தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே… (அத்தியாயம் 4)

தொடர்ந்து வந்த வாரத்தில் ஓர் நாள், பணி முடிந்து மருத்துவமனையை விட்டு காரில் வெளியே வந்தான் கெளதம்

வலது பக்கம் திரும்ப சிக்னலுக்காக காத்திருந்த நேரத்தில், பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ராதிகாவைக் கண்டான்

அவளின் பச்சை வண்ண சல்வாரை பார்த்ததும் “பச்சை நிறமே பச்சை நிறமே” என்ற வரியை முணுமுணுத்தன அவனது உதடுகள்

“பச்சையெல்லாம் ஒரு கலரா, அடிக்கற கண்றாவி கலர்” என முன்பு கமெண்ட் அடித்ததெல்லாம், செலக்டிவ் அம்னீசியா ஆனது போலும்

“ச்சே, நல்ல மழை வேற, பாவம், லிப்ட் வேணுமானு கேட்டு பாக்கலாம்” என அவளிடம் பேச, தனக்கு தானே சாக்கிட்டுக் கொண்டு, அவளருகே சென்று  காரை நிறுத்தினான்

“ஹாய் ராதிகா, வாங்க டிராப் பண்றேன்” என கெளதம் அழைக்க

“இட்ஸ் ஒகே சார், பஸ் வர்ற டைம் தான்” என்றாள் ராதிகா

“பஸ்ஸுக்கு குடுக்கற சார்ஜ் எனக்கு குடுங்க, அதை விட சீக்கரம் கொண்டு போய் விட்டுடறேன்” என்றான் கேலியாய்

“அ…அதில்ல சார், உங்களுக்கு எதுக்கு சிரமம்?”

“அந்த காலத்துல இருந்து லிப்ட் குடுக்கறேன்னு சொல்றவங்களுக்கு இதே பதில் தானா? மழை வேற கொட்டுதே ராதிகா” எனவும்

“அ…அது… ” என தயங்கியவளை, அதற்கு மேல் சங்கடத்தில் ஆழ்த்த மனமின்றி

“ஒகே உங்க இஷ்டம்” என ஏமாற்றத்தை முகத்தில் காட்டாமல் கெளதம் காரை உயிர்பித்தான்

அதே நேரம் வந்த பஸ் நிற்காமல் சென்றது,  “இப்ப என்ன?” என்பது போல் அவளை பார்த்து முறுவலித்தான் கெளதம்

ராதிகா.அசடு வழிய நிற்க, அவள் நின்றிருந்த பக்க கார்க் கதவை திறந்தான் கெளதம்

ராதிகா மௌனமாய் ஏறி அமர,  “இப்பவாச்சும் என்னை நம்பினீங்களே” என அவன் ஒருமாதிரிக் குரலில் கூற

“அய்யோ அப்படியெல்லாம் இல்ல சார், நிஜமாவே சிரமம் தர வேண்டாம்னு தான்” என சமாளித்தாள்

“கவனமா இருக்கறது தப்பொன்னும் இல்ல” என்றவன், காரைக் கிளப்பினான்

சிறிது தூரம் செல்லும் வரை, காரில் மௌனமே வியாபித்திருந்தது

“இங்க பேமிலியோட இருக்கீங்களா? இல்ல நீங்க மட்டும் தானா?” என அவளை பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டான் கெளதம்

“நான் மட்டும் தான் சார், அம்மா அப்பா எல்லாரும் சொந்த ஊர்ல இருக்காங்க”

இன்னும் திருமணமாகவில்லை என அவள் பதிலில் இருந்து புரிந்ததும், ஏனோ நிம்மதியாய் உணர்ந்தான்

தன் நிம்மதிக்கான காரணத்தை ஆராய இது நேரமல்ல என உணர்ந்தவன், “நீங்க ஒரே பொண்ணா வீட்ல?” என பேச்சை வளர்த்தான்

“இல்ல சார், அண்ணா அப்புறம் நான்”

“ஓ… அண்ணாவுக்கு கல்யாணம் ஆய்டுச்சா?”

“ம்…” என்றதோடு மௌனமானாள். ஏனோ குடும்பம் பற்றிய பேச்சில், அவள் சற்று இறுகியது போல் உணர்ந்தான் கெளதம்

அதற்கு மேல் பொதுவான விஷயங்கள் பற்றி பேசி, அவளை இலகுவாக்க முயன்றான்

அவளின் இலகுத்தன்மை தனக்கு ஏன் முக்கியம் என்ற கேள்வி, மனதில் எழாமல் இல்லை

அவள் அபார்ட்மெண்ட் இருக்கும் இடத்தை நெருங்கவும், “இங்கயே இறங்கிக்கறேன் சார், உள்ள வந்தா நீங்க மறுபடி யூ-டர்ன் எடுக்கணும்” என்றாள்

“ட்ராப் பண்ணினதுக்கு வீட்டுக்கு கூப்பிட்டு ஒரு கப் காபி குடுக்க மாட்டீங்களா ராதிகா?” என சிரிப்புடன் கெளதம் கேட்க, அவள் தயக்கமாய் பார்த்தாள்

“இட்ஸ் ஒகே, சும்மா கேட்டேன்” என சமாளித்தவன், “ஒகே ராதிகா, அப்புறம் பாக்கலாம் பை” என அவள் இறங்கியதும் காரை கிளப்பினான்

ன்று வேலைப் பளு அழுத்தியதில், “வீட்டுக்கு சென்றதும் உணவு கூட வேண்டாம், நேராய் உறக்கம் தான்” என்ற முடிவுடன் மருத்துவமனையை விட்டு கிளம்பிய கௌதமிற்கு, ஏனோ நித்திராதேவி கண்ணாமூச்சி காட்டினாள்

எல்லோரிடமும் கலகலப்பாய் பேசும் சுபாவம் உள்ளவன் தான் என்ற போதும், ராதிகாவிடம் போல் வலியச் சென்று பேச்சை வளர்ப்பது, கௌதமின் வழக்கமில்லை

கேலியும் சிரிப்புமாய் பேசினாலும், தனக்கென ஒரு எல்லைக் கோட்டை வகுத்துகொள்வான்

அதேப் போல், யாரிடமும் அவர்களாய் கூறினால் ஒழிய, சொந்த விஷயம் பற்றி அவன் கேட்டதில்லை

ஆனால் ஏனோ ராதிகாவை பற்றி அறிந்து கொள்ள ஆவல் தோன்றியது

“இந்த வயதின் இயல்பான ஈர்ப்பில், அழகான பெண்ணை பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் அன்றி வேறொன்றுமில்லை” என, தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டான் கெளதம்

“ரா…தி…கா… அழகான பேர், பேர் மட்டுமில்ல அவளும் அழகு தான். கார்ல வர்றதுக்கு தயங்கி நின்னப்ப, அந்த தயக்கம் கூட அழகாத் தான் இருந்தது. ராதிகா, செல்லமா கூப்பிடரதுன்னா ராதினு கூப்பிடனுமோ” என எண்ணம் போன போக்கில் நினைத்தான்

அடுத்த கணமே, “ச்சே, என்ன நெனப்பு இது? அதிகம் தெரியாத ஒரு பொண்ணைப் பத்தி, இப்படி எல்லாம் யோசிக்கறது நாகரீகம் இல்லையே. இந்த மாதிரி நான் நெனைக்கறது தெரிஞ்சா, அவ என்கிட்ட பேசக்கூட மாட்டா. ஐயோ தூக்கமும் வந்து தொலைக்க மாட்டேங்குது” என புலம்பினான்

சற்று நேரம் அமைதியாய் இருந்தவன், “இதுல தப்பென்ன இருக்கு?” என தனக்குத் தானே கேட்டுக் கொண்டு எழுந்து அமர்ந்தான்

“நான் ஒரு எலிஜிபில் பேச்சிலர், ஒரு பொண்ணை பிடிச்சுருந்தா, அவ சரியானவளா இருந்தா இப்படி யோசிக்கறதுல என்ன தப்பு?” என தனக்குள் பட்டிமன்றம் நடத்தினான்

இன்னும் காதல் அது இதென எதுவும் தோன்றவில்லை என்றாலும், ராதிகாவிடம் தனக்கு ஈர்ப்பு இருப்பதை கௌதமால் மறுக்க இயலவில்லை

“அவ மனசுல என்ன இருக்குனு கண்டுபிடிக்கணும்” என நினைத்தபடி, ஒரு வழியாய் எப்படியோ உறங்கினான்

ரண்டு வாரத்திற்கு பின், ஒரு வியாழன்று வாணி அத்தையைப் பார்க்க அன்னை இல்லத்திற்கு சென்ற கௌதமிம், அங்கு ஒரு இனிய அதிர்ச்சிக்கு ஆளானான்

“ராதிகா, நீங்க எங்க இங்க?” என கெளதம் ஆச்சர்யம் கலந்த மகிழ்வுடன் கேட்க

“வாரத்துல ஒரு நாள் இங்க டான்ஸ் கத்துத் தரேன் சார், பசங்க வர்றதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றாள் ராதிகா, எப்போதும் போல் புன்னகைப் பூசிய முகத்துடன்

“ஓ… அத்தை சொன்ன டான்ஸ் டீச்சர் நீங்க தானா? ஒகே ஒகே, இன்னும் வேற என்ன திறமை எல்லாம் ஒளிச்சு வெச்சுருக்கீங்க மேடம்” என அவன் கேலி போல் கேட்க

“வேற எதுவும் இல்ல சார்” என முறுவலித்தாள்

அவள் சிரிக்கும் போது, கண்களின் ஓரம் சுருங்கி, அழகுக்கு அழகு சேர்ப்பதாய் தோன்றியது கெளதமிற்கு

கௌதமின் பார்வை ராதிகாவின் முகத்தில் நிலைத்திருக்க, “வாங்க பாரின் ரிடர்ன் பந்தா பார்ட்டி” என கிண்டலாய் கூறியபடி, பக்கத்து அறையில் இருந்து வெளியே வந்தாள் தீபா

“ஓ… நீயும் இங்க தான் இருக்கியா? பிரகாஷ் இன்னிக்கி ஹாப்பியா வீட்டுக்கு கிளம்பினப்பவே நெனச்சேன்” என தோழியிடம் வம்பு வளர்த்தான் கெளதம்

தீபா அவனை முறைக்க, அவர்களின் பேச்சை புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா

சற்று நேர அரட்டைக்குப் பின் பெண்கள் இருவரும் பாடம் எடுக்கச் செல்ல, வாணியின் அலுவலக அறைக்கு சென்றான் கெளதம்

“அடடே இந்த வழியெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா கெளதம்?” என வாணி கேலி செய்ய

“மறந்து போச்சு அத்தை, எப்படியோ தேடிட்டு வந்துட்டேன்” என சிரிப்புடன் பதில் கொடுத்தான் கெளதம்

அன்னை இல்லத்து பிள்ளைகளுக்கு வேண்டிய மருந்துகள் சிலவற்றை வாணியிடம் கொடுத்தவன், சற்று நேரம் பேசியிருந்துவிட்டு கிளம்பினான்

மீண்டும் ஒருமுறை ராதிகாவை காணும் ஆர்வத்தில், நடன வகுப்பு நடைபெறும் இடத்திற்கு இட்டுச் சென்றன அவன் கால்கள்

“ஆயர் பாடி மாளிகையில்” என்ற பாட்டு ஒலித்துக் கொண்டிருக்க, ராதிகா முன்னால் நின்று அபிநயம் பிடித்துக் காட்ட, பிள்ளைகள் அவள் செய்வதை திருப்பிச் செய்து கொண்டிருந்தனர்

நான்கு வயது சிறுமி ஒருத்தி, அபிநயம் பிடிக்க வராமல் விழிக்க, பாட்டை நிறுத்தி விட்டு அந்த சிறுமியின் அருகே வந்தாள் ராதிகா

“இங்க பாருடா கண்ணா, கைய இப்படி வெச்சு, காலை கொஞ்சம் மடிச்சு, தலையக் கொஞ்சம் அப்படி சாச்சுக்கோ, ஆங்… அவ்ளோ தான்…  அட பிரியாக்குட்டி அழகா செஞ்சுட்டாளே” என அந்த பிள்ளையின் கன்னத்தில் செல்லமாய் இதழ் பதித்தாள் ராதிகா

ராதிகா அளித்த முத்தத்திலும் பாராட்டிலும், உலகையே வென்ற மகிழ்ச்சியில் திளைத்தது அச்சிறு குழந்தை

அக்காட்சியில் லயித்து, தன்னையும் அறியாமல் “லவ்லி” என்றான் கெளதம், அந்த குழந்தையின் மேல் சின்ன பொறாமைக் கூட எட்டி பார்த்தது அவன் மனதில்

அப்போது தான் அவன் நிற்பதை கவனித்த ராதிகா “சார், நீங்க எப்போ…” என தயக்கமாய் நிமிர்ந்துப் பார்க்க

“டிஸ்டர்ப் பண்ணாம இங்க ஒரு ஓரமா உக்காந்து கிளாசை கவனிக்க அனுமதி கிடைக்குமா ராதிகா?” எனக் கேட்க, மறுக்க இயலாமல் தலையசைத்தாள்

ராதிகாவை விட்டு பார்வையை விலக்க இயலாமல் தடுமாறினான் கெளதம். ராதிகாவும் இயல்பாய் இல்லாது சற்று தடுமாறுவது போல், அவனுக்குத் தோன்றியது

சற்று நேரத்தில் வகுப்பு முடிந்து பிள்ளைகள் கலைந்து செல்ல துவங்க, கௌதம் அங்கிருக்கக் கண்டு உள்ளே நுழைந்தாள்  தீபா

“அதுக்குள்ள கிளாஸ் முடிஞ்சதா? நீ என்ன சொல்லி குடுத்து பசங்க என்ன கத்துகிட்டு, என்னமோ போ” என வழக்கம் போல் தீபாவை கேலி செய்தான் கெளதம்

“உன்னை விட நல்லாவே சொல்லித் தருவேன்” என்றவள், “கெளம்பலாமா ராதிகா?” என்றாள்

“ம்… போலாம் தீபா” என ராதிகா கூற

“நான் வேணா ராதிகாவை டிராப் பண்ணிடறேன் தீபா. எனக்கு போற வழி தான், நீ அவுட் ஆப் வே வரணுமே” என்றான் கெளதம், இயல்பாய் கூறுவது போல்

ஒரு கணம் யோசனையாய் அவனை பார்த்த தீபா, “ஒகே, நல்ல ஐடியா தான். சரி நான் கெளம்பறேன் ராதிகா, பை கெளதம்” என கிளம்பினாள்

“உனக்கு வேற எதாச்சும் வேலை இருக்கா, இல்ல போலாமா ராதிகா?” என இயல்பாய் எந்த முன் திட்டமிடலும் இன்றி, ராதிகாவை ஒருமையில் அழைத்தான் கெளதம்

அதன் பின் அவள் ஏதேனும் நினைத்து கொள்வாளோ என, யோசனையாய் அவளைப் பார்த்தான்

“போலாம் சார்” என்றாள் ராதிகா

“ம்…” என காருக்கு சென்றவன், அவள் ஏறக் காத்திருந்து கிளப்பினான்.

“சின்னதுல இருந்தே டான்ஸ் கத்துகிட்டயா?” என்றான் கெளதம் இயல்பாய் இப்போதும் ஒருமையிலேயே, தான் அதற்கு உரிமை உள்ளவன் தான் என்பது போல்

“ஆமாம் சார்”

“ஒரு சின்ன ரிக்வஸ்ட் ராதிகா. இந்த சார் எல்லாம் வேண்டாமே, பேர் சொல்லியே கூப்பிடேன். மிஞ்சி போனா உன்னை விட மூணு நாலு வயசு தான் பெரியவனா இருப்பேன்” என்றான் கெளதம் சாதாரண குரலில்

“அது, அவ்ளோ சரியா இருக்காது சார்” என்றாள் அவனை பார்ப்பதை தவிர்த்து

“ஏன்? தீபாவ எப்படி கூப்பிடற? பேர் சொல்லித் தானே”

“தீபா, எனக்கு பிரெண்ட்”

“அப்ப நான் என்ன எதிரியா?” என முறைத்தான்

“ஐயோ அதில்ல சார், தீபாவ ஆறு மாசமா அன்னை இல்லத்துல பாக்கறேன். மொதல்ல இருந்தே பேர் சொல்லியே பழகிட்டேன்”

“இப்ப இருந்து என்னையும் பேர் சொல்ல கூப்பிட பழகிக்கோ” என்றான் கட்டளை போல்

அவள் மௌனமாய் இருக்க, அவனே அதை உடைத்தான்

“லெட்ஸ் பி பிரெண்ட்ஸ், உன் பிரெண்டா என்னை ஏத்துக்க மாட்டியா? ஒரு வேள அப்படி நம்பிக்கைக்கு உரியவனா என்னை நினைக்கத் தோணலையா ராதிகா?” என்றவனின் வருந்திய குரல், அவளையும் வருத்த

“ச்சே ச்சே… அப்படி எல்லாம் இல்ல சார். உங்களப் பத்தி தெரியாதா?” என்றாள் அவசரமாய்

“மறுபடி சாரா?” என முறைத்தான்

“சாரி… கொஞ்சம் கொஞ்சமா மத்திக்க முயற்சி பண்றேன்” என்றாள்

“தட்ஸ் குட். அது சரி, உங்கள பத்தி தெரியாதானு சொன்னியே? என்ன தெரியும் என்னைப் பத்தி” என குறும்பு சிரிப்புடன் கேட்டவனிடம்

“அது, நீங்க லண்டன்ல இருந்தப்பவே வாணி மேடம், டாக்டர் சார், தீபா எல்லாரும் உங்களப் பத்தி அடிக்கடி பேசிப்பாங்க. அப்படித் தான் தெரியும்” என்றாள் சிறு புன்னகையுடன்

“அதான் என்ன தெரியும்னு கேட்டேன்” என்றான் மீண்டும்

“என்னனா, நீங்க பொறந்து வளந்ததெல்லாம் சென்னைல. தீபாவும் நீங்களும் க்ளாஸ் மேட்ஸ். வாணி மேடமுக்கும் சாருக்கும் நீங்க சொந்த மகன் மாதிரி….”

“ஹலோ ஹலோ வெயிட் வெயிட், நான் கூட ஏதோ என்னை வீரன் சூரன்னு புகழப் போறேனு பாத்தா, என்னோட பயோ-டேட்டாவை சொல்லிட்டு இருக்க” என முறைத்தான்

“எனக்கு தெரிஞ்சத தான சொல்ல முடியும்” என அவள் புன்னகைக்க, அதில் தன்னை மறந்து லயித்தான் கெளதம்

“ஓகே, ஆனா உன்னைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. உன் அம்மா அப்பா சொந்த ஊர்ல இருக்கறதா சொன்னல்ல, எந்த ஊர் அது?” என்ற கேள்வியில், அவள் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது

“என்னாச்சு ராதிகா?” என கெளதம் கவலையாய் கேட்க

தன்னை சமாளித்தபடி, “அ…அது… அம்மா அப்பா மதுரைல இருக்காங்க” என்றாள் அவன் பார்வையை தவிர்த்தபடி

“சொந்த விஷயம் பற்றி கேட்டால் ஏன் இப்படி இறுகிப் போகிறாள்? அன்றும் இப்படித் தானே முகம் மாறினாள், அப்படி என்ன ரகசியம்? ஒருவேளை காதல் ஏதேனும்?” என மனதில் தோன்றியதுமே, கௌதமின் நிம்மதி காணாமல் போனது

அவள் இடம் வந்ததும் “ஒகே சார் பை” என்றவள் விடை பெற, அவன் முறைத்தான்

“என்னாச்சு?” என அவள் விழிக்க

“இன்னொரு வாட்டி சார்னு கூப்பிட்டா உங்கிட்ட பேசறதயே நிறுத்திடுவேன்” என்றான் நிஜமான கோபத்துடன்

“ஓ…சாரி… பை” என்றாள் பெயர் சொல்வதை தவிர்த்து, அது அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது

 (தொடரும்… செப்டம்பர் 1)

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்


Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே… (அத்தியாயம் 4)
  1. அப்பா, அம்மாவுடன் சண்டை போட்டுக்கொண்டு வந்திருக்காளோ! கதையின் முடிச்சு இதில் தான் இருக்குனு நினைக்கிறேன். நல்லாப் போகுது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: