in

கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒருநாள்!! (ஆதி வெங்கட் ) – December 2020 Contest Entry 12

கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒருநாள்!!

வணக்கம்,

நாம பார்த்த இடத்தையே, புதுப் பார்வையுடன் பார்க்க வைக்கும், ஆதியின் இந்த பயணக்கட்டுரை.   Very Proud of you Adhi Venkat. This Article will be another milestone for you. Wishing more feathers in your crown  

Travelogue புகழ் வெங்கட் நாகராஜ் அண்ணாவின் சரிபாதி என்றால் சும்மாவா🙂? 

கட்டுரைக்கு அழகு சேர்த்த வெங்கட் அண்ணாவின் படங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் அவருக்கு. வெங்கட் நாகராஜ் அவர்களின் பயணக்கட்டுரையும், முன்பு நம் “சஹானா”வில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பது உப தகவல் 

“சஹானா” இதழுக்கு, அழகான இந்த பயணக் கட்டுரையை வழங்கிய ஆதி வெங்கட் அவர்களுக்கு மிக்க நன்றி.

Amazonல் பயண நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆதி. அதன் லிங்க் கட்டுரையின் முடிவில் கொடுத்துள்ளேன், விருப்பமுள்ளவர்கள் வாசிக்கலாம். நன்றி 

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த் 

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

editor@sahanamag.com

ஆதியின் பயணக் கட்டுரை👇

இந்த நோய்த் தொற்று காலத்தில் எங்கும் செல்ல முடியவில்லை என்றாலும், சில வருடங்களுக்கு முன் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒருநாள் முழுவதும் பயணம் செய்து நாங்கள் கண்டுகளித்த இடங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எல்லாம் சரியானபின் வாய்ப்பு கிடைக்கும் போது நீங்களும் சென்று வாருங்கள்.

உறவினர் திருமணம்

ஒருமுறை உறவினர் திருமணத்துக்காக சென்னை செல்ல முன் பதிவு செய்திருந்தோம். நான்கு நாட்கள் சென்னை வாசம். முதல் நாள் இரவு மலைக்கோட்டை விரைவு ரயிலில் புறப்பட்டு, காலையில் சென்னையில் காலை பதித்தோம்.

சர்ப்ரைஸ் பயணத்திட்டம் 

அங்கு போன பிறகு தான் விஷயமே தெரிந்தது. ஒருநாள் பயணமாக மாமல்லபுரம் வரை செல்ல ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார் என் கணவர் என….:)) 

மறுநாள் காலை எட்டு மணிக்கு கால் டாக்ஸி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனால் அதற்கு முன்பே தயாரானோம்.

வண்டியும் கிளம்பியாயிற்று. கிழக்கு கடற்கரை சாலையை எட்டுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. வழியெங்கும் ட்ராஃபிக் ஜாம் தான். இப்போது கிழக்கு கடற்கரைச் சாலைக்குள் வந்து விட்டோம். இனி ஒவ்வொரு இடமாக கண்டு களிக்கலாம்

VGP கோல்டன் பீச்

வழியிலே, V.G.P கோல்டன் பீச்சின் முன்பு டிரைவர் நிறுத்தினார். உள்ளே சென்றால் பாதி நாள் இங்கேயே ஓடிவிடும் என்று வாசலில் சில படங்களை எடுத்துக் கொண்டுபுறப்பட்டுவிட்டோம். இந்த சாலையிலேயே எத்தனை AMUSEMENT PARKS இருக்கின்றன. பொழுதுபோக்க ஒன்றுக்குள் நுழைந்து விட்டால் அன்றைய நாளே இனிமையாக கழிந்து விடும். கூடவே உங்கள் பர்ஸின் கனமும் குறைந்து விடும். 🙂

ISKON ஆலயம்

முதலில் நாங்கள் சென்றது ISKON கோயிலுக்கு, கிருஷ்ணனின் ஆலயம். அமைதியான அழகான இடம். எங்கும் சுத்தம். கடவுள் சிலைகளை படம் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் மற்றதை எடுக்கக் கூடாது என்று இங்கு சொன்னார்கள். அதன் படி விதவிதமான படங்கள் எடுத்துக் கொண்டோம். கிருஷ்ணனின் லீலைகள் படங்களாக சித்தரிக்கப்பட்டிருந்தன.  

அப்போது வரவிருந்த ஜன்மாஷ்டமியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு நம்மால் இயன்றதை தரச் சொல்லி அங்கிருந்த அலுவலர் சொல்லவும், எங்களால் இயன்றதை தந்து விட்டு வந்தோம். 

வெளியே பிரசாதமாக வெண் பொங்கல் தரப்பட்டது. கையை ஏந்தி நின்றால் தான் தருகிறார்கள். ஒரு தொன்னை போதும் என்று சொல்லி வாங்கிக் கொண்டோம்.

காலணிகளை எடுக்கச் சென்ற இடத்தில் உள்ள பெண்மணிகள், அங்கு நின்று கொண்டிருந்த வடஇந்திய ஆண்களிடம் ஏதோ சொல்ல முயன்று கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்தால்,  “கோவிலைச் சேர்ந்த இந்த மாமரத்தில் உள்ள மாங்காய்கள் எல்லாம் கிருஷ்ணனுக்கு உரியவை. அவற்றை பறிக்கக் கூடாது என்று நீங்களே சொல்லுங்க” என்றார். என் கணவர் அவர்களுக்கு ஹிந்தியில் சொல்லி புரிய வைத்தார்.

பின்பு அங்கிருந்து கிளம்பி, அடுத்த இடத்திற்கு சென்றோம்.

ஸ்ரீமஹாப்ரத்யங்கிராதேவி கோயில்

அடுத்து நாங்கள் சென்றது, ஸ்ரீமஹாப்ரத்யங்கிராதேவியின் கோயில். மக்கள் கூட்டமும், அங்கிருந்த கடைகளும், இது நல்ல பிரபலமான கோயில் தான் போல என்று தோன்ற வைத்தது

கேரள பாணியில் இருந்த கட்டடக்கலையில், ஸ்ரீமஹாப்ரத்யங்கிராதேவி, மண்டை ஓடு மாலையுடன் மெகா சைஸில் இருந்த மஹாகாளி,  ஸ்டெதஸ்கோப்புடன் இருந்த தன்வந்திரி, குபேரன், நவக்கிரகங்கள், குருவாயூரப்பன், மஹாலட்சுமி என தனித்தனி சன்னிதிகள் நிறைய இருந்தன

ப்ரத்யங்கிராதேவியிடம் வேண்டுதல் நிறைவேற, விரளி மஞ்சளை மாலையாக கட்டி சார்த்துகிறார்கள். அதே போல, குபேரனிடம் உள்ள மூங்கில் கூடையில் குபேரகாயத்ரியைச் சொல்லி கூண்டுக்கு அப்பால் உள்ள நாம் நாணயத்தை கீழே விழாமல் போட வேண்டும்.

வித்தியாசமாக இருந்த இந்த கோவிலில், உள்ள பல சன்னிதிகள் நாம் கேள்விப்படாதவை தான். அப்படி ஒரு சிலை மெகா சைஸில் இருந்தது. யாருடையது என்றே தெரியவில்லை – இரண்டு முகங்கள், ஏழுகைகள், மூன்று கால்கள், ஆடுதான் வாகனம். 

தக்ஷிண்சித்ரா

வாங்க! அடுத்து நாம இப்போ தென்னிந்திய கலை மற்றும் பண்பாட்டை விளக்கும் ஒரு இடத்துக்கு போகலாம்.  அந்த இடத்தின் பெயர் ”தக்ஷிண்சித்ரா” 

மிகப் பெரிய இடத்தில், மாநில வாரியாக வீடுகள், அந்த ஊரின் பொருட்களை விற்கும் கடைகள், நடன நிகழ்ச்சிகள் நடைபெற இடம் என சிறப்பாக செய்திருக்கிறார்கள். ரிசப்ஷனில் நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம்

தக்ஷிண்சித்ரா – கேரள வீடுகள்

முதலில் கேரள வீடுகளை பார்க்க ஆரம்பித்தோம். திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோட்டயம் போன்ற இடங்களில் இருந்த அந்த கால வீடுகளைப் போல் உருவாக்கி, அந்த குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்களோடு இங்கு வைத்திருக்கிறார்கள்.

ஓட்டு வீடு, மாடி வீடு, வீட்டுக்குள்ளேயே பரணுக்கு ஏணி போட்டு ஏறுவது போல் சென்றால், அங்கும் பல அறைகள். அவர்களின் பூஜையறை, வரவேற்பறை, அறைக்குள் அறை, சமையலறை, வெப்பத்தை தணிக்க வெட்டிவேர் தொங்கவிட்ட படுக்கைகள் என ஆச்சரியப்படுத்துகின்றன. இதே போல் வீட்டுக்கு பின்னேயே படகை தொங்க விட்டு வைத்திருக்கிறார்கள்

தக்ஷிண்சித்ரா – தமிழக வீடுகள் 

அடுத்து தமிழகத்துக்குச் சென்றோம். அங்கு திருநெல்வேலி அக்ரஹார வீடு, பாய் முடைபவரின் மண் வீடு, செங்கல்பட்டு குயவர் வீடு, காஞ்சிபுரத்து நெசவாளர் வீடு, தஞ்சாவூர் விவசாயியின் வீடு, செட்டிநாட்டு வீடுகள் எனப் பார்க்க நிறைய வீடுகளும், கோயில் தேர், நெசவு கண்காட்சி, கிராமத்து அய்யனார் என நிறைய இருக்கிறது. அனைத்தையும் ரசித்தபடியே சுற்றி வந்தோம்.

ஒவ்வொரு மாநிலத்தவரின் பொருட்களில் எவ்வளவு ரகங்கள். சமையலறைக்கு சென்று எட்டி பார்த்தால், அகப்பை, பாத்திரங்கள், கரண்டி மாட்டும் ஸ்டாண்டுகள், தேங்காய் துருவி, அஞ்சறைப் பெட்டி, முறம், சொளகு (இது மதுரைக்காரர்களின் முறம்), பானை, குடம் என, அழகு வாய்ந்த பொருட்கள் கண்களைக் கவர்கின்றன

அடுத்தடுத்து, ஆந்திர வீடுகளும், கர்நாடக வீடுகளும் பார்த்தோம். இவையிரண்டிலும் இரண்டிரண்டு மாடல்கள் தான் இருந்தன

தக்ஷிண்சித்ரா – கைவினைப் பொருட்கள்

கைவினைப் பொருட்களின் கடைகளும்,  துணியில் சித்திரங்களை ஒருவர் வரைந்து கொண்டிருக்க அங்கு சென்று பார்த்தோம்.

அடுத்து கண்ணாடியில் அழகான சிற்பங்களை ஒருவர் செய்து காண்பித்தார். பள்ளிச் சிறுமிகள் மாட்டு வண்டியில் சுற்றி வர அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பினோம். இங்கு வந்து விட்டால் அரை நாள் ஓடி விடுகிறது. நிதானமாக பார்க்கலாம். உணவருந்த இங்கு ரெஸ்டாரண்ட்டும், குழந்தைகள் விளையாட இடமும், பூக்களும், வெளிநாட்டவர்களும் என கண்ணுக்கு விருந்து தான்

நாங்கள் இங்கு  நுழையும் போது ஒரு புதுமணத் தம்பதிகளை பூக்களின் நடுவில் வைத்து போட்டோகிராஃபர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வரும் போதும் அதே நிலை தான்….:)) 

முட்டுக்காடு படகு குழாம்

அடுத்து நாங்கள் சென்றது, முட்டுக்காடு படகு குழாமுக்கு. படகில் சவாரி செய்வதற்கான சீட்டை வாங்கிக் கொண்டு எங்களுக்கான படகுக்கு சென்றோம். நாங்க மூன்று பேர் தான் என்பதால், துடுப்பு படகை என் கணவர் தேர்வு செய்தார். 

மோட்டார் படகை விட, இதில் தான் த்ரில்லிங்காக இருக்கும் எனச் சொன்னதால், அதில் சென்று அமர்ந்தோம். அரை மணிப் படகில் சந்தோஷமாக பயணம் செய்தோம்.

பாலத்திற்கு அடியில் செல்லும் போதும், அங்கிருந்த பறவைகளின் அருகில் செல்லும் போதும் அருமையாக இருந்தது. உற்சாகமான எங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஆளுக்கொரு குல்ஃபியை ருசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம் 

முதலைப் பண்ணை

அடுத்து நாம் செல்லப் போவது ஒரு பண்ணைக்கு…. ஆமாங்க! முதலைப் பண்ணைக்கு தான் சென்றோம். எங்கெங்கு காணினும் முதலைகளும், அதன் குட்டிகளும் தான்.

ஒரு சில ஆமைகளும் இருந்தன. மரங்களடர்ந்த மிகப் பெரிய இடத்தில் பலவகையான முதலைகளையும், அதன் வயது, உணவு, எண்ணிக்கை, அதன் இருப்பிடம் போன்ற தகவல்களோடு பராமரித்து வருகிறார்கள்.

கடல் முதலை, சதுப்புநில முதலை, சைமீஸ் முதலை, நைல் முதலை, மலேஷியன் கரியால் என பலவகைப்பட்ட முதலைகள், தண்ணீருக்குள்ளேயும், வெளியேயும், வாயைத் திறந்த நிலையிலும் இருந்தன.

அவைகளை துன்புறத்தக் கூடாது என்பதை விளக்கும் படங்கள் ஆங்காங்கே இருந்தன. நம்மை அவற்றின் நிலையில் வைத்து பார்க்கும் படங்கள் நம்மை நிச்சயம் யோசிக்க வைக்கும். REPTILE HOUSEம் இங்கு இருந்தது.

பாம்புகள் சமத்தாக தூங்கிக் கொண்டிருக்கவே, பார்த்து வெளியே வந்தோம். இன்னொரு இடத்தில் பாம்பின் விஷத்தை எடுப்பதை காண்பிப்பார்களாம். அதைப் பார்க்கும் அளவுக்கு தைரியம் இல்லாததால் வேண்டாம் என்று வந்து விட்டேன்…..:))

இந்த பண்ணையில், ஓரிடத்தில் ஒரு மரப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் உலகிலேயே அபாயகரமான மிருகம் அதன் உள்ளே இருப்பதாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. திறந்து பார்த்தால்… உள்ளே என்ன இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்???

கண்டுபிடித்துவிட்டீர்களா??

ஆமாம்! மனிதனை விட கொடிய மிருகம் இந்த உலகத்தில் எதுவுமேயில்லை….:) அந்த பெட்டியின் உள்ளே இருந்தது கண்ணாடி தான். என் கணவர்  என்னை அழைத்து கேட்ட போது  நானும் உங்களைப் போல் தான் சரியாகச் சொன்னேன்…..:)) 

TIGER’S CAVE

அடுத்து நாம் போகப் போவது TIGER’S CAVE என்று சொல்லப்படுகிற புலிக்குகைக்கு.

ஆமாங்க! கடற்கரையை ஒட்டிய இடத்தில், அலைகளின் ஓசைக்கு நடுவில் செதுக்கப்பட்ட பெரிய பெரிய பாறைகள் விதவிதமான வடிவத்தில் அழகாக காட்சியளித்தன.

நடுநாயகமாக குகை போன்ற அமைப்பில் புலியின் முகங்களோடு யானையும் ஒன்று சேர அழகோ அழகு தான். இரண்டு பாறைகள் வெட்டுபட்டு, அதன் நடுவில் சிறு இடைவெளியுடன், பெரிய பாறை, சிறுகுன்று போன்ற அமைப்பு என எங்கெங்கும் விதவிதமாக வடிவமைக்கப்பட்ட பாறைகள் தான்.

புலிக்குகை என்றதும் புலியைத் தான் சந்திக்கப் போகிறோம் என்ற ஆவலோடு வந்திருக்கும் என் போன்றவர்கள், இங்கு காண்பதெல்லாம் காதல் ஜோடிகள் தான்……:)) எங்கெங்கு காணினும் அவர்கள் தான்…..:))

பாறைகளை பார்த்துக் கொண்டே வந்த நான் இன்னும் சற்று உள்ளே தள்ளி இருந்த கோவில் போன்ற அமைப்புடன் சிவலிங்கமும் இடம் பெற்றிருக்கும் இடத்திற்கு செல்ல எத்தனிக்க, என் கணவர் அங்கிருந்த காதல் ஜோடிகளை கண்டதால், “வேண்டாம் வா…. குழந்தையோடு செல்ல லாயக்கில்லை” என்று அழைத்து வந்து விட்டார் 

அடையார் ஆனந்த பவன்

சரி! வாங்க! நாம அடுத்து எங்கே போகப் போகிறோம்? மதியமாகி விட்டதே! எங்களைப் போன்ற சைவ உணவு வேண்டுபவர்களுக்காக அடையார் ஆனந்த பவன் இங்கே திறந்திருக்கிறார்கள். குளிர்சாதன வசதியுடன் உணவகத்தை சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். வாசலிலேயே அன்றைய மெனு எழுதி வைக்கப்பட்டிருந்தது.

என் கணவரும் ஓட்டுனரும் முழுச் சாப்பாடு ஆர்டர் செய்ய, மகளுக்கு சப்பாத்தி ஆர்டர், நான் மினி மீல்ஸ் தேர்வு செய்தேன்

கிண்ணங்களில் சாம்பார் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சேமியா பாயசம், முட்டைக்கோஸ் கறி போன்றவற்றுடன் அப்பளம், வடாம், மோர் மிளகாய். இவற்றோடு ஒரு சப்பாத்தி குருமாவுடன்

எலுமிச்சை சாதம் மட்டும் கொஞ்சம் கசப்படித்தது. மற்றபடி சாப்பாடு மிகவும் நன்றாகவேஇருந்தது. எல்லோரும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.

மாமல்லபுரம்

இனி நேராக மாமல்லபுரத்துக்குத் தான். முதலில் ”ஐந்து ரதங்கள்” இருக்கும் இடத்திற்கு சென்றோம். இந்திய தொல்லியல்துறைக்குட்பட்ட இந்த இடத்திற்கு, நமக்கான நுழைவுச்சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம்

பள்ளிச் சிறார்களும், வெளிநாட்டவர்களும், விடுமுறையை கழிக்க வந்த மக்களும் என, அந்த இடமே நமக்கான உற்சாகத்தை அள்ளித் தந்தது

முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் அரிய படைப்பான, ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட தேர் போன்ற வடிவமைப்புடைய ஐந்து ரதங்களையும், யானை, சிங்கம், நந்தி போன்றவற்றையும் பார்க்க ஆரம்பித்தோம்

பஞ்சபாண்ட ரதங்கள் என்று அழைக்கப்படுகிற இவற்றுக்கும் மகாபாரதத்துக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்று அங்குள்ள பலகைச் சொல்கிறது 

தர்மராஜரதம், பீமரதம், த்ரெளபதிரதம், நகுல சகாதேவ ரதங்கள் என கல்லில் செதுக்கப்பட்ட அரிய பொக்கிஷங்களை கண்டு களித்தோம். ஒவ்வொன்றையும் பார்க்கும் போதே பிரமிப்பை தோற்றுவித்தது.

காலத்தால் ஒரு சில உருவங்கள் சிதிலமடைய ஆரம்பித்தாலும், கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

அர்ஜூனன் தபசு & கிருஷ்ணனின் வெண்ணை உருண்டை

அடுத்து நாங்கள் சென்றது. அர்ஜூனன் தபசு, கிருஷ்ணனின் வெண்ணை உருண்டை ஆகிய இடத்திற்கு…..

கல்லில் செதுக்கிய இந்த சிற்பங்கள், பண்டை காலத்தவரின் கலை நுணுக்கத்திற்கான சான்று. தென்னிந்திய கலாச்சாரத்தை பிரபலிக்கக் கூடிய ஒன்று

எழுதுவதை காட்டிலும் புகைப்படங்கள் தங்களுக்கு நிறைய தகவல்களை தெரிவிக்கும் என நினைக்கிறேன். இங்கு மும்மூர்த்திகளின் கோயிலும் உள்ளது. பெரியப் பெரிய பாறைகள், கலை நுணுக்கத்துடன் செதுக்கப்பட்ட மும்மூர்த்திகளின் உருவங்கள் என்று எல்லாமே ரசிக்க வேண்டியவை

ஒரு பாட்டியிடம் மிளகாய்த் தூள் தூவிய மாங்காய்த் துண்டங்களை வாங்கி, அங்கிருந்த புல்தரையில் அமர்ந்து ரசித்து உண்டோம்… ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா…..என்ன! உங்களுக்கும் நாவில் நீர் சுரக்கிறதா…:)) 

கடற்கரை கோயில்

அடுத்து அங்கிருந்து கிளம்பிப் போகும் வழியில், டிரைவர் கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி வ்யூ பார்க்கிறீர்களா? எனக் கேட்டார். காலையிலிருந்து சுற்றிக் கொண்டிருக்கிறோம். நிறைய நடந்து சுற்றிப் பார்த்தாச்சு. இதிலயும் ஏறினால் களைப்பில் கடற்கரையை ரசிக்க முடியாது என வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அடுத்து என்ன கடற்கரை கோயில் தான்.

கடல் ஓரத்தில் எழில் ஓவியமாக எழுப்பப்பட்டுள்ள இரண்டு சிவன் கோயில்களை உள்ளடக்கிய கடற்கரை கோவில் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் இராஜசிம்மன் காலத்தியவை. இதுவும் இந்திய தொல்லியல் துறைக்குட்பட்டது. அதனால் கட்டணத்தை செலுத்தி விட்டு உள்ளே சென்று பார்த்து ரசித்தோம்

காலத்தின் கோலத்தால் அதற்கு முன்புள்ள சிற்பங்கள் சிதைந்திருந்தாலும், கலை நுணுக்கம் வியக்க வைக்கிறது 

கடற்கரை

இனி அடுத்து கடற்கரைக்கு செல்லலாம் வாங்க…

சங்கு, கிளிஞ்சல் போன்றவையினால் செய்த அலங்காரப் பொருட்களின் கடைகள் வரிசையாக இருந்தன. ஒரு வெளிநாட்டவர், அங்கு ”ஊசிபாசி” விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் விலையைக் கேட்க அவரும் அழகாக ஆங்கிலத்தில் அவரிடம்உரையாடினார்

அன்றாடம் பார்க்கும் மனிதர்களிடமிருந்து, அவர்களது பாஷையை கூர்ந்து கவனித்து கற்றுக் கொண்டுள்ளார். கடற்கரையில் குதிரை சவாரியும் இருந்தது.

அலுக்காத சில விஷயங்களில், கடலும் ஒன்று. அதனால் நாங்கள் அலைகளில் கால் நனைத்தும், ஓடியாடியும், புகைப்படங்கள் எடுத்தும் பொழுதை கழித்தோம்.

திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோவில்

இருட்டத் துவங்கி விட்டதால் அங்கிருந்து கிளம்பி சென்னையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். “வழியில் ஒரு கோவிலுக்கு போயிட்டு போகலாம்” என்றார் டிரைவர்

அது தான் ”திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள்” கோவில். இது, திருமங்கையாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். இது, நூற்றியெட்டு திவ்யதேசங்களில் 62வது ஸ்தலம்

அமைதியான கிராமத்து சூழலில், இருந்த கோவிலின் உள்ளே நுழைந்தோம். மூலவர் ஆதிவராகப் பெருமாள், அகிலவல்லித் தாயாரை தன் இடது தொடையில் இருத்தி நின்ற நிலையில் காட்சி தருகிறார்.

காலவ முனிவரின் 360 மகள்களை தினம் ஒருவராக திருமணம் செய்து கொண்டதால் இவர் நித்ய கல்யாண பெருமாள் என அழைக்கப்படுகிறார்

இங்கு, தாயார் கோமளவல்லி, ரங்கநாதர், ரங்கநாச்சியார், ஆண்டாள் எனத் தனித்தனி சன்னிதி உள்ளது

  

திருமணத் தடை நீங்க, ஆணோ, பெண்ணோ இரண்டு மாலைகளை வாங்கி வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, ஒன்றை பெருமாளுக்கு சாற்றி, மற்றொன்றை கழுத்தில் அணிந்து கொண்டு, கோவிலை 9 முறை பிரதட்சணம் செய்கிறார்கள். திருமணமானதும், தம்பதியாக சேர்ந்து வந்து பிரதட்சணம் செய்கிறார்கள்

பட்டாச்சாரியார்கள், நிதானமாக நல்ல தரிசனம் செய்து வைத்தார்கள். அடுத்து எந்த சன்னிதிக்கு செல்ல வேண்டும் என்றும் வழி காட்டுகின்றனர்

பெருமாளுக்கு அணிவித்த மாலையை, அங்கு வந்திருந்தவர்களுக்கு தந்த பட்டாச்சாரியார், எனக்கும் ஒன்றைத் தந்தார். மனசுக்கு சந்தோஷமாக இருந்தது.

மாமல்லபுரத்தில் ஒரு பெருமாள் கோவில் இருந்தது. “ஸ்தலசயனப்பெருமாள்”. நாங்கள் சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் கோவில் திறக்கவில்லை.

அதற்குப் பின் இரவு நேரமானபடியால் பார்க்காமலேயே கிளம்பி விட்டோம். இங்கு திருவிடந்தை வந்தபின்தான் பட்டாச்சாரியார் சொன்னார், அந்த கோவில் 108ல் 63வது ஸ்தலமாம். தரிசிக்காது விட்டுவிட்டோமே என்றிருந்தது. நீங்கள் செல்லும் போது தவறாது தரிசியுங்கள்.

முனைவர் கு.ஞானசம்பந்தன் சந்திப்பு

திருப்தியாக கோவிலை தரிசித்து விட்டு வெளியே வரும் போது, முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களை சந்தித்தோம். அங்கு வந்திருந்த மக்கள், அவரைக் கண்டதும், இவர் சினிமாவில் நடித்தாரே என்று பேசிக் கொண்டிருந்தனர்

இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் கணவர் “ஐயா தமிழில் நல்ல புலமை பெற்றவர். அதை விடுத்து சினிமாவை மட்டுமே சொல்கிறீர்களே” என்றார்

அவரிடம் விடைபெற்று, ஒருநாள் முழுதும் கிழக்குக் கடற்கரை சாலையை சுற்றிய மனத்திருப்தியுடன் இரவு சென்னைக்கு வந்தடைந்தோம்.

இந்த ஒரு நாள் பயணத்தில், என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றிகள் பல

இந்த பயண அனுபவத்தை பற்றி, பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு மிக்க நன்றி

நட்புடன்,

ஆதிவெங்கட்

திருவரங்கம்

ஆதி வெங்கட்டின் பயண நூல் லிங்க் இதோ👇 

#ad

“சஹானா” இதழ் YouTube Videos 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

6 Comments

  1. அருமையான பயணம். ஒரே நாளில் பல இடங்கள். இதில் விஜிபி, திருவிடந்தை, புலிக்குகை, ப்ரத்யங்கிரா போன்றவற்றிற்கு நாங்கள் சென்றதில்லை. மாமல்லபுரம் மட்டுமே ஒரு முழு நாள் பார்த்தோம். பின்னர் காஞ்சி சென்று காஞ்சிக் கோயில்கள். பின்னர் இரவு பனிரண்டு மணிக்கு வீடு! குழுவாகச் சென்ற முதல் பயணம் அது. பல்லாண்டுகள் முன்னர். :)))))

    • நாங்களும் சென்னை வந்தப்ப ஆதி சொன்ன நிறைய இடங்கள் மிஸ் பண்ணிட்டோம், முக்கியமா தக்ஷிணசித்ரா. இனிமே travel பிளான் போடும் போது ஆதியை கன்சல்ட் பண்ணனும் போல 🙂 

  2. தக்ஷிண் சித்ராவில் என் சித்தப்பா (அசோகமித்திரன்) பேத்தியின் கல்யாணம் நடந்தது. நாங்கள் கல்யாணத்திற்குச் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்து பின்னர் போக முடியவில்லை. மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

    பொதுவாகவே கோயிலில் கொடுக்கும் பிரசாதங்கள் எதுவாக இருந்தாலும் இருகைகளையும் ஏந்திக் குனிந்தே வாங்க வேண்டும். ஒரு கையை மட்டும் நீட்டி வாங்கக் கூடாது என்பார்கள். நம்ம ரங்க்ஸ் பொற்கோயிலில் பிரசாதம் வாங்க ஒரு கையை மட்டும் நீட்ட அந்தத் தன்னார்வலர் இரு கைகளையும் நீட்டிக் குனிந்து வாங்கச் சொன்னார். அதே போல் ஓர் அனுபவம் கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலவர் கோயிலிலும் ஏற்பட்டது. அது விபூதி, குங்குமம், தீர்த்தம், பூ, துளசி போன்ற பிரசாதங்கள் எதுவானாலும் இரு கைகளையும் நீட்டித் தான் வாங்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி.

    • ஆஹா, திருமணத்துக்கு போக முடியாதது வருத்தமா தான் இருக்கும். ரெண்டு கை நீட்டி பிரசாதம் வாங்கறது என் பாட்டி சொல்லி பழக்கம் எனக்கு. நீங்களும் பகிர்ந்ததில் மகிழ்ச்சி 

  3. மறுபடியும் ஒரு தரம் வாசிச்சேன். ஆதி எல்லாவற்றையும் சுருக்கமான வார்த்தைகளில் சொல்லி இருக்காங்க. எல்லாவற்றையும் ஒரே கட்டுரையில் கொண்டு வருவது எளிதல்ல. அதை அநாயாசமாய்ச் செய்திருக்காங்க. வாழ்த்துகள்.

    • ஆமாம் மாமி, கதை சொல்ற மாதிரி கோர்வையா அழகா சொல்லி இருக்காங்க. வெகு விரைவில் எனக்கு போட்டியா கதை எழுத வந்தாலும் ஆச்சர்யம் இல்லை 🙂 Felt proud seeing her write up for sure, since we all started our online writing travel together

ஓர் இதயத்தின் கண்ணீர் (கவிதை) – ஆர்.ஸ்ரீப்ரியா – December 2020 Contest Entry 11

சங்கமித்ரா (குறுநாவல் – பகுதி 2) – By Fidal Castro – December 2020 Contest Entry 7