‘அறம் செய விரும்பு’ என கரும்பலகையில் எழுதிய ஆசிரியர், ஓரு மாணவனை பார்த்து “கணேசா” என்றழைத்து, “இதற்கு அர்த்தம் சொல்” என்றார்
கணேசன் பலகையில் உள்ள எழுத்தை மனதிற்குள் கூட்டி வாசித்துப் பார்த்து, பின் உரத்த குரலில் “அறம் செய விரும்பு” என்றவன், “தர்மம் செய்ய விரும்ப வேண்டும் சார்” என சொல்லி விட்டு, தன் இடத்தில் அமர்ந்து கொண்டான்
“கணேசா தர்மம் என்றால் என்ன?” எனக் கேட்க
“நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பது” என்றான் பிள்ளை
“சரியா சொன்ன உக்காரு, இதைப் பத்தி ஒரு கதை சொல்றேன்” என கதையை சொல்ல ஆரம்பித்தார்
“நமக்கு கர்ணன் ஓரு கொடையாளி என்று தெரியும், எப்படி பட்ட கொடையாளி என்று தெரியாது. கர்ணன் தான் பிறக்கும் போது, தன் உடலோடு ஒட்டிய கவச குண்டலத்தை தர்மம் கேட்டு வந்த அந்தணர் இறைவன் என தெரிந்தும் தர்மம் செய்தான். அதற்குப் பெயர் தான் தர்மம், அது போல் இக்காலத்தில் செய்ய முடியாது. ஆனால் கஷ்டப்படும் நபருக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும்” என்று சொல்ல, அதே நேரம் வகுப்பு மணி அடித்தது
பிள்ளைகள் அனைவரும் உற்சாகமாய் வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர்
அப்போது கணேசனின் நண்பன், “நாளை உன் பிறந்த நாளுக்கு என்ன டிரஸ்?” எனக் கேட்க
“இன்னைக்கி சாயங்காலம் தான் அப்பா வாங்கிட்டு வருவார்” என்றான் கணேசன்
அப்போது ஓரு மாணவன் அழுக்கான அங்கங்கே கிழிசலுடன் இருந்த சட்டையுடன் வந்த அவனைப் பார்த்து,”டேய் மணி நாளைக்கும் இந்த டிரஸ் தானா?” என மற்ற பிள்ளைகள் கேலி செய்ய, சக மாணவர்கள் கேலி செய்தனர்
அழுது கொண்டே சென்றான் அந்த ஏழை மாணவன். அவனை பார்த்துக் கொண்டே சென்றான் கணேசன்
மாலை அலுவல் விட்டு வந்ததும், கணேசனின் தந்தை அவனிடம் ஒரு பரிசு பொட்டலத்தை கொடுத்து, “நாளை உன் பிறந்தநாளுக்கான பரிசு” என கட்டி அணைத்து முத்தமிட்டு கூறினார்
தன்னிடம் கொடுத்த பரிசை கணேசன் பிரித்து பார்க்க, அதில் இரண்டு செட் ஆடைகள் இருப்பதைக் கண்டான்
“எதுக்குப்பா ரெண்டு செட் டிரஸ்?” என கணேசன் கேட்க
“காலைல ஸ்கூலுக்கு ஒண்ணு போட்டுக்கோ, அப்புறம் சாயங்காலம் பார்ட்டிக்கு ஒண்ணு” என்றார் அவன் தந்தை
மௌனமாய் தலையசைத்தவன், ஏதோ சிந்தனையுடன் தன் அறைக்கு சென்றான்
அடுத்த நாள் பள்ளிக்கு புத்தாடையுடன் வந்த கணேசனுக்கு எல்லோரும் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள்
வகுப்பு ஆரம்பிக்க முதல் மணி அடிக்க, அனைவரும் வகுப்புக்குள் சென்று அவரவர் இடத்தில் அமர்ந்தனர். சற்று நேரத்தில் வகுப்புக்குள் ஆசிரியர் நுழைய, மாணவ மாணவிகள் எல்லோரும் எழுந்து வணக்கம் கூறினார்
வருகை பதிவின் படி பெயர் சொல்லி அழைத்து குறித்து வந்த ஆசிரியர், கணேசனின் பெயர் வந்ததும் நிறுத்தியவர், “இன்னைக்கு உன் பிறந்த நாள் இல்லையா?” என கேட்டவர், அனைவரையும் எழுந்து நின்று வாழ்த்து பாடல் பாடச் சொன்னார்
அனைவரும் வாழ்த்து சொல்லி அமர்ந்ததும், நன்றி தெரிவித்த கணேசன், எழுந்து சென்று ஆசிரியரிடம் ஓரு பொட்டலத்தை நீட்டினான்
“என்ன கணேசா இது?” என ஆசிரியர் கேட்க
“ஐயா, மணிக்கும் இன்று தான் பிறந்த நாள், இந்த ட்ரெஸ்ஸை அவனுக்கு தரணும்னு கொண்டு வந்தேன்” என்றான்
மகிழ்வுடன் ஆசிரியர் மணியை பார்த்து கையசைக்க, மணி எழுந்து வந்தான்
கணேசனிடம் ஆடையை கொடுத்த ஆசிரியர், “நீயே உன் நண்பன்கிட்ட குடு” என்றார். கணேசன் ஆடையை மணியிடம் கொடுக்க, அனைவரும் கை தட்டி ஆர்ப்பரித்தனர்
பின் இருவரும் தங்கள் இருக்கைக்கு சென்று அமர்ந்த பின், பேச ஆரம்பித்தார் ஆசிரியர்
“மாணவர்களே நேற்று நான் ஔவை பிராட்டியின் ஆத்திச்சூடி பாடம் நடத்திய போது ‘அறம் செய விரும்பு’ என்ற தலைப்பில் கர்ணன் கதையை கூறினேன் நினைவிருக்கா? இன்று நம் கணேசன் தன் சக மாணவன் பிறந்த நாளுக்கு பரிசு அளித்து ஔவை பிராட்டியின் பொன் மொழிக்கு உதாரணமாக நடந்து காட்டியுள்ளான். இது போன்று எல்லா மாணவர்களும் கடைபிடிக்க வேண்டும்” என பாராட்டினார்
அனைத்து மாணவர்களும் எழுந்து நின்று கை தட்டி, தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டையும் வெளிப்படுத்தினர்
#ad
#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings