா, என்ன ஏதுனு கேக்கறதுக்குள்ள லைன் கட்டாயிடுச்சு. திரும்பி ட்ரை பண்ணினேன், எடுக்கல. எனக்கு காலைல இருந்தே கொஞ்சம் முடியல, இல்லைனா நானே போய் பாத்திருப்பேன். முடிஞ்சா நீ போய் பாரு கெளதம், ரெம்ப டல்லா பேசினா அதான்” எனவும், கௌதமிற்கு ஒரு கணம் வார்த்தையே எழவில்லை

பின் சுதாரித்தவன், “தேங்க்ஸ் தீபா, நான் போய் பாக்கறேன், பை” என அவள் பதிலுக்கு கூட காத்திராமல் அழைப்பைத் துண்டித்தான்

அப்போதே தன்னவளிடம் ஓடத் துடித்த கால்களை, கடமையை மனதில் கொண்டு கட்டுப்படுத்தியவன், இன்டர்காமில் ரஞ்சனியை அழைத்தான்

அவள் வரவும், “ரஞ்சனி, நான் கொஞ்சம் அவசரமா வெளிய போகணும். இன்னும் பேஷண்ட்ஸ் இருந்தா, டாக்டர் ஸ்ரீராம்கிட்ட அனுப்புங்க. நான் சொல்லிடறேன்” என ஸ்ரீராமிடமும் பேசியவன், விரைந்து வெளியேறினான்

அத்தனை வேகமாய் அவன் ஒரு போதும் காரை ஒட்டியதில்லை, வாயு வேகம் மனோ வேகம் தாண்டி விரைந்தான். காரை பார்க் செய்து விட்டு, லிப்ட் வரும் வரை நிற்கும் பொறுமை கூட இன்றி, படிகளில் ஏறினான்

மூச்சு வாங்க நான்காவது மாடியில் கால் வைத்ததும், ராதிகாவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். பதிலின்றி போக, மீண்டும் அழுத்தினான், அந்த முறை அழுத்திய விரலை எடுக்கவே இல்லை

உள்ளே அரவம் கேட்க, “ராதி… ராதிம்மா, கதவைத் தெற” என கத்தினான்

அவன் பொறுமையை சோதிப்பது போல் மேலும் சில நொடிகள் கழித்து, மெல்ல சாவி திருப்பும் சத்தம் கேட்க, முழுதாய் திறக்கும் வரை காத்திருக்க இயலாதவனாய் கதவை தள்ளினான் கெளதம்

அதற்கே காத்திருந்தவள் போல், அவன் கையில் மயங்கி சரிந்தாள் ராதிகா. ஒரு கணம் மனம் ஏதோதோ விபரீத கற்பனைகளில் செல்ல செயலற்று நின்றவன், சுதாரித்து அவளை சோபாவில் கிடத்தினான்

தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தவன், “ராதி… ராதி கண்ண தெறடா. ராதிம்மா” என கன்னத்தில் தட்ட, மெல்ல கண் விழித்தவள் “கெள…தம்…” என விசும்பினாள்

அவள் குரல் கேட்டதும் சற்று நிம்மதியானவனுக்கு, அப்போது தான் அவள் உடலின் சூடு உறைத்தது

“ஐயோ, காய்ச்சல் இப்படி கொதிக்குதே” என பதறினான். தான் ஒரு டாக்டர் என்பதை கூட மறந்தவனாய், என்ன செய்வதென புரியாமல் விழித்தான்

“கெளதம்… என்னை விட்டு…ட்டு போய்டா…தீங்க” என ராதிகா விசும்ப

“இல்ல ராதி, உன்னை விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன், சாரி ராதிம்மா… சாரிடா. காய்ச்சல் ரெம்ப அதிகமா இருக்குடா. ஹாஸ்பிடல் போய்டலாம், வீட்ல இருக்கறது ரிஸ்க்” என மென்மையாய் அவளை அணைத்தபடி மெல்ல எழச் செய்தான்

அவளுக்கு அவன் அருகாமையே மருந்து என்பவள் போல் மௌனமாய்   அவன் தோளில் சாய்ந்து நின்றாள்

அவளை தோளில் சாய்த்தபடியே கதவை பூட்டி, பின் லிப்ட்டில் பயணித்து கீழே வந்தவன், கணமும் தாமதியாமல் காரை கிளப்பி மருத்துவமனைக்கு விரைந்தான்

கிளம்பும் போதே தன் மாமா சந்திரசேகரனுக்கு அழைத்து விவரம் கூறி இருந்தான் கெளதம், அதனால் காரை நிறுத்தும் முன்னே எமர்ஜன்சி வார்டு பணியாளர்கள் காத்திருந்தனர்

கௌதமின் பதட்டமும் தவிப்பும், அவனின் ராதி என்ற அழைப்பும், அங்கிருந்தவர்களுக்கு அவர்களின் நெருக்கத்தை உணர்த்தியது

கௌதமின் தோளை பற்றி அழுத்திய சந்திரசேகரன், “கெளதம், ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணட்டும், நீ இப்படி வா” என ராதிகாவிடமிருந்து விலக்கினார்

“இல்ல மாமா…” என ஏதோ கூற தொடங்கியவனை

“ரிலாக்ஸ் கெளதம், அதான் இங்க வந்தாச்சல்ல” என அவனை ஆசுவாசப்படுத்தியவர், எமெர்ஜன்சி வார்டுக்குள் நுழைய விடாமல் நிறுத்திக் கொண்டார்

“டேய்… நீ பண்ற ரகளைல ராதிகா இன்னும் பயந்துருவா போலிருக்கு.   ஒரு டாக்டர் மாதிரியாடா நடந்துக்கற?” என கேலி போல் பேசி கௌதமை இயல்பாக்க முயன்றார்

சிறிது நேரத்தில் எமர்ஜன்சி வார்டு டாக்டர் வெளிய வர, விரைந்து அவரருகில் சென்றான் கெளதம்

கௌதமின் மனம் புரிந்தவராய், “நத்திங் டு ஓரி சார். ஹை பீவர், அதோட ரெம்ப நேரமா தண்ணி சாப்பாடு எதுவும் எடுத்துட்ட மாதிரி தெரில. அதான் டீஹைட்ரேட் ஆகி, அன்கான்ஷியஸ் ஆகிருக்காங்க. வைரல் பீவர் மாதிரி தெரில, எதுக்கும் பிளட் டெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கேன். ட்ரிப்ஸ் போய்ட்டிருக்கு, டெம்பரேச்சர் குறையறதுக்கு இன்ஜக்சன் போட்டிருக்கேன். ஷி வில் பி ஆல் ரைட் சூன்” எனவும்

“தேங்க்ஸ் அர்ஜுன்” என்றபடி விரைந்து உள்ளே சென்றவனுக்கு, துவண்டு போய் கிடந்தவளை கண்டதும், குற்ற உணர்வில் கண்ணில் நீர் கோர்த்தது

“ச்சே, பெரிய இவனாட்ட அவளுக்கு மனச புரியவெக்கறேனு இப்படி ஆயிடுச்சே” என சுய கோபத்தில் தன்னையே திட்டிக் கொண்டான்

தோளில் ஆறுதலாய் கை விழ திரும்பி பார்த்தவன், “மாமா…” என ஏதோ சொல்ல வர

பேசாதே என ஜாடை காட்டியபடி, அவனின் நிலை புரிந்தவராய் தோளோடு ஆதரவாய் அணைத்துக் கொண்டார் சந்திரசேகரன்

அன்று முழுதும் அவளை விட்டு ஒரு கணமும் நகரவில்லை கெளதம். இரவு, தான் உடன் இருப்பதாக வாணி கூறிய போதும், மறுத்து தானே ஒரு நிமிடம் கூட உறங்காமல் அமர்ந்திருந்தான் கௌதம்

நடுவில் விழித்து ராதிகா ஏதோ சொல்ல வர, “எல்லாம் அப்புறம் பேசிக்கலாம் ராதிம்மா, நான் உன் பக்கத்துலயே தான் இருக்கேன். இப்ப ரெஸ்ட் எடு” எனவும், அவன் தன்னருகில் இருப்பதே போதும் என உணர்ந்தவள் போல், கண் மூடி உறக்கத்தில் ஆழ்ந்தாள் ராதிகா

டுத்த நாளே ராதிகாவின் காய்ச்சல் மட்டுப்பட, வீட்டுக்கு செல்லலாம் என்றார் டாக்டர்

தனியே அவளை எப்படி விடுவது என யோசித்த கெளதம், இந்த நேரத்தில் அவளை ஊருக்கு அனுப்பவும் மனமின்றி தவித்தான்

அதை உணர்ந்தவர் போல், தானே அவளை வீட்டுக்கு அழைத்து செல்வதாய் கூறினார் வாணி

“தேங்க்ஸ் அத்த” என கெளதம் நெகிழவும்

“டேய், என் பொண்ண கூட்டிட்டு போறதுக்கு நீ தேங்க்ஸ் சொல்றியா?” என கேலி செய்தார் வாணி

அன்றிரவு மாமா வீட்டில் தங்க கெளதம் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது

“நேத்து பூரா நீ தூங்கவே இல்ல கெளதம், வீட்டுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வா, இங்கிருந்தா நீ தூங்க மாட்ட. நாளைக்கு சண்டே தானே, காலைல வா. அதுக்குள்ள உன் ராதிகாவ யாரும் தூக்கிட்டு போயிற மாட்டாங்க” என தன் பங்கிற்கு அவனை வாரினார் சந்திரசேகரன்

“சரி மாமா போறேன்” என சலித்தவன், “ஒரே நிமிஷம் ராதிகாகிட்ட சொல்லிட்டு வந்துர்றேன்” என அவள் ஓய்வாய் படுத்திருந்த அறைக்குள் சென்றான்

அவனைக் கண்டதும் உற்சாகமாய் எழுந்து அமர்ந்தவளை தடுத்தவன், “படுத்துக்கோ ராதி, கெளம்பறேனு சொல்லத் தான் வந்தேன்” எனவும்

“கெளம்பறீங்களா?” என ராதிகாவின் முகம் வாடியது

“எனக்கும் போக மனசில்லை தான், இந்த அத்தயும் மாமாவும் தொரத்தறாங்க” என முகம் சுளித்தவன்

“ராதிம்மா, உன்கிட்ட நிறைய பேசணும், ஆனா இப்ப வேண்டாம். நல்லா ரெஸ்ட் எடு, காலைல வரேன் சரியா, பை” எனவும்

“ம்ம்… பை” என மனமின்றி விடை கொடுத்தவள், கதவருகில் சென்றவனை, “கெளதம்…” என அழைத்தாள்

“என்ன ராதி?” என்றான் அங்கிருந்தபடியே

ஒரு கணம் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தவள், “நான்… என்னை…” என உணர்ச்சிவசப்பட்டு பேச இயலாமல் நிறுத்தினாள்

“ராதிம்மா, வீணா மனச போட்டு கொழப்பிக்காத, ரெஸ்ட் எடு” எனவும்

“இல்ல… எனக்கு…” என விசும்பியவள், “என்னை வெறுத்துடாதீங்க கெளதம் ப்ளீஸ்” என அழவும்

“ஏய்… என்ன ஒளர்ர, உன்ன வெறுக்கறதா?” என பதட்டமாய் விரைந்து அவளருகே வந்தவன், அவள் கைகளை ஆறுதலாய் பற்றியபடி அருகே அமர்ந்தான்

அதற்கே காத்திருந்தவள் போல், சற்றும் எதிர்பாராத கணத்தில், “ஐ லவ் யு கெளதம்” என்றாள் ராதிகா

அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவனாய், அவளை தன் அணைப்பில் சேர்த்துக் கொண்டான் கெளதம்

தான் ஏதும் பேசினால் அவள் இன்னும் உணர்ச்சிவசப்பட்டு, அது அவள் உடல்நிலையை பாதித்து விடுமோ என பயந்தவன் போல், மௌனமாய் நின்றான் கெளதம்

திடீரென அவள் விசும்பும் ஒலி கேட்டு அதிர்ந்து விலக்கியவன், “என்னாச்சு ராதி?” என பதறவும்

“ஏன் கெளதம் என்னை இப்படி அவாய்ட் பண்ணீங்க? ரெம்ப கஷ்டமா இருந்தது. அதுவும் அன்னை இல்லத்துல யாரோ மாதிரி பேசிட்டு என்னை வீட்ல கொண்டு போய் விடக் கூட வர்லேன்னதும், என்னால தாங்கவே முடியல” என அழுதாள்

“சாரிம்மா, என்னை என்ன தான் பண்ண சொல்ற? வேற எப்படி உன்ன வெளில கொண்டு வர்றதுனு எனக்கு தெர்ல ராதி. ஆனா, இப்படி உடம்புக்கு முடியாம போகும்னு நெனக்கல. ரியலி சாரி” என்றான் உண்மையான வருத்தத்துடன்

“இட்ஸ் ஓகே, ஆனா இனி எப்பவும் விளையாட்டுக்கு கூட இப்படி செய்யாதீங்க” என்றாள், பின்னொரு நாளில் தானே அவனை விலக்கி வைக்க போவதை அறியாமல்

“ஓகே, இனி எப்பவும் என் ராதிய விட்டு நான் விலகி இருக்க மாட்டேன், ப்ராமிஸ்” என்றான், பின்னொரு நாள் அந்த சத்தியத்தை தானே உடைக்க போவதை அவனும் அப்போது அறிந்திருக்கவில்லை

“போகவே மனசில்லை ராதி, மாமா வீட்ல வெச்சா நீ ஐ லவ் யு சொல்லணும்” என கெளதம் புலம்ப

“சரி வாபஸ் வாங்கிக்கவா” என குறும்பாய் சிரித்தாள் ராதிகா

அந்த சிரிப்பு அவனை தடுமாறச் செய்ய, தன்னையும் அறியாமல் அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் மேலும் முன்னேற, அறையின் வெளியில் இருந்து வந்த “கெளதம்” என்ற வாணியின் அழைப்பில், “ச்சே…” என ஏமாற்றத்துடன் விலகினான்

அவன் முகம் போன போக்கில் ராதிகா சிரிக்க, “சிரிக்கறயா நீ? உன்ன அப்பறம் கவனிச்சுக்கறேன்” என்ற செல்ல மிரட்டலுடன் விடைபெற்றான்

வெளியே வந்தவன் “சரி மாமா, நான் கிளம்பறேன்” எனவும்

“என்னடா, உங்கம்மாகிட்ட சொல்லி கல்யாணத்துக்கு நாள் பாக்க சொல்லலாமா?” என கேலி செய்தவரிடம்

“எப்படியும் ஆண்டு விழாவுக்கு வருவாங்க தான மாமா, அப்ப நேர்லயே ராதிகாவ இண்ட்ரடியூஸ் பண்ணிக்கலாம். அதுவரைக்கும் அம்மாவுக்கு சஸ்பென்ஸா இருக்கட்டும் சொல்ல வேண்டாம். நேர்ல சொன்னா தான் மாமா நல்லாருக்கும், அதுவும் நானே சொல்லனும், நோ மிடில்மென்” என சிரித்தவன்

“அது மட்டுமில்லாம, உங்கள மாதிரி மாட்டிக்காம இன்னும் கொஞ்ச நாள் பேச்சிலர் லைப் என்ஜாய் பண்றனே மாமா” என வேண்டுமென்றே வாணியை ஓரக்கண்ணால் பார்த்தபடி வம்பு செய்தவனை

“அடிங்க…” என வாணி செல்லமாய் அடிக்க கை எடுக்க, “மீ எஸ்கேப்” என சிரிப்புடன் தப்பித்து ஓடினான் கெளதம்

மேலும் நான்கு நாட்கள் கழித்தே ராதிகாவை அவள் வீடு செல்ல அனுமதித்தார் வாணி.

அதன் பின்னும், தினமும் அவளை கௌதமே காலை மருத்துவமனைக்கு அழைத்து வந்து, பின் மாலை வீட்டிற்கு அழைத்து சென்றான். அவனுக்கு ஏதேனும் வேலை இருந்தாலும், காத்திருந்து அவனுடனே வீடு சென்றாள் ராதிகா

மருத்துவமனையிலும் எல்லோருக்கும் இவர்கள் விஷயம் தெரிந்துவிட்டபடியால், அவளுக்கும் தயக்கம் இருக்கவில்லை

அதோடு, அன்னை இல்லத்தின் ஆண்டு விழாவும் நெருங்கிவிட்டிருக்க, ராதிகா இல்லத்து குழந்தைகளுக்கு நடன பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது.

எனவே மருத்துவமனையிலிருந்து, மாலை இருவரும் ஒருமணி நேரம் அன்னை இல்லத்தில் செலவிட்டு, பின்னே வீடு சென்றனர்

இரவு உணவை கூட அவள் கையாலே உண்டுவிட்டு, பின் மனமின்றி விடைபெற்று சென்றான் கெளதம்

அவனோடு இருக்கும் ஒவ்வொரு நொடியையும், ரசித்து மனதினுள் பொக்கிஷமாய் சேமித்தாள் ராதிகா. ஒரே வாரத்தில், அவனின்றி தான் இல்லை என்ற நிலைக்கு வந்திருந்தாள்

சஹானா” இணைய இதழ் YouTube சேனலுக்கு செல்ல, இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும் – டிசம்பர் 16, 2020)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: