www.sahanamag.com
தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே❤ (அத்தியாயம் 10) – எழுதியவர் : சஹானா கோவிந்த்

ருத்துவமனையின் நுழைவாயில் அருகிலேயே, தன் அறைக்குச் செல்ல குறுக்கு வழி ஒன்று இருந்தது. அதைத் தவிர்த்து, வேண்டுமென்றே ராதிகா அமர்ந்திருக்கும் கேபின் வழியாக சென்றான் கெளதம்

அங்கு அவளைக் காணாமல் மனம் நோக கடிகாரத்தை பார்த்தவன், “ஹ்ம்ம்… ஆர்வ கோளாறுல ரெம்ப நேரத்துல வந்துட்டேன் போல இருக்கே” என தன்னையே திட்டிக் கொண்டான்

மறுகணமே, “வீட்ல என்ன வெட்டி முறிக்கறா? நேரத்தோட வர வேண்டியது தான. இங்க ஒருத்தன் காத்துட்டு இருப்பான்னு கொஞ்சமாச்சும் நெனப்பிருக்கா இவளுக்கு?” என மானசீகமாய் அவளை திட்டியபடி, தன் அறை நோக்கிச் சென்றான் கெளதம்

சற்று நேரத்திலேயே எமெர்ஜன்சி கேஸ் ஒன்றன் பின் ஒன்றாய் வர, மதியம் வரை ஆபரேஷன் தியேட்டரிலும் ஐ.சி.யு வார்டிலேயுமே நேரம் கழிந்தது. பசி வயிற்றைக் கிள்ள, அதைக் கூட பொருட்படுத்தாது ராதிகாவை காணச் சென்றான் கெளதம்

கருமமே கண்ணாய் கணினி திரையில் கண் பதித்திருந்தவளின் அருகே சென்றவன், “ஹாய் ராதி” என மெல்லிய குரலில் அழைக்க, தூக்கி வாரிப் போட நிமிர்ந்தாள் ராதிகா

“ரிலாக்ஸ் ரிலாக்ஸ், எதுக்கு இவ்ளோ டென்ஷன்” என கெளதம் கேலியாய் சிரிக்க, அந்த சிரிப்பில் ராதிகாவின் மனம் அவனிடம் சரணடைய விளைந்தது

ஆனாலும் தான் முன் தினம் செய்து கொண்ட உறுதியின்படி, முகத்தில் உணர்ச்சியை மறைத்து, “சொல்லுங்க டாக்டர், சந்திரசேகரன் சாரை பாக்கணுமா?” என தொலைபேசியை கையில் எடுத்தவாறே வினவினாள்

வேண்டுமென்றே டாக்டர் என்றழைத்து தன்னை தூர நிறுத்த அவள் செய்யும் முயற்சியை உணர்ந்தவனாய், “இல்ல, அவரோட செக்ரடரிய தான் பாக்கணும்” என குறும்பாய் சிரித்தான்

அவள் மௌனமாய் மீண்டும் தன் வேலையில் மூழ்க, “ராதி, லன்ச் சாப்பிட வெளிய போலாம் வா” என்றவன் உரிமையாய் அழைக்க

“ப்ளீஸ் டாக்டர், டிஸ்டர்ப் பண்ணாதீங்க. எனக்கு வேலை இருக்கு” என்றாள் வரவழைத்துக் கொண்ட கோபத்துடன்

பசி வேகத்தில் இருந்தவனுக்கு, அவளின் புறக்கணிப்பு கோபத்தை கிளற, “நான் மட்டுமென்ன வேலை வெட்டியில்லாம உன்கிட்ட அரட்டை அடிச்சுட்டு இருக்கனா?” என எரிச்சலுடன் உரைத்தவன், கோபத்துடன் வெளியேறினான்

ஒருவகையில் அவனின் நெருக்கத்தை விட கோபமே மேல் என நினைத்தாள் ராதிகா. ஆனால், இரவின் தனிமையில் கௌதமின் நினைவுகள் ஆட்கொள்ள, சோர்ந்து போனாள்

கௌதமிற்கு ராதிகாவின் மேல் இருந்த கோபம், சற்று நேரம் கூட நீடிக்கவில்லை. அன்றிரவு இருவருக்கும் உறக்கமில்லா இரவாகியது

றுநாள் காலை மருத்துவமனைக்கு சற்று தொலைவில், அவள் வழக்கமாய் வரும் வழியில் காத்திருந்தான் கௌதம்

ராதிகா இருந்த மனநிலையில், அவன் காரை கவனிக்க தவறினாள். அவள் அருகே வந்தவுடன், காரை விட்டிறங்கி அவளை மறித்தபடி நின்றான் கௌதம்

அதை எதிர்பாராதவள், தடுமாறி பின் சமாளித்து நின்றாள். ஒரு நொடி மனம் சலனப்பட அவனைப் பார்த்தவள், அடுத்த கணம் முகம் இறுக அவனை கடந்துச் செல்ல முயன்றாள்

அவளை செல்ல விடாமல் தடுத்தவன், “எத்தன நாளைக்கு நீ இப்படி என்னை அவாய்ட் பண்ண முடியும்னு நெனைக்கற ராதி?” என்றான் சவாலாய்

“நான் ஹாஸ்பிடல் போகணும்” என்றாள் கடிகாரத்தை பார்த்தபடி

“போலாம், சேந்தே போலாம். மொதல்ல எனக்கு பதில் சொல்லு” என்றான் பிடிவாதமாய்

“என்ன பதில் சொல்லணும்?” என்றாள் வேண்டுமென்றே

எதுவும் பேசாமல் அவளை மௌனமாய் பார்த்தான் கெளதம். அவன் பார்வை அவளை பலவீனமாக்க, “வழி விடுங்க டாக்டர்” என்றாள் வேண்டுமென்றே, தனது டாக்டர் என்ற அழைப்பு அவனை கோபமுறச் செய்யும் என தெரிந்தே கூறினாள்

அவளின் யுக்தி புரிந்தவனாய் புன்னகைத்த கெளதம், “நீ டாக்டர்னு கூப்ட்டா நான் கோபப்பட்டு இடத்தை காலி பண்ணுவேனு நீ நெனைக்கற. ஹ்ம்ம், என்னா வில்லத்தனம்டா சாமி” என சிரித்தவன்

“ராதிம்மா, நேத்து ஏதோ பசில கொஞ்சம் சட்டுனு கோவம் வந்துருச்சு. இன்னைக்கி அதுக்காகவே அஞ்சு இட்லியை உள்ள தள்ளிட்டு வந்திருக்கேன்” என குறும்பாய் சிரிக்க

“உங்களுக்கு இப்ப என்ன வேணும்?” என்றாள் சலிப்பாய்

“பதில்” என்றான்

“பதில் தான, ஒகே. எனக்கு நீங்க சொன்ன விஷயம் பிடிக்கல, போதுமா? நான் போலாமா சார்?” என வரவழைத்துக் கொண்ட பணிவுடன் ராதிகா கேட்க

ஒரு கணம் தீர்க்கமாய் அவளைப் பார்த்தவன், “ஒகே. நீங்க போங்க ராதிகா” என விலகி நின்றான் கெளதம்

அவன் மேலும் வாதம் செய்யாமல் சட்டென விலகி நின்றது, ராதிகாவின் மனதில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது

தான் வேண்டியதும் அதைத் தான் என்ற போதும், அவனின் விலகல் அவள் மனதை காயப்படுத்தியது

அவள் முகத்தில் தோன்றிய ஏமாற்றத்தை ரசித்தபடி, “யு கேன் கோ ராதிகா” என கெளதம் மீண்டும் கூற, தான் அங்கேயே நிற்பதை அப்போது தான் உணர்ந்தவளாய் வேகமாய் நகர்ந்தாள்

“உன்கிட்ட நேர்மையா காதலை சொன்னா அலையவிடறியா? கொஞ்சம் வம்பு பண்ணினா தான் நீ வழிக்கு வருவ போலிருக்கு” என மனதிற்குள் நினைத்து சிரித்தபடி காரில் ஏறினான் கெளதம்

ந்த வாரம் முழுதும், வேண்டுமென்றே ராதிகாவை தவிர்த்தான் கெளதம். சந்திரசேகரை பார்க்க செல்ல வேண்டி இருந்த போதும், அவளை திரும்பியும் பாராமல் நேராய் அவர் அறைக்குள் சென்று திரும்பினான்

ராதிகா என ஒருத்தி இருப்பதையே மறந்தவன் போல் நடந்து கொண்டான். அவனின் அந்த புறக்கணிப்பு, ராதிகாவை மிகவும் காயப்படுத்தியது.

உண்மையில், அவளைக் காணும் ஆவலிலேயே ஏதோ சாக்கிட்டு கெளதம் அவன் மாமா சந்திரசேகரை காண வந்ததை ராதிகா அறியவில்லை

வியாழனன்று மாலை, வழக்கம் போல் “அன்னை இல்லம்” சென்றான் கெளதம்

அவனின் வருகை உணர்ந்து, நடன வகுப்பை மறந்து, கெளதமை பார்த்தாள் ராதிகா.

அவள் அறியாவண்ணம் அதை ரசித்தவன், ராதிகா அங்கு இருப்பதேயே உணராதவன் போல், அடுத்த வகுப்பறையில் இருந்த தீபாவை நோக்கி சென்றான்.

கண்ணில் நீர் கோர்க்க அவனைப் பின் தொடர்ந்தன அவள் விழிகள்

தீபா இருக்கையில் சாய்வாய் அமர்ந்திருக்க, அன்னை இல்ல பிள்ளைகள் எதிரில் இருந்த பெஞ்சுகளில் அமர்ந்து, தங்கள் வரைந்த ஓவியத்திற்கு உற்சாகமாய் வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தனர்

“ஹாய் தீபா, பிஸியா?” என்றபடி, அருகில் ஒரு நாற்காலியை இழுத்து அமர்ந்தவனை

“என்ன டாக்டர் சார், அதிசயமா எங்களை எல்லாம் கண்ணு தெரியுது?” என கேலி பேசியவளை முறைத்தவன்

“என் பேர் உனக்கு தெரியாதா? எதுக்கு டாக்டர்’ங்கற?”  என கெளதம் சீற

ஏதோ பிரச்சனை என யூகித்தவளாய், “என்னாச்சு கெளதம்?” என தீபா அக்கறையாய் கேட்கவும், அவளின் அக்கறை கௌதமின் கோபத்தை துரத்தியது

“சாரி தீபா, லவ்வ சொன்னா அவ யாரோ மாதிரி டாக்டர்னு கூப்பிடறா. நீயும் அப்படியே கூப்டியா, அதான் கோபம் வந்துருச்சு” என கெளதம் சோகமாய் கூற, அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்தாள் தீபா

“ஏய், என்னைப் பாத்தா உனக்கு எப்படியிருக்கு?” என முறைத்தான் கெளதம்

“ம்ம்ம்… டாக்டர் மாதிரி இருக்கு” என தீபா கேலியாய் சிரித்தாள்

“இன்னொரு வாட்டி டாக்டர்னு கூப்ட்டா, பிரெண்டுன்னு கூட பாக்காம கொன்னுடுவேன்” என கெளதம் பொய் கோபம் காட்ட

“டாக்டர பின்ன டாக்டர்னு கூப்பிடாம வேறென்ன கூப்பிடுவாங்க?” என தீபா மேலும் கேலி செய்ய

“காம்பௌண்டர்னு வேணா கூப்டு, நோ டாக்டர்” என கெளதம் பாவமாய் கூற, தீபா சிரித்த சிரிப்பு கௌதமையும் தொற்றிக் கொண்டது

அவர்கள் பேசியது பிள்ளைகளின் சலசலப்பில் தெளிவாய் புரியாத போதும், இருவரின் சிரிப்புச் சத்தம் ராதிகாவின் கோபத்தை கிளறியது

“ஒருவழியா சொல்லிட்டியா?” என தாழ்ந்த குரலில் தீபா கேட்க, சுருக்கமாய் நடந்ததை விவரித்தான் கெளதம்

“பாவம் கெளதம் அவ, லைப்ல ரெம்ப கஷ்டப்பட்டிருக்கா. உடனே சரினு சொல்லணும்னு நீ எதிர்பாக்கறது நியாயமில்ல” என ராதிகாவிற்கு பரிந்து பேசினாள் தீபா

“அதான் ஒரு வாரம் கண்டுக்காம இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்ற கெளதம், அங்கிருந்தே பக்கத்துக்கு அறையை எட்டி நோட்டம் விட

“இதான் நீ கண்டுக்காம இருக்கற லட்சணமா?” என கேலி செய்தாள் தீபா

“அவள பொறுத்தவரைக்கும் கண்டுக்காம” என்றவன், “இன்னைக்கி நீயே ராதிய ட்ராப் பண்ணிடு, நான் கிளம்பறேன்” எனவும்

“என்ன கெளதம் இது? அவ அப்செட் ஆய்டுவா”

“ஆகட்டும் ஆகட்டும், அப்பத்தான் உண்மை வெளில வரும். சண்டே மொத்தமா சொல்லிக்கறேன்”

“ஆனா…” என தீபா ஏதோ சொல்ல வர, அதற்குள் அவள் கைபேசியில் வாணியின் எண் ஒளிர்ந்தது

“சொல்லுங்க ஆன்ட்டி. ஓ…  இப்பவா? சரி ஆன்ட்டி…. ஆமா, கெளதம் இங்க தான் இருக்கான், ஓகே. ம், ராதிகாவையும் கூட்டிட்டு வரேன்” என அழைப்பை துண்டிக்க

“வாணி அத்தையா? என்னமோ ராதிகானு சொன்ன மாதிரி இருந்தது” என கெளதம் கேட்கவும்

“உனக்கு வேணுங்கறது மட்டும் தான கேட்கும்” என கேலி செய்தவள், “இன்னும் ரெண்டு வாரத்துல ஆண்டு விழா வருதில்ல, அதைப் பத்தி ஏதோ பேசணும்னு எல்லாரையும் வரச் சொன்னாங்க ஆன்ட்டி”

“சரி நான் முன்னாடி போறேன், நீ என் ஆள கூட்டிட்டு வா” என்றான்

“தேவைன்னா நீயே கூட்டிட்டு போ” என தீபா வம்பு செய்ய

“வந்தா நான் ரெடி” என சிரித்தவன், “அவ தான் பேசவே காசு கேக்கறாளே” என வெளியேறினான்.

ராதிகா இருந்த வகுப்பறையை தாண்டும் போது, அவளின் தொடர்ந்த பார்வையை மிகவும் சிரமத்துடன் தவிர்த்தான் கெளதம்

“ஹாய் அத்தை, என்ன ஒரே ஜாலியா இருக்கீங்க போல?” என கேலியுடன் அருகே வந்து அமர்ந்த கௌதமை, பொய் கோபத்துடன் முறைத்தார் வாணி

“ஏண்டா பேச மாட்ட? ரெண்டு வாரத்துல பங்சன வெச்சுகிட்டு ஒரே டென்ஷனா இருக்கு. பெரிய ஆளுங்கள எல்லாம் இன்வைட் பண்ணியிருக்கோம், அதுக்கு தகுந்த மாதிரி ஏற்பாடும் இருக்கணுமே” என கவலையுடன் கூற

“நோ டென்ஷன் அத்த, என்ன செய்யணும்னு சொல்லுங்க, செஞ்சரலாம்” எனவும்

“அவனை நம்பாதீங்க ஆன்ட்டி, செஞ்சரலாம் பாத்துக்கலாம்னு சொல்லிட்டு சர்ஜரி எமர்ஜன்சினு எஸ்கேப் ஆய்டுவான்” என கேலியுடன் உள்ளே நுழைந்தாள் தீபா, உடன் வந்த ராதிகாவின் சோர்ந்த முகத்தை பார்த்ததும், கௌதமின் மனம் வருந்தியது

“மேடம், இதுல நீங்க சொன்ன மாதிரி யார் யாருக்கு என்ன டியூட்டினு நானும் தீபாவும் ஒரு லிஸ்ட் பண்ணி இருக்கோம்” என வாணியிடம் ஒரு காகிதத்தை நீட்டினாள் ராதிகா

அடுத்த அரைமணி நேரம், விழா ஏற்பாடுகள் பற்றிய பேச்சில் நேரம் கழிந்தது. ராதிகா கூறிய சில யோசனைகளுக்கு, வேண்டுமென்றே தீபாவிடம் பதில் கூறினான் கெளதம்

“கமிஷனர் சார்கிட்ட நான் லாஸ்ட் வீக்கே பேசிட்டேன் அத்த. கலெக்டர் வர்றதால நீங்க எதுவும் சொல்ல வேண்டியதில்ல, நாங்களே செக்யூரிட்டி எல்லாம் பாத்துப்போம்னு சொன்னாரு” என கெளதம் கூற

“அப்ப அந்த பிரச்சனை முடிஞ்சுது” என நிம்மதியானார் வாணி

“சரி அத்த, நான் கிளம்பறேன். பை தீபா” எனவும்

“கொஞ்சம் இரு கெளதம். ராதிகாகிட்ட டான்ஸ் ட்ராமா பத்தி கொஞ்சம் பேசணும், அப்புறம் கூட்டிட்டு போ” எனவும்

“இல்லத்த, எனக்கு வேற ஒரு வேலை இருக்கு, அவங்க தீபாவோட போய்க்குவாங்க” என வேண்டுமென்றே யாரோ போல் மரியாதை கொடுத்து பேசினான் கெளதம்

அதற்கு மேல் தாங்க இயலாமல் கண்ணில் நீர் கோர்க்க, “ஒரு நிமிஷம்” என வெளியேறினாள் ராதிகா. பின்னோடு செல்ல எழுந்த கால்களை கட்டுப்படுத்தி அமர்ந்தான் கெளதம்

என்னவென புரியாமல் வாணி விழிக்க, சற்று பொறுத்த தீபா “ஏன் கெளதம் அவள இப்படி அழ வெக்கற?” என முறைத்தாள்

“என்னாச்சு?” என்ற வாணியின் கேள்விக்கு, நடந்ததை விவரித்தாள் தீபா

“பாவண்டா அவ”, என வாணி ராதிகாவிற்கு பரிந்து பேசவும்

“என்னைப் பாத்தா யாருக்கும் பாவமாவே இல்லையா?” என கெளதம் பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க

“நிச்சியமா இல்ல” என்றாள் தீபா உடனேயே

“சரி சரி அவ வர்றா, வேற பேசு” என்றவன், “ஓகே பை” என்றபடி வெளியேறினான்.

அவளின் அழுது சிவந்த விழிகள் நடந்ததை உணர்த்த, அணைத்து ஆறுதல் கூற துடித்த மனதை அடக்கினான் கெளதம் . அவனின் அந்த ஒதுக்கம், ராதிகாவை சித்ரவதை செய்தது

அவன் வேண்டுமென்றே செய்கிறான் என புரியாமல், என் மேல் காதல் என்று அவன் சொன்னதெல்லாம் வெறும் வார்த்தை தானா? நான் வேண்டாம் என்றதும் சரியென விலகுகிறான் என்றால், அவன் மனதில் நான் இல்லை என்று தானே அர்த்தம் என கண்ணீர் வடித்தாள்

தான் தான் அவனை மறுத்தோம் என்பதையே மறந்தவளாய், அவனையே குற்றவாளியாக்கி, பின் தானும் அதற்கு ஒரு காரணம் என எண்ணி நொந்து போனாள்.

இரவு முழுதும் அழுதவள், விடியும் நேரத்தில் சோர்ந்து உறங்கினாள்

#ad இந்த தொடர்கதையை எழுதி வரும் எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

(தொடரும்…டிசம்பர் 1, 2020)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: